மனதின் ஆசைகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2020
00:00

அறையிலிருந்து, ராதாகிருஷ்ணன் வெளியே வர, அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது போல, ''ஏன்ப்பா... உங்களால சும்மா இருக்க முடியாதா?'' என்று கேட்டான், பிரபாகர்.
''அப்படியென்ன செய்தேன்?'' என்றார், ராதாகிருஷ்ணன்.
''என்ன செய்யலை... பக்கத்து வீட்டு காவலாளியிடம், சம்பளத்தை உயர்த்தி கேளு... காவல் மட்டுமில்லை, காய்கறி வாங்க, பசங்களை பள்ளியில் விட, எல்லாத்துக்கும் நீதான் போறேன்னு சொன்னீங்களாமே,'' என்றான்.
''ஆமாம்... உடம்பு முடியாத பெண்டாட்டி, இரண்டு பொம்பளை பிள்ளைகள வச்சுக்கிட்டு சிரமப்படறான்... பாவம்பா அவன்... உழைப்பை வாங்கிட்டு, உரிய ஊதியம் கொடுக்க வேண்டாமா... அதான், கேட்டு பாருன்னேன்,'' என்றார்.
''அடுத்தவங்க விஷயம் நமக்கு வேண்டாம். அந்த காலத்தில், நீங்க பெரிய ஆபீசராக இருந்திருக்கலாம்... அதுக்காக, எல்லாரும் நீங்க சொல்றதைக் கேட்பாங்கன்னு நினைக்க வேண்டாம்,'' என்றான்.
''சரிப்பா... தப்பா எதுவோ சொல்லித் தந்த மாதிரி கோபப்படறே... இப்படி அதட்டிப் பேசற அளவுக்கு, என்ன நடந்து போச்சு... முதலில் சத்தம் போட்டு பேசறதை நிறுத்து... நான், உன்னைப் பெத்தவன்... அதை முதலில் புரிஞ்சுக்க,'' என்றார்.
''சரி... விடுங்க... இனி, அடுத்தவங்க விஷயத்தில் தலையிட மாட்டாரு, மாமா,'' என, மாமனாருக்கு பரிந்தாள், வித்யா.
''ஆமாம்... நான் ஏதோ சின்ன குழந்தை பாரு... இந்த வயசில் என்னை, உங்க கட்டுப்பாட்டில் வச்சுக்கணும்ன்னு நினைக்கிறீங்க... என் இஷ்டத்துக்குத்தான் இருப்பேன்... பேரப் பசங்க கூட என்னை மதிக்கிறதில்லை. 'என்ன, சும்மா செய்தி வேண்டியிருக்கு... 'டிவி'யை, 'ஆப்' பண்ணு தாத்தா'ன்னு, அதட்டறான். இந்த வீட்டில், யாருமே, என்னை மனுஷனா நினைக்கிறதில்லை... வரவர, எனக்கு எதுவுமே பிடிக்கலை,'' என்றார்.
''எதுக்கு மாமா... சின்ன விஷயத்தை பெரிசு பண்றீங்க... பசியா இருப்பதால் தான் கோபம் வருது... சாப்பிட வாங்க,'' என்றாள்.
''ஆமா... வேளாவேளைக்கு சாப்பிட மட்டும் தான் இருக்கேன்... மத்தபடி இந்த வீட்டில், நான் ஒரு செல்லா காசு... இந்த குடும்பத்தை உருவாக்கியவன், நான்... இப்ப, எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி, உன் புருஷன் பார்க்கிறான். அந்த காலத்தில், ஆபீசராக இருந்தவன்... இப்ப வயசு தான் கூடிப் போச்சு... அதை உன் புருஷனுக்கு சொல்லு,'' என்றார்.
''அப்பா... இப்பெல்லாம் தேவையில்லாமல் கோபப்படறீங்க... இதனால், உங்களுக்கும், எங்களுக்கும், 'டென்ஷன்' தான். சொல்றதைப் புரிஞ்சுக்குங்கப்பா,'' என்றான், பிரபாகர்.
''என்னால் இந்த வீட்டில் எந்த பிரச்னையும் வேண்டாம். எனக்கு, 'பென்ஷன்' வருது. அந்தப் பணம் உங்களுக்கு தேவைப்படலை. பேசாம அந்தப் பணத்தை வெச்சு, என்னை ஏதாவது, 'ஹோமில்' சேர்த்துடு. நானும் நிம்மதியா இருப்பேன். நீங்களும் பிரச்னையில்லாமல் இருக்கலாம்,'' என்றார்.
''என்ன மாமா... எதுக்காக இப்படி சொல்றீங்க?'' என, வித்யா பதறினாள்.
''இப்ப என்ன... எங்களோடு இருக்க உங்களுக்கு பிடிக்கலை. அவ்வளவு தானே... சரி, உங்க விருப்பப்படி, நல்ல, 'ஹோமில்' சேர்த்து விடறேன். இரண்டு நாள் பொறுமையா இருங்க,'' என்றான், பிரபாகர்.
