மூங்கில் கோட்டை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2020
00:00

ஆனந்தியை மறுபடியும் சந்திப்போம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை, மணிபாரதி. ஆனால், அவன் மனதிலிருந்து, அவள் மறையவில்லை. அவள் மீது கொண்ட காதலும் குறையவில்லை.
ஒரே ஒருமுறையாவது அவளை மீண்டும் பார்க்க மாட்டோமா என்ற தவிப்பு, தணியாத தாகமாக வாட்டி எடுத்தது. அது, இன்று நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
சென்னை, அமைந்தகரையில் இருக்கும், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவராக, அன்று தான் பணியில் சேர்ந்தான், மணிபாரதி. காலை, 7:00 - 11:00 மணி வரை, புறநோயாளிகளை பார்க்கும் நேரம். அதன்பின், சித்த மருத்துவ கல்லுாரியில், மாலை வரை, பேராசிரியர் பணி.
பிரின்சிபால் அறையில், ஆனந்தியை பார்த்ததும், ஆனந்தம். அவனை பார்த்த அவளுக்கும், வியப்பாக இருந்தது. அவளுக்கும், அவன் மீது இன்னும் காதல் இருக்கிறதா என்று கேட்கிறீர்களா... அவன், அவளை காதலித்ததே அவளுக்கு தெரியாது.
இதயம் படம், முரளி போல மெதுவாக, 'மூவ்' பண்ணுவான், மணிபாரதி. அதற்குள் யாரோ முந்திக்கொண்டு, ஆனந்தியை மணந்து கொண்டான். திருமண வாழ்வில் சந்தோஷமாக இருப்பதை, அவள் தோற்றமே காட்டியது.
''என்ன மணி, இங்கேயே வந்துட்டீங்களா?'' என்றாள்.
''ஆமாம், ஆனந்தி... திருச்சி அரசு மருத்துவமனையில், இரண்டு ஆண்டு இருந்தேன். பெற்றோர், இங்கே சூளைமேட்டில் தனியாக இருக்கின்றனர். அதான் மாற்றல் கேட்டு வந்துட்டேன்,'' என, இருவரும் பேசியபடியே நடந்தனர்.
''திருமணம் ஆச்சா?''
''இல்லே!''
''ஏன், யாரையாவது, 'லவ்' பண்றீங்களா... என்ன மணி, இப்படி வெட்கப்படறீங்க. இந்த மாதிரி தயங்கினா, எப்ப உங்க காதலை சொல்வீங்க. அந்த பெண்ணுக்கு எப்படி புரியும். நீங்க யோசிக்கிறதுக்குள்ள, அவளை யாராவது, 'பிரபோஸ்' பண்ணிட்டா?''
''அப்படி தான் ஆச்சு!''
''அட கடவுளே... அவளை மறந்துட்டு, வேற ஒருத்தியை, 'லவ்' பண்ண வேண்டியது தானே!''
''அவளை, மறந்தால் பார்க்கலாம்,'' என்றவன், 'உன்னை மறுபடியும் பார்த்த பிறகு மறக்க முடியுமா...' என, நினைத்துக் கொண்டான்.
சித்த மருத்துவ புறநோயாளிகள் பகுதியில், பெண்களுக்கு, ஆனந்தியும்; ஆண்களுக்கு, மணிபாரதியும் சிகிச்சை பார்க்க ஆரம்பித்தனர்.
இவர்களை தவிர, அங்கு, மேலும் நான்கு டாக்டர்கள் இருந்தனர்.
சேலம், சித்தா கல்லுாரியில் படிக்கும்போது தான், முதல் முறையாக, ஆனந்தியை பார்த்தான், மணிபாரதி. அவள், ஒரு ஆண்டு ஜூனியர். முதல் பார்வையில், அழகாக இருக்கிறாள் என்று மட்டுமே தெரிந்தது. தினமும் பார்த்த பிறகு அவளிடம் பேச ஏங்கினான்.
