அந்திம கிரியை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ''என்ன, போஸ்ட்மேன்... ஏதாவது ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கா,'' என்றார்.
''இல்ல சார்... சன்னிதி தெருவில் உள்ள நாடார் கடையிலே, 'டெலிவரி' பண்ணிட்டு இருக்கும்போது, ஒருவர் மயங்கி விழுந்துட்டாரு... நாடார், உங்களை அழைத்து வரச்சொன்னார்,'' என்றார், சிவா.
அடுத்த ஐந்தாவது நிமிடம், நாடார் கடையில் இருந்தார், டாக்டர்.
பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரை பார்த்தவுடன், 'ஸ்டெதாஸ்கோப்'பை வைத்து, மார்பில் இரண்டு கைகளாலும் அழுத்தி அழுத்தி பார்த்தார். உடனே, ''பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக வேண்டும்,'' என்றார், டாக்டர்.
பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு, தன் காரில், அவரை அழைத்து போக, நாடாரும், சிவாவும் உடன் சென்றனர்.
''வர்ற வழியிலேயே அவருக்கு, 'மாஸிவ் ஹார்ட் அட்டாக்' வந்திருக்கு... 'யூ ஆர் டூ லேட்' டாக்டர், ராகவன். 'போஸ்ட் மார்ட்ட'த்துக்கு ஏற்பாடு பண்ணணும்... போலீசுக்கு, 'இன்பார்ம்' பண்ணிடுங்க; அவருக்கு சொந்தகாரங்க யாராவது இருந்தா, தகவல் சொல்லிடுங்க,'' என்றார், அங்கிருந்த டாக்டர்.
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த, டாக்டர் ராகவன், போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
''இவர், பஸ்சை விட்டு இறங்கினதும், நேரா என் கடைக்கு வந்தார். 'ரொம்ப, 'டயர்டா' இருக்கு... ஒரு, 'கூல்டிரிங்ஸ்' கொடுங்க'ன்னு, வாங்கி குடித்தார். வெளியூரை சேர்ந்த அவர், ஊர் ஊராய் கோவிலில் சாமி தரிசனம் செய்து வர்றாராம்...
''நம்மூர் கோவில் சனி பிரதோஷம் பிரசித்தி பெற்றது என்பதை கேள்விப்பட்டு, இன்னிக்கு சாமி கும்பிட்டால் ரொம்ப விசேஷம்ன்னு சொன்னவரு, அப்படியே மயக்கமாயிட்டாரு... நான் தான் போஸ்ட்மேனை விட்டு, டாக்டரை கூட்டி வரச்சொன்னேன்,'' என்றார், நாடார்.
'போஸ்ட்மார்ட்டம்' மற்றும் போலீஸ், 'பார்மாலிட்டி'கள் முடிந்த பின், ''பிணத்தை ஆஸ்பத்திரியிலே விட்டுடுங்க... அவங்க என்ன செய்யணுமோ செஞ்சிடுவாங்க,'' என்றார், போலீஸ் அதிகாரி.
உணர்ச்சிவசப்பட்டவராய், ''இல்ல... இவர் அனாதை இல்ல... இவருக்கு, நான் காரியம் செய்ய போறேன்,'' என்றார், டாக்டர்.
மற்ற, 'பார்மாலிட்டி'கள் முடிந்த பின், காரில் ஏற்றி கிளம்பினர்.
''ஏன் டாக்டர், இந்த அனாதை பிணத்துக்கு காரியம் செய்யணும்ன்னு நினைக்கறீங்க... பேசாம ஆஸ்பத்திரியிலேயே விட்டுட்டு வந்துடலாம்ல... நீங்க, இந்த ஊருக்கு வந்ததிலிருந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன்...
''ஊர்லயோ, பக்கத்து கிராமங்களிலோ, சாவுன்னு கேள்விப்பட்டா, உடனே போய் தோள் கொடுக்கறீங்க... வேண்டிய உதவி செய்யறீங்க... ஆனா, ஈமகிரியை செய்யிற அளவுக்கு வருவீங்கன்னு நினைக்கல,'' என்றார், நாடார்.
