மன அழுத்தம் - வெட்கப்பட வேண்டிய நோயல்ல!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
00:00

நபர் 1: நன்றாக இருந்த, 10 வயது சிறுவன், எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறான். சோகத்துடன், மெல்ல எல்லாரிடமிருந்தும் விலகி நிற்கிறான். சரியாக சாப்பிடாமல், துாங்காமல், களைப்பு மற்றும் சோகத்துடன் இருக்கிறான்.
நபர் 2: பதினேழு வயது பெண், காரணமேயில்லாமல் அழுதபடி, எதிர்மறை எண்ணங்களில், தற்கொலை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறாள்.
நபர் 3: குழந்தை பெற்ற பெண், குழந்தையை பராமரிக்காமல், எரிந்து விழுந்து, அழுது புலம்பியபடி இருக்கிறாள்.
நபர் 4: அறுபது வயது பெரியவர், பேச துணையின்றி, கொஞ்சம் மறதியோடு, தனக்கு விருப்பமான விஷயங்களில் நாட்டமில்லாமல் இருக்கிறார்.
இந்த நான்கு நபர்களுக்கும், 'மன அழுத்தம்' இருக்கிறது.

'லான்செட்' என்ற சர்வதேச மருத்துவ இதழின், 2017ம் ஆண்டின் ஆய்வின்படி, ஐந்து கோடி பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட, பெண்கள் சற்று அதிகளவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, 3,750 பேருக்கு மேல் மன அழுத்தம் இருப்பதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிற ஆய்வுகளின்படி, முதியவர்களில், 15 பேரில் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும், 20 - 30 வயதில், முதன்முதலாக மன அழுத்தம் ஏற்படுகிறது.

வாழ்நாளில், மன அழுத்தம் ஏற்படும் ஆண்களில், 7 சதவீதத்தினரும், பெண்களில், 1 சதவீதத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாக, வேறு ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஐந்தாம் நுாற்றாண்டில், 'ஹிப்போகிரேட்ஸ்' காலத்திலேயே, 'மெலன்கலி' - துக்கம் என்ற பெயரில், மன அழுத்தம் கண்டறியப்பட்டது.
சிந்திப்பதையும், செயல்படுத்துவதையும் எதிர்மறைக்குள்ளாக்கும் மன அழுத்தம், மிக மிக கவனம் கொள்ள வேண்டிய மனப் பிரச்னை. அதிர்ஷ்டவசமாக இப்பிரச்னை, குணப்படுத்தக் கூடிய ஒன்றே.
மன அழுத்தத்தால், முன் ரசித்த விஷயங்கள் பிடிக்காமல் போய், பல்வேறு உடல் மற்றும் உணர்வு பிரச்னைகள் ஏற்பட்டு, வீட்டிலும், வெளியிலும், ஒரு தனி மனிதனின் செயல் திறன் பாழ்பட்டு விடுகிறது.