அவளை ஒருநாள் பார்க்காவிட்டால், மனசு வெறுமையாகும். ஒருவேளை, இதுதான் காதலா என்பதை உணர்வதற்குள், மணந்தால், அவளை தான் என்று, முடிவு செய்தான். அவனிடம், சகஜமாக சிரித்து பேசுவாள், ஆனந்தி. அவனால் தான், தன் காதலை சொல்ல முடியவில்லை. அவள் முந்திக்கொண்டாள்.
'மணி, வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கின்றனர்...'
மனதில் பாரம். அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், 'உங்க படிப்பு?' என்றான்.
'அதை தொடரவும், பிறகு மருத்துவராக பணிபுரியவும் அவர் சம்மதிச்சுட்டார்...'
'மாப்பிள்ளை, என்ன பணி செய்கிறார்?'
'என்ன செய்வாங்க, இன்ஜினியர் தான். பெங்களூரில் வேலை...'
'பகோடா விற்பது கூட, வேலை தான்...'
'அடடா, எனக்கு தெரியலையே...'
'இன்னொருத்தருக்கும் அது தெரியாது...'
'யாருக்கு?'
'பகோடா காதருக்கு...'
சிரித்தாள், ஆனந்தி.
அவள் சிரிப்பில் தன் அழுகையை மறைத்தான், மணிபாரதி.
அவளை, கடைசியாக பார்த்தது, அன்று தான். நான்கு ஆண்டுகள் ஓடி விட்டது.
காலை, 11:00 மணி.
தன் வகுப்பறையில் நுழைந்தான், மணிபாரதி. 15 மாணவியரும், ஐந்து மாணவர்களும் இருந்தனர். சித்தா, முதலாம் ஆண்டு படிப்பவர்கள். அவனை கண்டும் காணாமல் இருந்தனர்.
தொண்டையை செருமி, ''வணக்கம்... நான் உங்க புதிய பேராசிரியர்,'' என்றான்.
''சாரி சார்... உங்களை, மாணவர்ன்னு நினைத்தோம்,'' என்றாள், ஒரு மாணவி.
அவள், வேடிக்கையாக சொன்னாளா தெரியாது; மகிழ்ச்சியாக இருந்தது, மணிபாரதிக்கு.
''நம் கிளாஸ் பசங்களை விட, புரபசர் சூப்பரா இருக்காருடி,'' என்றாள், இன்னொரு மாணவி.
''எப்படியாவது நம்பரை வாங்கு,'' என்றாள், மற்றொருத்தி.
பெரும்பாலான மாணவியர், வெளியூரை சேர்ந்தவர்கள். அதே கல்லுாரி வளாகத்தில், பெண்கள் விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு, வார்டனாக இருந்தாள், ஆனந்தி. ஆனால், எந்தவித கண்டிப்பும் காட்டாமல், மாணவியருடன் தோழியை போல பழகினாள். அந்த அன்பின் காரணமாக, அவர்களும் வரம்பு மீறி போவதில்லை.
மாலை நேரங்களில், பக்கத்திலிருந்த, 'ஸ்கை வாக்'கிற்கு அனைவரும் சேர்ந்தே செல்வர். சாப்பாடு, சினிமா மற்றும் 'ஷாப்பிங்' என்று, ஜாலியாக பொழுது கழியும்.
விடுதியில் சமையலுக்கு, ஆயிஷா என்ற பெண் இருந்தார்; ஆம்பூரை சேர்ந்தவர். வயது, 50 இருக்கும். சைவம், அசைவம் இரண்டிலும் கெட்டிக்காரர். ஆயிஷாவை, 'அம்மா' என்று தான் அழைப்பாள், ஆனந்தி.
சில விஷயங்களை மாணவியரிடம் பேச முடியாது. என்ன இருந்தாலும், அவர்கள் உலகம் அறியாதவர்கள். ஆயிஷாவிடம் மனம் விட்டு பேசுவாள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பெங்களூரில் இருக்கும் கணவன் வீட்டிற்கு சென்று விடுவாள், ஆனந்தி.
அன்று இரவு, துாக்கம் வராமல் மொபைல் போனில் மூழ்கியிருந்த மாணவியரில் சிலர், 'பேஸ்புக்'கில் மணிபாரதியை தேடினர். ஒரு வழியாக கிடைத்து விட்டான். சிலர், 'ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்' அனுப்பினர்.
