முற்பகல் செய்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
00:00

அரங்கம் நிரம்பி வழிந்தது. கசகசத்த பின் கழுத்தை, புடவை தலைப்பால் துடைத்து, அரங்கத்தின் மூடிய கதவருகே நின்ற அபிராமியை, அங்கிருந்தவர் விரட்டினார்.
''யாரும்மா நீ... இது, பெரிய மனுஷாள் வர்ற இடம். கிளம்பும்மா!''
''அய்யா, என் பேத்தி, டான்சாடுறாய்யா... ஓரமா நின்னு பார்த்துட்டு, உடனே கிளம்பிடுறேன்.''
அவளை ஏறிட்டு பார்த்தார். கசங்கலான புடவை, அதில் ஒட்டியிருந்த மாவு தீற்றல்கள், அள்ளி முடிந்த கூந்தல், கழுத்தில் ஒரு மலிவான சிவப்பு மணி மாலை. முகத்தில் கொஞ்சம் தேஜசும், சவுந்தர்யமும் மீதமிருந்தது. அபிராமியின் நிலைமை புரிந்தது. தன் வயதுக்கு எத்தனை பார்த்தாகி விட்டது.
''மகன் வயிற்று பேத்தியா?''
''ஆமாங்க... அந்த போஸ்டர்ல நடுவில் நிற்கிறாளே, அவதான்!''
''ஹும்... மகனும், மருமகளும் உங்களை விட்டுட்டு கிளம்பிட்டாங்களாக்கும்,'' என்றபடியே கதவை திறந்தார்.
''ரொம்ப நன்றி அய்யா!''
மெதுவாக உள்ளே சென்று, 'அப்பாடா...' என்று நின்றாள்.
பஸ்சுக்கு காசில்லாமல், கோவிலில் வைத்து பார்த்து பழக்கமான மாமியிடம், 20 ரூபாய் கடன் வாங்கி, மிஷினுக்கு போய் கோதுமை மாவை எடுத்து வந்து வைத்து விட்டு, பாதி நடையும், பஸ்சுமாக வந்து சேர்ந்திருந்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். இந்த அரங்கம், மேடை, சூழல் எல்லாமே ஒரு காலத்தில் பெருமிதம் தந்தவை. கணவர் ராமலிங்கம், நல்லாசிரியர் விருது பெற்றதற்கு, பள்ளி நிர்வாகமும், மாணவர்களும் இணைந்து, அவளையும் மேடையேற்றி, மாலை, மரியாதை செய்தது என, பழைய
நினைவுகள் குமிழிட்டன. வியர்த்து, களைத்திருந்த உடலுக்கு அரங்கத்தின், 'ஏசி' இதமாக இருந்தது.
'அவரோடு போச்சு, எல்லாம். அவர் போனதுமே, மருமகள் மேகலா ஒரு தினுசாயிட்டாள். 'பென்ஷன்' வாங்குகிற ஒருநாள் மட்டும் மகன் அருண்மொழிக்கு, அம்மா ஞாபகம் வரும். அந்த, 'பென்ஷனை' கண்ணில் கூட காட்டுவதில்லை. சம்பளம் வாங்காத வேலைக்காரியாக, ம்ஹும்... ஆச்சு நாலு வருஷம்...' உள்ளேயிருந்து கிளம்பிய கேவலை, அப்படியே இழுத்துக் கொண்டாள்.
'இப்போதைக்கு பேத்தியை பார்த்து விட்டால் போதும். ஒரு வாரமாகவே நச்சரிப்பு.
'நீ மட்டும் வரலைன்னா, நான் மேடையில் ஆடாமல் அப்படியே நிப்பேன்...' என்று மிரட்டல் வேறு.
'செய்தாலும் செய்வாள். அப்படியே தாத்தாவின் பிடிவாதம்...' என, கணவனின் நினைப்பில் முகம் கனிந்தது.
வாசலில் பரபரப்பு, அவள் யோசனையை துண்டாடியது. சிறப்பு விருந்தினர் வந்து விட்டார் போலும், 'வீடியோ ப்ளாஷ் லைட்' வெளிச்சம் விழ, கம்பீரமான ஒரு மனிதர் நடந்து வந்தார். புன்னகையை ஏந்தியிருந்தது, முகம்.
'அட... யாரும்மா அது, வழியில... நகரு...' என்று யாரோ கடுப்படிக்க, மலங்க மலங்க நின்றிருந்தவளை, ஒரு கை தள்ளிவிட, நாற்காலியின் முதுகை இறுக பற்றியபடி சமாளித்தாள், அபிராமி.
அந்த சில கணங்களில், நடுவில் வந்த அந்த மனிதரின் விழிகள், அவள் மீது கூர்மையாக விழுந்து, நிதானமாக நகர்ந்தது. உடலும், மனசும் குன்றியது, அபிராமிக்கு. அதற்குள் கூட்டம் மேடையை அடைய, பெருமூச்சுடன் சுவரோரமாய் நகர்ந்தாள்.
