தமிழகத்தில் முதலீடு
ஜன., 23: தமிழக அரசு சார்பில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ. 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக முதல்வர் பழனிசாமி தகவல்.
பட்ஜெட்டில் சலுகை
பிப்., 11: இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வருமானம், தனி வருமான உச்ச வரம்பு ரூ. 5 லட்சம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என அறிவிப்பு.
வங்கிகள் இணைப்பு
ஆக., 30: பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியன்டல் வங்கி, யுனைடட் வங்கி, கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கியுடன் ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் சாதனை
அக்., 14: இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம், பங்குச்சந்தையில் நுழைந்தது முதல் நாள் முடிவிலேயே 'சென்செக்ஸ்'ல் அதன் அடிப்படை விலை ரூ. 320ல் இருந்து 129 சதவீதம் அதிகரித்து 728.60 ஆக உயர்ந்து சாதனை.
விருப்ப ஓய்வு
அக்., 23: பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., நிறுவனங் களை இணைக்க மத்திய அரசு முடிவு. மத்திய அரசின் விருப்ப ஓய்வு திட்டத்தில் நாடு முழுவதும் 79 ஆயிரம், தமிழகத்தில் 8,000 பேரும் விண்ணப்பம். இவர்களது பணி காலம் ஜன., 31ல் முடிகிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அக்., 26: ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடம், உரிம கட்டணம் ரூ. 92 ஆயிரம் கோடி மற்றும், 'ஸ்பெக்ட்ரம்' பயன்பாட்டு கட்டணம் ரூ. 41 ஆயிரம் கோடி என, மொத்தம் ரூ. 1.33 லட்சம் கோடியை வசூலிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. அரசு சலுகை வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரியதால். இத்தொகையை 2022க்குள் செலுத்தலாம் என அவகாசம்.
உலக பணக்காரர்
நவ., 30: அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு 9வது இடம் தந்துள்ளது.
மூடப்படுகிறதா வோடபோன்
டிச., 7: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைக்கட்டணம் ரூ.௫௩ ஆயிரம் கோடி சேர்த்து வோடபோனின் மொத்த கடன் ரூ. 1.17 லட்சம் கோடி. மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை எனில் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வழியில்லை என அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்தார்.
புதிய முயற்சி
டிச., 15: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், 'டிஜிட்டல்' முறையில் மட்டுமே கட்டணம் செலுத்தும் 'பாஸ்டேக்' முறை அமல்.
உயர்ந்த சென்செக்ஸ்
டிச., 20: இந்த ஆண்டில் அதிகபட்சமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12,260 புள்ளிகளிலும் நிலை பெற்றது.
கோடிகளில் சுந்தர்
டிச., 22: கூகுள், ஆல்பபெட் நிறுவனங் களின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சைக்கு ஆண்டு சம்பளமாக ரூ.14.5 கோடி உட்பட பங்குகள் மூலம் ரூ.2,788 கோடி கிடைக்கிறது.
துளிகள்
ஜன., 1: மத்திய அரசு, 2018ல் பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 77,417 கோடி திரட்டியது.
ஜன.,17: ஜெர்மனியின் 'வோக்ஸ்வோகன்' நிறுவனம் ஒரே நாளில் ரூ. 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என பசுமை தீர்பாணையம் உத்தரவு.
ஜன.,18: இந்திய அகர்பத்திகள் இறக்குமதிக்கு விதித்த தடையை, இத்தாலி நீக்கம். இதனால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு அகர்பத்திகள் ஏற்றுமதி தொடங்கியது.
ஜன.,21: 'அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள், தங்களுக்கென பிரத்யேக ஆடை அளவுகளை வைத்திருப்பது போல, இந்தியாவுக்கும் தனியான அளவு குறியீடுகள் உருவாக்கப்படும்'' என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பு.
பிப்.,23: : 'வீடியோகான்' நிறுவனத்திற்கு விதிகளை மீறி வங்கி கடன் வழங்கியது தொடர்பான வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் சி.இ.ஓ., சாந்தா கோச்சார் 'தேடப்படும் நபர்' என, சி.பி.ஐ., அறிவிப்பு.
மார்ச் 18: எரிக்சன் நிறுவன வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ரூ. 459 கோடி செலுத்தி சிறை செல்வதை தவிர்த்தார் அனில் அம்பானி.
மார்ச் 14: ஐ.டி.பி.ஐ., தனியார் துறை வங்கி என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மார்ச் 20: எல்.ஐ.சி., நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் அதன் மூலதனத்தை 51 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து ஐ.டி.பி.ஐ., பெயரை மாற்றும் எல்.ஐ.சி.,யின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு.
ஏப்.,1: தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்புக்கு பின் பரோடா வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியானது.
