'வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ, வயிறு வாழ்த்தும்' என்பது பழமொழி.
வெயிலில் தவித்து, வீடு தேடி வருவோருக்கு, குடிப்பதற்கு நீர் கொடுத்தால், அவர் குடித்து முடித்ததும், 'அப்பாடா...' என்று, அவரை அறியாமலே, வயிறு வாழ்த்தும் பாருங்கள்... அது, அவர் முகத்தில் பிரதிபலிக்கும்.
'தாயே... பசிக்குது தாயே... ஏதாச்சும் இருந்தா, போடு தாயி...' என்று கேட்போர், யாராக இருந்தாலும், அவர்களுக்கு உணவு போட்டால், அது, தெய்வத்திற்கே உணவு இட்டதற்கு சமம்.
திருப்பூவனம் எனும் திருத்தலத்தில், வேதங்களிலும், கலைகளிலும் வல்லவர், ஒருவர் இருந்தார்; ஒழுக்க சீலர். மறந்தும் அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காதவர். என்ன இருக்கிறதோ, அதை அவ்வூரில் இருக்கும் திருப்பூவனநாதரான சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, யாருக்காவது பகிர்ந்து, அதன் பிறகே உண்பார்.
முறைப்படி, சிவ பூஜையை செய்து வந்த அந்த அடியார், நாளாக நாளாக, உணவை ஒதுக்கி, கீரைகளை பக்குவப்படுத்தி, அதை மட்டுமே சாப்பிட துவங்கினார்; யாகத்திலேயே நாட்கள் கழிந்தன.
ஒருநாள், இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது.
அன்றைக்கான கீரை உணவை தயாரித்த பின், யாகத்தில் அமர்ந்தார், அடியார்.
சற்று நேரத்தில், குடிசை கதவை, யாரோ தட்டுவது போல இருந்தது. அந்த நேரத்தில், யாகத்தை முடித்திருந்த அடியார், எழுந்து, கதவை திறந்தார்.
'மிகுந்த பசி...' என்று சொல்லியபடி, யாரோ இருட்டில் நிற்பது தெரிந்தது.
'வாருங்கள்... உள்ளே வாருங்கள்...' என்று, அன்போடு அழைத்துச் சென்ற அடியார், முதலில், வந்தவரின் உடல் ஈரம் போக துடைத்துக் கொள்ள செய்தார். பிறகு, தான் பக்குவப்படுத்தி வைத்திருந்த கீரையை, வந்தவருக்கு பகிர்ந்தளித்து, 'உண்ணுங்கள்...' என்றார்.
பசியோடு மழையில் நனைந்து வந்தவரோ, அடியார், அன்போடு தந்ததை உண்டு, மனமார வாழ்த்தினார். அவ்வாறு வாழ்த்தி கொண்டிருந்த அதே விநாடியில், அங்கே, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார், திருப்பூவனநாதர்.
'அன்பனே... பசியோடு வருவோர் யார், எவர் என்று எண்ணாமல், எந்த விதமான பேதமும் பாராமல், இருப்பதை பகிர்ந்தளித்த, பக்தா... நலம் பெறுவாய் நீ...' என்று கூறி, அடியாருக்கு முக்தியளித்தார்.
பசித்தவருக்கு உணவிடும், அன்னதானத்தின் பெருமையை விளக்கும் இவ்வரலாறு, மழைக்குள் ஒருநாள் பகுந்துண்ட உப்பிலாக் கீரைக்கு அருமாப் பதவியளித்தாரேன்... என-, 'திருப்பூவன நாதர் உலா' எனும் பழந்தமிழ் நுாலில் இடம்பெற்றுள்ளது.
இயன்ற வரை, பசித்தவர் பசியை தீர்ப்போம்; பாவங்கள் பறந்தோடும்; பரமனருள் கிட்டும்.
பி.என். பரசுராமன்