தோழி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2020
00:00

திருச்சி செல்லும் பேருந்தில், சுதாவை பார்த்ததும், ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சரண்யாவுக்கு. கிட்டத்தட்ட, 10 ஆண்டுக்கு மேலாகிறது, அவளை பார்த்து. கல்லுாரியில் இருவரும் நல்ல தோழிகள். திருமணத்திற்கு பின், பெண்கள் நட்பு அத்தனை ஆழமாய் நிலைபெற்று இருப்பதில்லை என்பதற்கு, இவர்கள் ஒரு உதாரணம்.
''சுதா, இவர் தான், என் வீட்டுக்காரர், பரத்,'' என, பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தாள், சரண்யா.
'பீர்' தொப்பையும், 'ஏசி'யில் அளவுக்கு மீறி வெளுத்த முகமுமாய் இருந்த, பரத், அரை மில்லி மீட்டருக்கு புன்னைகைத்து, மீண்டும் தன் நிலைக்குள் புதைந்து கொண்டான்.
ஒரு நொடி, சரண்யாவுக்கு, பழைய நினைவுகள் கண்முன் வந்து வியாபித்தது.
சென்னையில், மத்தியில் இருந்த உயர்தர கல்லுாரியில், வசதியான வீட்டு பிள்ளைகள்தான் பெரும்பாலும் படித்துக் கொண்டிருந்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த, சுதாவுக்கு கல்லுாரியில் இடம் கிடைத்தபோதே, பலர் புருவம் உயர்த்தி பார்த்தனர். அதற்கு காரணம், அவளின் அசாத்திய மதிப்பெண்கள் தான்.
அந்த மூன்று ஆண்டுகளும், சுதா தான், கல்லுாரியை ஆட்சி செய்தாள் என்று சொல்ல வேண்டும். 'விளையாட்டா, இலக்கிய சொற்பொழிவா, பாட்டு போட்டியா... கூப்பிடு, சுதாவை...' என்று, கல்லுாரி முழுக்க, அவள் கொடி தான் பறந்தது.
'அழகிலும், சமூக அந்தஸ்திலும், அவளை விட உயரத்தில் இருந்தும், அவளை முந்த முடியவில்லையே...' என்று, சரண்யாவுக்கு உள்ளூர கொஞ்சம் பொறாமை.
''சொல்லு சுதா, வாழ்க்கை எப்படி போகுது,'' என்றாள், தோழியின் கையோடு கை சேர்த்து.
''ம்... ரொம்ப நல்லா போகுது, சரண்யா. எங்க வீட்டுக்காரர், திருச்சியில, 'ஹார்டுவேர் பிசினஸ்' செய்யிறாரு. பையனுக்கு, 6 வயசு, பொண்ணுக்கு, 4 வயசு. மாமியார் - மாமனார்ன்னு அழகான கூட்டு குடும்பம்,'' என்றாள் புன்னைகையுடன்.
சப்பென்று போக, அவளை நிமிர்ந்து பார்த்தாள், சரண்யா.
''என்ன சுதா, இப்படி சொல்ற... நீ காலேஜ்ல இருந்த லெவலை பார்த்தா, 'மல்டி நேஷனல்' கம்பெனியில், எச்.ஆர்., பதவியில் இருப்ப... அங்கேயே ஏதாவது ஒரு, 'டீம் லீடரை' கட்டிண்டு ஓஹோன்னு இருப்பேன்னு நினைச்சேன்,'' என்றாள் நக்கலாக.
பதில் கூறாமல், அமைதியாக சிரித்தாள், சுதா.
''என் கணவர், 'ப்ரோகிராம் ரைட்டரா' இருக்காரு. என்னைப் பார்த்ததும், வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒத்தக்கால்ல நின்னு கட்டிட்டாரு,'' என, தன் அழகையும், வசதியையும் ஒரு சேர சேர்த்து பேசி பெருமையடித்து கொண்டாள், சரண்யா.
சுதாவின் முகத்தில் துளி வருத்தமோ, கவலையோ இல்லை. அந்த நிலைப்பாடு சரண்யாவின், 'ஈகோ'விற்கு இன்னும் தீ மூட்டியது.
''இவங்க தான், உன் பசங்களா,'' என்றாள், பக்கத்தில் நின்ற, சுதாவின் குழந்தைகளை பார்த்து.
''ஆமா, சரண்யா. எங்க அண்ணனுக்கு, குழந்தை பிறந்திருக்கு. அதைப் பார்க்கத் தான், சென்னை வந்து, திரும்பி போயிட்டு இருக்கேன். கணவருக்கு கொஞ்சம் வேலை இருந்ததால, அவரால வர முடியல,'' என்றாள்.
