அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு. எனக்கும், மேஜர் சுந்தரராஜனுக்கும் ஒரு காட்சி. எங்கள் உரையாடல் முடிகிறபோது, கேமரா எங்களை விட்டு விலகி, படி ஏறி மாடிக்கு செல்ல, அங்கே, ரஜினி நின்று கொண்டிருப்பார். அப்போது தான், நான் ரஜினியை முதல் முறையாக பார்த்தேன்.
என் கவனத்தை கவர்ந்தவை, அவரது அடர்ந்த தலைமுடியும், சுறுசுறுப்பாக இருத்தலும், சட்டென்று அடுத்தவர்கள் கவனத்தை கவர்கிற, வசீகர தோற்றமும் தான்.
'இது, யாரு புதுசா இருக்காரு...' என்றார், மேஜர் சுந்தரராஜன்.
'பாலு - கே.பாலசந்தர், புதுசா கண்டுபுடிச்சிட்டு வந்திருக்காரு போல இருக்கு...' என்றேன்.
அவரது முகத்தை பார்த்தபோது, உடனே எனக்கு ஏற்பட்ட எண்ணம்... 'இவர், வழக்கமான புதுமுகம் கிடையாது. இவருக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. இவருக்கு, சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்...' என்பது தான்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்ததும், இயக்குனர், கே.பாலசந்தரிடம், ரஜினியிடம் நான் கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.
'ஆமாம்... அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வெச்சிருக்கேன்...' என்றார்.
இயக்குனர், மணிரத்னத்தின், தளபதி படத்தில், மம்முட்டியின் உதவியாளர்களுள் ஒருவராக நான் நடித்தேன். என்னிடம், 10 நாள், 'கால்ஷீட்' வாங்கியிருந்த போதிலும், படத்தில் நான் நடித்த மூன்றே மூன்று காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
தளபதி படம் வெளியான பின், ரஜினியை ஒருமுறை சந்தித்தேன். அப்போது, 'என், 'கால்ஷீட்'டை வீணாக்கி விட்டார், மணிரத்னம். இன்னும் சில காட்சிகளில் என்னை பயன்படுத்தி இருக்கலாம்...' என்ற, ஆதங்கத்தை வெளிபடுத்தினேன்; பதில் ஏதும் சொல்லாமல், அவர் புன்னகைத்தார்.
'என்னடா இவர்... நான் சொன்னதை ஆதரித்து, சில வார்த்தைகள் சொல்லலாம்... இல்லையெனில், 'படத்தில் இயக்குனர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது' என்று, மணிரத்னத்துக்கு ஆதரவாக பேசியிருக்கலாம். இரண்டும் சொல்லாமல், அமைதியாக இருக்கிறாரே...' என்று, லேசாக குழம்பினேன்.
பின்னர் தான், ரஜினியின் மவுனத்துக்கு அர்த்தம் புரிந்தது. ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கிறபோது, அங்கே, இல்லாத மூன்றாவது நபரை பற்றி குறை சொல்லி பேசினால், அதை அவர் விரும்புவதில்லை. மூன்றாம் மனிதரை பற்றி பேசுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமில்லை என்பது, அவரது, 'பாலிசி!' இதுபற்றி எனக்கு தெரிய வந்தபோது, அவர் மீதான மதிப்பு, பல மடங்கானது.
என் வாழ்க்கை, மிகவும் சாதாரணமான நிலையில் ஆரம்பமானது. சந்தித்த தோல்விகளும், கேலி, கிண்டல்களும் ஏராளம். என் கல்வி தகுதி, ஒரு ரயில்வே குமாஸ்தா வேலைக்கு போதுமானதாக இருந்தது. எதேச்சையாக நடிப்பின்பால் ஈர்க்கப்பட்டேன்.
சொல்வதை நகைச்சுவையாக சொன்னால், சட்டென்று மக்களின் கவனத்தை ஈர்த்து விடலாம் என்பது புரிந்தது. எனவே, எதை சொன்னாலும், செய்தாலும், என்னை சுற்றியிருந்த நண்பர்களும், உதவினர். அவர்களுள் முக்கியமானவர், வெங்கிட்.
ஒரு நாடகத்தில், வெங்கிட்டுவுக்கு சிறிய வேடம். அதனால் என்னவோ, அவன், ஒத்திகைக்கு பல நாட்களாக வரவே இல்லை. ஒருநாள் வந்தபோது, 'ஏன் இத்தனை நாளா வரலை...' என்று கேட்டேன்.
அதற்கு, அவன் முகத்தை சோகமாக வைத்து, 'உங்களுக்கு விஷயம் தெரியாதில்லையா... வீட்ல ஒரு சோகம்...' என்றான்.
'என்னடா... யாருக்கு என்ன ஆச்சு...' என்று, அக்கறையோடு விசாரித்தேன்.
'என் அம்மா... தவறிட்டாங்க...' என்றான்.
'ஐயோ... எப்போடா... விஷயம் தெரியாதே... ஒரு வார்த்தை சொல்லியனுப்ப மாட்டியா...' என்றோம்.
'இப்போ இல்லை; 20 வருஷத்துக்கு முன்னாடி...' என்று சொல்லி, 'பகபக'வென்று சிரித்ததை, இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.
இப்போது யோசித்து பார்க்கிற போது, நான் ஒரு பணம் பண்ணும் இயந்திரமாக இருந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. காரணம், வசதி இல்லாத சமயத்தில், என் வயிற்றுக்காக... ஓரளவு வசதியான பின், குடும்பத்தின் வசதிக்காக என்று, பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினேன்.
ஆனால், எனக்கு, நான் சம்பாதித்த பணத்தை விட, என் நடிப்பு, திருப்தியையும், சந்தோஷத்தையும் கொடுத்தது என்றால், அதில் மிகையில்லை.
அதனால் தான், மக்களை சிரிக்க வைத்ததே போதும் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது. பட்டங்கள், பரிசுகள், இதற்கெல்லாம் ஆசைப்பட்டதே இல்லை. காரணம், இவ்வளவு படங்களில் நடித்து, இத்தனை கோடி பேரை சிரிக்க வைத்து சாதனை படைத்ததாக, என்றைக்குமே நினைத்ததே இல்லை.
— முற்றும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
- எஸ்.சந்திரமவுலி