ஒளிப்பதிவாளர், அசோக்குமாருடன், சிலுக்குக்கு நல்ல நட்பு இருந்தது. அடிக்கடி அவருக்கு போன் செய்வார். அப்போது, 'நான் வாழவே விரும்பவில்லை; எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை...' என்று, மிக விரக்தியுடன் பேசி, அழுவார்.
சிலுக்குக்கு நம்பிக்கை தருவார், அசோக்குமார். அவரின் வார்த்தைகள், சிலுக்குக்கு ஆறுதலாக இருந்தன.
பல சமயங்களில், சிலுக்குக்கு தைரியம் கொடுத்தவர், வினு சக்கரவர்த்தி. அவர், சிலுக்குக்கு, மன அமைதிக்காக, தியானம் செய்ய கற்றுக் கொடுத்தார். பாண்டிச்சேரி அன்னையிடம் பற்றும், பிரார்த்தனையும் செய்யச் சொன்னார். மணக்குல விநாயகரை கும்பிட வைத்தார்.
'நான், 'ஏசி' கார்ல போறேன். 'ஏசி'லயே வாழறேன். ஆனா, மனசுக்குள்ள புழுக்கம். எப்பவும் மனசுக்குள்ள நெருப்பு எரிஞ்சுகிட்டே இருக்கு. எனக்கு கவர்ச்சி உடை மாட்டிவிட, பல பேரு தயாரா இருக்காங்க; ஆனா, தாலி கட்ட தான், யாரும் தயார் இல்லை...' என்று, வினு சக்கரவர்த்தியிடம், சில சந்தர்ப்பங்களில் மனம் வெடித்து அழுதிருக்கிறார்.
சிலுக்குக்கு, புகழ் வாய்ந்த வாழ்க்கையை அமைத்து கொடுத்த, வினு சக்கரவர்த்தியால், அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்க முடியவில்லை. விதியின் கைப்பொம்மை ஆனார்.
'நான் இருப்பதே வேஸ்ட்...' என்று சொல்ல ஆரம்பித்தவர், டாக்டருடன் நேரிடுகிற தகராறுகளில், துாக்க மாத்திரைகளை போட்டு, கதவை தாழிட்டு கொள்ள ஆரம்பித்தார்.
சிலுக்கின் தற்கொலை முயற்சிகள், டாக்டரை பாதித்தன. தன் கட்டுப்பாடுகளை அவர் மேலும் இறுக்கினார்; வீட்டு கைதி போல் சிலுக்கை நடத்த ஆரம்பித்தார்.
ஏனோ, இறுதி வரை, அவர் வாழ்வில் தலையிடவில்லை, சிலுக்கை பெற்ற தாயார்; டாக்டரின் தவறுகளை தட்டிக்கேட்கவே இல்லை. இது பற்றிய உறுத்தல் இல்லாமல் இருந்திருக்காது. ஆனாலும், ஒரு தாயாக, தன் மகளுக்கு பக்கபலமாக இருக்க முடியாமல் போனதன் காரணங்களை, அவர் வெளியிட்டதில்லை.
உண்மையில், ஒரு தாய் இருக்க வேண்டிய இடத்தில் தான், டாக்டரை வைத்திருந்தார், சிலுக்கு. தனக்கு பாதுகாவலாக, பக்க பலமாக, ஆதரவாக, அரவணைப்பவராக. ஆனால், டாக்டர் அதற்கு உரியவராக நடந்து கொள்ளவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.
சிலுக்குடன் மிக நீண்ட காலம் பணியாற்றிய நம்பிக்கையான மனிதர்கள், டாக்டரின் கெடுபிடியால் அவரை விட்டு விலக வேண்டியதாயிற்று. சிலுக்கால் அதை தடுக்க இயலவில்லை; தான் தனிமைப்படுத்தப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இப்படிப்பட்ட மிக சிரமமான சூழலில், சிலுக்குக்கு ஆறுதல் அளித்தாள், உத்ரா. 3 வயது குழந்தையான, டாக்டரின் மகன் வயிற்று பேத்தி.
குழந்தை உத்ரா மீது, மிகவும் ஈடுபாடு காட்டினார், சிலுக்கு. தான் பெற்ற குழந்தை போல, உத்ராவை நொடி நேரமும் கீழே விடாமல் கொஞ்சினார்.
