வேப்பம் பூவிலும் தேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
00:00

மெட்ராசுக்கு போவதென்றாலே, நிலவேம்பு கஷாயம் குடிப்பது போல, சிரமமாக இருக்கும், ரேவதிக்கு.
சென்னை என்று பெயர் மாற்றம் செய்து விட்டாலும், அவள் மனதில் என்னவோ, மெட்ராஸ் என்ற பெயர் தான் நிலைத்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி தான், ரேவதியின் சொந்த ஊர். காலையில் எழுந்த உடன், தன் சேக்காளி உடன் ஆற்றில் குளித்து, பள்ளிக்கு போய், சாயங்காலம் மறுபடியும் அவர்களுடன் ஆட்டம் போட்டு வரும் கிராம வாழ்க்கையை மட்டுமே அனுபவித்தவள்.
கல்லுாரி படிக்கும்போதும், பட்டணத்துக்கு போய்
படிக்க வேண்டிய
சூழ்நிலை வரவில்லை. பக்கத்தில், அம்பையில் இருக்கும், பரம கல்யாணி கல்லுாரியிலேயே டிகிரியும் முடித்தாள்.
முதல் முறையாக, ஒரு தேர்வு எழுத மெட்ராசுக்கு போனாள், ரேவதி. அவள் பார்த்த சினிமாவில் எல்லாம், மெட்ராஸ்காரங்க என்றாலே ஏமாத்துக்காரங்க, பணத்துக்காக எதையும் பண்ணுவாங்கங்கிற நினைப்பை ஏற்படுத்தி வைத்திருந்ததால், மெட்ராசுக்கு போகணும் என்ற எண்ணமே, அவளுக்கு வேப்பங்காயாக இருந்தது.
எல்லாரும் மெட்ராசுக்கு போயி, 'மெரினா பீச்சை பார்த்தோம், வள்ளுவர் கோட்டம் பார்த்தோம், சினிமா ஷூட்டிங் பார்த்தோம், அந்த நடிகரை பார்த்தோம், இந்த நடிகரை பார்த்தோம்'ன்னு சொன்னாலும், இவளுக்கு மட்டும் மெட்ராஸ் பிடிக்கவில்லை.
ஆனால், இந்த தேர்வை, மெட்ராஸ்
போய் தான் எழுதணும்... தமிழகத்தில் வேறு மையம் கிடையாது. திருவனந்தபுரமோ, பெங்களூரோ தான் போகணும். பாஷை தெரியாம, அந்நிய மாநிலத்துல போய் திண்டாடுவதற்கு பதிலாக, சென்னையிலேயே எழுதலாம்ன்னு, மெட்ராசை தேர்வு பண்ணியிருந்தாள். அதனால், வேண்டா வெறுப்பாக கிளம்பினாள்.
எழும்பூர் ஸ்டேஷனில், ரயில் நின்றவுடன், ரேவதியும், அவள் அப்பாவும் ஸ்டேஷனை விட்டு வெளியே வர, அவளை சூழ்ந்துகொண்ட ஆட்டோ டிரைவர்களை பார்த்ததும், எரிச்சலாக தான் வந்தது. ஆனால், வேறு வழி இல்லை. எந்த பஸ்சில் ஏறி, எங்கு போய் இறங்க வேண்டும் என்பது தெளிவாக தெரியாததால், ஆட்டோவில் போக வேண்டிய சூழ்நிலை.
ஆட்டோவில் ஏறியதும், ஏதாவது ஒரு லாட்ஜுக்கு போக சொன்னாள். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், பக்கத்தில் இருந்த லாட்ஜுக்கு அழைத்து போய், ''200 ரூபாய் தாம்மா,'' என்றான், ஆட்டோ டிரைவர்.
பற்றிக்கொண்டு வந்தது, ரேவதிக்கு.
இவர்களின் ஊரில், இந்த துாரத்துக்கு வரும் டிரைவர், வெறும், 30 ரூபாய் தான் கேட்பான்.
'நல்லா கொள்ளையடிக்கிறான், பாவி... இப்படி ஏமாத்தி வாங்கற காசை, இவன் நல்லவிதமாவா செலவழிக்க போறான். டாக்டர்கிட்ட கொண்டு போய் தான் குடுப்பான்...' என்று, மனதில் எரிச்சல் பொங்க, முணுமுணுத்தபடியே காசை கொடுத்தாள்.