''என்னை விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது, என் வீட்டுக்காரரால. இப்போ, 'லீவ்' போட முடியாத சூழ்நிலையில், என் கூட திருச்சிக்கு வந்துட்டு இருக்காரு. அங்க ஒரு கல்யாணம் இருக்கு நாளைக்கு,'' என்றாள்.
ஊசி நுழையும் இடத்தில் கூட, சுதாவை மட்டம் தட்ட தவறவில்லை, சரண்யா. ஆனால், இதுக்கெல்லாம் அசையாமல் நின்ற அவளின், 'ஈகோ'வை, நிஜமாகவே பதம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.
''குட்டி, வணக்கம் சொல்லு ஆன்ட்டிக்கு,'' என, பேச்சை மாற்ற எண்ணி, சுதா மடியில் இருந்த மகளை, சரண்யாவின் பக்கமாய் திருப்ப, அந்த குழந்தை இரண்டு கைகளையும் மார்புக்கு நேராய் வைத்து வணக்கம் சொன்னது.
சிரிப்பு வந்தது, சரண்யாவுக்கு. அதேநேரம், அகங்காரத்தில் கணத்திருந்த அவள் மண்டையில், இன்னும் கணம் ஏறியது. அவளின், 6 வயது மகள், மிருதுளா, பிரபல, 'டிவி' சேனல் நடத்தும், 'மியூசிக் காம்படீஷனில்' பாடிக் கொண்டு இருக்கிறாள். இவள் என்னடா என்றால், இப்போது தான் வணக்கம் சொல்ல கற்றுக் கொடுக்கிறாளாக்கும்.
அப்பாவின் அருகில் அமர்ந்து, 'மொபைலில் கேம்' விளையாடிக் கொண்டிருந்த, மிருதுளாவை தன் பக்கமாய் அழைத்தாள். 6 வயதிலேயே, 'அல்ட்ரா மாடனாய்' உடை உடுத்தி, அழகாய் முடி கத்தரித்து, வெண்ணெயில் திரட்டிய பொம்மை போல் இருந்தாள், மிருதுளா.
வாஞ்சையாக அவள் கன்னத்தை தடவினாள், சுதா.
''சுதா, எங்க சொல்லு பார்க்கலாம். இவளை எங்கயாவது பார்த்த மாதிரி இருக்கா,'' என்ற கேள்வியில், கர்வம் தொக்கி நின்றது.
நிறைய யோசித்து, உதடு பிதுக்கினாள், சுதா.
''உன்னை, சின்ன வயசுல பார்த்த மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன்,'' என சொல்ல, இடி இடியென சிரித்தாள், சரண்யா.
''ஐயோ, என்ன சுதா, இவளை தெரியலியா... ஜெம், 'டிவி'யில வர்ற, 'கீதம் சங்கீதம்' நிகழ்ச்சியில் பாடுற குட்டீஸ். இவ, அதுல, 'டாப்!' ஜெயித்தால், 50 லட்சம் ரூபாய் பரிசு... என்ன நீ, இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டேன்னு சொல்ற... உன் வீட்டில், 'டிவி' இருக்கான்றதே எனக்கு சந்தேகமா இருக்கு,'' என்றாள், நமுட்டு சிரிப்பாக.
சுதாவின் முகத்தில் பொறாமையோ, ஆதங்கமோ வரவில்லை. மாறாய் அவளுடன் சேர்ந்து வாய்பொத்தி சிரித்தாள்.
''ஆகா, எப்படி சரண்யா நீ கண்டுபிடிச்சே... 'டிவி' இருக்கு. ஆனா, 'மேக்சிமம்' இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறதில்ல,'' என்றாள், சுதா.
தன் வசதியையும், வாழ்க்கையும் பார்த்து ஆதங்கப்படாமல், அதொன்றும் பெரிசில்லை என்பது போல், அவள் கடந்து போவது தான், சரண்யாவை ஆத்திரப்படுத்தியது.
''மிருது... ஆன்ட்டிக்கு, 'மய்யா மய்யா' பாடி காட்டு,'' என, தனக்கும், சுதாவுக்கும் நடுவில் நிற்க வைத்தாள், சரண்யா.
பல்லவியும், முதல் சரணமும் பாடிக் காண்பித்தாள். பஸ்சின் இரைச்சலில் பாட்டு சரிவர கேட்காவிட்டாலும், கேட்ட வரைக்கும் சிறப்பாக இருந்தது.
கை தட்டி வாழ்த்தினாள், சுதா.
''சொல்லு சுதா, காலேஜ்ல நீ நிறைய பாட்டு போட்டியில் ஜெயிச்சிருக்கேல்ல... என் பொண்ணு, எப்படி பாடறா சொல்லு,'' என்றாள்.
''ரொம்ப அழகா பாடறா... நல்லா வருவா,'' என்றாள் ஆத்மார்த்தமாக.