மேடையிலிருந்த மனிதர், தனக்கு பின் நின்றிருந்தவர் காதில் ஏதோ கூற, அவர், சரேலென்று மேடையை விட்டு இறங்கி, கும்பலில் நீந்தி, அவள் முன் வந்து நின்றார்.
''கமிஷனர் அய்யா, உங்களை கூப்பிடுறார்.''
''எ... என்னையா... எதுக்குங்க?''
''தெரியலை, வாங்கம்மா,'' என்று, வலுகட்டாயமாக இழுத்து போகாத குறையாக, கூட்டத்தில் வழி ஏற்படுத்தியபடி சென்றார்.
புடவை தலைப்பை, முதுகு வழியே தோள் வரை சுற்றி பின் தொடர்ந்தவள், ஊசியாய் குத்துகிற பார்வைகளை தாங்க மாட்டாதவளாய் தலை குனிந்து கொண்டாள். பயமும், தயக்கமும் கால்களை பின்னுக்கு இழுத்தன.
'வந்திருக்க கூடாதோ, தப்பு செய்துட்டோமோ...' மனசு அலைபாய்ந்தது.
பேத்தி, நிரோஷிணியின் நாட்டிய பள்ளி ஆண்டு விழாவும், நாலைந்து குழந்தைகளின் அரங்கேற்றமும்.
'பேத்திக்காக, அவள் ஆசைக்காகவென வந்தது. கடவுளே, மேகலா கண்ணில் பட்டால், காய்ச்சி எடுத்து விடுவாளே...' தலை மேலும் குனிந்தது.
மேடையை நெருங்க, அங்கிருந்து இறங்கி வந்து, இவளை வணங்கி, கை கொடுத்து, மேடையின் மையத்துக்கு அழைத்து போனார், கமிஷனர்.
குழப்பமும், தயக்கமும் அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.
''அம்மா... என்னை தெரியலையா,'' என கேட்க, அவள் விழித்தாள்.
''நான் தாம்மா, மகுடேஸ்வரன்.''
''மகுடேஸ்வரனா... சார், நீங்க தப்பா... எனக்கு உங்களை தெரியலையே.''
''அம்மா... நீங்க, ராமலிங்கம் சாரோட சம்சாரம் தானே. பூங்குடி டவுன்ல ஆசிரியரா இருந்தாரே... அவர்கிட்ட படிச்ச மாணவன்மா. ஒரு நிமிஷம்,'' என்றவர், இடது கை சட்டையை முழங்கை வரை துாக்க, அதிலிருந்த தீ சுட்ட வடு, அவரை அடையாளம் காட்டியது.
''மகுடேசா நீயா... நல்லாயிருக்கியா,'' என்றாள்.
தாயில்லாத அவனை, அவன் சித்தி, எதற்காகவோ கொள்ளிக்கட்டையால் தேய்க்க, ஒரு வாரம் காய்ச்சலில் கண் திறக்காமல் கிடந்தான். அபிராமி தான் பார்த்துக் கொண்டாள். 'அவனா இது...' கண்ணில் பெருமை மின்னியது.
அவனோ, தனக்கு தரப்பட இருந்த மாலையை அவளுக்கு அணிவித்து, மேடை என்றும் பாராமல், ''என்னை ஆசிர்வதியுங்கம்மா,'' என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிக்க, விதிர்விதிர்த்து போனாள், அபிராமி. அவள் மட்டுமா, அரங்கமே அதிர்ந்து ஸ்தம்பித்தது.
''எழுந்திருப்பா, மகுடேசா... என்ன இது?''
எழுந்தார். ஒலிபெருக்கியில் அவர் தழுதழுத்த குரல் இழைந்து, சபையை நிறைத்தது.
''இவங்க, எங்க ராமலிங்கம் சாரோட மனைவி. என்னை மாதிரி பலருக்கும் அம்மா. இந்த கை, முகம் பார்த்து பசியாற்றிய அன்னபூரணியின் கை. எங்கம்மா இறந்ததுமே, அப்பா வேறு கல்யாணம் செஞ்சுகிட்டார். சித்திக்கு என்னை சுத்தமா பிடிக்கலை. எல்லா வேலையும் செய்ற எனக்கு, சோறு மட்டும் போட மாட்டாங்க.
''ஒருநாள், எங்க சார் தான் இதை கண்டுபிடிச்சு, மதியத்துல வெறுந் தண்ணிய குடிக்கிறேன்னு, எனக்காக தினமும் சாப்பாடு தந்தார். சாயந்திரம் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவார். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை; ஆறாங்கிளாஸ் படிச்ச காலத்திலிருந்து, பள்ளி இறுதி வரை, இவங்க போட்ட சோறு தான்.
''காலேஜ் சேர்த்தது, பணம் கட்டினது எல்லாமே, சார் தான். நிறைய விஷயங்களை, ஒழுக்கத்தை, பண்பை, அன்னத்தோடு சேர்த்து, படிப்பையும் ஊட்டுனாங்க. எனக்கு ஆசான், தெய்வம், அம்மா, அப்பா எல்லாமே இவங்க தான். கல்லுாரி முடிந்ததுமே, 'போலீஸ் டிரெயினிங் போ, பதவியில இருந்து நல்லது பண்ணு...' என்று ஊக்குவித்ததும் அவர் தான்.