மன வருத்தத்தை எப்படி கண்டறிவது?
வருத்தமான மனநிலை, எதிலும் ஆர்வமின்மை, சாப்பிடும் உணவின் அளவிற்கு மாறாக, உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், பயனில்லாத செயல்களான, கை முறுக்குதல், பிசைதல் வெளிப்படுத்துதல்.
வேகம் குறைந்த நடை மற்றும் பேச்சு, தாழ்வு மனப்பான்மை, தேவையில்லாத குற்ற உணர்ச்சி, திட்டமிடுதல், கவனித்தல் போன்றவற்றில் சிரமம், மரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள், துாக்கமின்மை, தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதிருப்பது.
தைராய்டு பிரச்னைகள், மூளை கட்டி அல்லது வைட்டமின் குறைபாடுகளும், மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். துவக்கத்திலேயே இப்பிரச்னைகள் கண்டறியப்பட வேண்டும்.
துக்கம், துயரம், வருத்தம் இவற்றின் வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
எதிர்பாராதது நிகழும்போது, தோல்வியுறும் போது ஏற்படுவது சோகம்.
உறவினர் ஒருவரை இழக்கும் போது, உறவு முறிவின்போது, மிதமான நிலையில் சோகம் அல்லது துக்கம் ஏற்படுகிறது. இவர்களும், வருத்தமுற்றவர்கள் போல் காணப்படுவர்.
துக்கம் என்பது வருத்தமல்ல. இழப்பில் ஏற்படக்கூடிய விளைவே. துக்கமும், வருத்தமும் திடீர் சோகத்தை உள்ளடக்கி, ஒரு மனிதன் செயலாற்ற வேண்டிய நிகழ்வுகளிலிருந்து, அவனை விலக்கி வைத்து விடுகிறது.
துக்கத்தில் ஒருவருடைய சுய மதிப்பீடுகள் பாதிப்புக்கு உள்ளாகாது. ஆனால், வருத்தத்தில் மதிப்பின்மையும், வெறுப்பும் மிகுந்திருக்கும்.
நெருங்கிய உறவினர்களின் இழப்பு, சண்டை சச்சரவுகளில் பாதிப்புக்கு உள்ளாவது, வேலை இழத்தல் போன்றவை, துக்கத்தை வரவழைக்கும். இதுவே, வருத்தத்துடன் சேரும்போது, துக்கம் வெகுநாள் நீடிக்கலாம். இதனால், மன அழுத்தம் ஏற்படலாம்.

யார் யாருக்கு மன அழுத்தம் ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும்- ஏற்படலாம். ஏன், வசதியான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கூட, மன வருத்தம் ஏற்படலாம். பிரச்னைகள், நம் வாழ்க்கையின் அனுபவங்கள்.
பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில், ஒருவரின் உடல்-, மன பாதுகாப்பு முறைகளில் குறை ஏற்படும்போது, மன அழுத்தம் ஏற்படுகிறது. சில சமயம் பிரச்னைகள் இல்லாத போதும் வருத்தம் ஏற்படலாம்.
இருபத்தி ஐந்து வயதிற்குள் திருமணம் செய்து, ஓராண்டில் பெண் குழந்தை பெற்று, குழந்தையை படிக்க வைத்து, திருமணம் செய்து, பேரன், பேத்தி எடுத்த தம்பதி, எல்லா கடமைகளையும் முடித்து விட்டு, எந்த பிரச்னையும் இல்லாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

மன அழுத்தத்திற்கான பிற காரணிகள்
மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களில் ஏற்படும் மாறுபாடு, மரபியல் காரணங்கள், ஒரே மாதிரியான இரட்டையர்களில், ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அடுத்தவருக்கு, 70 சதவீதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
குறைந்த சுய மதிப்பீடுகள் மற்றும் அவ நம்பிக்கையுள்ள ஆளுமை இருப்பவர்களுக்கு, தொடர்ந்து வன்முறையை அனுபவித்தல், உதாசீனம், ஒதுக்கப்படுதல், ஒடுக்கப்படுதல், துஷ்பிரயோகம் போன்றவை யும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சிகிச்சை முறைகள் - மருந்துகள்
இவை துாக்க மாத்திரைகள் அல்ல. இவை பொதுவாக, சார்பு நிலையையும் உண்டாக்காது. 'ஆன்டி டிப்ரசன்ட்ஸ்' எனப்படும் மாத்திரைகள் மூலம், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து, இரண்டு அல்லது மூன்று மாதங்களில், முழு பலனையும் உணர முடியும்.
சில சமயம், திரும்ப பிரச்னைகள் வராமலிருக்க, தற்கொலை எண்ணங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சிகிச்சையை தொடர்ந்து அளிக்க வேண்டியிருக்கிறது.

உளவியல் சிகிச்சை முறை
மன அழுத்தம் மிதமாக இருக்கும்போது, உளவியல் சிகிச்சை பலனளிக்கும். வருத்தம் தீவிரமாக இருக்கும் போது, மருந்துகள் சிகிச்சை முறையில் முதன்மை பெறுகின்றன.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சை முறை
சீர்குலைக்கும் எதிர்மறை எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம், வேறுபட்ட உணர்வுகளை, இந்த சிகிச்சை முறையால் நீக்க முடிகிறது.

