அன்பு சகோதரிக்கு —
நான், 65 வயதான மூத்த குடிமகள். எனக்கு ஒரே மகன். படித்து, வெளிநாட்டில் வேலை செய்கிறான். என் கணவர், ஓய்வுபெற்ற அரசு பணியாளர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், மகனுக்கு ஆசை ஆசையாக திருமணம் செய்து வைத்தோம். வெளிநாட்டில், நிரந்தரமாக பணிபுரிய விரும்பாத மகன், தன் மனைவியை அவள் அம்மா வீட்டில் இருக்கும்படியும், அவன் இந்தியா வரும்போது, எங்களுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளான்.
கம்பெனி ஒன்றில் மருமகள், வேலை செய்து வருவதால், நாங்களும், இந்த ஏற்பாட்டுக்கு சம்மதம் சொல்லி விட்டோம்.
கடந்த ஆண்டு, மகன் எனக்கு போன் செய்து, மூன்று லட்ச ரூபாய் இருந்தால், அவன் மனைவியிடம் கொடுக்க சொன்னான். நாங்களும், ஏன், எதற்கு என்று கேட்காமல் கொடுத்தோம்.
இது தவிர, மகனும், மாதா மாதம், அவளுக்கு பணம் அனுப்பியுள்ளான்.
சமீபத்தில், இந்தியா வந்த மகன், ஏதாவது தொழில் செய்ய விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, மனைவியிடம், தான் அனுப்பிய பணத்தை பற்றி விசாரித்துள்ளான்.
சேமிப்பு ஏதும் இல்லை என்று கை விரித்திருக்கிறாள், மருமகள்.
'இதுவரை, 30 லட்சம் அனுப்பியுள்ளேன். இல்லை என்கிறாயே... அப்பணத்தை என்ன தான் செய்தாய்...' என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை. நாங்கள் கொடுத்த, மூன்று லட்சமும் அம்போ.
என் மகன், மனம் நொந்து, திரும்பவும் வெளிநாடு சென்று விட்டான். அவளது பெற்றோரிடம் கேட்க போனோம், அலட்சியமாக பதில் கூறினர்.
மருமகளை தனியே அழைத்து கேட்டால், 'அதெல்லாம் கேட்க உங்களுக்கு தகுதி இல்லை. அதுமட்டுமல்லாமல், வேலை விட்டுவிட்டு இங்கே வந்து என்னத்தை கிழிக்க போறாரோ... வேலை வெட்டி இல்லாமல், பெண்டாட்டி சம்பாத்தியத்தில் காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தால், நான் பொல்லாதவளாகி விடுவேன்...' என்று மிரட்டுகிறாள்.
என் மகன் வாழ்வு மலர, நாங்கள் என்ன செய்ய வேண்டும் சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு, மூன்று வகையான பிரச்னைகள் உள்ளன. ஒன்று: வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு, திருமணத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய பிற மகளிர் தொடர்பு ஏற்பட்டு, அவர்களது திருமண வாழ்க்கை சீர்கெடல்.
இரண்டு: வெளிநாட்டில் பணிபுரிவோரின் மனைவியரில் சிலர், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபட்டு, வாழ்க்கையை நரகமாக்கி விடுதல் அல்லது ஆடம்பர செலவு செய்து, கணவன், வெளிநாடு போனதன் நோக்கத்தை குலைத்து விடுதல்.
மூன்று: வெளிநாட்டில் பணிபுரிவோர், மனைவி மக்களுடன் சேர்ந்திருந்து, குடும்பம் நடத்தி, பெரும் செலவுக்கு ஆளாகின்றனர். மொத்தத்தில், வெளிநாட்டு பணி, குடும்பங்களுக்கு எந்த விதத்திலும் சந்தோஷத்தை பரிசளிப்பதில்லை.
உங்களின் மகன் - மருமகளுக்கு, குழந்தைகள் எதுவும் இருப்பதாக, கடிதத்தில் குறிப்பிடவில்லை. மருமகள், வெறும் இல்லத்தரசி அல்ல, அவளும் வேலையில் இருக்கிறாள்.
மொத்தமாய், 33 லட்ச ரூபாயை, உங்கள் மருமகள் என்ன செய்திருப்பாள்? யோசிப்போம்...
* திருமண பந்தம் மீறிய உறவு ஏதாவது ஒன்றில், மருமகள் ஈடுபட்டிருக்க கூடும். அவனுக்கு, உங்கள் மருமகள் விரும்பி செலவழித்தாளோ என்னவோ?
* தன் பெயரில், நிலமோ, வீடோ வாங்கியிருப்பாள்
* மகன், தொடர்ந்து வெளிநாட்டு வேலையில் இருந்து பணம் அனுப்ப வேண்டும்; அதில், நாம் மஞ்சள் குளிக்கலாம். வெளிநாட்டு வேலையை, உங்கள் மகன் விட்டு விட்டு வந்து விட்டான் என்றால், தன் சுதந்திரம் தடைபட்டு போகும் என, மருமகள் நினைக்கிறாள் போலும்
இனி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
* அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், மருமகளை நேரடியாக குற்றம் சாட்டாது, சம்பந்தி வீட்டாரிடம் மனம் விட்டு பேசுங்கள். 30 லட்ச ரூபாய்க்கு, கணக்கு கேளுங்கள். மருமகளுக்கு, அவளது பெற்றோர், ஏதேனும் துர் போதனைகள் செய்திருக்கின்றனரா என்பதையும் ஆராயுங்கள்
* வெளிநாட்டில் இருக்கும் மகனை, விடுமுறையில் வரச்சொல்லுங்கள். மகனையும் - மருமகளையும் இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் வைத்து, இருவர் தரப்பையும் முழுமையாக விசாரியுங்கள். வெறும் கருத்து வேற்றுமை இருந்தால், பேசி களைந்து விடலாம்
* மருமகள் விரும்பினால், மகன் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்று, உடன் இருந்து குடும்பம் நடத்த சொல்லுங்கள்
* மகனும் - மருமகளும், ஏதேனும் ஒரு மன நல ஆலோசகரிடம் சென்று, ஆலோசனை பெறலாம். இருவருக்கும், குழந்தை இல்லாத பிரச்னை தான் பிரதானம் என்றால், இருவரையும் முழு மருத்துவ உடல் பரிசோதனை மேற்கொள்ள செய்து, தகுந்த மருந்து உட்கொள்ள சொல்லவும்
* மருமகள், ஆடம்பர செலவு செய்வது உண்மை என்றால், மகன், தன் சம்பாத்தியத்தை, அவளுக்கு அனுப்பாமல் வங்கியில் சேர்த்து வைக்கட்டும்
* எதிலும் உறவுகள் ஒட்டவில்லை என்றால், மகன் - மருமகளுக்கு இடையேயான விவாகரத்து நடவடிக்கைகளை, நீங்கள் தீர யோசித்து மேற்கொள்ளலாம்
* விவாகரத்துக்கு பின், உங்கள் மகனை தாயகம் திரும்ப சொல்லி, சேர்த்து வைத்த பணத்தை வைத்து தொழில் துவங்கி, மறுமணம் செய்து வைக்கலாம்
* மருமகளின் தோழிகள் யாரையாவது அணுகி, அவளின் உண்மை மன நிலையை அறிந்து செயல்படலாம்.
மருமகளின் பக்கம் நியாயம், 5 சதவீதமாவது இருக்கிறது என தெரிந்து கொண்டால், உங்களின் நடவடிக்கைகளை மாற்றி அமைக்கலாம்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.