''நாடார்... பகவத் கீதையிலே ஒரு ஸ்லோகம் இருக்கு... எதையும் எதிர்பார்க்காதவன்; அகம், புறம் துாய்மை உடையவன்; வேண்டியவர், வேண்டாதவர் என எண்ணாதவன்; நான் செய்கிறேன் என்று எண்ணாதவன். இப்படி உள்ள பக்தனே, எனக்கு பிரியமானவன்னு கிருஷ்ண பரமாத்மாவே சொல்லி இருக்கார்.
''ஏதோ என்னால் இயன்ற வரை, அப்படி நடக்க முயற்சிக்கிறேன். மேலும், இப்படி நான் நடப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கு,'' என்றார், டாக்டர்.
''அது என்ன சார்,'' என்றார், போஸ்ட்மேன் சிவா.
''இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை இப்ப சொல்றேன்... டில்லியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான், ஒருநாள், சுவாமி சிவானந்த சரஸ்வதியின் உபன்யாசத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
''உபன்யாசம் முடிந்தவுடன், கூட்டத்தை ஊடுருவியபடி சென்று கொண்டிருந்த சுவாமிகள், ஒதுக்குபுறமாக நின்றிருந்த என்னை பார்த்து, 'இறந்தவர்களை சுமந்து செல்...' என்று சொல்லி, புறப்பட்டு விட்டார்.
''சில நிமிடங்களுக்கு எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'சுவாமிகள், என்னை பார்த்து எதற்காக இப்படி சொல்ல வேண்டும்...' என்ற குழம்பிய மனதுடன், என் அறைக்கு திரும்பினேன்.
''சிறிது நேரத்தில், பக்கத்து அறையில் ஏதோ சத்தம். சற்று முன் வரை, நல்ல நிலையில் பேசிக் கொண்டிருந்த நண்பனுக்கு மாரடைப்பு; இறந்து போயிருந்தான். அன்று, முதன் முதலாக அந்த நண்பனின் பிணத்தை சுமந்து சென்றவன் தான், இன்று வரை, நுாற்றுக்கும் மேல் பிணங்களை சுமந்து, சுடுகாட்டுக்கும், இடுகாட்டுக்கும் சென்று கொண்டிருக்கிறேன்.
''இதில், ஜாதி, மத பேதம்ன்னு கிடையாது. அடக்கம் செய்வதற்கோ, எரியூட்டுவதற்கோ ஏற்பாடு செய்து கொடுத்து, கடைசி வரைக்கும் துாக்கிச் செல்வேன். மரணம் ஏற்பட்ட குடும்பத்தில், சோகம் நிறைந்திருக்கும். அந்த சூழலில் காரியங்களை எடுத்து செய்வதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
''அம்மாதிரியான சூழ்நிலையில், பொருளுதவியும் செய்து, உதவிக்கரம் நீட்டினால், அக்குடும்பத்திற்கு பெரிய ஆறுதலாக இருக்கும். சுவாமிகள் கட்டளைப்படி, என் கடைசி மூச்சு இருக்கும் வரை, இப்பணி தொடரும்,'' என்றார், டாக்டர்.
''ரொம்ப பெருமையா இருக்கு, டாக்டர்... உங்க சேவையில, நானும், போஸ்ட்மேனும், அணில் மாதிரி சேவை செய்ய காத்திருக்கோம். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம். நீங்க இப்படி செஞ்சிட்டு வர்ற புனிதமான சேவையை, உங்க அக்ரஹாரத்து ஜனங்க வெறுக்கிறாங்க, ரெண்டு வருஷமா எதிர்க்கிறாங்க, உங்களை விரோதமா பார்க்கிறாங்களே,'' என்றார், நாடார்.
''அது, அவங்களோட அபிப்ராயம்... அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு... என் கடன் பணி செய்து கிடப்பதே,'' என்றார், டாக்டர்.

ஊர் வந்துவிடவே, தன் வீட்டு வாசல் திண்ணையில், இறந்தவரின் உடலை கிடத்தினார்.