அதற்குள், சுதாவின் அலைபேசி ஒலித்தது. அவளின், மாமனார் - மாமியார். முக மலர்வுடன் பேசி, மகனிடம் தந்தாள்.
''வணக்கம் பாட்டி... சாப்பிட்டீங்களா... தாத்தா சாப்பிட்டாங்களா... இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவோம். உங்களுக்காக, நிறைய ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம்,'' என்றான், சுதாவின் மகன்.
மறுமுனையில் அவனுக்கு இணக்கமான பதில் வரவே, புன்னகையுடன் அம்மாவிடம் போனை தந்தான். அதற்குள் அவன் கையில் இருந்த சாக்லெட்டை பிடுங்கி, ஜன்னல் வழியாக வெளியே எறிந்தாள், தங்கை.
அவன், அவள் முடியை இழுக்க, அவர்களுக்குள் சண்டை ஆரம்பமானது. அவர்களை சமாதனப்படுத்த, கொஞ்சமாய் அதட்டினாள், சுதா.
''பாப்பா, ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்க... அண்ணன் சாக்லெட்டை பிடுங்கி நீ வெளியில போட்டது தப்புத்தானே... இனி, அப்படி செய்ய மாட்டேன்னு சொல்லு,'' என்றாள்.
அந்த குழந்தையும் அப்படியே செய்தது.
கைப்பையிலிருந்த, 'டிராயிங் நோட்'டையும், கலர் பென்சிலையும் அவர்கள் கையில் தந்தாள்.
''ரெண்டு பேரும் அமைதியா, கலர் அடிக்கணும். பார்க்கலாம், ஊர் போறதுக்குள்ள, நீங்க எத்தனை படத்துக்கு அழகா கலர் அடிக்கிறீங்கன்னு,'' என, இருவரையும் தன் அருகில் அமர வைத்து, மீண்டும் தோழியிடம் பேச ஆரம்பித்தாள்.
''சொல்லு, சரண்யா... எப்படி போகுது வாழ்க்கை?''
''அதெல்லாம் இருக்கட்டும், சுதா. பையனுக்கு, என்ன வயசு?''
''ஆறு வயசு.''
''என் பொண்ணு வயசு தான். ஆனா, நீயென்னவோ, குழந்தைங்க மாதிரி கலர் அடிக்கவும், வணக்கம் சொல்லவும் சொல்லிட்டு இருக்க. காலம் ரொம்ப மாறிட்டு இருக்கு, சுதா... நாம காலேஜ்ல சாதிச்சத, இப்ப பிள்ளைங்க, 6 - 7ம் வகுப்புலயே செய்திடறாங்க...
''இதுக்கு தான், 'டிவி' பார்க்கணும்கிறது. 'காமெடி ஷோ'வ்ல வர்ற குழந்தைங்களோட அறிவும், நடிப்பும், முதிர்ச்சியும் பார்த்தா, எனக்கே பொறாமையா இருக்கு... நீயேன் இப்படி இருக்க,'' என்றாள்.
''வாஸ்தவம் தான், சரண்யா... நாம காலேஜ்ல செஞ்சதை, இப்போ, 6 - 7ம் வகுப்பு பசங்களே செய்திடறாங்க... நல்லவையை மட்டுமில்ல, கெட்டதையும் தான்.
''ஆறாவது படிக்கிற பொண்ணு, காதலிக்கிறா... ஏழாவது படிக்கும்போது, வீட்டை விட்டு ஓடிப் போறா... 15 வயசு பையன், எட்டு வயசு அத்தை பொண்ணை காதலிக்கிறான். அது தப்புன்னு சொன்னா, அத்தையை கொலை செய்றான்...
''யோசிச்சு பாரேன், இதுக்கெல்லாம் யார் காரணம். ஆறு வயசு குழந்தைக்கு, 20 வயசு ஞானமும், திறமையும் வேணும்ன்னு எதிர்பார்க்கிறோம். அந்த ஞானத்தோட, ஊனமும் அடிச்சுட்டு வருதுங்கறதை நாம மறந்திடறோம்...
''நீ சொன்ன எல்லா, 'ஷோ'க்களையும் நானும் பார்த்திருக்கேன். ஐந்து வயது குழந்தை, விதவிதமா, 'மேக் - அப்' போட்டு குத்தாட்டம் போடுறதையும், 5 - 6 வயசு புள்ளைங்க, கணவன் - மனைவியா நடிச்சு, காதல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை புரியாமலே பேசி, கைதட்டல் வாங்குறதையும் பார்த்திருக்கேன்.
''குழந்தைகளுக்கு எது சரின்னு தெரியறதுக்கு முன்பே, ஜெயிக்கறதுக்காக எது செய்தாலும் தப்பில்லைன்னு, கத்து தந்துடறோம். இதை சரி, தப்புன்னு நான் விமர்சனம் பண்ணல, தனிப்பட்ட முறையில எனக்கு அதுல இஷ்டமுமில்ல.
