கிருமிகளோடுதான் நாம் இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்து வருகிறோம். அவற்றைத் தாங்கிக் கொள்வதற்கான எதிர்ப்புச் சக்தியை நமது உடல் பெற்றுவிட்டது. கொரோனா வைரஸ் போன்ற புதிய கிருமிகள் நம்மைத் தாக்கும்போதுதான், நோய் ஏற்படுகிறது.
உலகெங்கும் கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல், பரிசோதனை செய்துகொள்வது, வெளியே அதிகம் செல்லாதிருத்தல், கைகழுவுதல் என்று தொடரும் பிரசாரங்கள் அனைத்தும் முக்கியமானவை. இந்த 'பட்டம்' இதழ் முழுவதும், கிருமிகள் பற்றிய செய்திகளே நிரம்பியுள்ளன. கிருமிகள் பற்றி அறிவுப்பூர்வமான தகவல்களைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, நம்மால் அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும்.
ஒவ்வொரு முறையும் கொள்ளை நோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான மாற்று மருந்துகள், சிகிச்சை நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, நம்மை மேம்படுத்தி வந்துள்ளோம். அபாயகரமான பல நோய்களை இன்று முற்றிலும் ஒழித்திருக்கிறோம். உலக அளவில் அறிவியல், மருத்துவ ஆய்வாளர்களின் கடுமையான முயற்சியே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணம்.
சந்தேகமில்லாமல், கொரோனா விஷயத்திலும் அதுதான் நடக்கப் போகிறது. அதற்கு நாம் அறியாமையில் இருந்தும் பீதியில் இருந்தும் விலகியிருக்க வேண்டும். இந்த இதழ் 'பட்டம்' உங்களுக்கு அப்படியோர் நம்பிக்கையை விதைக்கும். அதன்மூலம், நாம் கிருமிகளை 'மோதி மிதித்துவிடலாம்.'