நாடாரிடமும், போஸ்ட்மேனிடமும், ''நீங்க ரெண்டு பேரும் ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க... இன்னும் ரெண்டு, மூணு பேரை கூட்டி வந்து, பிணத்துக்கு தோள் கொடுத்தீங்கன்னா, ரொம்ப புண்ணியமா போகும் செய்வீங்களா,'' என்றார், தழுதழுத்த குரலில்.
''என்ன டாக்டர், கண் கலங்கிட்டு... இந்த ஊருக்கு எவ்வளவு உதவிகள் செஞ்சிருக்கீங்க... நீங்க சொல்லி, நாங்க செய்யாம இருப்போமா... கடையிலிருந்து ரெண்டு, மூணு பேரை வரச்சொல்லி இருக்கேன்... ஊர் மக்களுக்கும் சொல்லியிருக்கேன்... தகனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள பண்ணிட்டு இருக்கோம்... நீங்க கவலையை விடுங்க; மத்த வேலையை பாருங்க,'' என்றார், நாடார்.

டாக்டர் ராகவன், தன் பூர்வீக கிராமமான இந்த ஊருக்கு வந்து, இரண்டு ஆண்டு இருக்கும். சொந்தமாக, 'கிளினிக்' வைத்து, இந்த கிராமம் மட்டுமல்லாமல், சுற்றுபுற கிராமங்களுக்கும் வைத்தியம் செய்து கொண்டிருந்தார். தன் கடைசி காலத்தில், சொந்த மண்ணின் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று, எண்ணம் கொண்டிருந்தார்.
தினமும் காலை, 7:00 மணிக்கு, அக்ரஹாரம் ஒட்டியுள்ள தெருக்களுக்கு, 'ஸ்கூட்டி'யில் சென்று, யாராவது நோய்வாய்பட்டிருந்தால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பார். வீடு திரும்ப, மதியம், 1:00 மணி ஆகிவிடும். சாப்பாட்டிற்கு பின் சிறிது ஓய்வு.
மீண்டும், 3:00 - 6:00 மணி வரை, சுற்றுபுற கிராமங்களுக்கு மருத்துவ சிகிச்சை. இரவு, 7:00 - 10:00 மணி வரை, வீட்டிற்கு வரும் நோயாளிகள். அவர்களால் என்ன கொடுக்க முடியுமோ, அதை உண்டியலில் போடச் சொல்வார். மாதம் ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு, அதில் உள்ள பணம், தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப்படும்.
அவருக்கு வரும் கடிதங்களில், அவர் பெயர் குறிப்பிடாமல், 'கைராசி டாக்டர்' என்ற முகவரியுடன் வரும். அந்த அளவிற்கு, கிராம மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தார்.

தகவல் தெரிந்து, அக்ரஹாரத்து மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக, ராகவன் வீட்டு முன் கூடினர்.
கூட்டத்தை விலக்கி வந்த, சாம்பசிவ குருக்கள், ''என்ன டாக்டர்... இன்னிக்கு, சனி பிரதோஷம், சாமி புறப்பாடு வேற இருக்கு... யாரு இந்த அனாதை பிணத்துக்கு காரியம் பண்ணுவா...
''என்ன ஜாதியோ, என்ன கோத்திரமோ... நீங்க பாட்டுக்கு பிணத்தை ஆஸ்பத்திரியிலயே விடாம, ஒங்காத்துக்கு கொண்டு வந்திருக்கீங்க... சேதி தெரிஞ்சு, கோவில் நடை சாத்தியாச்சு... தீட்டு வேற, பேசாம, 'டெட் பாடி'யை திரும்பவும் ஆஸ்பத்திரியிலயே விட்டுட்டு வந்துடுங்கோ,'' என்றார்.
குருக்களின் பேச்சுக்கு ஆதரவாக, 'டாக்டருக்கு ஏன் இப்படி புத்தி போகுது... அனாதை பிணத்துக்கு இவர் காரியம் பண்ண போறாராமே... இவருக்கு, பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன...' என, ஆள் ஆளுக்கு பேசினர்.
