ஓயாத ஹாங்காங் போராட்டம்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான மசோதா கொண்டு வருவதற்க்கு எதிராக மார்ச் 15ல் முதன்முதலாக போராட்டம் நடத்தப்பட்டது. பின் ஏப்., 28ல் இரண்டாவது முறை போராட்டம் நடந்தது.
ஹாங்காங் பார்லி மென்டில் ஜூன் 9ல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து 'இது சீனாவின் தூண்டுதலால், அரசியல் ரீதியில் பழிவாங்க எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை' என, ஹாங்காங்கை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் என 20 லட்சம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி, கேரி லேம் ஜூலை 9ல் அறிவித்தார். என்றாலும் மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து அந்த மசோதா அக்., 23ல் 'வாபஸ்' பெறப்பட்டது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி, ஹாங்காங் மக்கள் போராட்டத்தை இன்றும் தொடர்கின்றனர்.
ஹாங்காங்கில் நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் நவ., 27ல் நிறைவேற்றப்பட்டது.
புத்தம் புது காஷ்மீர்...
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் '35 -ஏ' பிரிவுகளை ஆக., 6ல் மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இருக்கும். லடாக்கில் சட்டசபை இருக்காது. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது.
'காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. இரண்டு யூனியன்களாக பிரித்தது அங்கு நிலவும் வறுமை, லஞ்சம்,- ஊழல் போன்றவற்றை ஒழித்து, மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கு தான்' என மசோதா தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மத்தியில் எந்த அரசும் செய்யாத வரலாற்று சாதனையை பிரதமர் மோடி அரசு நிகழ்த்தியது. இதன்பின் காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்றவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இன்டர்நெட் மற்றும் அலைபேசி இணைப்புகள் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் வழங்கப்பட்டன.
தீர்வு
சிறப்பு அந்தஸ்தால், காஷ்மீரில் பிற மாநிலத்தவர் யாரும் சொத்துகள் வாங்க முடியாது. தகவல் அறியும் உரிமை சட்டம், அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி போன்ற சட்டங்கள் அங்கு அமலில் இல்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியாது. அம்மாநிலத்துக்கு தனி சட்டங்கள் இருந்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் இனி இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும்
நிர்வாகம்
அக்., 31ல் ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக உதயமாகின. ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னராக கிரிஷ் முர்மு பொறுப்பேற்றார். லடாக் துணைநிலை கவர்னராக ஆர்.கே.மாத்துார் பொறுப்பேற்றார். இந்தியாவில் 28 மாநிலம், 9 யூனியன் பிரதேசமாக மாறியது.