அகத்திக் கீரை காம்புகளை, ஆட்டுக்கு போட்டு, சிறிதுநேரம் தலையை சாய்க்கலாம் என்று, தலையணையை எடுக்கப் போன கவுரியை, வாசலில் இருந்து ஒரு குரல், 'வா'வென்று அழைத்தது. 30 வயது மதிக்கத்தக்க, வாலிபன் ஒருவன் நின்றிருந்தான்.
''யார் வேணும்?''
''இங்கே கவுரிங்கறது?''
''நாந்தேன்... சொல்லுங்க!''
''எனக்கு, சங்ககிரி பக்கம்... குலசேகரம்பட்டியில, பொண்ணு எடுத்திருக்கேன்... போன வாரம், என் மனைவிக்கு தலைப் பிரசவம் ஆச்சு.''
''என்ன புள்ளை?'' என்றாள், ஆவலாக.
அவளின் குழந்தை ஏக்கத்தை, அந்த கேள்வி சரியாய் படம் பிடித்தது.
''பையன். குழந்தை பிறந்ததும், பொஞ்சாதிக்கு மஞ்சக் காமாலை தாக்கிடுச்சு. தாய்ப்பால் குடுக்கக் கூடாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க... குழந்தைக்கு, குடிக்கறதுக்கு சுத்தமான பசும் பால் வேணும்; யார்ட்ட விசாரிச்சாலும், 'உங்க வீட்டைத் தவிர, கலப்படம் இல்லாத பால் எங்கயும் கிடைக்காது'ன்னு, சொல்றாங்க... அதான், வந்தேன்.''
பெருமையாக இருந்தது, கவுரிக்கு.
''ம்.... உங்க பேரு?''
''மனோகரு!''
''சரி... லிட்டர், 100 ரூபாய், பரவாயில்லையா?''
''பரவாயில்லங்க... வேளைக்கு, அரை லிட்டர்ன்னு நானே வந்து வாங்கிக்கறேன்.''
கவுரி தலையசைக்க, திரும்பி நடக்க எத்தனித்தவன், சில நொடிகள் தயங்கி நின்றான்.
'என்ன வேணும்...' என்பது போல் பார்த்தாள்.
''உங்க வீட்டை விசாரிக்க, அடையாளம் கேட்டப்ப, மூணாவது தெருவுல, ஒரு முனுசிபால்டி ஸ்கூல் இருக்கும்; அங்கே போய், 'ஷாருக்கான் மனைவி வீடு எது'ன்னு கேட்டியானா, அழுகுற புள்ளை கூட காட்டும்ன்னு, அம்புட்டு பேரும் பேசி வச்ச மாதிரி சொன்னாங்க... அதாருங்க, ஷாருக்கான் மனைவி?''
''ம்... அது நாந்தேன்,'' என, குரலில் நாணம் இழையோட, கதவை அடைத்து, உள்ளே ஓடினாள்.
கவுரியின் அப்பா துரைசாமி, விவசாயி. அண்ணன்கள் இரண்டு பேர்.
அம்மா, லட்சுமி வயிற்றில், கவுரியை தாங்கி இருந்தபோது, அவர்கள் வாழைத் தோப்பில் நல்ல விளைச்சல். ஆனால், தோப்பில் குரங்குகளின் தொல்லை தாங்கவில்லை. அத்தனை வாழைகளையும் கடித்து நாசம் செய்திருந்தன; பொறுமையிழந்தவர், சோற்றில் விஷம் வைத்து விட்டார்.
கவுரி பிறந்த அன்று, தோப்பில், 10க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து போயின. அவரின் செயலை, ஊரே விமர்சித்தது. துரைசாமியும் பெரும் வருத்தத்தில் தான் இருந்தார். கோபத்தில், தான் மிருகமானதால், அப்பாவி மிருகங்கள் அநியாயமாக இறந்து போயினவே என்று வருத்தப்பட்டார்.
ஆனால், விதி, அவரை வேறு விதமாக தண்டித்தது. கவுரி பிறந்தாள். உலக வழக்கில், அழகு என்று ஒத்துக்கொண்ட எதுவுமே இல்லாமல், வளர வளர, அவளின் குறைகளும் விஸ்வரூபமாக வளர்ந்தது. 10 கிலோ எலும்பில், 3 மீட்டர் தோல் போர்த்தி இருந்தாள். எடுப்பான சீரற்ற பல் வரிசை, ரெட்டை எலும்புகளாய் அசிங்கமாய் இருந்தாள்.
