கருந்துளை அதிசயம்
ஏப்., 10: ஒவ்வொரு சூரிய குடும்பத்தின் நடுவிலும் ஒரு கருந்துளை (பிளாக்ேஹால்) இருக்கிறது. இதன் புவி ஈர்ப்பு விசை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சக்தி வாய்ந்தது. இந்நிலையில் நாசாவுடன் இணைந்து ஹாரிசன் தொலைநோக்கி திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி உலகில் எட்டு இடங்களில் தொலைநோக்கிகளை நிறுவி, கருந்துளையை முதன்முதலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு விஞ்ஞானிகள் சாதனை.
சிங்கப்பெண்ணே
அக்., 18: அமெரிக்காவின் நாசா பெண் விஞ்ஞானிகளான ஜெசிகா மெர், கிறிஸ்டினா கோச் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடைபயணம் மேற்கொண்டனர். விண்வெளி மையத்துக்கு வெளியே பேட்டரியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். விண்வெளி மையத்தின் முதல் பெண் விஞ்ஞானிகளின் நடைபயணம் என்ற சாதனை படைத்தது.
நிலவில் பருத்தி
ஜன., 3: பூமியை பார்த்தவாறு தெரியும் நிலவின் ஒரு பக்கத்தில் மட்டும் உலக நாடுகள் ஆய்வு நடத்தின. முதன்முதலாக நிலவின் மறுபக்கத்தில் 'சாங்கி - 4' என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதித்தது. நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடானது. நிலவின் படங்களையும் அனுப்பியது. இதில் கொண்டு செல்லப்பட்ட பருத்தி விதை முளைத்தது, அந்த படத்தையும் 'சாங்கி - 4' அனுப்பியது.
அரிதான கிரகணம்
டிச., 26: தமிழகத்தில் வளைய சூரிய கிரகண வானியல் நிகழ்வு காலை 8:06 மணிக்கு தொடங்கி 11:19 மணி வரை தெரிந்தது. சூரியனை அனைத்து கோள்களும் சுற்றுகின்றன. ஒரே நேர்கோட்டில் பூமி, சூரியன், சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் சூரியனை மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரிகிறது. அடுத்து தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் 2031 மே 21ல் நிகழும்.
திக்...திக்...திக் 'சந்திரயான் - 2'
லேண்டருன் சிக்னல் துண்டிக்கப்பட, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி.
ஜூலை 22: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி., மார்க் -3 ராக்கெட் மூலம் 'சந்திரயான் - 2' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செப்., 2ல் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது. செப்., 7ல் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2.1 கி.மீ., துாரம் இருக்கும் போது, லேண்டர் உடனான சிக்னல் துண்டிப்பால் ஏமாற்றம். 90 சதவீதம் வெற்றி என அறிவிப்பு. இதற்கான செலவு ரூ. 978 கோடி.
துளிகள்
ஜன.,7: நாசாவின் 'டெஸ்' விண்கலம் சூரிய குடும்பத்துக்கு வெளியே மூன்றாவது புதிய கோளை கண்டுபிடித்தது. இது பூமியை விட மூன்று மடங்கு பெரியது. இதற்கு 'எச்.'எச்.டி 21749பி' என பெயரிடப்பட்டது.
ஜன.,24: பி.எஸ்.எல்.வி., - சி 44 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிப்.,6: இஸ்ரோவின் 'ஜிசாட் 31' செயற்கைக்கோள் பிரஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஏப்.,1: பி.எஸ்.எல்.வி., - சி45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.
ஏப்.,18: இலங்கையின் முதல் செயற்கைக்கோளான 'ராவணா - 1' , நாசாவின் அட்லாண்டிக் ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
ஏப்.,19: நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள் 'நேபாளிசாட் -1', அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏப்.,25: செவ்வாய் கிரகத்தில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டதை, நாசாவின் 'இன்சைட்' விண்கலம் கண்டுபிடிப்பு.
மே 22: பி.எஸ்.எல்.வி., - சி46 ராக்கெட் மூலம் 'ரிசாட் - 2பி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.
ஜூலை 20: நிலவில் மனிதர்கள் காலடி வைத்த 50வது ஆண்டு விழா கடை பிடிக்கப்பட்டது.
ஜூலை 22: நிலவுக்கு 2024ல் முதன்முதலாக விண் வெளி வீராங்கனைகளை அனுப்பவுள்ளதாக நாசா அறிவிப்பு.
ஆக.,23: சர்வதேச விண் வெளி மையத்துக்கு பெடர் என்ற 'ரோபோ' மனிதனை அனுப்பி ரஷ்யா சாதனை.
செப்.,30: சர்வதேச வானியல் கழகம் 2006ல் கண்டுபிடித்த விண்கல்லுக்கு இந்திய பாடகர் ஜஸ்ராஜ் பெயர் வைக்கப்பட்டது.
நவ.,28: பி.எஸ்.எல்.வி., - சி47 ராக்கெட் மூலம் கார்டோசாட் -3 உள்ளிட்ட 14 செயற்கைக்கேள்கள் விண்ணில் ஏவப்பட்டது.
டிச.,11: பி.எஸ்.எல்.வி., - சி48 ராக்கெட் மூலம் ரிசாட் -2பிஆர்1 செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.