ஆடுகளுக்கு 'ஈஸ்ட்ரஸ் ஓவிஸ்' என்ற மூக்குப்பூச்சியால் மண்டைப்புழு தாக்கம் ஏற்படுகிறது. முதிர்ச்சியடைந்த பெண் பூச்சிகள் முதல் பருவ இளம் புழுக்களை ஆடுகளின் மூக்கில் இட்டு செல்லும். இந்த இளம் புழுக்களின் உடலின் மேல் முள் போன்ற உறுப்புகள் காணப்படும். அவை ஆடுகளின் மூக்கு துவாரம் வழியாக ஊர்ந்து மண்டையின் மேல் பகுதிக்கு செல்லும் போது ஆடுகளுக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தும்மல், தலையாட்டுதல், தீவனம் எடுத்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் மூக்கிலிருந்து சளி வடிதல் ஏற்படும். இந்த இளம் புழுக்கள் முதிர்ச்சியடைந்து இரண்டாம், மூன்றாம் பருவ புழுவாக மாறி மண்டை ஓட்டை அரித்து மூளைப்பகுதியில் நுழைந்து பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனால் ஆடுகள் பைத்தியம் பிடித்தாற்போல் இங்கும், அங்குமாக திரியும். சுவரிலோ அல்லது ஆடுகளுக்கு இடையிலோ முட்டிக்கொள்ளும். மேய்ச்சலுக்கு செல்லும்போது முன் செல்லும் ஆடுகளின் பின் கால்களுக்கு இடையில் தலையை அழுத்தமாக முட்டி வைத்து கொள்ளும்.
நோயின் தாக்கம்
ஈஸ்ட்ரஸ் ஓவிஸ் ஈக்கள் அதன் புழுக்களை மூக்கருகில் இட வரும்போது ஆடுகள் ஈக்களை தடுக்க தலையை ஆட்டிக் கொண்டோ அல்லது இரண்டு கால்களுக்கு இடையில் தலையை வைத்து கொண்டோ மேயாமல் இருக்கும். இந்த பூச்சிகள் ஆட்டுப்பண்ணைகளில் காணப்படும். காலை நேரங்களில் ஆட்டுக் கொட்டகையில் புழுக்கள் கீழே விழுந்து கிடக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகளின் மூச்சு சத்தம், சளி, தும்மலை வைத்து இந்நோயின் பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இவ்வகை ஈக்கள் ஆடுகளுக்கு மட்டுமல்லாமல் பண்ணைகளில் வேலை செய்யும் வேலையாட்களின் மூக்கு, கண், வாய்ப்பகுதிகளிலும் இளம் புழுக்களை இட்டு பெரும் தொந்தரவை தரும்.
சிகிச்சை முறை
கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி 'ரப்பாக்ஸனைடு' என்ற மருந்தினை ஆட்டின் ஒரு கிலோ உடல் எடைக்கு 7.5 மில்லி கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தவிர 'ஐவர்மெக் ஷன்', 'குலோசன்டெல்' போன்ற மருந்துகளை உடல் எடைக்கு ஏற்ப கொடுப்பதன் மூலம் ஆடுகளை இப்புழுக்களின் தாக்குதலிருந்து பாதுகாக்கலாம். ஈயின் தொல்லை அதிகம் இருக்கும்போது ஆடுகளின் மூக்குப்பகுதியில் மூக்குப்பொடி வைத்து புழுக்களை தும்மல் மூலம் வெளியே கொண்டு வரலாம். மூக்குப்பொடி ஒவ்வாமை ஏற்படுத்தினால் வேப்பெண்ணெய்யை தடவி ஈக்கள் மூக்குப்பகுதியில் புழுக்களை இடுவதை முற்றிலும் தடுத்து ஆடுகளை பாதுகாக்கலாம்.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை.
www.tnau.ac.in