அதை கவனித்த, ஆனந்தி, ''சார், யாருடைய, 'ரிக்வெஸ்டை'யும் ஏத்துக்க மாட்டார்,'' என்றாள்.
'ஏன், எங்களுக்கு என்ன குறைச்சல்?' என்றனர்.
மவுனமானாள், ஆனந்தி.
'சொல்லுங்க, மேம்... உங்களுக்கு, அவரை முன்னாடியே தெரியுமா?' என கேட்க, அவர்களின் நச்சரிப்பு தாங்காமல், மணிபாரதியின், 'பிளாஷ்பேக்'கை சொன்னாள்.
''ச்... அந்த பெண் துரதிர்ஷ்டசாலி,'' என்றாள், ஒருத்தி.
''சார் தான், கோழை.''
''இங்கேயும் இவரை இப்படியே விட்டால், சரியில்லை. நானே, 'பிரபோஸ்' பண்றேன்,'' என்றாள், இன்னொருத்தி.
''அவர் பதில் சொல்வதற்குள், உன் படிப்பு முடிஞ்சுரும்,'' என்ற ஆனந்தி, ''போதும், பேசாமல் துாங்குங்க,'' என்றாள்.
எல்லா மாணவியரும், 'பெட்ஷீட்'டை போர்த்திக் கொண்டாலும், மொபைலில், 'பிசி'யாக இருக்கின்றனர் என்று தெரியும், ஆனந்திக்கு.
மறுநாள் காலை, மணிபாரதியிடம், ''என்ன, மணி... 'பேஸ்புக்'கில் நிறைய பெண்கள், 'ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்' கொடுத்திருப்பாங்களே,'' என்றாள்.
''உங்களுக்கு எப்படி தெரியும், ஆனந்தி.''
''எல்லாம் என்னோட ஸ்டூடண்ட்ஸ் தான்; ராட்சசிங்க,'' என, சிரித்தபடியே, தன் பணியில் மூழ்கினாள்.
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வெளியே ஒரு இளைஞன் எட்டிப் பார்த்தான். அவனை பார்த்ததும், புரிந்து விட்டது, ஆனந்திக்கு.
டூ - வீலர் மெக்கானிக், சேது. கஞ்சா, பொம்பள ஷோக்கு என்று, எல்லா பழக்கமும் உண்டு. எப்படியோ அவனை காதலித்து விட்டாள், சுமித்ரா. எப்படிதான் ஏமாற்றினானோ, ஏழை மாணவி. எப்படியாவது படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்பட்டாள். சேதுவை பார்த்தால், அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
''சேது, இனி கல்லுாரிக்குள் வராதே; சுமித்ராவை வெளியே அனுப்ப முடியாது. பிரின்சிபாலிடம் சொல்லி, போலீஸ்ல புகார் கொடுத்துருவேன். கெட் அவுட்,'' என்ற ஆனந்தியின் ஆவேசம், மாணவியருக்கு புதிதாய் இருந்தது.
அவளை முறைத்தபடி வெளியேறினான், சேது. அனைவர் முன்பும், சுமித்ராவிற்கு அவமானமாகி விட்டது. தலை குனிந்தவாறு அழுதாள்.
ஆனந்தியும், மணிபாரதியும் சிரித்தபடி பேசுவது எல்லாருக்கும் தெரிந்தது. ஆனந்தி திருமணம் ஆனவள். ஏற்கனவே சேர்ந்து படித்தவர்கள். பழைய நட்பு மீண்டும் துளிர்த்தது என்று நினைத்தனர்.
மாலை வேளைகளில், பல டாக்டர்கள், தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தனர். ஆனால், சூளைமேட்டில் தன் வீட்டில், மாலை, 6:00 - 8:00 மணி வரை, 'டியூஷன்' நடத்தினான், மணிபாரதி. தன்னிடம் படிக்கும் ஏழை மாணவ - மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்தான்; அதில், சுமித்ராவும் ஒருத்தி.
ஒரு மாதத்திற்கு பின், கல்லுாரி சுவர்களின் பல இடங்களில், 'மணிபாரதி லவ்ஸ் ஆனந்தி' என்று கிறுக்கல்கள்.
