பா
நானும், லென்ஸ் மாமாவும், குப்பண்ணா வீட்டுக்கு சென்றிருந்தோம். காய்கறி வாங்க போயிருப்பதாக, அவர் மனைவி கூறவே, காத்திருந்தோம்.
கடையில் இருந்து, வெண்டைக்காய் வாங்கி வந்தார், குப்பண்ணா.
காயை பார்த்த மனைவி, 'என்ன காய் வாங்கி வந்திருக்கீங்க... அத்தனையும் முத்தலாக இருக்கு... நல்ல காயா வாங்க தெரியாதா?' என்று சீறினார்.
இதற்கு முன்பும் இதேபோல், காய் வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். பிஞ்சு வெண்டைக்காயாக வாங்கி வந்திருக்கிறார்.
காயை பார்த்த மனைவி, 'என்ன இது... வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சா இருக்கு... இதை எப்படி சமைப்பது, நொடியில் கூழாகிடுமே... காயை கூட பதமா பார்த்து வாங்க தெரியாத நீங்க, என்ன தான் ஆபீசுல கிழிக்கிறீங்களோ...' என்று, அன்றும் கோபமாக கத்தியிருக்கிறார்.
நொந்து போன குப்பண்ணா, மற்றொரு நாள், காய் வாங்க சென்றவர், எப்படி வாங்கினாலும், மனைவி குறை சொல்லிக் கொண்டே இருப்பதால், அன்று, அங்கு காய் வாங்க வந்திருந்த ஒரு பெண்ணிடம் உதவி கேட்டு, நல்ல வெண்டைக்காயாக வாங்கி வந்திருக்கிறார்.
இன்று எப்படியும், மனைவி, தன்னை குறை சொல்ல மாட்டாள் என்று, உறுதியாக நம்பினார்.
பையை பிரித்து பார்த்த மனைவி, 'உங்களுக்கு, வெண்டைக்காயை விட்டால், வேறு காயே வாங்க தெரியாதா?' என்று, கத்தினார்.
'ஆக... எப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும், குறை சொல்கிறவர்களிடம் நல்ல பெயரை எடுக்கவே முடியாது. அதே நேரத்தில், குறை சொல்லியபடியே இருப்பவர்கள், தங்கள் வாழ்வில் உண்மையான சந்தோஷத்தை பெறவே முடியாது...' என்று, காதை கடித்தார், லென்ஸ் மாமா.
கே
லண்டனில், 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' வைத்துள்ள நண்பர், ஒருவர் சொல்ல கேட்டது:
இந்தியாவில், 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' ஒன்றில் பணியாற்றிய ஒருவருக்கு, திடீரென்று, வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை வந்தது. லண்டன் சென்றார். அங்கே, ஆணி முதல் கப்பல் வரை விற்பனை செய்யும் மிகப்பெரிய விற்பனை நிலையத்தில், வேலை கேட்டார்.
விற்பனை துறையில் அனுபவம் இருப்பதாக கூறியதும், அவருக்கு, வேலை கிடைத்தது.
அவரிடம் வந்த மேனேஜர், 'ஒழுங்காகவும், நன்றாகவும் வேலை பார்க்க வேண்டும். நீ எப்படி வேலை செய்கிறாய் என்பதை, அடிக்கடி வந்து பார்ப்பேன்; எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே வேலையில் தொடர முடியும்...' என்றார்.
அதற்கு சம்மதித்து, அவரும் வேலை செய்தார்.
சொன்னது போலவே, ஒரு நாள், அங்கு வந்தார், மேனேஜர்.
'இன்று, எத்தனை பேரிடம், விற்பனை செய்தாய்?' என்று கேட்டார்.
'ஒருவரிடம்!' என்றார்.
அதிர்ச்சி அடைந்தார், மேனேஜர்.
'ஒரே ஒருவரிடம் தான், விற்பனை பண்ணினாயா...' என, சற்று ஏமாற்றம் கலந்த கோபத்துடன் கேட்டார்.
'அப்படியெல்லாம் இல்ல சார்...
எனக்கு, நல்ல அனுபவம் இருக்கு...' என்றார், அவர்.
