கிருமிகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

பல ஆண்டுகளுக்கு முன், ஒருவருக்கு அடமானம் வைத்த பூர்வீக நிலத்தை திரும்ப வாங்குவதற்காக, பணப் பையை பாதியாக மடித்து, கட்கத்தில் வைத்து, ஊருக்கு புறப்பட்டார், கணேசன்.
''பணத்தை ஒருமுறை சரி பார்த்துக்குங்க,'' என, நினைவூட்டினாள், மீனாட்சி.
''இருக்கு!''
''கரெக்டா எடுத்துக்காதீங்க... அவன், மேலும் கொஞ்சம் கொடுன்னு கேட்பான்,'' என்றாள்.
''தெரியும், அதற்காக தான் கூடுதலாக ஒரு தொகையும் வச்சிருக்கேன்,'' என்றார்.
''இத்தனை வருஷம் பயிரிட்டு சாப்பிட்டிருக்கான்... ருசி பார்த்தவன்... தர முடியாது, அப்படி இப்படின்னு பிரச்னை செய்யவும் வாய்ப்பு இருக்கு,'' என்றாள்.
''எழுதிய பத்திரம் இருக்கு.''
''தனியா போகாதீங்க... பெரியவங்க யாரையாவது துணைக்கு கூப்பிட்டுக்குங்க... நிலத்தை மீட்டதும், கையோடு இன்னொருத்தருக்கு, நாலு வருஷம் குத்தகைக்கு எழுதிக் கொடுத்துடுங்க; அவன்கிட்டயே விட்டுட்டு வராதீங்க... வருஷக்கணக்கா திரும்பிப் பார்க்காம இருந்துட்டீங்க... வயலை என்ன செஞ்சு வச்சிருக்கானோ, 'ப்ளாட்' போட்டு வித்திருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.''
''அதீத கற்பனை... கங்காதரன், கொஞ்சம் முரடு; ஆனால், மோசக்காரன் இல்லை. பார்த்துக்கறேன்,'' என்று சொல்லும்போதே, அனிச்சையாக அவருக்கு, பலராமனின் நினைவு வந்தது.
சரியான குள்ள நரி, எல்லாவற்றையும் கெடுத்து வைப்பதில், அந்த ஆள் தனி ரகம். இந்த ஒப்பந்த விவகாரத்தில், அவர் கை இருந்து விடக்கூடாதே என்ற கவலையுடன் தான், ரயில் ஏறினார்.

அவர் பயந்த மாதிரியே தான் நடந்திருந்தது.
''நிலமா, மீட்க வந்தியா... எந்த உலகத்தில் இருக்கேண்ணா... அதை தான் கடனுக்கு பதிலாக எழுதி, பத்திரம் பதிவு பண்ணிட்டீங்களே,'' என, எடுத்தவுடன் வெடிகுண்டை வீசினான், கங்காதரன்.
அவருக்கு நெஞ்சு வலி வரும்போல் இருந்தது.
சுதாரித்து, ''எழுதிக் கொடுத்தது, அடமான பத்திரம்தானே தவிர, விற்பனை பத்திரமல்ல,'' என்றார்.
''நீங்க வித்தீங்கன்னா சொன்னேன்?''
''வேற யாரு, எங்க நிலத்தை விற்க முடியும்?''
''அம்மா.''
''அம்மாவா... அவங்க இங்க இல்லவே இல்லையே!''
''தெரியும்... அரக்கோணத்தில், மகள் வீட்டில் இருக்காங்க... போய்க் கேளுங்க,'' என்றான், கங்காதரன்.
''வாய்ப்பே இல்லை... எனக்கு தெரியாம, அம்மா எதுவும் செய்ய மாட்டாங்க,'' என்றார்.
''அப்படி நினைச்சுகிட்டிருக்கீங்க... அவங்க கையெழுத்து போட்டு, பதிவு பண்ணின பத்திரத்தை நீங்களே பாருங்க... இது, நீங்க அடமானம் வச்சதுக்காக எழுதி கொடுத்த பத்திரம்... இனி, செல்லாது.
''இது, அம்மா கைப்பட, கையெழுத்து போட்டு கொடுத்தது. ஒரு விலை போட்டு, அதில் அடமான தொகை போக மீதி தொகையை கொடுத்து, 'செட்டில்மென்ட்' செய்து, நாலு வருஷம் ஆச்சு... என் தம்பிக்கு கல்யாணமாகி, குழந்தையும் வந்தாச்சு... இப்ப வந்து நிக்கறீங்க... போங்க, இங்கே நிலம் இருந்ததையே மறந்துடுங்க,'' என்றான், கங்காதரன்.
