அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விவசாயியான என் அப்பா, மூத்த மகளான என்னை, இளவரசியாக வளர்த்தார்.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கும், எங்களுக்கும் ஏற்பட்ட இடப்பிரச்னையால், அப்பாவை, அவர்கள் அடித்து விட்டனர். அவமானம் தாங்காமல், தலை குனிந்தபடி வந்து விட்டார். அதிலிருந்து, அக்குடும்பத்தினரை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார்.
இது நடந்து சில மாதங்களுக்கு பின், அந்த வீட்டு பையனுக்கும், எனக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின், இரு குடும்பங்களும் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில், வீட்டுக்கு தெரியாமல், திருமணம் செய்து கொண்டோம்.
புகுந்த வீட்டினர் ஏற்றுக் கொண்டாலும், என்னை ஒதுக்கி வைத்தார், அப்பா. அவருக்கு தெரியாமல், அம்மா மற்றும் சகோதர - சகோதரிகள், என்னுடன் சகஜமாக பேசுவர். அப்பாவுடன் பேச பலமுறை முயற்சித்தும், அவர் பேசவே இல்லை.
என் குழந்தைகள் இருவரும், அப்பாவை பார்த்தால், 'தாத்தா... தாத்தா...' என்று அழைப்பர். அவரோ, கண்டுகொள்ளாமல் சென்று விடுவார்.
இந்த அளவுக்கு அவர் மனம் வேதனைப்பட்டுள்ளதை நினைத்து, தினம் தினம் அழுகிறேன்.
இந்நிலையில், சொந்த வீடு கட்டி, புதுமனை புகு விழாவுக்கு, அப்பாவை அழைக்க, நானும், என் கணவரும் போனோம்.
இருவரையும் அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.
'என் குடும்பத்தினர் செய்த தவறுக்காக, நான் மன்னிப்பு கேட்டு, பலமுறை உன் அப்பாவுடன் சமாதானமாக போக முயற்சித்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் என்னை விரோதி போலவே, அவர் பார்க்கிறார். இனி, என்னால் அவமானப்பட முடியாது...' என்று, கணவர் சொல்ல, உடைந்தே போனேன்.
எனக்கு அப்பாவும், குழந்தைகளுக்கு தாத்தாவும் வேணும். அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
இடப் பிரச்னையில், உன் வீட்டுக்கும், கணவர் வீட்டாருக்கும் சண்டை வந்தது சரி. சண்டையில், மாமனாரா, கணவரின் உடன் பிறந்தவர்களா அல்லது கணவர் வீட்டார் அனைவரும் சேர்ந்து, தந்தையை அடித்தனரா... அடித்தவர் யாரோ, அவர் வந்து, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தந்தை கருதுகிறாரோ என்னவோ?
இப்பிரச்னையை, கீழ்கண்டவாறு நீ அணுக வேண்டும்...
'தாத்தா... யாரோ செய்த தப்புக்காக, எங்களை ஒதுக்குகிறீர்களே... இது நியாயமா... பெரியவங்க செஞ்ச தப்புக்கு, நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்; எங்களை கொஞ்சுங்க தாத்தா... உங்களை, நாங்க நேசிக்கிறோம், எங்களிடம் அன்பு காட்டுங்க தாத்தா...' என, உன் குழந்தைகளை விட்டு, தந்தையிடம் பேசச் சொல். பேரன் - பேத்திகளின் கெஞ்சல், தாத்தாவின் கல் மனதை கரைக்கிறதா என பார்ப்போம்.
நீயும், கணவரும், தந்தைக்கு, உருக்கமான மன்னிப்பு கடிதம் எழுதுங்கள்.
இரு வீட்டு அங்கத்தினர்களும், வீட்டு பெரியவர்கள் அல்லது ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கூடி, சமாதானம் பேசுங்கள். உன் தந்தையை, யார் அடித்தனரோ, அவர்களை பிரத்யேகமாக, அவரிடம் மன்னிப்பு கேட்க ஏற்பாடு செய்.
மன்னிப்பு இயந்திர கதியாக இல்லாமல், உணர்வுப்பூர்வமாக இருக்கட்டும். கேட்கப்படும் மன்னிப்பு, அடிபட்ட காயத்துக்கு இடப்படும் அருமருந்து ஆகட்டும்.
உன் தந்தைக்கு, அடித்தவர் மீதான கோபத்தை விட, அந்த வீட்டு பையனை காதலித்து விட்டாளே என்கிற கோபம் தான், அதிகம் இருக்கும். அடித்தவர்களை தண்டிப்பதற்கு பதில், உன்னையும், குழந்தைகளையும் தண்டிக்கிறார்.
தாத்தாவுக்குரிய சந்தோஷங்களை அனுபவிக்காமல், தன்னைத்தானே தண்டித்துக் கொள்கிறார்.
உன் தந்தைக்கு, சம வயது நண்பர்கள் இருப்பர். அவர்களில் யாராவது ஒருவரை அணுகி, சமாதான துாது அனுப்பு. தந்தையின் மனம் மாற, அனைத்து வாசல்களையும் திறந்து வை. அனைத்து வகை சமாதானங்களையும், தந்தை உதாசீனப்படுத்தினால், நம்பிக்கை இழக்காமல் காத்திரு.
தந்தையின் மனம் மாற, குலதெய்வம் கோவிலில், வாரா வாரம் பிரார்த்தனை செய். தந்தையை கடந்து செல்லும்போது, நீயும், உன் கணவரும், இரு வீட்டு அங்கத்தினர்களும் அன்பான, இணக்கமான மன்னிப்பு இறைஞ்சும் முகத்தை, தொடர்ந்து காட்டுங்கள்.
தொடர்ந்து பேரக் குழந்தைகளை விட்டு, தாத்தாவின் பாசத் தாக்குதலை நடத்திக் கொண்டே இரு; துாங்கும் தாத்தாவின் கன்னங்களில் முத்தங்களை கொடுத்து, ஓடி வரச்சொல். உருகி வழிந்து விடுவார், தாத்தா.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்