குளித்து, சாப்பிட்டாள். காலை, 8:00 மணி. தேர்வு, 10:00 மணிக்கு தான். கொஞ்ச நேரம் கழித்து கிளம்பலாமே என நினைத்த போது, ''ஏம்மா... புது எடம், கொஞ்சம் சீக்கிரம் போனா, நிதானமா, உனக்கான தேர்வு அறை எதுன்னு பார்த்து உட்காரலாம். சரியான நேரத்துக்கு போனா, தேர்வு அறையை தேடியே பொழுது போயிடும். சும்மா இங்க உக்காந்து என்ன பண்ண போறோம்,'' என்றார், அப்பா.
''நீங்க சொல்றதும் நியாயம் தான்,''
என்று, மறுபடியும் ஒரு ஆட்டோவை
பிடித்து, தேர்வு எழுத போக வேண்டிய கல்லுாரியை சொன்னாள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வண்டிகளும், ஒரே நாளில் சென்னைக்கு வந்து விட்டதோ என்று நினைக்கும் அளவில், எங்கு பார்த்தாலும், கார், பைக் என, நிறைந்திருந்தது. வண்டியெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எறும்பு போல் ஊர்ந்தது; ஆங்காங்கு ரோட்டில், வேலைக்காக குழி வெட்டிய பள்ளங்கள்; அதனால், கல்யாண ஊர்வலம் போவது போல், அனைத்து வண்டிகளும் மெதுவாக போனது.
அவங்க ஊரில், இந்த மாதிரி அகலமான ரோடும் கிடையாது; இவ்வளவு வண்டியும் கிடையாது. அதனால், சைக்கிளிலேயே போய் விடலாம். ஆனால், இங்கே, காரில் போனாலும், கை வண்டியில் போனாலும், எல்லாரும் மெதுவாக தான் போக வேண்டியிருந்தது; அதைவிட, இந்த ஊரின் புழுக்கம்.
ஊரில் இருக்கும் போது, நெத்தியில் வைக்கும் திருநீறு, சாயங்காலம் வீடு வரும் வரை, கலையாமல் அப்படியே இருக்கும். ஆனால், கிளம்பி அரைமணி நேரம் கூட ஆகவில்லை, புழுக்கத்தில் ஏற்பட்ட எண்ணை பிசுபிசுப்பும், வண்டிகளிலிருந்து வந்த புகை, துாசியும் முகத்தில் பூசியிருந்த பவுடரை மறைத்து விட்டது.
'அச்சச்சோ... மணி, 9:00 ஆயிடுச்சா... சரியான நேரத்துக்கு தேர்வு எழுத போயிடுவோமா...' என்று, மனது படபடக்க ஆரம்பித்தது.
'சும்மாவா சொன்னாங்க... நகரத்திலே இருக்கறதும், நரகத்தில் இருக்கிறதும் ஒண்ணுன்னு. இந்த ஊர்ல எப்படிதான் இருக்காங்களோ... எங்க பார்த்தாலும் 'நசநச'ன்னு கூட்டம். ஒருத்தங்க விடுற மூச்சை தான், அடுத்தவங்க சுவாசிக்கணுங்கிற மாதிரி நெருக்கமான வீடுங்க...
'ஊருக்குள்ள இருக்கிற மாதிரி தெரியல. ஏதோ சந்தக்கடையில இருக்கற நெருக்கடி. யப்பா, மாசம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், இந்த ஊர்ல நம்மால வேலை பார்க்க முடியாதுப்பா...' என்று சலித்து கொண்டிருக்கும்போதே, தேர்வு எழுத வேண்டிய கல்லுாரிக்கு வந்தது, ஆட்டோ.
இறங்கி, தேர்வு அறையை தேடி போனாள். 1:00 மணிக்கெல்லாம் தேர்வு முடிந்தது. சாயங்காலம் தான் ரயில். பக்கத்திலேயே மெரினா பீச், அண்ணாதுரை மற்றும்
எம்.ஜி.ஆர்., சமாதி பார்க்கலாம் என, அவள் அப்பா ஆசைப்பட்டதால், பார்க்க கிளம்பினர்.
உலகின் இரண்டாவது கடற்கரையை பார்த்த, ரேவதி, நொந்து போனாள். 'பீச்' முழுக்க, சாப்பிட்டு வீசியெறிந்த தட்டு, டம்ளர், ஐஸ்கிரீம் கப், பாலிதீன் பை என, குப்பையாக காட்சியளித்தது.
அறைக்கு வந்து பையை எடுத்து, ஊருக்கு திரும்ப, ரயிலில் ஏறி உட்கார்ந்தபோது, ஜெயிலில் இருந்து விடுதலையான கைதியின் மனநிலையில் இருந்தாள், ரேவதி. அன்று மட்டும் ஆட்டோவிற்கு கொடுத்த காசுக்கு, நான்கு முறை ரயிலில், சென்னைக்கு போய் வந்துவிடலாம். அவ்வளவு காசு செலவாகி இருந்தது.
