காவல் தெய்வம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2019
00:00

விடியும்போதே அல்லோகலப்பட்டது, பூஞ்சோலை கிராமம்.
'பெரிய முத்து கவுண்டரய்யா நம்மள விட்டுட்டு போயிட்டாரே...' என்ற, சீதா பாட்டியின் பெருங்குரல், வளைந்து, நெளிந்து சென்று, சந்து, பொந்துகளில் எல்லாம் பரவியது.
பாட்டியின் குரல் கேட்டு, அரக்க பரக்க எழுந்தவர்கள், கும்பல் கும்பலாக, கவுண்டரய்யா வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
கொஞ்ச நேரத்தில், சுத்துபட்டு கிராமத்திலிருந்தும், உறவினர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என்று கிராமமே நிரம்பி வழிந்தது.
சங்கு, சவுண்டி மற்றும் மேளம் ஒருபுறமும், ஒரு பக்கம், ஒப்பாரி வைத்தும் அழுதனர். பூஞ்சோலை கிராமமே சோகத்தில் அதிர்ந்தது.
பெரிய முத்து கவுண்டர், 6 அடி உயரத்துடன், திடகாத்திரமான தோற்றம் உடையவர். மாநிறத்துக்கும் சற்று மேலான நிறம்; எந்நேரமும் வெற்றிலை போடுவதால், காவியேறிய பற்கள். 75 வயதென்றாலும், வாலிப மிடுக்கு.
தும்பைப் பூ போன்ற மல் சட்டை - வேட்டியுடன், பெரிய மீசையை முறுக்கி நின்றால், ஊரே மரியாதையோடு எழுந்து நிற்கும். பிழைக்க வழியில்லாதவர்கள், ஐயாவை தேடி வந்தால், வளமான வாழ்வு பெறலாம்.
ஐந்தடி உயரத்துடன், முன் கொசுவம் வைத்து கட்டிய சேலையும், நெற்றியில் எப்போதும் துலங்கும் விபூதி பட்டையின் நடுவே, ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு பெரிய குங்கும பொட்டோடும், கழுத்து நிறைய நகையும், வளையலும் அணிந்து, மகாலட்சுமி போல தோன்றுவார், கவுண்டரம்மா.
மாளிகை போன்ற வீடு, தோப்பு, தொறவு என்று கணக்கில் அடங்காத சொத்துகள்.
ஐயாவும் - அம்மாவும், நல்லது, கெட்டது என்றால், வில் வண்டியிலோ, நடந்தோ சென்றால், எட்டு கண்ணும் விட்டெரிக்கும். அப்படி ஒரு கம்பீர தோற்றம்.
பசியாறுவதற்கென்றே ஒரு ஓட்டு கொட்டகையில், எந்நேரமும் சோறும், குழம்பும் கொதித்த வண்ணம் இருக்கும். யார் வேண்டுமானாலும் போய் பசியாறலாம்.
இப்படிப்பட்ட வள்ளல் குணமுடைய, கவுண்டரய்யாவின் திடீர் இழப்பு, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கவுண்டரம்மாவின் அழு குரல், ஊரே எதிரொலித்தது. மிக தைரியசாலி, எதிலும் கண்டிப்பாக இருப்பார். பண விஷயத்தில் கொஞ்சம் கறார் தான். ஆனால், படிப்பு, மருத்துவம் என்றால், கணக்கு பார்க்க மாட்டார்.
மற்ற விஷயத்திற்கு கொடுக்கும்போது, நாணயம் தவறி விட்டால், மறுமுறை எவ்வளவு கெஞ்சினாலும் தர யோசிப்பார். ஆனால், காய்ச்சல், தலைவலி என்று யார் படுத்து விட்டாலும், நேராக வீட்டுக்கு சென்று, பணத்தை கொடுத்து, வைத்தியம் பார்க்க சொல்வார்.
அழுது ஓய்ந்தவர்கள், தலையில் முக்காடுடன் மர நிழலில் அமர்ந்து, 'நேத்து கூட, ஐயாவும் - அம்மாவும், கோவிலுக்கு போயிட்டு வந்தாங்களே... ஐயாவுக்கு, திடீர்ன்னு எப்படி தான் சாவு வந்துச்சோ... அம்மா, எப்படி தான் தாங்குவாங்களோ...' என்று புலம்பினர்.
நேற்று இரவு வரை, திடமாகத்தான் இருந்தார். விடிகாலை, 3:00 மணிக்கு, துாக்கமின்றி தவித்தவர், நெஞ்சில் ஏதோ குத்துவதாக உணர்ந்து, அம்மாவை கூப்பிட்டார்.
அம்மா எழுந்து வருவதற்குள், நெஞ்சடைப்பதாக கூறியவர், வாயில் நுரை தள்ள சரிந்தார்.