மறுநாள் ஆபீசுக்கு கிளம்பிய பிரபாகர், ''அப்பா... நீங்களும் தயாரா இருங்க... போற வழியில் என் நண்பனின் மாமா தங்கியிருக்கிற, 'ஓல்ட் ஏஜ் ஹோம்' இருக்கு. அங்கே, சாயந்திரம் வரை அவரோடு இருங்க. நல்ல வசதிகள் இருக்கு. பிடிச்சிருந்தா அங்கேயே சேர்த்து விடறேன்,'' என்றான்.
''என்னங்க இது... மாமா, விளையாட்டுக்கு சொன்னதை, சீரியஸா எடுத்துக்கிட்டு... வேண்டாங்க,'' என்றாள்.
''இல்லை, வித்யா... அவர் மனசில் அப்படியொரு எண்ணம் வந்தாச்சு, தடுக்க வேண்டாம். கடைசி காலத்தில், அவர் விருப்பப்படி இருக்கட்டும். நாம் தான் அவரை திட்டி, கட்டுப்படுத்தி வச்சிருக்கோம். அவர் பார்வையில், நாம் தப்பானவங்க; அதை மாற்ற முடியாது. அவர் இஷ்டப்படி விட்டுடுவோம்,'' என்றான்.
முதியோர் இல்லம் முன், காரை நிறுத்தினான்.
நண்பனின் மாமா, சண்முகம் வெளியே வந்து, ''வா, பிரபாகர்... இவர் தான் உன் அப்பாவா?'' என, ராதாகிருஷ்ணனை மேலும் கீழுமாக பார்த்தார்.
''வாங்க... ஒருநாள், எங்களோடு இருக்க பிரியப்படறதா, பிரபா போனில் சொன்னான். ஒண்ணும் பிரச்னையில்லை, மேனேஜர்கிட்டே அனுமதி வாங்கிட்டேன். இன்னைக்கு நீங்க என் விருந்தாளி. உள்ளே வாங்க... சரி, பிரபா... நீ கிளம்பு,'' என்றார்.
அப்பா அருகில் வந்தவன், தாழ்ந்த குரலில், ''சொன்னது, ஞாபகம் இருக்குல்லையா... நீங்க இங்கே வரப்போறதா எதுவும் சொல்லலை. சும்மா பார்த்துட்டு போக வர்றாருன்னு சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது தப்பா பேசி, என் மானத்தை வாங்கிடாதீங்க. சாதாரணமா இருங்க, புரியுதா... மாலை, ஆபீஸ் விட்டு வரும்போது வரேன்,'' என்றான்.
'நான் என்ன பேச வேண்டும், பேசக் கூடாது என்பதை கூட, நீ தான் முடிவு செய்ய வேண்டுமா...' என, வந்த கோபத்தை அடக்கிக் கொண்டவர், ''சரி... போயிட்டு வா,'' என்றார்.
''குளிர்சாதன வசதி, 'அட்டாச்சுடு பாத்ரூம்' மற்றும் 'டிவி' என, அறை நல்லா வசதியா இருக்கே... பரவாயில்லையே... பொழுது நல்லா போகும் போலிருக்கு. சார்... உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?'' என்றார், ராதாகிருஷ்ணன்.
''சார்ங்கிற மரியாதை வேண்டாம்... இரண்டு பேருக்கும் ஒரே வயசு தான் இருக்கும்... சகஜமாக பேசலாம்... எனக்கு, இரண்டு பிள்ளைகள். ஒருத்தன், அமெரிக்காவில்; இன்னொருத்தன், லண்டனில் இருக்கான். கல்யாணமாகி, குழந்தை, குடும்பம்ன்னு வசதியா இருக்காங்க,'' என்றார், சண்முகம்.
''பரவாயில்லை... பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டீங்க... கடமை முடிச்சாச்சு... வயசான காலத்தில் நிம்மதியா இருக்கீங்க,'' என்றவர் குரலில், லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது.
''சாதாரண நிலையில் இருந்தவன் தான். கஷ்டப்பட்டு, பிள்ளைகளை படிக்க வச்சேன்... பொண்டாட்டி இறந்த பின், தனிமையில் இருக்க முடியலை. அதான் செலவானாலும் பரவாயில்லைன்னு, வசதி நிறைந்த இந்த இடத்தில் அழைத்து வந்து விட்டுட்டாங்க,'' என்றார், சண்முகம்.
''பிள்ளைகள், அடிக்கடி போனில் பேசுவாங்களா?''
''ம்... நேரம் கிடைக்கும்போது பேசுவாங்க. என்னோட பொழுதுகள் இங்கேன்னு ஆயிடுச்சு. காலையில், கொஞ்ச துாரம், 'வாக்கிங்!' இங்கே இருக்கிறவங்களோடு, கொஞ்ச நேரம் பேச்சு. அப்புறம் சாப்பாடு, 'டிவி' மற்றும் துாக்கம்ன்னு, பொழுது போகுது.
''கொஞ்ச நேரம் பொழுது போக, அதோ, பிள்ளையார் கோவில் இருக்கு; அங்கே போய் உட்கார்ந்திருப்பேன். வாங்க, 'டைனிங் ஹால்' போய், சாப்பிட்ட பின், கோவிலுக்குப் போகலாம்,'' என்று, ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்றார்.
