அமர்க்கள ஆரம்பம்
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஒரே நாளில் வெளியானது. இதில் உலகளவில் பேட்ட படமும், தமிழக அளவில் விஸ்வாசம் படத்திற்கும் மவுசு அதிகம் இருந்தது.
காமெடி 'கிங்'
யோகம் நிறைந்த ஆண்டாக யோகிபாபுவுக்கு இருந்தது. இவர் 31 படங்களில் நடித்துள்ளார். இதில் தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.
வசூலில் 'டாப்'
வசூலில் விஜய் நடித்த பிகில் முதல் இடத்தை பிடித்தது. இப்படம் ரூ. 300 கோடி வசூலித்தது. இதற்கு அடுத்து ரஜினி நடித்த பேட்ட படம், ரூ. 230 கோடி வசூலித்தது. விஸ்வாசம் - ரூ. 200 கோடி; நேர்கொண்டபார்வை - ரூ. 181.5 கோடி; காஞ்சனா 3 - ரூ.130 கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நடிகர்களில் 'டாப்'
ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில் இந்தாண்டு சர்வம் தாள மையம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் ஆகிய ஐந்து படங்கள் வெளியானது. இவருக்கு அடுத்து சமுத்திரகனி பெட்டிக்கடை, கொளஞ்சி, அடுத்த சாட்டை, சில்லுக்கருப்பட்டி ஆகிய நான்கு படங்களில் ஹீரோவாகவும் காப்பான் உட்பட சில படங்களில் குணச்சித்ர வேடத்திலும் நடித்துள்ளார்.
கவனிக்க வைத்த படங்கள்
டூ-லெட், பேரன்பு, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளை பூக்கள், ஹவுஸ் ஓனர், கே13, கொலைகாரன், ராட்சசி, கேம் ஓவர், தொரட்டி, ஆடை, பக்ரீத், ஒத்த செருப்பு சைஸ் 7, மகாமுனி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, காளிதாஸ் போன்ற படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
நாயகிகள் எப்படி
தமன்னா (கண்ணே கலைமானே, தேவி 2, பெட்ரோமாக்ஸ், ஆக் ஷன்) மற்றும் மேகா ஆகாஷ் (பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கிபாயும் தோட்டா), நான்கு படங்களில் நடித்தனர். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மெய், நம்ம வீட்டு பிள்ளை படங்கள் பேசும்படி அமைந்தன.
கமல் '60'
நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட 'உலக நாயகனாக' உச்சம் தொட்ட கமல், நவ., 7ல் சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்தார். ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் ஆரம்பித்த இவரது பயணம் இன்றும் தொடர்கிறது.
நடிகைகளில் 'டாப்'
நடிகைகளில் ஐந்து படங்களில் நடித்து நயன்தாரா, ஓவியா முதலிடத்தை பெற்றனர். விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர்காலம், பிகில் படங்களில் நயன்தாராவும், 90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2, ஓவியாவை விட்டா யாரு படங்களில் ஓவியாவும் நடித்தனர்.
விருது படங்கள்
ஒத்த செருப்பு சைஸ் 7, டூலெட், பேரன்பு, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களுக்கு சர்வதேச விருதுகள் கிடைத்தன.
அசுரன் 'சர்ச்சை'
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படம், ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலின் தழுவல் இது. இந்தக்கதை பஞ்சமி நில பிரச்னையை மையமாக கொண்டதால் அரசியல் சர்ச்சையில் சிக்கியது.
கீர்த்திக்கு மகுடம்
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு) பெற்றார். சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, பிரியா கிருஷ்ணமூர்த்தி எழுதி, இயக்கிய 'பாரம்' படத்துக்கு கிடைத்தது.
ஏமாற்றம் தந்தவை
தேவ், வந்தா ராஜாவா தான் வருவேன், ஐரா, சூப்பர் டீலக்ஸ், மிஸ்டர் லோக்கல், என்ஜிகே, சிந்துபாத், கொலையுதிர் காலம், ஆதித்ய வர்மா, ஆக் ஷன், சங்கத்தமிழன், எனை நோக்கி பாயும் தோட்டா, போன்ற படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தன.
இவர்களுக்கு நோ...
இந்தாண்டு கமல், கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோரது படங்கள் திரைக்கு வரவில்லை.
'கண்ணழகி' பிரியா
'ஒரு அடார் லவ்' மலையாள படத்தில் இடம் பெற்ற கண்ணழகி பிரியாவாரியரின் கண்சிமிட்டல் காட்சி வைரல் ஆனது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
நட்சத்திர திருமணங்கள்
நடிகை சாயிஷாவை கரம் பிடித்தார் ஆர்யா. ரிச்சா கங்கோபத்யாய் - ஜோ, காமெடி நடிகர் சதீஷ் - சிந்து ஆகியோர் இல்லற வாழ்க்கையில் புகுந்தனர்.
வெற்றி படங்கள்
விஸ்வாசம், பேட்ட, எல்கேஜி, காஞ்சனா 3, தில்லுக்கு துட்டு 2, மான்ஸ்டர், தடம், ஏ1, நேர்கொண்ட பார்வை, கோமாளி, நம்ம வீட்டுப்பிள்ளை, அசுரன், கைதி, பிகில் வெற்றி படங்களாக அமைந்தன.
எத்தனை படம்
தமிழில் 209 படங்கள் 2019ல் வெளியாகின. இதில் சிகை, இக்லு, களவு ஆகிய மூன்று படங்கள் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக இணையத்தில் வெளியாகின.
ஆடை இல்லா அமலா
விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், தன்ஷிகா நடித்த உச்சகட்டம், ஓவியா நடித்த 90 எம்.எல்., நரேன் நடித்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ், அமலாபால் நடித்த ஆடை, ஜித்தன் ரமேஷ் நடித்த ஒங்கள போடணும் சார், துருவ் விக்ரம் நடித்த ஆதித்யவர்மா 'ஏ' சான்றிதழ் பெற்ற படங்கள். அமலாபாலின் ஆடை படமும், ஓவியாவின் 90 எம்.எல்., படமும் சர்ச்சையை கிளப்பின.