கவுண்டரம்மா போட்ட சத்தத்தில், வேலைக்காரர்களும், மாடியில் இருந்த மகன்களும், மருமகள்களும் அலறியடித்து வந்தனர்.
உடனடியாக, டாக்டர் வரவழைக்கப்பட்டார். ஆனால், அவர் வருவதற்குள், கவுண்டரய்யாவின் தலை தொங்கி விட்டது. 'சடர்ன் அட்டாக்' வந்ததாக கூறினார், டாக்டர்.
கவுண்டரம்மாவின் கதறல், எட்டு ஊருக்கும் கேட்டது.
'நேத்து ராத்திரி, ஐயாவுக்கும் - அம்மாவுக்கும் சண்டை நடந்ததாம்... வேலைக்காரி, காமாட்சி எங்கிட்டே சொன்னாடி...' என, குசுகுசுவென்றாள், ஒருத்தி.
'என்னாத்தா இப்படி சொல்ற... அவுக ரெண்டு பேரும், அவ்வளவு ஒத்துமையா இருப்பாகளே...' என்றாள், கிராமத்திலிருந்து வந்த இன்னொருத்தி.
'ஒத்துமைதாண்டி... ஆனா, அந்த செங்குளத்துக்காரிகிட்ட ஐயா தொடுப்பு வச்சிருக்கிறத வச்சித்தான், அடிக்கடி சண்டை...'
'எத்தன வயசானா என்ன, தன் புருஷன விட்டுக்கொடுக்க மனசு வருமா... ஆனா, அந்த செங்குளத்துக்காரி, இனி என்ன செய்வாளோ... ஏற்கனவே, அவ, வேற ஒருத்தன அறுத்து விட்டுட்டு, ஐயா கூட வாழ்க்கை நடத்துனா...'
'சரி... இதையெல்லாம், நாம பேசப்புடாது... பெரிய இடத்து சமாசாரம்...' என்று, தங்களுக்குள் ஒருவர் மாறி ஒருவர் பேசிக் கொண்டனர்.
உண்மை தான். எவ்வளவோ நல்ல குணங்களுடைய, பெரிய முத்து கவுண்டருக்கு, மூன்று கிராமம் தள்ளியிருக்கும், செங்குளத்தை சேர்ந்த, மல்லிகாவுக்கும் - அவள் கணவனுக்கும் இடையே விவாகரத்து தீர்ப்பு சொல்ல போன இடத்தில், அவளோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.
தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் எவ்வளவு பெரிய துன்பம் தரும் என்று தெரிந்தாலும், அனாதையாய் நின்றவளின் துயரமே பெரிதாய் பட, தொடர்பு விரிவடைந்தது.
இதனால், வாரம் இருமுறை, எவருக்கும் தெரியாமல், வில் வண்டியில் சென்று, ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருந்த தங்கள் தோப்பில் சந்தித்து வருவார்.
இவ்விஷயம் அரசல் புரசலாய், கவுண்டர் அம்மாவிற்கு தெரிய வர, அவ்வப்போது சண்டை வெடிக்கும். அப்போது, கவுண்டரம்மாவின் குரல் தான், பெரிதாய் ஒலிக்கும். பெரிய முத்து கவுண்டர், வாயே திறக்க மாட்டார். அதனால், அந்த தோப்பு பக்கம், மகன்கள் போகக் கூடாதென்று சொல்லி விட்டார்.
இதுபோல், ஒருமுறை ஏற்பட்ட சண்டையில், அம்மாவிற்கு ஆதரவாக, மகன்கள் பேசினர்.
'அட நாய்களா... எவண்டா எம் புருஷனை பார்த்து கேள்வி கேட்கறது... இது, எனக்கும், கவுண்டருக்கும் உள்ள பிரச்னை... தேவையில்லாம, எவனும் இதில் தலையிட வேண்டாம்...' என்று, கவுண்டரம்மா போட்ட சத்தத்தில், அவனவன் மனைவிமார்கள், கணவனை இழுத்து மாடி ஏறினர்.
இதனால், கவுண்டரய்யாவிற்கு, தன் மனைவி மேல் இருந்த மரியாதை மேலும் கூடிப்போனது. ஆனாலும், மல்லிகாவுடனான ஈர்ப்பை விட முடியவில்லையே... என்ன செய்வது?
கவுண்டரய்யாவை ஹாலில் கிடத்தியிருந்தனர். பக்கத்தில் தலைவிரி கோலமாய், அழுது கொண்டிருந்தார், கவுண்டரம்மா.
சட்டென நிமிர்ந்து, பக்கத்தில் இருந்தவரிடம், பெரிய மகனை அழைத்து வரச்சொன்னார்.
மகன் வந்ததும், அவனிடம் விஷயத்தை சொல்ல, அதிர்ந்து, அம்மாவை பார்த்தான்.