'படிப்பு சொல்லி கொடுக்கிறவர்களே இப்படி இருந்தால், படிப்பவர் எதிர்காலம் என்னவாகும்?' என, கேள்வி எழுந்தது.
ஆனந்தி, மணிபாரதி இருவரையும் அழைத்தார், பிரின்சிபால்.
''உங்க இருவரையும் நம்பறேன். யார் இதை செஞ்சிருப்பாங்க... உங்களுக்கு, யார் மீதாவது சந்தேகம் இருக்கா?'' என்றார், பிரின்சிபால்.
கண்ணீரை துடைத்தபடி, ''இல்லை சார்,'' என்றாள், ஆனந்தி.
பியூனை அழைத்து, சுவரில் இருந்த கிறுக்கலை அழிக்க சொன்னார்.
''சார்...'' மெதுவாக இழுத்தான், மணிபாரதி.
''சொல்லுங்க, மணி.''
''எனக்கு ஒரு வாரம், 'லீவ்' வேணும்.''
''எதுக்கு?''
''வெளியே எங்கயாவது போயிட்டு வரேன் சார். மனசுக்கு ஆறுதலா இருக்கும்.''
''ஓ.கே., அப்படியே செய்யுங்க. இதையெல்லாம், 'சீரியசா' எடுத்துக்காதீங்க. சீக்கிரமா திரும்பிடுங்க.''
சூட்கேசில் துணிகளை நிரப்பினான், மணிபாரதி.
''திடீர்ன்னு எங்கேய்யா புறப்படறே?'' என்றாள், அம்மா.
''நண்பர்களுடன் சுற்றுலா.''
அழைப்பு மணி சத்தம் கேட்க, கதவை திறந்தான். ஆயிஷா நின்றிருந்தார்.
''உள்ள வாங்கம்மா,'' என அழைத்து, அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான். அவருக்கு டீ போட சமையலறைக்கு சென்றாள், அம்மா.
வகுப்புக்கு செல்ல விரும்பாமல், யாரோ விசும்பும் சத்தம் கேட்டு, விடுதி அறைக்குள் நுழைந்தாள், ஆனந்தி.
''ஹேய், சுமி... என்ன ஆச்சு?''
''சாரி மேம். உங்களுக்கு தெரிஞ்சிருந்தும், நீங்க, சேதுவை காட்டி கொடுக்கலே,'' என்றாள்.
''அதை விடு, அழாதே. ஆனால், மணி சார் தான் பாவம். அவரை நெனச்சாதான் கஷ்டமா இருக்கு,'' என்றாள்.
''மேம், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். சார் வீட்டில், 'டியூஷன்' படிக்கும்போது, அவரின் அறைக்கு சென்று பழைய புத்தகங்கள், டைரியை புரட்டினேன். அப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. நான் தான் அவசரப்பட்டு அதை சேதுவிடம் சொல்லிட்டேன்.''
''என்ன?''
டீ குடித்துக் கொண்டிருந்த, ஆயிஷாவை மவுனமாக பார்த்தான், மணிபாரதி.
அவர்கள் பேசட்டும் என்று நகர்ந்து விட்டாள், அம்மா.
''தம்பி, நீங்க காலேஜில் படிக்கும்போது, யாரை காதலிச்சீங்கன்னு தெரியாது. ஆனால், அதை நினைத்து, ஆனந்தி படும்பாடு எனக்கு தான் தெரியும்.''
''ஏன், அவங்களுக்கு என்ன?''
''ஒரு வருஷம் முன், ஆனந்தியோட கணவர், விபத்தில் இறந்துட்டார்.''
அதை கேட்ட மணிபாரதி, நிலைகுலைந்தான்.
''ஆயிஷாம்மா, என்ன சொல்றீங்க?''
''ஆமாம் தம்பி. அதற்காக விதவை கோலத்தில் வாழ்வது, ஆனந்திக்கு பிடிக்கல. எப்பவும் இருக்கிற மாதிரியே இருந்துட்டு போறேன்னு சொல்லிட்டா. ஆண்கள் மட்டும் மனைவி இறந்து போனா, தங்கள் தோற்றத்தில் ஏதாவது மாற்றத்தை காட்டுறாங்களா, இன்னொரு திருமணம் செஞ்சுக்கதானே அவசரப்படுறாங்க.''
