"பழம்பெருமை பேசத்தானா தொல்லாய்வு?”
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
00:00

வரலாற்றாளர், தொல்லியல் அறிஞர், தமிழ்நாட்டு தொல்லியல் துறையை நிறுவிய இயக்குநர் டாக்டர் ஆர். நாகசாமியிடம், தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படைகள் பற்றிப் பேசினோம்:

தொல்லியல் ஆய்வுகள் எதற்கு உதவுகின்றன?
“நம்முடைய கடந்த காலத்தின் பெருமையைத் தெரிந்துகொள்வதிலும் அதைப் போற்றுவதிலும் தவறு இல்லை. ஆனால், அதற்காகத் தொல்லியல் படிப்பதில்லை. நம் வாழ்க்கையில் 75 சதவீத நடைமுறைகள் முழுவதும் ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்ததுதான். அது என்ன, எப்படி வந்தது என்பதைத் தெரிந்துகொள்வதில் நம் அறிவின் உயரம் சிறந்ததாக அறிஞர்களின் நிலையில் நம்மை உயர்த்தி வைப்பது பழைய காலத்தைப் பற்றிய அறிவு.
அதோடுகூட எந்தத் துறையானாலும் அதன் பழமையை அறிந்தால்தான் அதை மேலும் முன்னேற்றிச் செல்ல வசதியாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஆகாயவிமானத்தைப் பாருங்கள். அதை முதலில் கண்டுபிடித்தபோது, மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாக இரண்டு இறக்கைகள் இருந்தன. இதைப் பற்றிப் படிக்கும்போது, 'ஏன் ஒரே இறக்கையில் இதை இயக்க முடியாது' என்கிற சிந்தனை தோன்றுகிறது.
விஞ்ஞானத்தில் ஆகட்டும், மருத்துவத்தில் ஆகட்டும், விவசாயம் ஆகட்டும் அதை முன்னோக்கி நகர்த்துவது எப்படி என்பதே பழமையைத் தெரிந்துகொள்வதில் இருந்துதான் தெளிவாகிறது. அதனால், தொல்லியல் கல்வி அவசியமாகிறது.
இப்போது சந்திரன் வரைக்கும் நாம் போயிருக்கிறோம். இது எப்படிச் சாத்தியம் ஆனது? முன்னே இருந்த விஷயங்களைப் படித்து அதில் தெளிவும், அது கொடுத்த அனுபவ அறிவும் இருந்ததனால்தான் இது முடிந்தது.
சமுதாயத்தில் இருக்கும் நல்லவை வளர்வதற்கும் அல்லவை அகல்வதற்கும் தொல்லியல் துறை, இன்றியமையாத ஒன்று. பாரதி சொன்னது போல், 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை', புதுமை செய்ய பழமையைப் பற்றிய அறிவு வேண்டும். அந்த அறிவைக் கொடுப்பது தொல்லியல் ஆய்வுகள்.”