''போடா, போய் சொன்னதை செய்,'' என்றார், கண்ணீருடன்.
அடுத்த அரை மணி நேரத்தில், கவுண்டரய்யாவின், வில் வண்டி வந்து நின்றது. கூடி நின்ற கூட்டம் வழிவிட, வண்டியிலிருந்து இறங்கிய பெண்ணை பார்த்ததும், ஊரார் திடுக்கிட்டனர்.
'ஐயையோ, இந்த பொம்பள, இங்கயே வந்துட்டாளா... அம்மா என்ன செய்ய போறாங்களோ...' என்று, அழுது கொண்டிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
வயது, 40 இருக்கும். மருண்ட பார்வையோடு, தலைவிரி கோலமாய், அழுதழுது வீங்கிய முகத்தோடும், பயத்தோடும் மெல்ல வந்தாள், மல்லிகா.
அதுவரை, பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்த, கவுண்டரம்மா, அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
கணவரின் அன்புக்கு உகந்தவள், ஏதோ ஒரு விதத்தில், தன்னை விட, அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தவள்.
கணவனின் பராமரிப்பில் வளர்ந்த கன்று என்ற எண்ணம் மனதில் ஓட, இரு கைகளையும் நீட்டி, ''அடி எந்தாயீ... எம் புருஷனுக்கு கண்ணுக்கு கண்ணா இருந்தவளே... நம்மள இப்படி முண்டச்சியாக்கிட்டு, கவுண்டரய்யா போயிட்டாரேடி,'' என்று, அவளை கட்டி அணைத்து கதறிய, கவுண்டரம்மாவை பார்த்து, ஊரே  அதிசயித்தது.
பக்கத்தில் இருந்த பெரியம்மாவாகிய, குருவம்மா மட்டும், ''அடி சிறுக்கி மகளே... அவ, உன் புருஷன் கூட வாழ்க்கைய பங்கு போட்டவடி,'' என்று கத்தினாள்.
''பெரியாத்தா... இவ, என் புருஷனோட சொத்து... அவரு சேர்த்து வெச்ச சொத்தை, நமக்குன்னு கொண்டாடுறோமே... இந்த புள்ளையை, இனிமே என்னைய தவிர, யாரு பார்த்துக்குவா... அவரு இல்லேன்னதும், ஊர் பயல்களெல்லாம் பயப்படாம பார்ப்பாங்களே... அவருக்கு புடிச்ச எல்லாம், எனக்கும் புடிக்கும் ஆத்தா,'' என்று கதறிய, கவுண்டரம்மாவை தேற்ற முடியாமல், அனைவரும் தவித்தனர்.
தன் வாழ்வை பங்கு போட்டிருந்தாலும், அன்பு கணவனுக்கு பிடித்த ஒரே காரணத்தால், அவளையும் காக்க நினைக்கும், ஒரு காவல் தெய்வமாக தான், அனைவருக்கும் தெரிந்தாள், கவுண்டரம்மா.

மா. சுமதி நடராஜன்
வயது: 58,
படிப்பு: எம்.எஸ்சி., - எம்.பில்., - பி.எட்., ஓய்வுபெற்ற ஆசிரியை. சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். தற்போது, மதுரை, மகாத்மா காந்தி நகரிலுள்ள, ஷீரடி குபேர சாய்பாபா கோவிலை நிர்வகித்து வருகிறார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
12-நவ-201906:49:11 IST Report Abuse
Krish சிறுகதைகளை படிப்பதில்லை. தலைப்பு காரணமாக கடைசி வரிகளை பார்த்தேன். இருப்பினும் எல்லோரிடத்தினும் அன்பு வேண்டும், ஒருவரின் தவறுக்கு மற்றொருவருக்கு தண்டனை கூடாது என்ற காரணத்திற்காக , நன்றிகள்.,
Rate this:
Cancel
Penmani - Madurai,இந்தியா
11-நவ-201914:46:58 IST Report Abuse
Penmani சமுதாயத்துக்கு தாங்கள் சொல்லவரும் கருத்து தான் என்ன ??? நல்ல கருத்துக்களை விதைக்க முயற்சி செய்யுங்கள் ...
Rate this:
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
11-நவ-201910:58:03 IST Report Abuse
Prof. A.Venkateswaran. சிக்கல் புதிய கோணத்தில் பார்க்கப் பட்டுள்ளது . கவுண்டர் மனைவியின் முடிவிற்கான காரணங்கள் அற்புதம் . கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Girija - Chennai,இந்தியா
11-நவ-201913:23:25 IST Report Abuse
Girijaஆமா இந்தக்கவுண்டர் மாதிரி ரத்த சொந்தம் அல்லது பெண்ணின் கணவன் இருந்தால் புதிய சிக்கல் என்று புதுப்புது அர்த்தங்கள் சொல்வார்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X