குழந்தை உத்ராவுக்கும், சிலுக்கிடம் அன்பிருந்தது. உத்ராவின் தேவைகளை, சிலுக்கே முன் நின்று கவனித்தார். தினமும் பருப்பு சாதம் பிசைந்து, நெய் மணக்க குழந்தைக்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, தன் கூடவே படுக்க வைப்பது என்று, ஒரு தாயாகவே மாறியிருந்தார்.
தன் கடைசி நாட்களிலும் நடிப்பதற்காக மட்டுமே, சினிமாக்காரர்கள் மத்தியில் வந்தார். ஓய்வாக இருந்தபோதும், வேறு எந்த கலை நிகழ்ச்சிகளிலோ, வெற்றி விழாக்களிலோ கலந்துகொள்ளவில்லை. அனேக சினிமாக்காரர்கள், அவரை தொடர்பு கொள்ளவே இயலாதிருந்தது. காரணம், சிலுக்குக்கு, டாக்டர் விதித்திருந்த கட்டுப்பாடுகள்.
ஏவி.எம்., பொன் விழாவையொட்டி, என்றென்றும் ஏவி.எம்., என்ற சினிமா எடுக்கப்பட இருந்தது.
ஏவி.எம்.,ல் அறிமுகமான கலைஞர்கள், அதன் மூலம் ஏற்றம் பெற்றவர்கள் பலர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஏவி.எம்., நிறுவனத்துக்காக, அதை இயக்கினார், எஸ்.பி.முத்துராமன்.
அதற்காக, சிலுக்கின் வீட்டுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது, சரியான விபரங்களோ, நடிப்பதற்கான ஒப்புதலோ அங்கிருந்து, எஸ்.பி.முத்துராமன் படக்குழுவினருக்கு கிடைக்கவே இல்லை.
அந்த நேரத்தில், விஜயசேஷ மஹாலில், வி.ஐ.பி., வீட்டு திருமணத்தில், சிலுக்கை தற்செயலாக சந்தித்தார், எஸ்.பி.முத்துராமன்.
'ஏவி.எம்., பற்றி நீ சொல்ல மாட்டியா, அதற்கு, 'கால்ஷீட்' கொடுக்க மாட்டியா...' என்று, நேரடியாகவே கேட்டு விட்டார்.
தன் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியை மறைக்க தோன்றாமல், 'சார், நீங்க எப்ப, 'கான்டாக்ட்' பண்ணீங்க... எனக்கு தெரியவே தெரியாதே... எங்கிட்ட யாரும் சொல்லவே இல்லையே...' என்றார்.
அவர் பொய் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டார், எஸ்.பி.முத்துராமன். சிலுக்கு குறித்து பல வதந்திகள் பரவியபோதும், அது குறித்து எதுவும் கேட்டு, அவரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கவில்லை.
சிலுக்கின் அவஸ்தை அவருக்கு புரிந்தது. தன் கஷ்டங்களை அனைவரிடமும் சொல்லி, டாக்டரை துாற்றாத நல்ல மனுஷி என்று பட்டது.
'அடுத்த வாரம், படப்பிடிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க, சார்... புலியூர் சரோஜா அக்காவையும் அன்னிக்கு எங்கூட அவசியம், 'பிக்ஸ்' பண்ணுங்க... அன்று முழுவதும் நம், 'யூனிட்'ல அனைவரும் சந்தோஷமா இருப்போம்...' என்றார்.
'கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறேன்...' என்று கூறி, சந்தோஷத்துடன் புறப்பட்டு போனார், எஸ்.பி.முத்துராமன்.
அந்த படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போனது.
அன்று ஞாயிற்றுக்கிழமை -
சிலுக்குடன், அவர் அம்மா நரசம்மா இருந்தார். அன்றைய இரவு உணவை, சிலுக்கே சமைத்தார். சமைத்ததோடு மட்டுமின்றி, அனைவருக்கும் பரிமாறினார்.
கூட்டு, பொரியல், முட்டை குழம்பு. மகள் கையால் சமைத்த உணவை, மிக விரும்பி சாப்பிட்டார், நரசம்மா. தன், 'டச் - அப்' பாய், ராமகிருஷ்ணா உட்பட, வீட்டு வேலைக்காரர்கள் அனைவருமே, சிலுக்கின் கை மணத்தில் வயிறார உண்டனர். சிலுக்கிடம் விடைபெற்று, ஊருக்கு கிளம்பினார், நரசம்மா.
— தொடரும்.
பா. தீனதயாளன்