''அப்ப, ஆனந்தி பெங்களூருக்கு போறது?''
''அங்கே, கணவனின் பெற்றோர் இருக்காங்க. கட்டின பொண்டாட்டி இறந்து போனாலே அவளை மறந்து போற ஆண்கள் மத்தியில், காதலியை இன்னும் மறக்காமல் நீங்க வாழறது அவளுக்கு வியப்பாக இருக்கு.''
பதில் சொல்லவில்லை, மணிபாரதி.
''நீங்க விரும்பிய அந்த பெண் யார் என்று தெரியல. ஆனா, இப்ப, ஆனந்தி உங்களை விரும்புறது எனக்கு தெரியும். அதை வெளியே சொல்ல முடியாமல், அவள் போட்ட வேஷமே, அவளுக்கு தடையாக இருக்கு. எப்படி நீங்க உங்க காதலியை இழந்துட்டீங்களோ, அப்படியே இப்ப ஆனந்திக்கும் நடந்து விடுமோன்னு பயமா இருக்கு.''
மகிழ்ச்சியில் தலை சுற்றியது, மணிபாரதிக்கு.
''நீங்க காதலிச்ச பெண்ணாக நினைச்சு, ஆனந்தியை ஏத்துக்குங்க... ப்ளீஸ்,'' என்றாள், ஆயிஷா.
என்ன விந்தை. ஏறக்குறைய அலைகளை போலதான் அவர்களுடைய வாழ்க்கை. ஒரு அலையை இன்னொரு அலை தொட்டு தழுவிடும் தருணத்தில், தரையில் பட்டு பின்னோக்கி இழுத்து சென்று விடும் இயலாமை. ஒரு அலை தேடி தவிக்கிறது; இன்னொரு அலையோ ஓடி ஒளிகிறது. கரையில் ஒரு கண்ணாமூச்சி.
''என்ன சொல்ல வந்தே, சுமி...'' என்றாள், ஆனந்தி.
''மேடம், மணி சார் காதலிச்சது, உங்களை தான்,'' என்று ஒரு வழியாக சொல்லி விட்டாள்.
ஆனந்தியால் தான் நம்ப முடியவில்லை.
''ப்ளீஸ், மேடம்... இம்முறை அவரை இழந்துடாதீங்க. நீங்க, கணவரை இழந்தவர் என்பது எங்களுக்கு தெரியும்; அவருக்கு தெரியாது. இப்ப நீங்க தான், உங்க காதலை சொல்லணும்.''
தன்னை யாரும் நெருங்க கூடாது என்று, தன்னை சுற்றிலும் ஒரு இரும்பு கோட்டையை ஏற்படுத்திக் கொண்ட பிரமையில் இருந்தாள், ஆனந்தி. ஆனால், அது வெறும் மூங்கில் கோட்டை என்பது, அந்த கணம் புரிந்தது. அவள் கட்டியதை, அவளே தான் உடைத்தாக வேண்டும்.
தன் மொபைலை எடுத்து, வெட்கத்துடன், மணிபாரதியை அழைத்தாள், ஆனந்தி.
'பிசி' என்று வந்தது.
அவளை தான், மொபைலில் அழைத்துக் கொண்டிருந்தான், மணிபாரதி.

அப்சல்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்ச்-202002:48:33 IST Report Abuse
Prasanna, Saudi Arabia கதை நல்லா இருக்கு சார். ஆனா நடை கொஞ்சம் smooth ஆ கொண்டு போங்கள். சினிமா மாதிரி டக் டக் என்று சீனை மாதிக்கிட்டே இருக்கறதால follow பண்ண கொஞ்சம் கஷ்பமா இருக்கு. மேலும் இதுபோல் நல்ல கற்பனை வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
23-மார்ச்-202011:12:01 IST Report Abuse
Suresh Kumar அழகான கதை.. கற்பனையை தூண்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
Sivalingam -  ( Posted via: Dinamalar Android App )
22-மார்ச்-202008:47:41 IST Report Abuse
Sivalingam Really I was visualizing the story in my mind, awesome v, good flow
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X