'அப்படியானால் ஒரே ஒருவரிடம் மட்டும்தானே, விற்பனை செய்திருக்கிறாய். உன்னோடு வேலை பார்க்கும் மற்றவர்களை பாரு, அவங்க எல்லாரும், 30 - 40 பேரிடம், விற்பனை செஞ்சிருக்காங்க... அவங்களை போல நீயும், நிறைய பேரிடம் விற்பனை செஞ்சா தான் இங்கே வேலையில் தொடர முடியும்... சரி, எவ்வளவு பவுண்டுக்கு விற்பனை பண்ணினே...' என்று கேட்டார்.
'பத்து லட்சம் பவுண்டுக்கு, அதாவது, இந்திய மதிப்பு, 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தேன்...' என்றார்.
'என்ன சொல்கிறாய் நீ... ஒரே நபரிடம், 10 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்தாயா... அப்படியென்ன விற்பனை செஞ்சே...' என்று, நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டார், மேனேஜர்.
'அவர் வாங்க வந்தது, ஒரு சிறிய துாண்டில் மட்டுமே. அதைக் கொடுத்து, கூடவே, பெரிய துாண்டிலையும் காண்பித்து, அதன் பயன்பாடுகளை விளக்கினேன்; அதையும் வாங்கினார். அப்புறம், 'பிஷிங் ராட், பிஷிங் கியர்' போன்றவற்றையும் அவருக்கு விற்பனை செய்தேன்.
'அப்படியே அவரிடம் பேச்சு கொடுத்தபோது, கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதை தெரிந்து கொண்டேன். நம் படகு, 'செக் ஷனு'க்கு அழைத்துச் சென்று, படகு ஒன்றை காண்பித்தேன். அதைப்பற்றி விளக்கியதும், படகு ஒன்று வாங்கிக் கொண்டார்.
'திடீரென, ஒரு சந்தேகம். அதாவது, அவரது காரால், அந்த படகை இழுக்க முடியுமா என்று சந்தேகப்பட்டார். கார் டிபார்ட்மென்ட்டுக்கு அழைத்து சென்று காண்பித்து, 'ட்ரக்' ஒன்றை, வாங்கும்படி செய்தேன்...' என்று, தான் விற்பனை செய்த வரலாற்றை, ஒவ்வொன்றாக விளக்கினார்.
இதைக் கேட்ட, மேனேஜர், மயங்கி விழாத குறை...
'இதுதான் வியாபார நுணுக்கம் என்பது. ஒரு விஷயத்தை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அதன் மூலமாக அதனோடு தொடர்புடையவற்றையும் விளக்கிக் கூறி, வாங்க செய்வதே, ஒரு விற்பனையாளரின் திறமை. இதுபோன்ற நுணுக்கமான திறமையை, நம் வாழ்விலும் கடைப்பிடித்தால், வெற்றி நிச்சயம்...' என்றார், நண்பர்.
ப
சுதந்திரத்திற்கு முன், இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, வங்காளத்தில், மிகப்பெரிய பஞ்சம் தலை துாக்கியது. அதில், பல லட்சம் பேர் மடிந்தனர்.
'இயற்கையால் ஏற்படும் பஞ்சத்திற்கு, அரசு என்ன செய்ய முடியும்...' என, கேட்டது, ஆங்கிலேய அரசு.
'அரசு, சரிவர ஒழுங்காக செயல்படவில்லை. அதனால் தான் பஞ்சம் ஏற்பட்டது...' என்று, இந்திய தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இப்படியாக அரசுக்கும், தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. ஆனால், பஞ்சம் அப்படியேதான் இருந்தது. அதற்கான காரணத்தை முறையாக கண்டறிந்து தீர்த்து வைக்க, யாருமே முயற்சிக்கவில்லை. நிதானமின்றி நடந்து கொண்டனர், இரு தரப்பினரும்.
இந்நிலையில், பிரபல பொருளாதார பேராசிரியர், டாக்டர் சென், நிதானமாக சிந்தித்தார்.
'இதுபோன்ற பஞ்சம், இனிமேலும் வராமல் தடுக்க வேண்டும் என்றால், அதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்...' என்று நினைத்தார்.
எகிப்து, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகம் எழுதினார். அதில், வறட்சி காரணமாக பஞ்சம் ஏற்படவில்லை என்றும், முறையாக விநியோகம் இல்லாமல் போனதே, பஞ்சத்திற்கு காரணம் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அன்று முதல் இன்று வரை, இதே நிலை தான் தொடர்கிறது; ஆட்சியாளர்களும், அன்று சொன்னதையே தான் இன்றும் சொல்லி வருகின்றனர்; மாற்றம் தான் ஏற்படவில்லை.