அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
00:00

என் கல்லுாரி நாட்களில், அப்போதைய சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியான, 'சோவியத் நாடு' பத்திரிகையை தவறாமல் படிப்பேன். அதில் வரும், அந்நாட்டின் கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, விவசாயம், உணவு, உடை பற்றிய கட்டுரைகளை படிக்கும்போது, என்றாவது ஒரு நாள் அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டும் என்ற தீராக் கனவு இருந்தது.
அக்டோபர், 8ம் தேதி, அந்தக் கனவு நனவாகும் வாய்ப்பு வந்த போது, ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் திளைத்தேன். அன்று, ஆசிரியர், 'அசர்பைஜான் போய்ட்டு வரீங்களா...' என, கேட்டார்.
'அசர்பைஜானின் தலைநகர், பாகுவில் நடக்கும், அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்; அவருடன் செல்லும் பத்திரிகையாளர் குழுவில், 'தினமலர்' சார்பில், நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்...' என்ற போது, உடனே, 'சரி...' என்றேன்.
இதில், ஒன்றை குறிப்பிட்டேயாக வேண்டும். துணை ஜனாதிபதியின் அலுவலகம், தங்களுடன் அழைத்துச் சென்ற மீடியா குழுவில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுத்த ஒரே நாளிதழ், 'தினமலர்' தான். நான், துணை ஜனாதிபதியுடன் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், என் அலுவலகத்தில் பணிபுரியும் சக பத்திரிகையாளர் ஒருவரும், 'தினமலர்' சார்பாக துணை ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இது, 'தினமலர்' மீது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வைத்திருக்கும் மரியாதை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சென்னையிலிருந்து, டில்லி சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில், பாகு கிளம்பிய, துணை ஜனாதிபதி உடன் சென்ற மீடியா குழுவில் இணைந்தேன். ஆறு மணி நேர பயணத்திற்குப் பின், பாகு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினேன். நம்மூர் ஊட்டியின் சில்லென்ற, இதமான குளிர் என்னை வரவேற்றது.
முந்தைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த, 15 நாடுகளுள், அசர்பைஜானும் ஒன்று. 1991ல், அந்த ஒன்றியத்திலிருந்து பிரிந்து, அசர்பைஜான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. மேற்காசியாவை, கிழக்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் கோட்டில், காஸ்பியன் கடலோரத்தில் உள்ள குட்டி நாடு தான், அசர்பைஜான்.
நாட்டின் மொத்த பரப்பளவு, 86 ஆயிரத்து 600 சதுர கி.மீ., ஆனால், மொத்த மக்கள் தொகை, ஒரு கோடி பேர் தான். சென்னையில் வசிக்கும் மக்களை விட, 30 லட்சம் பேர் தான் அதிகம். சென்னையின் மக்கள் தொகை, 70 லட்சம் பேர்; பரப்பளவு, 426 சதுர கி.மீ.,
அசர்பைஜான், 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடு. ஆனால், மத்திய கிழக்கிலிருக்கும் அத்தனை முஸ்லிம் நாடுகளுக்கும், இந்த முஸ்லிம் நாட்டிற்கும் பல விஷயங்களில் ஏணி வைத்தாலும் எட்டாத துாரம். இது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் மூன்று எல்லைகளை பகிர்வதால், முழுக்க முழுக்க ஐரோப்பிய கலாசாரத்தைப் பின்பற்றுகிறது. மதசார்பின்மையை பின்பற்றுகிற, ஒரு சில முஸ்லிம் நாடுகளுள், அசர்பைஜானும் ஒன்று.
இளைஞர்கள், இளம்பெண்களின் தேசிய உடை, 'ஜீன்ஸ், டி - சர்ட்!' இளம் பெண்கள், 'ஸ்கர்ட், டாப்ஸ்' கூட அணிகின்றனர். மத்திய வயதினர் மற்றும் பெரியவர்கள், பண்டிகைகளின் போது மட்டும், அந்நாட்டின் பாரம்பரிய உடைகளை அணிகின்றனர்.
அசர்பைஜானியர்களின் பாரம்பரிய உணவு, வகை வகையான ரொட்டிகள் மற்றும் பால் கலக்காத தேனீர். வேக வைத்த அரிசி, காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். திராட்சை இலைகளில், 'ஸ்டப்' செய்யப்பட்ட, 'டோல்மா' என்ற உணவு இங்கே பிரசித்தம்.
நம்மூரில், சாதத்தை அன்ன லட்சுமி என, வணங்குவதைப் போல, அவர்கள் ரொட்டியை புனிதமாக மதிக்கின்றனர். ஒரு துண்டைக் கூட வீணாக்குவதில்லை. இங்கே, மதம் தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கைகளை யார் மீதும் திணிப்பதில்லை.
நாட்டின் முதல் ஜனாதிபதியும், இப்போதைய ஜனாதிபதியான, இல்ஹாம் அலியேவின் தந்தையுமான ஹைதர் அலியேவ், 'முஸ்லிம்கள் தினமும், ஐந்து வேளை தொழக் கூட வேண்டாம்; தினமும், ஐந்து நல்ல காரியங்கள் செய்தேயாக வேண்டும்...' என கூறியதை, கர்ம சிரத்தையாக பின்பற்றுகின்றனர், மக்கள்.
விருந்தினர்களை, வாஞ்சையுடன் உபசரிக்கின்றனர். பெண்களை, தெய்வமாக மதிக்கின்றனர். குழந்தைகளை, கொண்டாடுகிற தேசம் இது.
இதெல்லாம் போதாதா, இந்தியர்கள் இந்நாட்டை நோக்கி படையெடுப்பதற்கு. ஆனாலும் தாமதமான படையெடுப்பு தான். அசர்பைஜானில், இப்போது, 1,300 இந்தியர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களில், 70 பேர், தமிழர்கள்; 60 பேர், மலையாளிகள்; 45 பேர், தெலுங்கர்கள்; மற்றவர்கள், வட மாநிலத்தவர்கள்.
ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பல நுாற்றாண்டுகளுக்கு முன், இந்தியர்களும், தமிழர்களும், அசர்பைஜானுக்கு வணிகம் செய்ய, சாகசப் பயணம் செய்திருக்கின்றனர்.
எப்படி கிளம்பினர், எப்போது கிளம்பினர்?
இதை, அடுத்த வாரம் பார்க்கலாம். அதோடு, அங்கே என்ன படிக்கலாம் என்பது பற்றியும் பார்க்கலாம்.
தொடரும்.

