யார் இவர் | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
யார் இவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 நவ
2019
00:00

சந்திராவுக்கு, அக்கா, தம்பி, தங்கை என, 10 பேர். அந்த வீடே, குட்டி பால்வாடி மாதிரி இருக்கும். எப்போதும், யாராவது, எவரையாவது அடித்து, சண்டை போட்டுக் கொண்டே இருப்பர்.
ஒரு நாள், சந்திராவுக்கும், அவன் அக்காவுக்கும் பொம்மைகள் வாங்கி தந்தார் அப்பா. அதை, அக்குவேறு ஆணிவேராக உடைத்து, சுக்கு நுாறாக்கிவிட்டான், சந்திரா.
பின், நைசாக அக்காவின் பொம்மையை எடுத்தான்; அதனால், அவளுடன் சண்டை மூண்டது. கடைசியில் உடைந்த பொம்மை அவளுக்கும், உடையாத பொம்மை சந்திராவுக்கும் கிடைத்தது.
ஒரு நாள், அம்மா காபி கொடுக்க மறந்துவிட்டார். இதற்காக சந்திரா ஒரு நாடகம் நடத்தினான்.
'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்...' என்ற கதையை நாடகமாக மாற்றினான். நாடகத்தின் இறுதியில், வீட்டிலிருந்த, 10 வாண்டுகளும், காட்டை விட்டு நரி ஓடுவது போல, வீட்டு அறைகளுக்குள் ஓடி கலகலப்பை ஏற்படுத்தினர். 'புளிக்கும்... காபி காபி...' என்று கத்தி கலகம் செய்தனர்.
அந்த காலத்தில், ஆறு வயதில் தான் பள்ளி போக வேண்டும்; அதுவரை, பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும். அம்மா தமிழும், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். அப்பா, கணக்குச் சொல்லிக் கொடுத்தார்.
அந்த வீட்டில், 10 பேருமே படிப்பில் கில்லாடிகள். சந்திராவுக்கு, கணக்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அப்பா, 20 கணக்கு போட சொன்னால், இவன், 40 போட்டு வைப்பான். எதுவும் தப்பாக இருக்காது.
சந்திராவை பள்ளியில், 1ம் வகுப்பு சேர்க்க சென்ற போது, நுழைவுத்தேர்வு வைத்தனர். அவன் எழுதியதைத் திருத்திய ஆசிரியர், பிரமித்தார். அவனை, 3ம் வகுப்பில் சேர தகுதி பெற்றுள்ளதாக பரிந்துரைத்தார். ஒரு வழியாக, 2ம் வகுப்பில் சேர்த்தனர்.
படிப்பில் கெட்டிக்காரன்; தமிழ், ஆங்கிலம், கணக்கு அத்துப்படியாக இருக்கும். ஆனால், வரலாறு, புவியியல் பாடங்களைத் தொட்டு கூட பார்த்தது இல்லை. அவற்றை படிக்க இயலாமல் திணறினான்.
பொதுவாக, முழு ஆண்டு தேர்வு விடுமுறையில், சிறுவர்கள் காலையில், தாமதமாக தான் எழுவர். உடனே விளையாட போவர். பசிக்கும் போது தான் வீடு திரும்புவர் அல்லது அம்மா அழைத்து சாப்பிட வைத்தால் தான் உண்டு!
ஆனால், சந்திரா வித்தியாசமாக திட்டமிடுவான். கோடை விடுமுறையில், அடுத்த ஆண்டு வகுப்பு புத்தகங்களை படித்து முடித்து விடுவான். கணக்கு புதிர்களை விடுவிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவன். ஆசிரியர்கள், அவன் அபரிமித அறிவைக் கண்டு வியந்தனர்.
ஒரு ஆசிரியர் கேட்டார்.
'சந்திரா... உனக்கு எந்த காய் பிடிக்கும்...'
'வெண்டைக்காய் ஐயா...'
உடனே, வகுப்பறையில் அதை அறிமுகப்படுத்தும் வகையில், 'பசங்களா... கணக்கில், நீங்களும், நுாறு மதிப்பெண் வாங்கணும்னா தினமும் வெண்டைக்காய் சாப்பிடுங்க...' என்றார்.
சந்திராவின் தாத்தா கணக்குப்பிரியர்; கணக்குப் புத்தகங்களை வாங்கி குவித்து வைத்திருந்தார். பெரும்பாலான நேரம், அந்த புத்தக புதையலோடு தான் இருப்பான். அவற்றை படித்து, அறிவை விசாலமாக்கினான்.
வகுப்புகளில் முதல் மாணவனாக வந்தான். அவன், 5ம் வகுப்பு படித்தபோது, கடற்கரை ஓரமாக சென்றான். கடலும், வானமும் ஈர்த்தன. ஆனால், மூளைக்குள் கணக்கு பற்றிய சிந்தனையே ஓடியது. திடீரென்று, 'வருங்காலத்தில், ஐன்ஸ்டீன் போலவே ஆக வேண்டும்' என்று வேண்டிக்கொண்டான். அப்போது, அவனுக்கு, 9 வயது தான் ஆகியிருந்தது.
இந்த வயதில், விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது அரிதிலும் அரிது.
அந்த வயதில், மற்ற சிறுவர்கள் போல் சந்திரா, விளையாடுவது கிடையாது; புத்தகங்களுடன் தான் இருப்பான்.
கணக்கைப் போலவே, அவனுக்கு ஆங்கிலமும் பிடிக்கும்; ஆங்கில இலக்கியத்தை உரக்கப் படிப்பான். புத்தகமும், பையுமாக அலைந்ததைப் பார்த்த நண்பர்கள், 'ஏன்டா... மாங்கு மாங்குன்னு படிக்கிற...பரீட்சை கூட இல்லையே...' என்று கேட்பர்.
அதற்கு, 'நம்முடைய வேலை, முழு ஊக்கத்தோடும், உழைப்போடும் அறிவைத் தேடி அலைவது; அப்படி செய்வதால் மரியாதை, புகழ் போன்றவை தேடி வரும்...' என்பான்.
வித்தியாசமாக பேசிய இந்த வெண்டைக்காய் விரும்பி யார் தெரியுமா...

இயற்பியலில் அரிய கண்டுபிடிப்பு நிகழ்த்தியதற்காக, 1983ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் தான் அந்த வெண்டைக்காய் விரும்பி.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X