இந்தத் துறையில் உள்ள சவால்கள், சந்தோஷங்கள் என்னென்ன?
“தொல்லியல் துறை, பல நிலைகளில் ஆராய்ச்சிகளைச் செய்கிறது. ஒரு மொழியில் எழுத்து என்பது எப்படி மாறி மாறி வந்து, இன்று இருக்கும் நிலைக்கு வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறோம். காசு, நாணயங்கள் எப்படி உருவாயின, அதற்கான மதிப்பு என்னவாக இருந்தது என்று ஆராய்கிறோம். இதேபோல, கட்டடக் கலை, பொறியியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சில சமயங்களில் ஒரு பெரிய நிலப்பகுதியே கடலுக்குள் மூழ்கிப்போவதும் நடக்கும். அப்படி மூழ்கியவற்றை எப்படி ஆராய்ச்சி செய்வது?
காலப்போக்கில் நாணயம் ஒன்று மண்மூடி, பாழ்பட்டு இருந்தால் அதை விஞ்ஞான முறையில் எப்படித் தூய்மைப்படுத்துவது; ஒரு மரத்துண்டில் செய்யப்பட்ட பொம்மையோ எழுத்தோ பல நூற்றாண்டுகளாக நீருக்குள் கிடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அதற்கு ஒன்றும் ஆகியிருக்காது. வெளியில் எடுத்தால் அது வெடித்துப்போய்விடுவதும் நடக்கும்.
பூமிக்குள்ளே புதைந்துகிடக்கக்கூடிய மனித எலும்புகள் போன்றவை, மண்ணில் இருந்து எடுக்கும்போது, பொடிப் பொடியாகப் போய்விடும். இதற்கு அறிவியல் அடிப்படையில் சிந்தித்து, வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி அந்தப் பொருட்களை கெட்டிப்படுத்தி எடுக்க வேண்டும்.
இதைப்போல வெவ்வேறு பிரிவுகளிலும் இருக்கக்கூடிய இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் நமக்கு இருக்கும் சவால்.
நம் ஊரில் செங்கல் கட்டடம் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து வெளிக்கொண்டு வருகிறோம். ஒன்றும் ஆவதில்லை. ரஷ்யாவில் அதே போன்ற செங்கல்லை வெளியில் எடுக்கும்போது கடும் பனியில் அது உடைந்துவிடுகிறது. அதைப் பாதுகாப்பாக எடுக்க அங்கே இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சில நேரங்களில் வேதிப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் மேலாக கெட்டி ஆகும்; உள்ளே அப்படியே இருக்கும். மேற்பகுதி மட்டும் கழன்று வந்துவிடும்.
காஞ்சிபுரத்தில் மணல் கல்லினால் ஆன கோவில்கள் இருந்தன. அவற்றை வெளிப்படுத்தும்போது அவை பொடிப்பொடியாக உதிர்ந்தன.
மாமல்லபுரத்தில் கடற்கரையோரமாக இருக்கும் கட்டடங்களை எடுத்துக்கொள்ளுங்கள்… உப்புக்காற்றில் இருந்து அவற்றை எப்படிக் காப்பாற்றுவது… இவை எல்லாம் சவால்கள்.
புதையுண்டு போனவற்றையும், மூழ்கிப்போனவற்றையும் எப்படி பாதுகாப்பாக வெளியில் எடுப்பது, எப்படிப் பத்திரப்படுத்துவது, எப்படி ஆவணப்படுத்துவது என்று அனைத்துமே சவால்கள்தான்.
புதைந்து போனவற்றை எப்படிப் பார்ப்பது? தோண்டாமல் பார்க்க முடியுமா? மூழ்கிப் போனவற்றை எப்படிப் பார்ப்பது? நாமும் நீருக்கடியில் போகாமல் பார்க்க முடியுமா?
அதற்கு அறிவியல்பூர்வமாக உபகரணங்கள் வந்துள்ளன. அந்த உபகரணங்களைப் பயன்படுத்தி, ஆகாயத்தில் இருந்தே, தரைக்குக் கீழே இருக்கும் பொருட்களை இப்போது பார்த்துவிட முடியும். இதேபோல நீருக்கடியில் ஆயிரம் அடியில் இருப்பதையும் இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னேறிக்கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் நம் சந்தோஷங்கள்.”

இந்த ஆராய்ச்சியின் பிரிவுகளாக எவற்றைச் சொல்லலாம்?
“கல்வெட்டுகளை ஆராய்வது, படிப்பது. பூமிக்கு மேலே இருக்கும் கல்வெட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வதும் தொல்லியல் அறிவுதான்.
கட்டடக்கலையின் வளர்ச்சியும் மாற்றங்களும் எப்படி இருந்தன என்பதைப் பார்த்தல்.
சிற்பக்கலை ஒவ்வொரு காலத்திலும் எப்படி வளர்ந்தது என்பதைப் பார்ப்பது.
ஓவியக் கலையை எடுத்துக்கொண்டு, எப்படி 1000 ஆண்டுகள் அழியாத ஓவியங்களைத் தீட்டினார்கள் என்று ஆராய்வது.
இப்படி ஒவ்வொரு பிரிவிலும் தொல்லியல் ஆய்வுகள் பயன் தரக்கூடியவையாகவே உள்ளன.”

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X