சாஸ்திரத்திலும், சம்பிரதாயத்திலும், சடங்குகளிலும் கரை கண்ட, ராகவன் டாக்டர், விளக்கம் சொல்லி, குருக்கள் வாயை அடைக்க முடியும். ஆனால், மனசு உருக வேண்டிய இந்நேரத்தில், அறிவு, அதுவும் சக்கை அறிவை பற்றி பேசி என்ன ஏற்பட போகிறது என, மனதுக்குள் நினைத்தார்.
''ராமாயணம் எல்லாருக்கும் தெரியும். சாட்சாத் ஸ்ரீராமரே, ஜடாயு பறவைக்கு அந்திம கிரியை செஞ்சாருன்னு உங்களுக்கு தெரியுமா... ராமர் வேற கோத்திரம், ஜடாயு வேற கோத்திரம்... ஜாதி மட்டுமல்ல, இனமே வேற... அப்படி, சாட்சாத் ஸ்ரீராமரே செஞ்சிருக்கும்போது, நான் சாதாரண மனிதன், இறந்தவருக்கு, அந்திம கிரியை செய்யிறதிலே என்ன தப்பு,'' என்றார்.
ராகவனை சுற்றி நின்ற, வைதீக கூட்டமும், மெத்த படித்த கூட்டமும், அவர் சொன்னதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.
''இத பாருங்க ராகவன், நீங்க டாக்டருங்கிறது அப்புறம். முதல்ல, நீங்க இந்த அக்ரஹாரத்து மனுஷன்... எங்களோட ஒண்ணா இருக்கிறவர்... அக்ரஹாரத்துக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு; அதை மீற கூடாது. அதனால், ஆஸ்பத்திரியில பிணத்தை விட்டுட்டு வந்துடுங்க,'' என்றார், சாம்பசிவ குருக்கள்.
''சரி, குருக்களே... சாமி பூஜைக்கு, பங்கம் வராது நம்புங்கோ... பெரியவா பெரியவான்னு சொல்லிண்டி இருக்கேளே, அந்த பெரியவா என்ன சொல்லியிருக்கா, 'அனாத பிரேத சம்ங்கார அச்வமேத பலம் லபேத்!' அதாவது, அனாதை பிணத்துக்கு, அந்திம கிரியை செஞ்சா, அச்வமேத யாகம் செஞ்ச பலன் கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கா.''
''ஓய், ராகவன்... பெரியவா சொன்னதா ஏதேதோ சொல்லாதீங்கோ,'' என்றார், பட்டு சாஸ்திரிகள் கிண்டலாக.
''சாஸ்திரிகளே, நான் சொன்னது, சாஸ்திரம் மட்டுமல்ல... பெரியவாளோட திவ்ய சரித்திரம்... உங்களுக்கு தெரியாம போனது ஆச்சரியமா இருக்கு... இன்னொரு சம்பவம் சொல்றேன், அதை கேட்ட பிறகாவது உங்க புத்தி தெளியுதான்னு பாருங்கோ...
''காஞ்சிபுரத்திலே ஓடற வேகவதி ஆற்றிலே, வெள்ளத்தின்போது ஒரு பிணம் வந்தது. சக்ரவர்த்தி என்ற வைணவ பக்தர், அந்த பிணத்தை கரையிலே எடுத்து பார்த்தபோது, அவர் மேல், வைணவ சின்னங்களான திருமண் காப்பு (நாமங்கள்) இருந்தன.
''உடனே, ஒரு வைணவருக்கு செய்ய வேண்டிய அந்திம கிரியை செஞ்சார்... பூஜையும், புரோகிதமும், மெத்த படித்த சாஸ்திரங்களை கரை கண்டவா எல்லாரும் சேர்ந்து, அந்த சக்ரவர்த்தியை, ஜாதி ப்ரஷ்டம் செய்திருந்தனர்.
''ஆனால், அந்த ஊரில் கோவில் கொண்டிருந்த தேவாதிராஜா பெருமாளோ, ஊர் மக்களிடம், 'சக்கரவர்த்தி அப்படி செய்தது, எனக்கு சம்மதம்'ன்னு கூறி, 'ஊருக்கு பொல்லான்; ஆனால், அவன் எனக்கு நல்லான்' என்று சொல்லவே, அவருக்கும், அவர் பரம்பரைக்கும், 'நல்லான் சக்கரவர்த்தி' என்ற பெயர் வர காரணமாயிற்று,'' என்று சொல்லி, அருகில் இருந்த குளத்தில் மூழ்கி, பூணுாலை வலது தோளுக்கு மாற்றினார்.