'குரங்குகளை, கொன்ன பாவம் தான், துரைக்கு இப்படி ஒரு அசிங்கமான பொண்ணு பொறந்திருக்கு... தெய்வத்துக்கு மீறின நீதிமான் யாரு இருக்க முடியும்... காலம் பூரா, தன் தப்புக்கு வருத்தப்படற மாதிரி, ஒரு தண்டனையை ஆண்டவன் தந்துட்டான்...' என, ஊரே பேசிக் கொண்டது.
அண்ணன்கள் படித்து, உத்யோகத்திற்கு சென்றனர். கவுரிக்கு, 10ம் வகுப்பை தாண்டுவதே பெரும்பாடாய் இருந்தது. துரையின் வசதியை கேள்விப்பட்டு, கவுரியை, பெண் பார்க்க வந்தவர்களெல்லாம், தலைதெறிக்க ஓடினர்.
அவளோடு விளையாடிய உறவுப் பெண்களுக்கும், தோழிகளுக்கும், காலாகாலத்தில் கல்யாணம் செய்து ஒதுங்கிப் போக, கவுரி மட்டும், தேங்கிய குட்டையாய் நின்ற இடத்திலேயே நின்றாள்.
அப்போதெல்லாம் வாடகைக்கு, 'டெக்' எடுத்து, 'கேசட்'டில், படம் போட்டு பார்ப்பது பிரசித்தம்.
எம்.ஜி.ஆர்., - ரஜினி படம், ஒரு புது படம் மற்றும் ஹிந்தி படம் ஒன்று, கண்டிப்பாக இருக்கும்.
கவுரி அண்ணன்கள், 'டெக்' எடுத்து வர, அவர்கள் வீட்டில் திருவிழா மாதிரி கூட்டம் கூடியிருந்தது. ஷாருக்கான் நடித்த, தில்வாலே துல்கன்யா லே ஜாயன்கே படம் போடப்பட்டது.
என்ன புரிந்ததோ, ஜனமெல்லாம் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது; கவுரியும் பார்த்தாள். பேரழகன் இல்லை, கட்டுடல் இல்லை, ஆளை மயக்கும் நிறமில்லை, ரொம்ப இயல்பாய், சாதாரணமாய், முதல் முறையாக, ஷாருக்கானை, உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பக்கத்து வீட்டு, அம்மணி அக்கா, இவளின் விலாவில் இடித்தாள்.
'லட்சுமியக்கா... உன் மகள், ஷாருக்கானை அப்படி பாக்குறா... அவளுக்கு, இதே மாதிரி தான் மாப்பிள்ளை பாக்கணும்ன்னு, துரை அண்ணன்கிட்ட சொல்லிடு...' என, அம்மணி சொல்ல, பெண்கள் மத்தியில் சிரிப்பொலி.
'யாருக்கும் மயங்காத, என் மனசு, ஷாருக்கான்கிட்ட மயங்கி போச்சே...' என, அனைவரும் தன்னை கேலி செய்கின்றனர் என்பதை அறியாமல், வெட்கப்பட்டாள், கவுரி.
'அம்மணி அக்கா... ஷாருக்கான் பொண்டாட்டி பேரும், கவுரிதானாம். ரெண்டு பேரும், வேற வேற மதம்னாலும், காதலிச்சு கல்யாணம் கட்டிட்டாங்களாம்... பேர் பொருத்தமோ என்னவோ, கவுரி மனசுல, ஷாருக்கான் வந்துட்டான்டி...' என, இன்னொருவள் கேலி செய்தாள்.
அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்பில், கவுரியின் அழகை, நிலையை, சூழலை கேலி செய்யும் தொனி இருந்தது. ஆனால், இதையெல்லாம் கடந்து, அவள் மனதில் மத்தாப்பு விரிந்தது.
அம்மணியக்கா துாவிய விதை, அவள் மனசில் விருட்சமாகி, இன்று வேரோடி கிடக்கிறது. அதன்பின், ஒவ்வொரு முறையும், 'டெக்' வாடகைக்கு எடுக்கும்போது, ஒரு ஷாருக்கானின் படமும் கண்டிப்பாக இருக்கும்.
கவுரியின், ஷாருக்கான் மோகம், மெல்ல மெல்ல ஊருக்குள் கேலியாக பரவத் துவங்கியது.
'அவதேன் என்ன செய்வா... 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை'ங்கிற மாதிரி, கருப்பனும், சுப்பனும் கட்ட மாட்டேன்னு சொன்னதால, நம் கவுரி, ஷாருக்கானை கந்தர்வ மணம் பண்ணி, அவன் மனைவி ஆயிட்டா...' என, குழாயடியில், அம்மணியக்கா தான், இந்த பேரை வைத்தாள்.
