துணிச்சலுக்கு மறுப் பெயர் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
துணிச்சலுக்கு மறுப் பெயர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

டிச., 7 - சோ நினைவு நாள்

அரசியல் விமர்சனம், இப்படி தான் இருக்க வேண்டும் என்று, இலக்கணம் வகுத்தவர், சோ. அச்சமின்மைக்கு அடையாளமாக திகழ்ந்தவர். மிகச் சிறந்த அறிவாளி. ஒப்பற்ற திறமையாளர். நகைச்சுவை, எழுத்து மற்றும் பேச்சிலும் தன்னிகர் அற்றவர். மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவர் உருவாக்கிய, 'துக்ளக்' இதழில், நீண்ட காலம்பணியாற்றி வரும், உதவி ஆசிரியர், சத்யா, சோ பற்றிய நினைவுகளை, பகிர்ந்து கொள்கிறார்:
'துக்ளக்' இதழ் ஆரம்பிக்கப்பட்ட விதமே அலாதியானது. தன் நண்பர்களிடம் வைக்கப்பட்ட, ஐந்து ரூபாய் பந்தயத்திற்காக, 'நான் பத்திரிகை ஆரம்பித்தால் வாங்குவீர்களா...' என்று, தமிழ் விளம்பரம் ஒன்றை, 'ஹிந்து' ஆங்கில பதிப்பில் வெளியிட்டார்.
'ஹிந்து' நாளிதழில் தமிழில், வெளியான, முதல் விளம்பரம் அது தான். பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், உடனே பதில் எழுதினர்.
'ஆனந்த விகடன்' உதவி ஆசிரியர் பாலாவை, சோவிடம் அனுப்பி, 'விகடன் ஆரம்பிக்கும் புதிய பத்திரிகைக்கு, சோ ஆசிரியராக இருக்க விருப்பமா...' என்று கேட்டார், விகடன் அதிபரும், உரிமையாளருமான, எஸ்.பாலசுப்ரமணியன்.
சம்மதித்தார், சோ. புதிய பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது, சற்றும் யோசிக்காமல், 'துக்ளக்' என்றார்.
சோவின், விவேகா பைன் ஆர்ட்ஸ் குழு, அப்போது மேடை ஏற்றி வந்த மாபெரும் வெற்றி நாடகம், முகமது பின் துக்ளக்.
சோவை ஆசிரியராகவும், விகடன் அதிபரின் நண்பர், ஆர்.வெங்கட்ராமனை பதிப்பாளராகவும் நியமித்து, ஜனவரி, 14, 1970ல், 'துக்ளக்' இதழ் வெளி வந்தது. இதழின் விலை, 40 பைசா.
* மாதம் இரு முறையாக வெளிவந்த, 'துக்ளக்' இதழ், ஜன., 14, 1996 முதல், வார இதழாக வெளிவர ஆரம்பித்தது. 1970 முதல் 2016 வரை, 46 ஆண்டுகள், ஆசிரியராக பணியாற்றினார், சோ
* இந்திரா, கருணாநிதி, வி.பி.சிங் உட்பட பலர், அவரது அரசியல் விமர்சனங்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்
* தலைவர்கள், தன்னிடம் நட்பு ரீதியில் சொல்லும் தகவல்களை, எக்காரணம் முன்னிட்டும், அவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டதில்லை. விமர்சிப்பவர்களாலும், அவர் விரும்பப்பட காரணமே, சோ மீது அவர்கள் கொண்ட இந்த நம்பிக்கை தான்
* 'விடுதலைப்புலிகள் ஓர் அழிவு சக்தி...' என்று, நாட்டில் வெளிப்பட்ட முதல் குரல், சோவுடையது. மத்திய - மாநில அரசுகள் கூட, அதன் பிறகே, அவரின் நிலைப்பாட்டுக்கு வந்தன. அத்தகைய தீர்க்க தரிசனம் அவருடையது