அவருக்கு வியர்த்தது.
பத்திரங்களை புரட்டி புரட்டிப் பார்த்தார்.
விற்ற பத்திரத்தில், அம்மாவின் கையொப்பம் பார்த்தார்.
'சந்தேகமில்லை, அது அம்மாவுடையது தான். ஆனால், எனக்கு தெரியாமல், அம்மா இப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை. அதிலும், வாரிசுகளாக, நானும், அக்காவும் இருக்கும்போது, எங்கள் கையெழுத்தும் அவசியமில்லையா...' என நினைத்து கொண்டார்.
பத்திர பதிவு ஆனதற்கான நம்பரும், முத்திரைகளும், சாட்சிகளும் இருந்தன.
''இது மோசடி.''
அவர், மொபைலில் தொடர்பு கொண்டு, அம்மாவிடம் பேசும் முன், எங்கிருந்தோ வந்து சேர்ந்தார், பலராமன்.
''என்ன நடக்குது இங்கே... கணேசா, நீ எப்போ வந்தே... நேரா என் வீட்டிற்கு வந்திருக்கலாமே,'' என்றபடியே, கங்காதரனையும், அவன் கையில் இருந்த பத்திரங்களையும் பார்த்தார்.
''வந்ததும், வராததுமாக, இதை ஏண்டா கையில் எடுத்தே... அவரை உட்கார வச்சு, குடிக்க தண்ணியாவது கொடுத்தியா, இல்லையா... நீ வா கணேசா,'' என்றார், பலராமன்.
''கொஞ்சம் இருங்க, அம்மாகிட்ட பேசிட்டு வர்ரேன்!''
''என்ன பேசப் போறேன்னு தெரியும்... எல்லாம் விளக்கமா சொல்றேன் வா,'' என்று அழைத்து போனார்.
திண்ணையில் அமர்த்தி, ''எல்லாம் கேள்விப்பட்டேன்... ஆனா, அவன் முரட்டு பையன். அத்தனை ஈஸியா விட்டுக் கொடுக்க மாட்டான்... நிறைய ஆள் வச்சிருக்கான்... எதுக்கும் தயங்க மாட்டான்னு சொல்லிக்கிறாங்க... அவன் செஞ்சது தப்பு தான்... சரி, அண்ணன் நிலம்தானே நாம தின்னா செரிக்காதான்னு செய்துட்டான்... பெரிசு பண்ண வேணாம்,'' என்று இடைமறித்தார்.
''தப்பு இல்லைங்க, மோசடி. பணம் போதாது, மேலும் கொடுன்னு கேட்டால் கொடுத்துட்டு போறேன்... அதை விட்டுட்டு, என்னை ஏமாத்தப் பார்க்கறானே... அதுவும் இந்த கையெழுத்து எப்படி வந்தது, எப்ப பத்திரபதிவு நடந்துச்சு, அம்மா வித்திருக்க மாட்டாங்க... நானும் வரலை, அப்ப எப்படி நடந்திருக்கும்?''
''அவன் நல்லவன் தான்; சேர்க்கை சரியில்லை. 'அவர், இனி ஊருக்கு வரப்போறதில்லை; வெளியூரில், 'செட்டில்' ஆயிட்டார்... ஆள் இருக்கு, ஒரு பத்திரம் செய்து, உன் பேரில் பட்டா போட்டுடு; நிலத்தை அசைக்க முடியாது'ன்னு யோசனை சொல்லி, இப்படி பண்ண வச்சுட்டாங்க...
''நான், அப்பவே உங்களுக்கு தெரியபடுத்தணும்ன்னு நினைச்சேன்... நேரம் கிடைக்கலை, இப்ப நீங்களே வந்துட்டீங்க... விட்ருங்க, என்ன இருந்தாலும் பங்காளிங்க கோர்ட், கேசுன்னா, ஊருக்கும் கெட்ட பேரு,'' என்று நைச்சியமாக பேசினார்.
''உங்களுக்கு இப்படி நேர்ந்திருந்தால், சண்டை போடுவீங்களா அல்லது சமாதானமா போவீங்களா?''
''என்னப்பா, என் மேலயே பாயற... உங்க நல்லதுக்கு சொல்ல வந்தேன். அவன், இப்ப ரொம்ப மோசமானவன்னு சொல்றாங்க... அடி தடி கொலைன்னு கூட இறங்குவான்.''
கோபமாக, ''அதையும் தான் பார்த்துடறேன்,'' என்றார், கணேசன்.
''உங்க ரெண்டு பேர் பிரச்னைக்காக, ஊர் ரெண்டு படணுமா?'' என்று கேட்டார், பலராமன்.