இவளின் கல்யாணத்துக்கு காத்திருந்து, நொந்த அண்ணன்கள், அவர்கள் வழியை பார்த்துக் கொண்டனர். அவரவர் வேலை பார்க்கிற இடங்களுக்கே, தங்களது ஜாகையை மாற்றிக் கொண்டனர். அதன்பின், வீட்டில், அம்மா - அப்பா, கவுரி மட்டும் தான்.
அப்பா - அம்மாவிற்கு, முதுமையில் உடல் நலிய, அப்பாவின், கழனியும், அம்மாவின், மாடு கன்றுகளும், அவளின் பராமரிப்பில் வந்தது. ஆனால், அது மட்டுமா வாழ்க்கை. வெயில், பனி, வாடை என்று எல்லார் வாழ்க்கையிலும் காலங்கள் மாறிக் கொண்டிருக்க, கவுரியின் வாழ்க்கையில் மட்டும், எப்போதும் கனாக் காலம் தான்.
காலம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது. கவுரி, நடு வயதை கடந்திருந்தாள். அப்பாவும் - அம்மாவும் நிறையவே தளர்ந்திருந்தனர்.
'காவலுக்காவது, எவன் கையிலாவது மகளை பிடித்து தந்து விட்டால் நிம்மதி...' என்று நினைத்தார், அப்பா துரைசாமி.
பண்டிகைக்கு வந்திருந்த, மூத்த மகன், பேத்திக்கு, மாப்பிள்ளை பார்ப்பதாய் சொன்னபோது, அடிவயிற்றிலிருந்து கிளம்பி வந்த துக்கத்தை அடக்க மாட்டாமல் அழுதார். ஆனால், இது மாதிரி எந்த சலனமும் இல்லை, கவுரிக்கு. இதையெல்லாம் யோசிக்க மறந்தே, பல ஆண்டுகள் ஆகிறது.
தளர்ச்சியில் உடம்பு நடுங்கியது. திண்ணையில் இருந்த கன்றுக்குட்டியை வெறித்தபடி அமர்ந்திருந்தார், துரைசாமி.
''விராலிமலையில, மாவு மில் வச்சிருக்க, கணேசனுக்கு, உன்னைய முடிக்கலாம்ன்னு உங்கண்ணன் சொல்றான்... உன்னை இப்படியே வச்சிட்டு, அவன் பொண்ணுக்கு, மாப்பிள்ளை பார்த்தா, ஊரு காரித் துப்பும்ன்னு சங்கடப்படறான்...
''அதான், உனக்காக கஷ்டப்பட்டு இந்த மாப்பிள்ளையை கொண்டாந்திருக்கான்... ஒண்ணும் தேவையில்லை, வர்ற ஞாயித்துக் கிழமையே, முருகன் கோவில்ல கல்யாணத்தை முடிச்சுக்கலாம்ன்னு சொல்றான்... உனக்கு சம்மதம்னா, நீயே போய் அவன்கிட்ட சொல்லிடு...
''மாவுமில் கணேசனுக்கு, கால் ஊனம்; விந்தி விந்தி நடப்பார்; இரண்டு மகள்கள், ஒரு மகன். எல்லாருடைய திருமணத்தையும் முடித்து விட்டார். அவரும், மனைவியும் மட்டும் தான், மில்லை கவனித்து வந்தனர். ஆறு மாசத்திற்கு முன், மனைவி இறந்து விட்டாள். கணேசனால் தன் வேலைகளை தானே பார்த்துக் கொள்வது கஷ்டம். அதான், இந்த திருமண ஏற்பாடு,'' என்றவர், கவுரி முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
''அவரு, தன் புள்ளைகளையெல்லாம் கட்டிக் குடுத்துட்டாருப்பா... இப்போ, இந்த கல்யாணம் கூட, அவருக்கு வேலை செய்ய ஆளில்லைன்னு தான் பண்ணுவாரு,'' என, சொல்லும்போது, தொண்டை அடைத்தது, கவுரிக்கு.
அப்பா பார்வையில் உக்கிரம்.
''நீயென்ன பப்பாவா... இவனாவது உன் அழகை பார்க்காம, கட்டிக்கிறேன்னு சொல்றானேன்னு சந்தோஷப்படு... இதுக்கு மேல, எம்புட்டு காலத்துக்கு உன்னை நாங்க சுமக்கிறது... நாடி தளர்ந்தாச்சு... எங்க காலத்துக்கு பின், நீ, அவங்க தலையில வந்து விழுந்திடுவியோன்னு அண்ணன்க பயப்படறாங்க,'' என, அப்பாவின் வார்த்தைகளில் அமிலம் சுரந்தது.