* சோ நடித்தது; 150 திரைப்படங்கள். கதை, வசனம் எழுதி, இயக்கியது; நான்கு படங்கள்; 21 நாடகங்கள். 6,000த்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ஆன்மிக நுால்கள் - 5, தொடர்கதை - 4, சமூக நுால்கள் - 8. 'துக்ளக்'கில் வெளியான கட்டுரைகள் உட்பட பல படைப்புகள், தனி புத்தகங்களாக வெளி வந்துள்ளன
* கடந்த, 2001ல், ஜெயலலிதா, 'துக்ளக்' அலுவலகத்திற்கு வந்து, சோவை சந்தித்தார். துக்ளக் ஊழியர்களை, அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சோ. அப்போது, 'சத்யா என்பவர், பெண் என்று நினைத்தேன்...' என்று சொல்லி சிரித்தார், ஜெ.,
* ஸ்டாலின், அழகிரி, வைகோ, மூப்பனார், சுப்பிரமணிய சாமி, ஓ.பி.எஸ்., இல.கணேசன் மற்றும் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள், பல்வேறு சமயங்களில், 'துக்ளக்' ஆபீசில், சோவை சந்தித்து பேசியுள்ளனர்
* வாசகர்களுக்கு எது அவசியம், எது முக்கியம், எந்த விஷயமெல்லாம் தெரிய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து, அவற்றை மட்டுமே, 'துக்ளக்' இதழில் எழுதுவார்
* 'எமர்ஜென்சி' நேரத்தில், அதிகமாக, 'சென்சார்' செய்யப்பட்ட தமிழ் பத்திரிகைகளில், 'துக்ளக்' முக்கியமானது. அந்த நேரத்தில், புது பத்திரிகைக்கு தணிக்கை கிடையாது என்ற சலுகை விதியை பயன்படுத்தி, 'பிக்விக்' என்ற பெயரில், மாதமிரு முறை ஆங்கில இதழை ஆரம்பித்து, அரசுக்கு எதிரான கருத்துகளை அதில் எழுதினார். அந்த இதழ், இரண்டு ஆண்டு வெளிவந்தது
* ஜன., 14, 2012ல் நடந்த, 'துக்ளக்' ஆண்டு விழாவிற்கு, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த, மோடியும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும் வந்திருந்தனர். 'மோடியின் திறமை, அரசியல் சாதுர்யம் ஆகியவற்றிற்காக, அவரை, பிரதமர் வேட்பாளராக, அத்வானி அறிவிக்க வேண்டும்...' என்றார். 'மோடியை பிரதமராக்குவது, இந்தியாவிற்கு நல்லது...' என்று, முதல் குரல் கொடுத்தவர், சோ. பின்னர் அது, நிரூபணமானது
* கடந்த, 2016ல், பிரதமர் மோடி, சென்னை வந்தபோது, உடல்நல குறைவாக இருந்த, சோவை, அவர் வீட்டில் சந்தித்து பேசினார். அவரை, 'ராஜகுரு' என்றே அழைப்பார், மோடி
* ஏப்ரல் 1, 1970ல், வாசகர்களை முட்டாளாக்க, சென்னை, மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஓட்டலில், 'சோ பேசுவார்...' என்று, அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், அங்கு கூடி விட்டனர். உட்லாண்ட்ஸ் அதிபர், சோவுக்கு தொலைபேசியில் நிலைமையை விளக்கினார். முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை, சோ.
