ஒரு செல் என்பது, அதன் மரபுப் பொருளான டி.என்.ஏ. (DNA) அல்லது ஆர்.என்.ஏ. (RNA) பிரதியெடுத்து, செல் பிரிகை நடந்து இனப்பெருக்கம் செய்யத் தேவையான பொருட்களையும் நொதிகளையும் (Enzymes) கொண்டிருக்கும். பெரும்பாலும் இன்னொரு செல்லின் உதவியின்றி அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
ஆனால், ஒரு வைரஸ் என்பது, ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கும் விருந்தாளி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு விடுதியில் நாம் தங்கும்போது நமக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்தால், நாம் கையில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே? அதுபோலத்தான் வைரஸும். அவற்றின் செல்களில் மரபுப்பொருள் பிரதியெடுக்கும் நொதிகள் இருக்காது.
வெறும் மரபுப்பொருள், அதன் மேல் கொழுப்பாலான ஒரு படலம் இருக்கும். சிலசமயம், அதில் ஏதாவது ஒரு புரத அமைப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு செல்லுக்குள் வைரஸ் நுழைந்ததும், அதன் மரபுப் பொருள் பிரதியெடுக்கும் அமைப்பைத் தன் கட்டுக்குள் கொண்டு வரும். அடுத்து, அது தன்னுடைய மரபுப்பொருளை பிரதியெடுக்க வைக்கும்.
அந்தப் பிரதிகள், சிறு வைரஸ்களாக செல்லுக்குள்ளேயே ஒரு தொழிற்சாலையை அமைத்து, கூட்டமாகச் செல்லைக் கிழித்து வெளிவரும். இதுதான் பெரும்பாலான வைரஸ்களின் செயற்பாடு.
சில வகை வைரஸ்கள் செல்லின் மரபுப்பொருளோடு தன்னுடைய மரபுப்பொருளை இணைத்துக் கொண்டு சரியான நேரத்திற்குக் காத்திருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்தும் வைரஸாக மாறி வெளியேறும்.
இதே செயல்முறையைக் கொண்டுதான் அவை மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்களைத் தாக்குகின்றன.