வி.வி.ஐ.பி.,களின் விண் வாகனம்!
இந்தியாவின், வி.வி.ஐ.பி.,களான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மூவரும், வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணத்திற்காக செல்லும் போது, இந்திய விமானப்படையின், 'ஏர் இந்தியா ஒன்' என்ற விமானத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதை, டில்லி பாலம் விமானப் படை தளத்திலிருக்கும், இந்திய விமானப்படையின் ஒரு ஸ்குவாட்ரன் தான், பராமரிக்கிறது, இயக்குகிறது.போயிங் 747 -- -400 என்றழைக்கப்படும் இந்த விமானத்தின் விலை, 7,300 கோடி ரூபாய். இதில், 2,000 கோடி ரூபாய், இந்த விமானத்தின் பாதுகாப்பு கருவிகளுக்கு.
விமானத்தில், 'ரேடார் வார்னிங் ரிசீவர்'கள், ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை மற்றும் அதை செயலிழக்க வைக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை போக, சில ரகசிய பாதுகாப்பு கருவிகளும் விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன
இந்த விமானத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்குவதற்காக, தனி, 'கேபின்' உண்டு. அதில், சகல வசதிகளுடன் கூடிய அலுவலகம் மற்றும் படுக்கையறை இருக்கிறது. இந்த கேபினுக்கு முன்புறம், மூன்று வி.வி.ஐ.பி.,களின் இணை செயலர்கள் மற்றும் அவர்களுக்கு மேலான அதிகாரிகள் தங்குவதற்கான, முதல் வகுப்பு வசதிகளுடன் கூடிய இருக்கைகள் இருக்கின்றன
கேபினுக்கு பின்புறம், அதே முதல் வகுப்பு வசதிகளுடன், பத்திரிகையாளர்களுக்கான இருக்கைகள். இந்த இரண்டு வகுப்புகள் போக, மற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு, 'எகானமி கிளாஸ்' இருக்கைகள் உள்ளன
இந்த விமானத்தில், ஜனாதிபதியோ, துணை ஜனாதிபதியோ, பிரதமரோ பயணிக்கும் போது, அவர்களுக்கு பிடித்தமான உணவு, பானங்கள், 'மெனு'வில் சேர்க்கப்படுகின்றன. அவை தான் மற்றவர்களுக்கும் பரிமாறப்படுகின்றன
இப்போது, இந்த விமானத்தை பராமரிக்கும் செலவு அதிகரிப்பதால், இன்னும் கூடுதல் வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன், போயிங் 777 - 300 ஈ.ஆர்., விமானத்தை வாங்க, இந்திய விமானப் படை திட்டமிட்டிருக்கிறது.

ஆனந்த் நடராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
09-டிச-201918:52:33 IST Report Abuse
OUTSPOKEN குடிப்பது கூழாக இருந்தாலும் கொப்பளிப்பது பன்னீராக இருக்க வேண்டுமில்ல. ஒரு பக்கம் நம் நாட்டில் பசிக்கு சாப்பிட எதுவும் இல்லாமல் குழந்தைகள் மண்ணை திங்கும் அவலம் மறு பக்கம் வளர்ந்த நாடுகளை போல பந்தா செய்து கொண்டு வெளி நாட்டு பயணங்களுக்கு கோடி கணக்கில் மக்களின் வரி பணத்தை வாரி இறைக்கும் கொடுமை. வெட்கம் கெட்டவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X