கொரோனா கொள்ளைநோய் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த சில மருத்துவச் சோதனைகள் கையாளப்படுகின்றன. இந்திய அரசின் உத்தரவுப்படி, அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இந்தச் சோதனை செய்யப்படும்.
தற்போது இந்தியா முழுவதுமே, ஐ.சி.எம்.ஆர். உத்தரவுப்படி 'ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்' (Reverse Transcription Polymerase Chain Reaction - RTPCR) என்ற சோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய பல நாடுகளும் RT-PCR சோதனையைச் செய்கின்றன.
என்ன தேவை?
இரத்த மாதிரி
தொண்டையிலிருந்தோ அல்லது மூக்கிலிருந்தோ சளி மாதிரி
Bronchoscope என்னும் கருவி கொண்டு நுரையீரல் மாதிரி
இருமலின்போது வரும் சளியின் மாதிரி
இந்த மாதிரிகள் மருத்துவமனையிலிருந்து இதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள பரிசோதனைக் கூடத்திற்குப் பத்திரமாக எடுத்துச் செல்லப்படும்.
சோதனைகள் இரண்டு வகையானவை. முதல் வகையில் வைரஸ் நம்மைத் தாக்கியிருந்தால், அதனுடைய மரபுப்பொருள் நம் செல்களுக்குள் இருக்கும். அது இருக்கிறதா என்று சோதிக்க முடியும். இரண்டாவது வகையில், வைரஸ் தாக்குதலின்போது, உடலின் நோய் எதிர் மண்டலம், 'ஆன்டிபாடிகளை' (Antibody) எனும் 'நோய் எதிர்ப்புப் பொருளை' உருவாக்கும். அவை, புரதத்தால் ஆனவை என்பதால் அவற்றுக்கான சோதனை மூலமும் அறிய முடியும்.
ஆர்.டி.பி.சி.ஆர். முறை
இந்த முறையில், நாம் பரிசோதனைக் கூடத்தில் கொடுத்த மாதிரிகளின் செல்களில், கொரோனா வைரஸின் மரபுப்பொருள் இருக்கிறதா (அதாவது, வைரஸின் இரைபோ கருவமிலம் எனும் ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid)) என்பது ஆய்வு செய்யப்படும்.
இந்தச் சோதனை, வைரஸின் ஆர்.என்.ஏ. வை டி.என்.ஏ. வாக மாற்றும். அதற்கடுத்து, டி.என்.ஏ. வை, பி.சி.ஆர். (PCR) உபகரணம் என்ற ஒரு பிரத்யேகமான கருவி மூலம் கோடிக்கணக்கான முறை படியெடுப்பார்கள்.
அதாவது, நாம் கொடுக்கும் மாதிரியை முழுவதுமாகப் படித்து, கொரோனா வைரஸின் மரபணு அதில் உள்ளதா, இல்லையா என கண்டறிந்து கூறுவார்கள். ஒருவேளை வைரஸின் மரபுப்பொருள் இருப்பின், அவருக்குத் தொற்று உள்ளது என்பது உறுதியாகும். இந்தச் சோதனையின் முடிவுகள் தெரிய 24 முதல் -72 மணிநேரம் ஆகும்.
நியூக்ளிக் அமிலச் சோதனை
வைரஸின் மரபுப் பொருளுக்கான சோதனையில் மற்றொரு முறை, நியூக்ளிக் அமிலச் சோதனை (Nucleic Acid Testing) என்பதாகும். இதனைச் சுருக்கமாக நேட் (NAT) என அழைக்கிறார்கள்.
இது சோதிக்கப்பட வேண்டியவரின் தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரியில் இருக்கும் நியூக்ளிக் அமிலங்களை, கொரோனா வைரஸில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட மரபுப்பொருளின் நியூக்ளிக் அமிலங்களோடு பொருத்திப் பார்ப்பார்கள்.
நியூக்ளிக் அமிலத்தில் கொரோனா வைரஸின் மரபுப்பொருள் இருந்தால், நோய்த்தொற்று இருக்கிறது என்று பொருள். இம்முறையில் துல்லியம் அதிகம். ஆனால், மிக நவீன தொழில்நுட்பங்களும், மிகச் சுத்தமான மாதிரிகளும் வேண்டும். மேலும் இதற்கு நேரமும் பிடிக்கும்.
சீரம் ஆன்டிபாடி சோதனை
நோய் எதிர்ப்புப் பொருள் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனைக்குப் பெயர், சீரம் ஆன்டிபாடி (Serum Antibody) சோதனை என்பதாகும். வைரஸ் தாக்கிய பின் நம் உடல் ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் வைரஸின் வடிவத்துக்கு ஏற்ப பிரத்யேகமான வடிவம் கொண்டவை. அப்படிக் குறிப்பிட்ட வடிவம் கொண்ட புரதங்களின் இருப்பை, சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
சோதிக்கப்படுபவரின் இரத்த மாதிரியை எடுத்து அதில் இருக்கும் செல்களை எல்லாம் நீக்கிய பின்னர் கிடைக்கும் 'சீரம்' எனும் நீர்ப்பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்படும். இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அதிக நேரம் ஆகும். எனினும் மிக வேகமாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும்.
மேற்கண்ட இரண்டுமே ஆய்வகங்களுக்கு மாதிரிகளை அனுப்பிச் செய்யவேண்டிய சோதனைகள். அதற்கு நேரம் பிடிக்கும்.
அதனால், சோதிக்கப்பட வேண்டியவருக்கு அருகிலேயே பாயிண்ட் ஆஃப் கேர் (Point of Care) என்ற எளிய, சிறிய சோதனைகளை உருவாக்க முடியுமா என்று ஆராய்கிறார்கள்.
இது உடனடியாக முடிவுகளைத் தருவதுடன், ஆய்வகங்களின் வேலைப்பளுவையும் குறைக்கும். ஓரளவுக்கு மருத்துவ அறிவு உள்ள எவராலும் செய்ய முடியும் வகையில் உருவாக்கப்படும். இவை மருத்துவத்தில் பேருதவியாக இருக்கும்.
தகவல்: ஹாலாஸ்யன், ரோகிணி முருகன்