அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
00:00

பா-கே
'பீச்'சில், நண்பர் குழாமுடன் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விருந்தாளியாக அங்கு வந்தார், போலீஸ் அதிகாரியான நண்பர். இவர், சந்தன கடத்தல் வீரப்பனை, 'என்கவுன்டர்' செய்தபோது, அந்த குழுவில் இருந்தவர்.
லென்ஸ் மாமா, 'கச்சேரி'யை ஆரம்பிக்க, போலீஸ் நண்பரை ஓரம் கட்டி அழைத்துச் சென்றேன். என்னோடு ஒட்டிக் கொண்டார், 'திண்ணை' நாராயணன் சார்.
போலீஸ் நண்பர் கூறியது, இது:
சமீபத்தில், கர்நாடக மாநிலம், பந்திபூர் காட்டில், இரண்டு பேரை கொன்ற புலியை, சில பழக்கப்பட்ட யானைகள் மற்றும் காட்டை அறிந்தவர்கள் உதவியுடன் பிடித்தனர்.
கிருபாகர் மற்றும் சேனானி என்ற இரு புகைப்படக்காரர்கள், பந்திபூர் காட்டு விலங்குகள் பற்றி ஏராளமான புகைப்படங்களை எடுத்து பிரபலமானவர்கள்.
கன்னட நடிகர், ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திச் சென்றது நமக்கு தெரிந்த விஷயம். அதே சமயத்தில், மேற்கூறிய இரு புகைப்படக்காரர்களையும் பிடித்துச் சென்று, 14 நாட்கள் தன் கண்காணிப்பில் வைத்திருந்தது, தெரியாத விஷயம். அப்போது, அவர்களிடம், காடு பற்றிய கதை ஒன்றையும் கூறியுள்ளான், வீரப்பன்.
வீரப்பன் கூறிய கதை:
ஒரு காலத்தில், காட்டில் விலங்குகளுடன் கடவுளும் வாழ்ந்து வந்தாராம். மனிதன் பிறக்கும் நேரம் வந்தபோது, 'இனி, நாம் இங்கு இருக்க வேண்டாம். வேற உலகம் செல்வோம்...' என தீர்மானித்து, தங்களுடன் விலங்குகளை அழைத்தார், கடவுள்.
கடவுளுடன் செல்ல யானைகளுக்கு விருப்பமில்லை.
'மிகச் சிறிய மனிதர்களை பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும்? அதோடு, அழகான பூமி, அற்புதமான காடு, பூக்கள், தண்ணீர் குடிக்க நதி என இருக்கும்போது, இதை விட்டு எதற்காக வரவேண்டும். நாங்கள் வரமாட்டோம்...' என்றதாம்.
'அப்ப நீங்க, உங்களை அழிச்சுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. உங்க இஷ்டம்...'ன்னு சொல்லி, சொர்க்கத்துக்கு சென்று விட்டார், கடவுள்.
கடவுளை மதிக்காத யானைகளுக்கு இப்ப என்ன ஆச்சு... பாவம், சர்க்கசில் வேடிக்கை காட்டி பிழைக்க வேண்டியிருக்கு. சாப்பிடறதுக்கு ஒன்றுமில்லை, சுற்றி வர காடு இல்லை. மக்கள் வந்து அதையும் ஆக்கிரமிப்பு செய்து, யானைகளை விரட்டுகின்றனர். யானைகளில் சில, தெரு தெருவாக பிச்சை எடுக்கிறது. மேலும் சில, கோவில்களில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு அவதிப்படுகிறது என்றானாம்.
பல மிருகங்களை கொலை செய்யும் கொடூரமானவன் என்று மட்டுமே வீரப்பன் பற்றி, இவர்களுக்கு தெரியும். ஆனால், அவன் மனதுக்குள்ளும் ஈரம் இருக்குதேன்னு வியந்துள்ளனர், மேற்கூறிய இரு புகைப்படக்காரர்களும்!
அக்டோபர், 18, 2004ல், சுட்டுக் கொல்லப்பட்டான், வீரப்பன்.
- என்று கூறி முடித்தார், போலீஸ் நண்பர்.

கோவில்களில், இரும்பு சங்கிலியால் யானைகள் கட்டப்பட்டு, சிரமப்படுகிறது என்றதும், இன்னொரு தகவல் ஞாபகம் வருகிறது என்று ஆரம்பித்தார், திண்ணை நாராயணன் சார்:
சில ஆண்டுகளுக்கு முன், கோவில்களில் யானை இருப்பது தேவையா என்ற விவாதம் எழுந்தது. காரணம், அவற்றின் கால்கள் எப்போதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதால், நிறைய காயங்கள் ஏற்பட்டு, சீழ் கோர்த்து பல பாதிப்பை ஏற்படுத்தியது.
யானைகளை காப்பாற்ற, கேரள மாநிலத்தில் உள்ள, திருவல்லா ஸ்ரீவல்லபா சுவாமி கோவிலில் மட்டும், 'யானைகளை துன்புறுத்த வேண்டாம். அவை செய்யும் காரியங்களை நாமே செய்யலாம்...' என முடிவெடுத்தார், அக்கோவிலின் தலைமை அர்ச்சகரான, அக்கீரமன் காளிதாசன்...
'நாங்கள், கண்ணுாரிலிருந்து வந்தவர்கள். எங்கள் குடும்பமே தாந்திரீக குடும்பம் தான். (கோவில் அர்ச்சகர்களை, தாந்திரீகர்கள் என்று அங்கு சொல்வர்) 1,000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது, இந்த கோவில். கேரளத்தில் உள்ள கோவில்களிலேயே மிகப்பெரியதும், பழமையானதும் இது தான். பெரிது என்பது, அளவின் அடிப்படையில் மட்டுமல்ல, இங்கு பின்பற்றப்படும் பூஜை முறைகளும் பிரமாண்டமாக இருக்கும்.
'ஆரம்ப காலத்திலிருந்தே, இங்கு யானைகள் பயன்படுத்தப்படும் வழக்கம் இல்லை. ஆனால், இடையில் சில ஆண்டுகள் யானைகளை, பூஜைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். நான், தலைமை பொறுப்பேற்ற பின், இந்த சம்பிரதாயத்தை ஒழித்தேன்.
'இங்கு நடக்கும் சடங்குகள் அனைத்துமே, மனிதர்களை கொண்டே செய்யப்படுகின்றன. கோவில்களில் யானையை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்று, எந்த வேதத்திலும், உபநிடத்திலும் சொல்லப்படவில்லை...' என்கிறார், யானை அபிமானியான இந்த அர்ச்சகர்.
- என்றார், நாராயணன் சார்.