மின் அதிர்வு சிகிச்சை
மன அழுத்தத்தில், தீவிர தற்கொலை எண்ணம் இருக்கும்போது, மின் அதிர்வு சிகிச்சை மிகுந்த பலன்அளிக்கிறது. வாரம் இரண்டு - மூன்று முறை, மின் அதிர்வு சிகிச்சை முறை, மயக்க மருந்து கொடுத்த பின் கொடுக்கப்படுகிறது. இதைப் பற்றி, தவறான கருத்துகள் மலிந்துள்ளன.

மன அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?
பிரச்னைகளே இல்லாத மனிதர்கள் யாரும் கிடையாது. சில பிரச்னைகளுக்கு தீர்வு உண்டு. தீர்வில்லாத பிரச்னைகளை கடந்து செல்லும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.
தனிமையை தவிர்க்கவும். நிழலையும் தாண்டி கடைசி வரை ஒருவருடன் வருவது அவரின் ரசனைகள் தான். யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும், உங்களின் ரசனைகளை தொலைத்துவிட வேண்டாம்.
பலருக்கு வாழ்க்கையில், பிரச்னைகள் இருக்கின்றன. சிலருக்கு, பிரச்னையே வாழ்க்கையாக இருக்கிறது. 'காலில் செருப்பு இல்லாததற்காக அழுது கொண்டிருந்தேன். எதுவரை தெரியுமா? காலே இல்லாத ஒருவனைப் பார்க்கும் வரை' என்ற கவிதையின்படி, மிகச் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் வருத்தப்பட தேவையில்லை.
சார்பு நிலை தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து, மற்றவர்களோடு இருக்கும் நம் உறவு நிலையை மேம்படுத்துவது நல்லது.
எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களின் முன்னுரைகள். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனதுக்கு துக்கமில்லை; கனிந்த மனம் வீழ்வதில்லை.
மன அழுத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்... உங்களுடைய நலம் விரும்பும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும்.
துாக்கம், பசி இவற்றில் குறையில்லாமல் பார்த்துக் கொள்ளவும்; தனிமையை தவிர்க்கவும். எதிர்மறை எண்ணங்களால் அவதியுறும் போது, மனநல மருத்துவரை அணுகவும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளவும். மருந்தில்லா, எண்ணம் மற்றும் நடத்தை மாற்று சிகிச்சையும் பலனளிக்கும். மன அழுத்தம், வெட்கப்பட வேண்டிய நோயல்ல. வாழ்க்கை வாழ்வதற்கே... வீழ்வதற்கல்ல!

தமிழகத்தில் அதிகம்!
ஏழு இந்தியர்களில் ஒருவர், மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, 2019ல், டிசம்பரில் வெளியான, 'லான்ஸெட்' மனநல ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில், மனநோய்களின் சுமை, 1990ல் இருந்ததைவிட, 2017ல், இரண்டு மடங்காகி இருக்கிறது.
குழந்தைப் பருவ மனநோய்களான, நடத்தை பிரச்னைகள், ஆட்டிசம் மற்றும் கவனக் குறைபாடு போன்றவை, வட மாநிலங்களில், முக்கியமாக ஆண்களிடையே, மிக அதிகமாக உள்ளது.
வளர் இளம் பருவத்தில் தோன்ற ஆரம்பிக்கும் மன வருத்தம், பதற்றம், ஊட்டச்சத்து குறைபாடுகள், தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் இருப்பதாகவும், ஆண்கள், முதியவர்கள் மன அழுத்தத்தாலும், வளர் இளம் பருவத்தில், பதற்றம் மிகுந்து இருப்பதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மன அழுத்தத்தில், தமிழகமும், மன பதற்றத்தில், கேரளாவும் முதலிடத்தில் உள்ளன.

டாக்டர் டி.வி.அசோகன்
மனநல மருத்துவர், சென்னை.
94440 18060

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X