மனதில் ரோஷம் குடி கொண்டிருந்தது.
'இன்னும் எம்புட்டு நாளைக்கு, உன்னை சுமக்கிறது...' என, அப்பா மற்றும் அண்ணன்களின் கேள்வியில் இருந்த நியாயம் உள்ளத்தை சுட்டது. இத்தனை நாள் மனசுக்குள்ளேயே வளர்த்திருந்த, ஷாருக்கானின் நினைப்பை மறக்க முடிவு செய்தாள். மனது ஊமையாய் அழுதது.
துணையை இழந்த, கணேசனுக்கு, வீட்டு வேலை செய்யவும், ஊனமான அவனுக்கு உதவவும் ஆள் வேண்டும். யாருமே சுமக்க தயாராக இல்லாத, கவுரிக்கு, ஒண்டிக்கொள்ள இடம் வேண்டும். அதற்கு தான் இந்த கல்யாண ஏற்பாடு; வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க போகிறது.
அண்ணனிடம் போய் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி வர வேண்டும். பஸ்சுக்காக வெகுநேரம் காத்திருந்ததால், இடுப்பு கடுத்தது.
''கவுரி,'' குரல் கேட்டு திரும்பினாள்.
இவளுடன் படித்த, அழகம்மா. அவள் பக்கத்தில், நிறை மாத கர்ப்பிணியாய், மகள்.
சுரீரென அவளுக்குள் எதுவோ உடைந்து, உருக்குலைந்தது.
''எம்புட்டு நாளாச்சு, உன்னைப் பார்த்து... என்னால தான் வர முடியல... குடும்பம், குழந்தைன்னு மல்லு கட்டவே நேரம் சரியா இருக்கு... ஒரே ஊருல இருக்கோம், வந்து போனா என்னவாம். மகளுக்கு, சுகப் பிரசவம் நடக்க, சாமியிடம் வேண்டிக்க...
''ஆமா... நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம போயிட்ட... இந்த வேகாத வெயில்ல அண்ணன் வீட்டுக்கு எதுக்கு போற,'' என்றாள், அழகம்மா.
அவளின் கேள்விக்கு பதில் தர முடியாமல், எங்கோ வெறித்தாள், கவுரி. சில நிமிட விசாரிப்புக்கு பின், அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள், அழகம்மா.
இனி, இந்த கல்யாண வைபோகம் எல்லாம், யாரிடம், எதை நிரூபிக்க... இந்த ஒப்புக்கு சப்பாணி வாழ்க்கை, இழந்த எதை மீட்டு தந்துவிட போகிறது... பெரும் வீரர்களையும், மன்னர்களையும் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பெரும் காவியங்களும், கவிதைகளும் படைக்கப்பட்ட வரலாறுகளை, பள்ளியில் படித்தது நினைவில் வந்தது.
தன் வாழ்க்கையின் பாட்டுடைத் தலைவனாக, ஷாருக்கான் இருந்துவிட்டுப் போகட்டுமே... அதனால், யாருக்கு என்ன நஷ்டம்... 'ஷாருக்கான் மனைவி' என்ற பொய்யான அழைப்பால் கிடைத்த சந்தோஷமாவது இருந்துவிட்டு போகட்டுமே.
வெகு தாமதமாக வந்த பேருந்து, அவள் முன் தள்ளாடியபடி நின்றது. ஏறப் பிடிக்கவில்லை. திரும்பி நடந்தாள். இந்த விஷயம் வீட்டில் பெரும் பிரச்னையை உண்டாக்கும் என்று புரிந்தது.
'இதப் பாருங்க, யாரும் என்னைய சுமக்க வேண்டாம்... இத்தனை நாள் யார் என்னை சுமந்தா... மாடு, கன்னுகளை, கழனியை கவனிச்சுட்டு, நான் பாட்டுக்கு காலத்தை கழிச்சுட்டு போறேன்... எவன் வீட்டுக்கோ வேலைக்காரியா போறதுக்கு, என் வீட்டுலேயே எஜமானியா இருந்துட்டுப் போறேன்...
'விதி வந்தா சாகத்தான் போறேன்... அதுக்காக, எதுக்கு இந்த பொம்மை கல்யாணம்... கல்யாணம்னா எனக்கு சிரிப்பு வரணும்; அதைக் கேட்டு, மத்தவங்களுக்கு வரப்படாது... என்னை என் கனவோட விட்டுருங்க...' என, வீட்டில் கேட்கும் கேள்விகளுக்கு, பதில்களை ஒத்திகை பார்த்தபடி நடந்தாள், ஷாருக்கானின் மனைவி!
எஸ். மானசா