நல்ல காற்றோட்டமான இடம். உள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்தன. 'இதைவிட வயதானவர்களுக்கு என்ன வேண்டும்...' என, நினைத்தபடி அவருடன் நடந்தார்.
பிள்ளையார் கோவில் முன், கண்மூடி கையெடுத்து கும்பிட்டவர், கலங்கும் கண்களை துடைத்தார்.
''என்னாச்சு, சண்முகம்... ஏன் கண் கலங்கறீங்க. உங்களை மாதிரி, வயதான காலத்தில் இப்படியொரு நிம்மதியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்காது. ஏன் வருத்தப்படறீங்க?'' என்றார்.
''இல்லை, ராதாகிருஷ்ணன்... நாங்கெல்லாம் தங்க கூண்டில் அடைக்கப் பட்டிருக்கிறோம். அது தான் உண்மை,'' என்றார்.
''பிறந்தோம், வளர்ந்தோம், போனோம்... இதற்குள் எத்தனை கடமை, பொறுப்புகள்,'' என்றார், ராதாகிருஷ்ணன்.
''உறவுகளோடு வாழற வாழ்க்கை சொர்க்கம். பிள்ளைகளை வளர்க்க எவ்வளவு பாடுபடறோம். வாழ்க்கையின் சந்தோஷமே அதுதான்னு நினைக்கிறோம். அவங்களுக்காக எத்தனையோ கஷ்டங்களை சகிச்சுக்கிறோம். அவங்க வளர்ந்து, பெரியவங்களானதும், அவங்கவங்க வாழ்க்கையை தேடி ஓடும்போது, தனிமைப்படுத்தப் படறோம்...
''வேறு வழியில்லை... இது காலத்தின் கட்டாயம். நான் இங்கே தான் இருக்க முடியும். என் மனசில் எவ்வளவு ஆசைகள் இருக்கு தெரியுமா... நான், கைபிடிச்சு அழைச்சிட்டு போன பிள்ளை, என் கையை பிடிச்சு, 'பார்த்து வாங்கப்பா'ன்னு, சொல்லி அழைச்சுட்டு போகணும்...
''அவனிடம், 'நான் சொல்றதை கேளு'ன்னு, அதட்டி வழி நடத்தினது போல... 'அப்பா, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நான் சொல்றபடி கேளுங்க'ன்னு, என்னை ஒரு குழந்தையாக நினைத்து பிள்ளை அதட்டணும். எல்லாம் தெரிஞ்சும், எதுவும் தெரியாதது போல, என் பிள்ளையின் அரவணைப்பில் வாழணும்...
''என் பேரப் பசங்க கூட இருந்து, அவங்களை பார்த்து ரசிக்கணும். இது எதுவுமே, என் வாழ்க்கையில் கிடைக்க போறதில்லை, ராதாகிருஷ்ணன். இது தான் உண்மை. பிள்ளைகளோடு இருக்க முடியலைங்கிற ஏக்கம், பேரப் பிள்ளைகளை பார்க்க முடியலைங்கிற வருத்தம், மனசு நிறைய இருக்கு...
''என்ன செய்யறது, எங்கே இருந்தாலும், அவங்கெல்லாம் நல்லா இருக்கட்டும். அது மட்டும் தான், இப்ப என் பிரார்த்தனை. பிள்ளைகளின் அருகாமையில் இருக்கிற கொடுப்பினை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அப்படி இருக்கிறவங்க, கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவங்கன்னு சொல்வேன்,'' என்றவர், ''என்ன ராதாகிருஷ்ணன்... வாசலையே பார்க்கறீங்க?'' என்றார்.
''இல்லை... என் பிள்ளை, 6:00 மணிக்கெல்லாம் வந்து அழைச்சிட்டு போறதா சொன்னான். 7:00 மணி ஆச்சு. அதான் பார்த்துட்டு இருக்கேன். என் பேரப் பிள்ளைங்க, 8:00 மணிக்கெல்லாம் துாங்கிடுவாங்க. அதுக்குள்ள அவங்க முகத்தை பார்க்கணும்,'' என்றார்.
மகனின் கட்டுப்பாட்டில் வாழத் தயாராக இருக்கும் ஒரு குழந்தையாய், அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார், ராதாகிருஷ்ணன்.

ஆர். பிரவீணா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
06-மார்ச்-202000:24:48 IST Report Abuse
Girija இயக்குனர் விசு படம் ஒன்று இந்தக்கதை போல் ஏற்கனவே வந்துள்ளதாம் ? ரேடியோ மாமா ? ஹ்ம்ம்
Rate this:
Cancel
N. Santhi - kalpakkam,இந்தியா
02-மார்ச்-202010:37:51 IST Report Abuse
N. Santhi அருமையான கதை. வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
02-மார்ச்-202001:05:22 IST Report Abuse
Prasanna , Abha,Saudi Arabia நல்ல கதை. அருமையான நடை. வேண்டிய அளவு கற்பனை. உங்கள் எழுத்து வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X