''சில குழந்தைகளுக்கு, இயற்கையாவே திறமை இருக்கலாம். அதை பார்த்து, நம் குழந்தையும் அதுமாதிரி பேர் வாங்கணும்ன்னு அவங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தைகளை குழந்தைகளா வளர்க்கணும்ன்னு ஆசைப்படறேன். குழந்தை பருவத்தை, குழந்தைகளாவே கடக்கட்டும். உலகம் வேகமாவே இயங்கிட்டு போகட்டும்... அதனால் என்ன, நாம நாமளா இருந்தா போதும்ன்னு நம்பறேன்.
''உன் மகள் பாடகியாகிறாள், இன்னொரு குழந்தை, விளையாட்டுல பெரிய ஆளா வருது, இதெல்லாம் எனக்குள்ள எந்த மாற்றத்தையும் தரல. என் குழந்தைகள், குழந்தைகளா அவர்கள் பால்யத்தை கடந்து வர, ஒரு அம்மாவா கைபிடிச்சு நிக்கிறேன்.
''நான் பெரிய ஆள், எனக்கு இந்த வாழ்க்கை பொருத்தமில்லங்கிற எண்ணம், எப்பவும் வந்ததில்ல. என் நிம்மதியும், சந்தோஷமும் நிச்சயம் அடுத்தவங்க பார்வையில் இல்ல,'' என்று கூறி, புன்முறுவல் பூத்தாள், சுதா.
சரண்யாவின் தலை, தன்னால் இறங்கியது. இத்தனை நேரம் ஏதேதோ இல்லையென்று எண்ணி அவளை மட்டம் தட்டி இம்சித்தவளுக்கு, அவளிடம், தன் வாழ்க்கைக்கான நிறைவும், குழந்தை வளர்ப்பு பற்றிய தெளிவும் இருப்பது புரிந்தது, மீண்டும் அவளை வெல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் வரத்தான் செய்தது.

எஸ். பர்வீன் பானு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணா வேதா மறைமலை நகர் சென்னை சுதா ஏழை என்று எந்த இடத்திலும் பதிவாகவில்லை. ஐ.டி யும, ஆங்கில வழியில் பயிலும் குழந்தைகளும் தான் மகிழ்ச்சியின் எல்லை என்று பதிவாகிவிட்ட இளம் பெண்களின் மனநிலைக்கு சவுக்கடி. சுதா திருப்தியாக வாழ்கிறாள் என்பதை சரண்யாவால் நம்ப இயலவில்லை. ஏனெனில் அவள் பார்வையில் திருப்தி என்பது பகட்டில் தான் இருக்கிறது. ஐ.டியில் வேலை செய்பவர்கள் மனைவிகள் மட்டுமே நிம்மதியாக இருப்பது போல இன்று ஒரு தோற்றபிழை இருக்கிறது. இது அவர்களுக்கு நெத்தி அடி. புரிதல் குறை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம்.
Rate this:
Share this comment
Cancel
அருணா வேதா மறைமலை நகர் சென்னை எப்போதும் நல்ல கருத்துக்களை குறை சொல்றதே மேற்படி ஒருத்தருக்கு வேலையாப் போச்சு. கதையை கதையாக கடந்து போகணும். ஹார்டுவேர் பிசினஸ் னா 50 லட்சம் இன்வெஸ்மெண்ட் பண்ணணும், இன்கம் டேக்ஸ் பைல் பண்ணும்ணு விளக்கம் வேற.குழந்தைகளை நல்லது சொல்லிக் கொடுத்து வளர்த்தா ரோபோ வாம்! புரியல சிலரோட மனநிலை. கதை சிறப்பு. அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஜன-202001:47:25 IST Report Abuse
Girija @.V. SRENIVASAN - muscat,ஓமன் முற்றிலும் சரியான கருத்து. கதையின் நாயகி சுதாவின் கணவர் ஹார்டுவேர் கடை நடத்துபவர் ஏழை போன்றே சித்தரிக்கப் பட்டுள்ளது அதிலும் சுதாவின் குழந்தைகள் அவளின் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் ரோபோட் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. எந்த சிறு குழந்தையும் எதிராளியின் மனதை உடனே படிந்துவிடும் ஆனால் அதற்கு சொல்ல தெரியாது, என்னதான் அம்மா சொன்னாலும் அதற்கு மனதிற்கு சரியில்லை என்றால் வணக்கம் சொல்லாது. இது எத்தனை பேர்க்கு தெரியும்? அதுதான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். ஹார்டுவேர் கடை நடத்த குறைந்தது ஐம்பது லட்சம் முதலீடு தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X