யாருக்கு, எதை, எப்படி, எப்போது தர வேண்டும் என்பது, தெய்வத்திற்கு தெரியும். ஆகையால், 'தெய்வம் அதை தரவில்லை. யார் யாருக்கோ செய்கிறது...' என்றெல்லாம் எண்ண வேண்டாம் என்பதை, விளக்கும் கதை இது:
சூதாட்டத்தில், அனைத்தையும் தோற்று, பாண்டவர்கள் வனவாசம் புகுந்த நேரம். சிவபெருமானிடம் இருந்து, பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக, தவம் செய்து கொண்டிருந்தான், அர்ஜுனன். மனம் அடக்கி, கடும் தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை, பல விதங்களிலும் சோதனை செய்தார், இந்திரன்.
கடும் மழை, வெயில், காற்று எனும் பல சோதனைகளையும் கடந்த, அர்ஜுனன், ரம்பை, ஊர்வசி முதலான தேவலோக பெண்கள் வந்து இடையூறு செய்த போதும் கலங்கவில்லை; தவத்தில் தீவிரமாக இருந்தான்.
தேவேந்திரனே, முனிவர் வடிவில் வந்து, அர்ஜுனனின் மன உறுதியை குலைக்கும் விதமாக பேசினார். அப்போதும், அவன், மன உறுதியை இழக்கவில்லை. சோதனை செய்ய வந்த தேவேந்திரன், 'சிவனருள் பெறுவாய்...' என, வாழ்த்திப் போனார்.
அர்ஜுனனின் தவம், அரன் இருக்கும் கைலாயம் வரை எட்டியது. 'அவன் தான், கடும் தவம் செய்து, சோதனைகளை வென்று விட்டானே... சிவபெருமான் உடனே அருள் செய்யக் கூடாதா... ஏன் காலதாமதம் செய்ய வேண்டும்?'
இதற்கு, உமாதேவியிடம், பதில் சொல்கிறார், சிவபெருமான்...
'தேவி... நம்மை நோக்கி தவம் செய்யும், அர்ஜுனனை அழிப்பதற்காக, துரியோதனன், தன் நண்பனான, மூகாசுரன் எனும் அசுரனை அனுப்பி இருக்கிறான். அந்த மூகாசுரனும், இப்போது, பன்றியாக உருமாறி, அர்ஜுனனை கொல்வதற்காக வரப்போகிறான்.
'அந்த மூகாசுரனையும் கொல்ல வேண்டும்; அர்ஜுனனுக்கும் அருள் புரிய வேண்டும். அதற்காகவே, காலம் கருதி காத்திருந்தோம். நீயும் வா, வேடர்களாக உருமாறிப் போய், அர்ஜுனனுக்கு அருள் செய்வோம்...' என்றார்.
சிவபெருமானும் - உமாதேவியும், வேடுவ தம்பதியராக உருமாறி வர, சிவ கணங்கள், வேடர் படையாக மாறினர்; அனைவரும், அர்ஜுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர்.
அங்கே, அர்ஜுனனை கொல்லும் நோக்கத்தோடு, துரியோதனனால் ஏவப்பட்ட, மூகாசுரன் எனும் அசுரன், பன்றி வடிவில், அவன் மீது பாயத் தயாராக இருந்தான்.
அவன் மீது, சிவபெருமான் அம்பை எய்த அதே வேளையில், அர்ஜுனனும் அம்பை எய்தான். இரு அம்புகளும், பன்றி வடிவில் இருந்த மூகாசுரன் மீது பாய்ந்தன. அவன், இறந்து விழுந்தான்.
பிறகென்ன, யார் எய்த அம்பு முதலில் பாய்ந்தது என்ற வாதம் துவங்கியது. சிவபெருமானுடன் போரிட்டான், அர்ஜுனன்; முடிவில், உண்மை உணர்ந்து, சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
வணங்கிய அர்ஜுனனுக்கு, நடந்தவைகளையெல்லாம் விவரித்த சிவபெருமான், அவன் விரும்பிய பாசுபத அஸ்திரத்தையும் வழங்கி, அருள் புரிந்தார்.
அர்ஜுனன் தவத்தில் திருப்தியடைந்த, சிவபெருமான், அப்போதே, அவனுக்கு அருள் புரிந்திருந்தால், மூகாசுரனால் அவனது கதை முடிந்திருக்கும். அதன் காரணமாகவே, அர்ஜுனனுக்கு அருள் புரிவதை, சற்று தள்ளி போட்டார்.
எனவே, யாருக்கு, எதை, எப்போது, எப்படி தரவேண்டும் என்பது தெய்வத்திற்கு தெரியும்.
பி. என். பரசுராமன்