''சம்பந்தமில்லாம பேசறீங்க... சரியில்லை,'' என்றார்.
''உனக்கு, நாலு பேர் துணைக்கு வந்தால், அவனுக்கு நாலு பேர் வரமாட்டாங்களா... பேச்சு பேச்சாவா நிற்கும், எவனாவது கை ஓங்கினால், எதிர் பார்ட்டியும் கை ஓங்கும்... போதாதா, தீக்குச்சி ஒண்ணு போதும், காட்டையே அழிச்சிரும்... அந்த நிலை இங்க வந்துடக் கூடாது... அதுவும், உன்னால் இந்த ஊர் ரெண்டு பட்டதா இருக்கக் கூடாது,'' என்றார், பலராமன்.
''ஏன் இப்படி பேசறீங்க... சரியோ, தப்போ, சம்பந்தப்பட்ட நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறோம்... இதில், ஊர் சண்டை வர, என்ன வாய்ப்பு இருக்கு... நீங்க அனாவசியமா மூட்டி விடறீங்களா... நான் என்ன செய்யணும்ன்னு சொல்ல வர்ரீங்க... தெளிவா சொல்லிடுங்க,'' என்றார், கணேசன்.
''இந்த மேட்டரை, இப்படியே விட்ரு... பேசி, சரி பண்ணிக்கலாம்... இனி, பயிர் செய்வதில் பாதி பங்கு உனக்கு வந்து சேர்ற மாதிரி செய்யறேன்,'' என்றார்.
''இது எந்த வகையில் நியாயம்... உண்மையை உண்மைன்னு சொல்றதுக்கு, உங்களுக்கு என்ன சங்கடம்... ஊரில் முக்கியமான நபர்களில் ஒருவர் நீங்க... நீங்களே தவறுக்கு துணை போகலாமா, அவனுக்கு சார்பா பேச, உங்களுக்கு நா கூசலையா... 'கமிஷன்' வாங்கிட்டீங்களா,'' என்றார், கணேசன்.
''யாரைப் பார்த்து, என்ன வார்த்தை கேட்ட, கணேசா... நல்லது சொல்ல வந்தால், இப்படி பாயறீயே... போ, என்ன செய்யணுமோ செய்துக்க... அவன், 'போர்ஜரி டாக்குமென்ட்' போட்டது தப்புன்னாலும், அப்படி செய்யலைன்னாலும், நிலம் அவனுக்கு தான் சொந்தம்ன்னு கோர்ட்டுக்கு போனால், தானாகவே நிலம் அவனுக்கு சேர்ந்துடும்!''
''என்ன உளறுறீங்க?''
''உளறலை, உண்மை... 'நிலத்தை, 15 வருஷத்துக்கு மேலேயே பயிரிட்டு வந்ததால், சட்டப்படி எனக்கு சொந்தம்'ன்னு, வழக்கு போட்டான்னா, பிரச்னையாகுமா இல்லையா... எப்படின்னு கேட்காதே, நிலத்தை விலைக்கு வாங்கிட்டதா, பத்திரம் பண்ண தெரிஞ்சவனுக்கு, இன்னொரு பத்திரம் தயார் பண்ணி கோர்ட்டுக்கு போக தெரியாதா...
''சாட்சியெல்லாம் பக்காவா, 'செட்' பண்ணிடுவானே... பழைய ஆள் இல்லைப்பா அவன்... அதனால தான் சமாதானமா போயிடுங்கறேன். '3 ஏக்கர்ல, 1 ஏக்கர் வச்சுக்க'ன்னு, துாக்கிப்போடு... நாய் கவ்விகிட்டு ஓடுமா இல்லையா?''
''அந்த வேலையை, நீங்க செய்ங்க... தாராள பிரபுவா இருந்தால், உங்க நிலத்திலிருந்து, 1 ஏக்கர் என்ன, 9 ஏக்கர் கொடுங்க,'' என்று, போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நடந்தார், கணேசன்.
''என்னால் முடிஞ்ச வரை பேசினேன். அவன், கறாரா இருக்கான். புகார் கொடுத்தால், போலீஸ் வரும்; போக விடாதே... வழியை மறிச்சு பேசு; விட்டுறாத... கைய காலை பிடிச்சு, சமாதானம் செய்து, ஊருக்கு அனுப்பிடு...
''அடுத்து என்ன செய்யலாம்ன்னு சாவகாசமா யோசிக்கலாம்... அவனுக்கு, அரசு வேலை இருக்கு... உனக்கு, என்ன இருக்கு... நிலத்தை கெட்டியா பிடிச்சுக்க, விடாதே ஓடு,'' என, கங்காதரனிடம் கூறினார், பலராமன்.