தீச்சட்டியை கையில் எடுத்து, தெளிவாக மந்திரத்தை சொன்னபோது, அதிர்ந்து போனார், பட்டு சாஸ்திரிகள். ராகவன், தன்னை விட, விஷயம் தெரிந்தவராக இருப்பதை நினைத்து, ஆச்சரியப்பட்டார்.
நாடார், சிவா மற்றும் இருவருடன் டாக்டர் முன்னே செல்ல, இவர் மீது மரியாதை வைத்திருந்த ஊர் மக்கள், ஊர்வலமாக போக தயாராக இருந்தனர்.
சுடு காட்டில், வாக்கரிசி போட்ட பின், மந்திரங்களை தெளிவாக சொல்லி, சிதைக்கு தீ மூட்டினார்.
உதவி செய்தவர்களுக்கு, ராகவன் நன்றி சொல்ல, நாடாரும், சிவாவும் மற்றும் ஊர் மக்களும் நெகிழ்ந்து போயினர்.
'எப்பேர்பட்ட மனித நேயம் இவருக்கு...' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மீண்டும் ஆற்றில் குளித்து, வீட்டு வாசலில் வைத்திருந்த தண்ணீரில் ஒரு சொம்பு எடுத்து கை, கால்களை சுத்தம் செய்து, உடைகளை மாற்றிய பின், மனைவியிடம், ''சூடா ஒரு கப் காபி கொண்டு வா,'' என்றார்.
திடீரென ஒரு உந்துதல், மின்னலென ஒரு யோசனை. இறந்தவரின் முகம் திரும்ப திரும்ப கண்ணில் வரவே, பரணில், பழைய பெட்டியில் இருந்த, கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து பார்த்தபோது, கண்கள் குளமாகின.
மன்னார்குடி நேஷனல் ஸ்கூல், 1968, எஸ்.எஸ்.எல்.சி., 'எப்' பிரிவு, 'குரூப் போட்டோ'வில், தலைமை ஆசிரியர், வி.சீனிவாசனுக்கு பின்புறம், தானும், நண்பன் சந்திரசேகரனும் நின்றிருந்ததை பார்த்தார்.
'பிறப்பால் தொடரும் உறவுகளாக இல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே புனிதமானது என்பது, எவ்வளவு பொருத்தமானது. புகைப்படத்தில் இருந்தவரின் மூலம், தான் இப்படி உயர்ந்த நிலைக்கு வந்ததும், அதை மறக்காமல், அவரை தேடி சென்றபோது, கிடைக்காமல் போனதும், ஞாபகத்திற்கு வந்தது. அவர் செய்த உதவிக்கு நன்றி கடன் தானோ, நான் இன்று செய்த செயல்...' என்று நினைத்துக் கொண்டார், டாக்டர் ராகவன்.

ஆனந்த சீனிவாசன்
வயது: 69,
ஊர்: சென்னை. கல்வி: பி.காம்., அஞ்சல் துறையில் உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். இப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல் பரிசு வாங்கும் வரை முயற்சி தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Subburaj - Kolkata,இந்தியா
03-டிச-201912:40:24 IST Report Abuse
Selvaraj Subburaj நடைமுறைக்கு ஒத்து வராத கதை. இறந்துபோன நபரின் உறவினர்களை தேட முயற்சி ஒன்றும் செய்யாமலே, kariyankal செய்வது
Rate this:
Share this comment
Cancel
02-டிச-201922:58:40 IST Report Abuse
Gowtham Sankar good
Rate this:
Share this comment
Cancel
02-டிச-201922:08:15 IST Report Abuse
Gowtham Sankar சிறந்த கதை, வேதங்களின் வெளிப்பாடு சிந்தனைகள் விரிவடையச் செய்யவே, ஏனோ புரிதல்கள் பிந்தங்குகின்றன!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X