பாலூட்டி வளர்த்த கிளி... பழம் கொடுத்து பார்த்த கிளி... | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements
பாலூட்டி வளர்த்த கிளி... பழம் கொடுத்து பார்த்த கிளி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2011
00:00

பாலூட்டி, சீராட்டி, ஆளாக்கிய அன்னையை, முதுமை காலத்தில் அரவணைத்து, ஆதரவளிப்பவர்கள் நம்மில் குறைந்து விட்டனர். இதனாலேயே முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகி விட்டன. இந்த இல்லத்தில் விடுவதற்கு கூட மனமின்றி, நடுரோட்டில் விட்டுச் சென்ற அரக்கமனம் படைத்த மகன் தான் இந்த கதையின் நாயகன்.
அந்த ஊரில் வசதியான குடும்பத்தை சேர்ந்த தம்பதிக்கு ஒரே பிள்ளை. தரையில் பாதம் படாமல் தோளில் தூக்கி கொண்டாடினர். சந்தோஷமாக கழிந்தன நாட்கள். பிள்ளை வளர்ந்து மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றான். பிள்ளையின் பிரிவு பெற்றோரை வாட்டியது. விடுமுறையில் வந்து முகம் காட்டிச் சென்ற பிள்ளையை, ஆயுளுக்கும் அருகிலேயே வைத்துக் கொள்ள ஆசைபட்டனர். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா... என்ன? படிப்பை முடித்த கையோடு, வெளிநாட்டு வேலையிலும் சேர்ந்து விட்டான் மகன்.
சரி தான். பிள்ளையை பிரிந்திருப்பதே தலைவிதி என நினைத்து, பெற்றோர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். திருமணம் முடிந்த கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்று விட்டார்.
மகனின் பிரிவால் மனம் நொந்த தந்தை, நோயில் விழுந்து இறந்தார். கொள்ளி வைத்த கையோடு, தாயை மட்டும் வீட்டில் தனியாக விட்டுச் சென்றார் மகன்.
யாருமில்லாத தனிமை வாட்ட, போனில் மகனிடம் கெஞ்சத் தொடங்கினார் தாய். "என்னையும் அழைத்துச் செல். உனக்கு பாரமாக இருக்க மாட்டேன்.
வீட்டு வேலைகளை செய்து தருகிறேன். பேரப்பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கிறேன்' என கெஞ்சி அழுதார்.
வேண்டா வெறுப்பாக மகன் மட்டும் தாயை பார்க்க வந்தார். "சரி தயாராகு, என்னுடன் வெளிநாடு வா' என்று சொல்லி, விமான நிலையத்துக்கு அழைத்து வந்தார். "இங்கேயே உட்கார்ந்திரு. நான் போய் டிக்கெட் எடுத்துட்டு வர்றேன்' என்று சொல்லிப் போனார்.
போனவர் திரும்ப வரவில்லை. ஆறுமணி நேரம் கடந்து விட்டது.
நீண்ட நேரமாக மூதாட்டி மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த போலீசார், மெல்ல விசாரித்தனர். நடந்ததைக் கூறினாள் தாய். டிக்கெட் கவுன்டரில் விசாரித்த போலீசாருக்கு, "தாயை தவிக்க விட்டு, மகன் மட்டும் தனியாக டிக்கெட் எடுத்து வெளிநாடு சென்றது' தெரிந்தது. மூதாட்டியிடம் கூறிய போது "என் மகன் அப்படிச் செய்ய மாட்டான். என்னை அழவிட மாட்டான், வருவான்' என்று உறுதியாக கூறியபடி அமர்ந்திருந்தார்.
ஒருநாள் முழுதாக கழிந்தநிலையில், உண்மையை உணர்ந்தாள் பெற்றவள். போலீசார் சொந்த காசில் டிக்கெட் எடுத்து, மூதாட்டியை அவரது ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்தனர். பாசம் காட்டி வளர்த்த மகன்... இப்படி ஒரு பாதகம் செய்ததை நினைத்து, செய்வதறியாது நெஞ்சம் விம்முகிறார் தாய்.
நீதி: முதுமை அனைவரின் வாழ்விலும் வந்து செல்லும் இயல்பான விஷயம். இளமையின் திமிரில் தாயை தவிக்கவிட்ட மகனுக்கும், முதுமை வரும். இந்நிலை தொடரும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X