''என்ன பிரச்னை?''
''என் பேர் கணேசன். சொந்த ஊர்ல, எனக்கு நிலம் இருக்கு. வேலை கிடைச்சதால ரொம்ப வருஷத்துக்கு முன், சென்னைக்கு போயிட்டேன். இடையில் எனக்கு பண நெருக்கடி, சித்தப்பா மகன்கிட்ட, நிலத்தை அடமானம் வச்சு, பணம் வாங்கினேன்.
''இன்னைக்கு, பணத்தை கொடுத்து, நிலத்தை திரும்ப வாங்க வந்தேன். அதை, அம்மா தனக்கு விற்று விட்டதாக பொய்யான ஒரு பத்திரம் தயார் பண்ணி, நிலம், தனக்கு தான் சொந்தம்ன்னு அடாவடி பண்றான்,'' என்றார்.
''ஒரு புகார் எழுதிக் கொடுங்க,'' என்றார், அதிகாரி.
வாசித்த அதிகாரிக்கு புருவம் உயர்ந்தது.
''போர்ஜரி பண்ணின தம்பி மேல் புகார் கொடுக்காம, யாரோ ஒருத்தர் மேல் புகார் கொடுக்கறீங்க... அதுவும், அவர் துாண்டி விட்டு தான், தம்பி மோசடி செய்தது மாதிரி!''
''ஆமாம் சார்... ஊருக்குள்ள இவரை போல, சிலர் இருக்காங்க... அவங்களுக்கு, அடுத்தவங்க நல்லா இருந்தா பிடிக்காது; பிரிச்சு வைக்கணும், துாண்டி விட்டு வேடிக்கை பார்க்கணும்... இவங்க அடிச்சுகிட்டு செத்தால், எட்ட இருந்து வேடிக்கை பார்த்து ஆனந்தப்படற குரூர புத்திக்காரங்க...
''இந்த மாதிரி இருக்கிறவங்களை, ஊரை விட்டு விரட்டினாலே ஊர் நல்லாயிருக்கும்... இவங்க தான் ஊரில் நடக்கிற பல பிரச்னைகளுக்கும் மூல காரணம். கிருமிகள் சார்... யார் வீட்டு சொத்துக்கு, யார் வந்து மத்தியஸ்தம் செய்யிறது...
''கொலை செய்ய துாண்டுறவனும் குற்றவாளி தானே... அந்த அடிப்படையில், தம்பி, 'போர்ஜரி' செய்ய துாண்டுதலாக இருந்து, இப்போ வந்து, 'தெரியாமல் செய்துட்டான்; உரிமையில் செய்திருப்பான்... போகட்டும், இனி, நிலத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துடு'ன்னு, நயவஞ்சகமா பேசி, கழுத்தை அறுக்க பார்க்கறான் சார், அந்த ஆள்...
''இவரை கூப்பிட்டு தண்டிப்பீங்களோ, கண்டிப்பீங்களோ... ஆனால், ஏதாவது நடவடிக்கை எடுத்தே தீரணும்... அப்பதான், அடுத்தவங்க விவகாரத்தில் மூக்கை நுழைக்காம இருப்பாங்க,'' என்றார், கணேசன்.

கங்காதரனும், பலராமனும் வரவழைக்கப்பட்டனர்.
''என்ன, 'போர்ஜரி'யா... நான் யோசனை கொடுத்தேனா... சார், எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை... இப்படி ஒரு விவகாரம் இருக்கறதே எனக்கு தெரியாது... சரியா விசாரிக்காம, என்னை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டீங்க...
''ஊர்ல, பெரிய மனுஷன்; நான் இப்படி நடந்துக்குவேனா... சொல்லுங்க... இந்த கணேசனுக்கு, என் மேல் அப்படி என்ன பகையோ... நான் வர்ரேன் சார்,'' என்றார், பலராமன்.
''கொஞ்சம் இருங்க... ஏன் தம்பி, இந்த மாதிரி ஆளை நம்பியா தவறான காரியத்தில் இறங்குனீங்க... இவர் சுயரூபம் எப்படி வெளிப்படுதுன்னு இப்ப பார்... பத்திரத்தை கிழிச்சு போட்டுட்டு, உன் அண்ணனுக்கு நியாயமா நடந்துக்க... போய்ட்டு வாங்க,'' என்று, இருவரையும் அனுப்பி வைத்த போலீஸ் அதிகாரி, கையில் லத்தியுடன், பலராமனை நோக்கி போனார்.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X