'சிரிப்பு மன்றம்' நுாலில் படித்த சுவையான தகவல். பிரபல எழுத்தாளரும், நகைச்சுவை பேச்சாளருமான, கு.ஞானசம்பந்தன் எழுதியது:
நான், ஒரு கிராமத்தில் பேசிக்கிட்டு இருந்தேன். பேச்சை கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்குறாங்க. எனக்கு பயங்கர சந்தோஷம்.
திடீர்னு, ஊர் நாட்டமையோட சம்சாரக் கிழவி, கோபமாக வந்து, 'ஏண்டி சிறுக்கிகளா... ஆம்பளை ஒருத்தன், தொண்டை கிழிய பேசிக்கிட்டு இருக்கான். நீங்கள்லாம் சிரிப்பா சிரிக்கிறீங்களே... மரியாதையா வாயை பொத்திக்கிட்டு, பேச்சை கேட்டுட்டு போங்க'ன்னு கத்தி தீர்த்திடுச்சு.
'இப்படியும் சில சமயம் இடையூறு வந்துடுது. என்ன செய்ய...' என, நொந்து கொண்டேன்.
பட்டிமன்ற புகழ், லியோனியின் அனுபவம் வேறு மாதிரியானது:
ஒரு கிராமத்தில், எங்க பட்டிமன்றம் நடந்துக்கிட்டு இருந்தது. எங்கள் குழுவில், குண்டா இருக்கிற ராஜா என்பவர் எழுந்து பேச ஆரம்பிக்கவும், பூகம்பம் வந்தது மாதிரி, என் முன்னாடி இருந்த, 'மைக், டீப்பாய்' எல்லாம் நகர்ந்து போக ஆரம்பிச்சது. என்னமோ ஏதோன்னு நாங்க பதறும்போதே, மேடையும் ரெண்டா பிரிஞ்சிடுச்சு.
இந்த மேடையில் ஒரு அணியும், எதிர் மேடையில் இன்னொரு அணியுமா ரெண்டு பக்கமா பிரிஞ்சு நிக்கிறாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது, கூட்டம் ஏற்பாடு பண்ணினவங்க, டிராக்டர் மீது மேடை தயார் பண்ணி, 'இன்ஜின்' மற்றும் 'டிரெயிலர்' இடையே உள்ள இடைவெளியை சரியாக பொருத்தாமல் விட்டுட்டாங்க. இதனால் வந்த செயற்கை பூகம்பம் தான் இது.
'ஏன்யா, ரெண்டு அணியும் எதிரெதிரா பிரிஞ்சு நின்னு மோதுனா சுவாரஸ்யம் இருக்கும் என்பது, நிஜம் தான். அதுக்காக இப்படி மேடையை ரெண்டா உடைச்சா எப்படி'ன்னு, 'மைக்'லயே பேசி, சமாளிச்சேன்.
- இது எப்படி இருக்கு!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-டிச-201905:14:57 IST Report Abuse
Natarajan Ramanathan லியோனி பேச்சு கன்றாவியாக இருக்கும்.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
15-டிச-201915:08:14 IST Report Abuse
pattikkaattaan வீரப்பன் இருந்த காலகட்டங்களில் அந்த மலைக்கிராமங்களுக்கு பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு .. அங்கிருந்த பழங்குடி மக்கள் யாரும் வீரப்பனுக்காக பயப்படமாட்டார்கள் ... ஆனால் வீரப்பனை பிடிக்க வரும் அதிரடிப்படையைக்கண்டு அஞ்சி நடுங்குவார்கள் .. பெண்கள் எல்லாம் எங்கு ஒளிவது என்று தெரியாமல் ஓடுவார்கள் .. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டு மாநில அதிரடிப்படை ஆட்கள் மாறிமாறி அவர்களை வேட்டையாட வருவார்கள் .. வீட்டிலிருக்கும் ஆடு , கோழி எது கிடைத்தாலும் தூக்கிக்கொண்டு போவார்கள் .. எதிர்க்கேள்வி கேட்டால் அடித்து துவம்சம் செய்துவிடுவார்கள் ... இல்லாவிட்டால் முகாமுக்கு அழைத்துச்சென்று சித்திரவதை நடக்கும் .. வீரப்பன் போலீஸ்காரர்களை சுட்டுக்கொல்வதற்கு முக்கிய காரணமே இதுதான் .. வீரப்பனை பிடிக்க சென்றவர்கள் வீரப்பனை மட்டும் பிடித்திருந்தால் நல்லது .. ஆனால் மலைவாழ் மக்கள் அதிகம் துன்பப்பட்டனர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X