வாசகர்களை கவுரவிக்க வேண்டும் என கருதி, உடனே, உட்லாண்ட்ஸ் ஓட்டலுக்கு விரைந்தார். வாசகர்கள் கேள்வி கேட்க, அவற்றுக்கு பதில் சொன்னார். நிகழ்ச்சி பெரிய, 'ஹிட்' ஆனது. பின், ஆண்டுதோறும், திருவிழா போல நடைபெற்ற, 'துக்ளக்' ஆண்டு விழாக்களுக்கு, இந்நிகழ்ச்சி அச்சாரமானது
* சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், வேலுார், சேலம் மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும், துக்ளக் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன
* 'துக்ளக்' அட்டை படம் முடிவு செய்யும்போது, ஆசிரியர் குழுவுடன் சேர்ந்து விவாதிப்பார். அதுவே, ஒரு மினி அரட்டை அரங்கமாக தான் இருக்கும். பாரதியார் மீது அளவற்ற அபிமானம் கொண்டவர். 'துக்ளக்' அட்டை படங்களுக்கு பாரதியார் பாடல்களை பயன்படுத்துவதை பெரிதும் விரும்புவார். பாரதியாரின் பல பாடல்களை மனப்பாடமாக கூறுவார்
* 'துக்ளக்' ஊழியர்களின் வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று, அவர்களை கவுரவிப்பார்
* கடந்த, 1984ல், 'துக்ளக்' இதழின் விற்பனை, 2.75 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது
* வாசகர்கள் மற்றும் பொதுமக்களிடையே, 'துக்ளக்' ஆண்டு விழாக்கள் பிரபலமானதால், அந்நிகழ்ச்சி, 'சிடி'யில் வந்து விற்பனையிலும் சாதனை படைத்தது
* ஆறு ஆண்டுகள், ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்றினார், சோ. பார்லிமென்ட் உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட தொகையை, தகுதியுள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கினார். அதோடு அந்த நிதி எந்தெந்த பள்ளிகளுக்கு, எதற்காக அளிக்கப்பட்டது என்ற முழு தகவல்களையும், 'துக்ளக்' இதழில் பகிரங்கமாக வெளியிட்டார்.
இப்படி ஒரு நெஞ்சுரம் மிகுந்த பத்திரிகையாளர் இனி தோன்றுவாரா என்பது சந்தேகமே. அவர் போல் எழுத்து மற்றும் பேச்சு திறன் பெற்றவர், யாரும் இல்லை. நேர்மையும், அறிவாற்றலும் மிகுந்தவர். எங்களுக்கு ஆசானாக, அவர் அமைந்தது நாங்கள் பெற்ற பேறு.
சோ மறைந்தாலும், அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற அளவுகோலை மனதில் கொண்டே, 'துக்ளக்' இதழை நடத்தி வருகிறோம். அவர் இல்லாவிட்டாலும், எந்த விஷயத்தில் எப்படி முடிவெடுப்பார் என்பது எங்களுக்கு பழகி விட்டது. அந்த அளவுகோலின்படியே எழுதி வருகிறோம் என்று முடித்தார், சத்யா.

'படப்பிடிப்பில், எம்.ஜி.ஆர்., இருக்கும்போது, சிகரெட் பிடிக்க வேண்டாம்...' என்று, ஒரு பிரபல இயக்குனர், சோவிடம் கூறினார். அதற்கு, 'அவர் இருக்கும்போது, நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்; ஆனால், நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர்., வந்தால், அவருக்காக, சிகரெட்டை அணைக்க மாட்டேன்...' என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சோ, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அவரிடம் பிரத்யேக கோரிக்கை ஒன்றை வைத்தார். 'நான் உயிரோடு இருக்கும் வரை, நீங்களும் வாழ வேண்டும். நான் போன பிறகு தான் நீங்களும் போக வேண்டும்...' என்றாராம். அவர் கேட்டுக் கொண்டது போலவே, ஜெயலலிதா இறந்து, இரண்டு நாட்களுக்கு பின் தான், சோ இறந்தார்.
டி.எல்.சத்யநாராயணன் என்ற இயற்பெயரை, 'சத்யா' என்று சுருக்கி வைத்தார், சோ. பல பத்திரிகைகளில் ஏற்கனவே, கதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார், சத்யா. தமிழக அரசின் வனத்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற உடன், பிப்., 1996 முதல், 'துக்ளக்' வார இதழில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1,500 அரசியல் கட்டுரைகள், 300 நகைச்சுவை கட்டுரைகள், 'டிவி' தொடர்கள், நான்கு மேடை நாடகங்கள், 24 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

எஸ். ரஜத்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X