அதன்பின், விளையாட்டாக, ஒரு பத்திரிகைக்கு கதை எழுதி போட, உடனே பிரசுரமாகி விட்டது. அதன்பின் அடிக்கடி கதை எழுத ஆரம்பித்தாள். அதுவும் தேர்வானதா, இல்லையா என்று, ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு அடிக்கடி போன் செய்து விசாரிக்க, அங்குள்ள டெலிபோன் ஆபரேட்டர், தோழி ஆகி விட்டாள்.
என்னதான் நல்லவிதமாக பேசினாலும், மெட்ராசை பற்றி, ரேவதியின் ஆழ் மனதிலிருந்த எண்ணம், ஜாக்கிரதையாகவே பழக சொன்னது.
திடீரென்று ஒரு பத்திரிகை அலுவலகத்திலிருந்து, அவளது கதை, முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடக்க இருப்பதாகவும், நேரில் வந்து பரிசை வாங்கி கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.
'அய்யோ... மறுபடி சென்னைக்கா... என, அவளுக்கு, போகவே பிடிக்கவில்லை. ஆனால், 'இப்போதுதான் எழுத்துலகில் தளிர்நடை போட ஆரம்பித்திருக்கிறாய். இந்நேரத்தில் ரொம்ப பந்தா பண்ணக் கூடாது. விழாவிற்கு போய் வா...' என்று, ஒரு மூத்த எழுத்தாளர் அறிவுரை வழங்க, வேறு வழியின்றி சென்னைக்கு கிளம்பினாள்.
'இம்முறை என் வீட்டில் வந்து தங்க வேண்டும்...' என்று, அந்த டெலிபோன் ஆபரேட்டர், அன்பு கட்டளையிட, 'சரி, போய் தங்கிதான் பார்ப்போமே...' என்று, அவளின், அம்மா, அப்பா, தங்கையுடன் கிளம்பினாள்.

மெட்ராஸ் மனிதர்கள் என்றாலே, சுயநலம் பிடித்தவர்கள். யாருடனும் அன்பாக பழக மாட்டார்கள் என்ற எண்ணத்தை உடைத்தது, அந்த தோழியின் வீடு. போனவுடன், தோழியின் மாமியார் தான், வாசலில் நின்று கொண்டிருந்தார்.
இவர்களை பார்த்தவுடன், ரொம்ப நாள் பழகியவர்களை போல, 'வாங்க, நல்லா இருக்கீங்களா?' என்று வாஞ்சையுடன் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், அன்பாகவும், பாசமாகவும் கவனித்துக் கொண்டனர். அறிமுகமில்லாத புதிய வீட்டில் வந்து தங்கியிருக்கும் நினைப்பே வரவில்லை. நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கியது போல் இருந்தது. அனைவரும் கலகலவென்று பேசி மகிழ்ந்ததில், நேரம் போனதே தெரியவில்லை.
சாயங்காலம் விழாவிற்கு போய் பரிசை வாங்கி வந்த கையோடு, ஊருக்கு கிளம்ப தயாராயினர்.
தோழியின் வீட்டில் உள்ளவர்கள், 'என்ன, வந்த உடனே ஊருக்கு கிளம்புறீங்க... கண்டிப்பா ரெண்டு நாள் தங்கிட்டு தான் போகணும்...' என்று கட்டாயப்படத்தினர். வேறு வழியின்றி, ஊருக்கு போவதை, இரண்டு நாள் தள்ளி வைத்தனர்.
மறுநாள் காலை, 5:00 மணிக்கே இவர்களை எழுப்பி, 'வாங்க, காலையிலே போய், மெரினா, 'பீச்' பார்க்கலாம்... வித்தியாசமான அனுபவமா இருக்கும்...' என்று தோழி சொல்ல, அவர்களுடன், 'பீச்'சுக்கு சென்றனர்.
உண்மையிலேயே, காலையில்,
'பீச்' மிக அழகாக இருந்தது.
நிறைய பிள்ளைகள், மண்ணில் எதையோ தோண்டி, வெள்ளையாக முட்டை மாதிரி எடுத்து பத்திரப்படுத்துவதை பார்த்தாள், ரேவதி.
இவள் பார்வை போகும் திசையை தெரிந்து கொண்ட தோழி, 'வேறு ஒன்றுமில்லை, ஆமை முட்டை. பத்திரமா எடுத்துட்டு போய், 'இன்குபேட்டரில்' பொரிக்க வச்சு, ஆமை குஞ்சுகளை கடல்ல கொண்டு விடுவாங்க.
