தமிழகத்தில் நிலவும் மேக மூட்டமுடன் கூடிய வானிலை, காலை குளிர், அதிகாலை வேளையில் இலைகளில் பனித்துளி அல்லது நீர் திவலைகள் ஆகிய சூழ்நிலைகள் நெல் பயிரில் குலை நோய் தாக்குதலுக்கு உகந்தனவாக உள்ளன.
நோய் அறிகுறிகள்: டீலக்ஸ் பொன்னி எனப்படும் பி.பி.டி. 5204, பால் ஒட்டு எனப்படும் அம்பை 16, ஏ.டி.டி. 43 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளவர்கள் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தழைச்சத்து கொண்ட உரங்களான யூரியா, அம்மோனியம் குளோரைடு, டி.ஏ.பி., போன்றவற்றை அதிகளவில் இட்ட வயலில் குலை நோய் விரைவில் தோன்றும். குலை நோய் முதலில் கண் வடிவ புள்ளிகளாக இலையில் தோன்றுகிறது. புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும் ஓரம் பழுப்பு நிறமாகவும் காணப்படும். விரைவில் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி இலை கருகி விடும். தீவிர தாக்குதலுக்கு உள்ளான பயிர் தீப்பிடித்து கருகியது போல் காணப்படும். வளர்ச்சியும் குன்றி விடும். கதிர் பிடித்த பின் இந்நோய் ஏற்பட்டால் கதிரின் காம்பு பகுதியில் கருப்பு நிற புள்ளி தோன்றி அழுகி கதிரின் குலை முறிந்து தொங்கும், நெல் மணிகளும் பதராகிவிடும்.
தடுப்பு முறைகள்: நோய் வரும் முன் தவிர்க்க சூடோமோனாஸ் 0.2 சதவீத கரைசலை (லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது எக்டருக்கு இரண்டரை கிலோ) நட்ட 45வது நாள் முதல் பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். நோய் தோன்றிய பின்னர் தழைச்சத்து கொண்ட உரங்களை இடுவதை தள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக டீலக்ஸ் பொன்னி, பால் ஒட்டு (அம்பை 16), செல்லப்பொன்னி (ஏ.டி.டி.43) பயிரிட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலில் நோயை கட்டுப்படுத்த எக்டருக்கு கார்பன்டசிம் 500 கிராம் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் 500 மில்லி அல்லது டிரைசைக்ளோசோல் 75 டபுள்யு.பி. 500 கிராம் வீதம் பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும். அதன் பின் தழைச்சத்து இட வேண்டும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால் அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தலாம்.
- முனைவர்.இரா.விமலா
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.