ஏப்., 1: பாண்டியன் மற்றும் பல்லவன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியானது.
ஏப்.,5: மும்பையின் 'இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனம், சென்னையின் லட்சுமி விலாஸ் வங்கியை வாங்கியது.
ஏப்.,17: 1993ல் தொடங்கப் பட்ட 'ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
மே 1: 2019 -20 நிதியாண்டில் அதிகபட்ச ஜி.எஸ்.டி., வருவாயாக ஏப்ரல் மாதம் ரூ. 1.13 லட்சம் கோடி வசூல்.
மே 31: ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக பதிவானது.
ஜூன் 2: மத்திய பட் ஜெட்டை நிர்மலா சீதா ராமன் தாக்கல் செய்தார். புறநானுாற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார்.
ஜூன் 25: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான, விரால் ஆச்சார்யா ராஜினாமா.
ஜூலை 24: ஸ்ரீபெரும்புதுார் ஹூண்டாய் தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் காரை, முதல்வர் பழனிசாமி துவக்கம். விலை ரூ. 25,8,000.
ஜூலை 26: மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைப்பு.
ஆக.,12: வாகன விற்பனையில் 19 ஆண்டுகள் இல்லாத சரிவு என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் தகவல்.
ஆக.,26: 2019ம் ஆண்டில் மிக குறைந்தபட்சமாக அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.18 ஆக சரிவு.
*அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் எலக்ட்ரிக் பஸ் சேவை சோதனை ஓட்டம் துவக்கம்.
ஆக.,27: ரிசர்வ் வங்கியின் உபரிநிதி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல்.
செப்.,2: தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 30,120க்கு விற்பனையாக புதிய உச்சம் தொட்டது.
செப்.,20: புதிய நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு வசதியாக 'கார்பரேட் வரி' 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு.
செப்.,23: பிரிட்டனின் 178 ஆண்டுகள் பழமையான, பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடுகள் நிறுவனமான 'தாமஸ் குக்' திவாலானது.
அக்.,4: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி வீதத்தில் 0.25 சதவீதம் குறைந்தது.
அக்.,6: மத்திய அரசு வெளியிட்ட தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, ஒரு கிராம் ரூ. 3,788 என விலை நிர்ணயம் செய்தது.
நவ.,4: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், 26 பொதுத்துறை வங்கிகளின், 3,400 கிளைகள் மூடப் பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவிப்பு.
நவ.,5: காலாவதி ஆகி, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை உரிய தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என, எல்.ஐ.சி., அறிவிப்பு.
நவ.,25: நாட்டில் 87,526 பொதுத்துறை வங்கி கிளைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தகவல்.
நவ.,29: 'மொபைல் ஆப்' மூலம் வாடகை கார்களை இயக்கும் 'ஓலா', 'ஊபர்' போன்ற நிறுவனங்கள், ஓட்டுநர்களிடம் இருந்து ஒவ்வொரு பயணக் கட்டணத்திலும் பெறும் 20 சதவீதத்தை கமிஷனை, 10 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு.
டிச.,1 : தங்க நகைகளுக்கு, 'ஹால்மார்க்' முத்திரை, 2021 ஜன., 15 முதல் கட்டாயமாக்கப் படும் என மத்திய அரசு அறிவிப்பு.
டிச.,3: வோடபோன், ஏர்டெல், ஜியோ ஆகியவை 'பிரிபெய்ட்' சந்தாதரர்களுக்கான கட்டணத்தை 42 சதவீதம் அதிகரித்தது.
டிச.,16: என்.இ.எப்.டி., (NEFT) மூலம் 24 மணி நேரமும், பணப் பரிமாற்றம் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
டிச.,17: ஒரு தொலை தொடர்பு நிறுவனத்திலிருந்து, மற்ற நிறுவனங்களுடன் பேசுவதற்கு ஒரு நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணம் என்பது 2020 டிச., வரை நீடிக்கும் என டிராய் அறிவிப்பு.
டிச.,18: அரசு மற்றும் தனியார் லாட்டரிக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும் என அறிவிப்பு.
டிச.,18: 'டாடா சன்ஸ்' தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மித்ரியை நீக்கியது தவறு என மத்திய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அறிவிப்பு.
டிச.,21: 'ரபி' பருவத்தின் முக்கிய பயிராக கருதப்படும் கோதுமை பயிரிடும் பரப்பு இதுவரையில் 278 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு.
டிச.,24: இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்ட மைப்பு (பிக்கி) தலைவராக சங்கீதா ரெட்டி பொறுப்பேற்பு.
டிச.,31: பான் - ஆதார் இணைக்க காலக்கெடு 2020 மார்ச் 31 வரை நீட்டிப்பு.