'இல்லாட்டி, இந்த முட்டைகளை நாய் தின்னுறும். அப்படியே குஞ்சு பொரிச்சாலும், விளக்கு வெளிச்சத்தை பார்த்து, கடல்ன்னு நெனைச்சு, ஆமை குஞ்சுகள் திசை மாறி போயிடும். அத பாதுகாக்க தான் இந்த ஏற்பாடு...' என்றாள்.
'ஆஹா... இங்கேயும் நல்லவங்க இருக்காங்க போலிருக்கே...' என்று நினைத்து கொண்டாள், ரேவதி.
சூரியன் உதயமாகும்போது, மெரினா கடலில் தோன்றும் வர்ண ஜாலங்களை பார்த்து ரசித்தபடியே, வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்து குளிக்கும்போது தான், கழுத்தில் போட்டிருந்த செயின் காணாதது தெரிந்தது, ரேவதிக்கு.
செயின், நான்கு பவுன்; டாலர், ஒரு பவுன். நீளமான மீனில், கண்ணுக்கு, பெரிய சிகப்பு கல் பதித்திருந்தனர். இவளின் மீன் டாலர், கல்லுாரியில் ரொம்ப பிரபலம். வீட்டுக்கு வரும் உறவினர்கள் கூட, அந்த மீன் டாலரை கையில் பிடித்து பார்த்து போவர்.
இன்றைய மதிப்பில், செயின் விலை, 1.5 லட்ச ரூபாய் இருக்கும். அத்துடன், அவளுக்கு, 'சென்டிமென்ட்' ஆக, ரொம்ப ராசியான செயின். அதை காணவில்லை என்றவுடன், ரொம்ப கவலையானது.
'அந்த செயினு எங்கே விழுந்துச்சுன்னு தெரியலையே... எங்க போய் அத தேட... 'பீச்' மணல்ல விழுந்திருந்தா எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்...' என்று நினைத்து கொண்டிருக்கும்போதே, வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.
காலையில் இவர்களை, 'பீச்'சுக்கு அழைத்து போன, ஆட்டோ டிரைவர். அவர் கையில், ரேவதியின் செயின்.
ரேவதிக்கு தலைகால் புரியவில்லை. ஓடி போய், டிரைவர் கையிலிருந்து பிடுங்காத குறையாக செயினை வாங்கி, ''இது, எப்படி உங்க கையில?'' என்றாள்.
''நீங்க, ஆட்டோவில் ஏறும்போதே, உங்க கழுத்தில இருந்த மீன் டாலர் செயின், ரொம்ப நல்லா இருந்துச்சு... எங்க வீட்டு பாப்பாவுக்கும், இந்த மாதிரி ஒரு டாலர் செயின் பண்ணி போட்டா நல்லாயிருக்குமேன்னு, நெனைச்சேன்.
''உங்கள இறக்கி விட்டுட்டு வீட்டுக்கு போனப்ப, 'சீட்' அடியில, இந்த செயின் இருக்கிறத பார்த்தேன். உங்க செயினுன்னு தெரிஞ்சதால எடுத்து வந்தேன்,'' என்றார், ஆட்டோ டிரைவர்.
இந்த செயினை அடிமாட்டு விலைக்கு விற்றாலும், ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால், மனசாட்சியுடன் செயினை திரும்பி கொண்டு வந்துருக்கார். இதுவரை, சென்னை ஆட்டோ டிரைவர்கள் என்றாலே, 'ரொம்ப மோசமானவங்க; புதுசா இங்க வர்றவங்களை ஏமாத்தி, பணம் பறிக்கிறவங்க'ன்னு நெனைச்சுகிட்டு இருந்த எண்ணம், மாற ஆரம்பித்தது.
'இங்கேயும் நல்லவங்க இருக்க தான் செய்றாங்க...' என்று, முதன் முறையாக, சென்னையை பற்றி நல்ல எண்ணம் துளிர்க்க ஆரம்பித்தது, ரேவதிக்கு.

அழகர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-பிப்-202008:57:27 IST Report Abuse
வெண்ணெய் வாசி செண்ணைக்கு வந்தால் குவம் நாற்றமும் , மரியாதை இல்லாத தமிழும் தான் பிரசித்தம். இந்த கதை தலைப்பை பார்த்தவுடன் கதையின் முழு ஓட்டமும் தெரிந்து விட்டது. கதைக்கு ஒவ்வாத கதை தான்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
16-பிப்-202005:58:09 IST Report Abuse
Girija இதற்கும் மெட்ராசுக்கும் என்ன சம்பந்தம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X