இரு ஸ்வரங்கள்!
சப்த ஸ்வரங்கள் ஏழு...
அந்த வரிசையில் வராத
இரு ஸ்வரங்கள், சிசு!
இரு ஸ்வரங்கள் என்றாலும்
இவையும்
சப்த ஸ்வரம் தான்!
ஸ்வரங்கள் சேர
அற்புதமாய் ராகம் பிறக்கிறது!
இங்கே -
ராகங்கள் சேர அதிசயமாய்
இரு ஸ்வரங்கள் பிறக்கின்றன!
துயில் ராகம் நீலாம்பரி
அது ஜனிக்க
ஸ்வரங்கள் விழித்திருக்க வேண்டும்!
இங்கோ -
இந்த இரு ஸ்வரங்கள் துயில
நீலாம்பரி விழித்திருக்கிறது!
ஏழு ஸ்வரங்கள்
ஏற்படுத்தும் அதிசயத்தை விட
இந்த இரு ஸ்வரங்கள்
புலப்படுத்தும் இன்பம் அலாதியானது!
குழலையும், யாழையும் விட
சிசுக்களின் குரல் இசை
சிலாகிதமானது!
ஸ்வரங்களை கூட்டி கூட்டி
இசை மீட்டிப் பிறக்கும்
ராக மாலிகாவை விட
எந்த சிரமும் இல்லாமல்
எடுக்கும் கரங்களிலும்
அணைக்கும் மார்பிலும்
ஆனந்த ராகத்தை கொடுப்பது
சிசு என்னும்
இரு ஸ்வரங்கள் மட்டுமே!
இந்த இரு ஸ்வரங்களில்
ஆண் - பெண் பேதங்கள்
அவசியமில்லாதது
அருவருக்கத்தக்கது...
காரணம் -
இந்த இரு ஸ்வரங்கள்
இசை ஸ்வரங்கள் அல்ல
இறைவனின் வரங்கள்!
சு. விஜயலெட்சுமி, கடம்பூர்.