''ஐதராபாத்தில், 'டிரெயினிங்' முடிகிற சமயம், இவருடனான தொடர்பு திடீர்னு அறுந்து போச்சு. அப்புறம், வடமாநிலங்களில் தான் தொடர்ந்து வேலை. அப்படியும் சாரை தேடிக்கிட்டே தான் இருந்தேன். அவர் தவறி போயிட்டார்ங்கிற விஷயம் மட்டும் தெரிஞ்சுது. அம்மா, அவர் குடும்பம் பத்தி தெரியலை.
''இப்போ தான் தமிழகத்துல, 'போஸ்டிங்' கிடைச்சது. இன்னிக்கு இந்த விழாவுல அம்மாவையும் பார்த்துட்டேன். எங்க ஆசிரியர் ராமலிங்கம் சாரோட அத்தனை  செயல்களிலும், 'காரியம் யாவினும் கை கொடுத்தே'ன்னு ஒரு வரி வருமே, அதற்கு நிதர்சன உதாரணம், அம்மா தான்.
''அய்யா என்ன செய்தாலும், எத்தனை பிள்ளைகளுக்கு உதவி செய்தாலும், முகம் கோணாம அதை ஊக்குவிச்சதே அம்மாதான்னு சொல்வேன். ஒரு வீட்டின் நல்லது, கெட்டது பெண்ணிடம் இருந்து தான். அம்மா முகம் சுருங்கியிருந்தா, சார் எதையுமே செஞ்சிருக்க முடியாது.
''இவங்க மனசு அமிர்தம். இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா, இந்நேரம் இந்த மகுடேஸ்வரன் இருந்த இடம் புல் முளைச்சு போயிருக்கும்,'' என, தொண்டையை செருமி, கண்ணோர கசிவை துடைத்து கொண்டார்.
அரங்கமே அவர் சொல்லை உள் வாங்கிக் கொண்டிருந்தது. ஒருவிதமான மவுனம், அதிர்வுடன் விரவிக் கிடந்தது. அவருடைய குரல், ஆழப் புதைந்திருக்கும் வினோத நினைவுகளை எல்லாம், அபிராமிக்குள் தட்டி எழுப்பியது.
அவரே தொடர்ந்தார், ''அம்மா, உங்களுக்கு ஒரு பையன் இருக்கணுமே, அருண்குமார் இல்லை அருண்மொழி. சரிதானே, அவர் எப்படி இருக்கிறார்?''
அவர் முடிக்கும் முன், இருவருமே மேடையை அடைந்திருந்தனர். முகமெல்லாம் சிரிப்பு பரவி கிடந்தது, அபிராமி மனதினுள்.
'க்கும்... உங்கப்பாரு வாரி விட்டிருந்த காசை சேர்த்து வெச்சிருந்தா, பங்களாவே கட்டியிருக்கலாம். ஆம்பள பெரும் போக்காயிருந்தாலும், பொம்பள இறுக்கி பிடிக்க வேணாம். துப்பு வேணாம்...' மேகலாவின் குரல் மன இடுக்குகளில் அனிச்சையாய் எதிரொலித்தது.
'எங்கம்மாவுக்கு சமர்த்து பத்தாதுடீ...' அருணின் குழையும் குரல் பக்கவாத்தியமாய் சுழன்றது. இம்சையுடன் தலையை குலுக்கிக் கொண்டாள், அபிராமி.
''சார்... நான் தான் அருண்மொழி. இது என் மனைவி, மேகலா. என் மகள், நிரோஷிணி தான், இந்த விழாவுல நடனமாட போகிறாள்,'' என்று சுயமாக அறிமுகம் செய்து கொண்டான்.
அவர்களை, அவருடைய பார்வை தீட்சண்யமாய் அளந்தது. திரும்பி, அபிராமியை பார்த்தார். அவருடைய கூர்மையான பார்வை, அவர்களை நெளிய வைத்தது. ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை.
''ம்... பை தி பை, அருண்மொழி... இனி, என் அம்மாவை பார்க்க நான் எப்ப வேணும்னாலும் உங்க வீட்டுக்கு வருவேன். வரலாம் தானே,'' என்றார் அழுத்தமாக.
''வா... வாங்க சார்,'' என்றான் சுரத்தேயில்லாமல், அருண்மொழி.
''மிசஸ் மேகலா... உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே... நான் அடிக்கடி வருவேன்.''
''எனக்கு எதுவுமே இல்லை. தாராளமாய் வரலாம்,'' என்றாள், தடுமாறியபடி.நிகழ்ச்சிகள் முடியும் வரை, அபிராமியை அருகிலேயே அமர்த்திக் கொண்டார், மகுடேஸ்வரன்.
'இன்று எத்தனை பெரிய சபையில், இத்தனை பெருமையை எனக்கு தந்துவிட்டு, அவரில்லாமல் போய் விட்டாரே... மகுடேசை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பாரே... தான் வளர்த்த செடி, விருட்சமா நிற்கிறதை பார்த்திருப்பாரே...' என்று, மனதிற்குள் நினைத்தாள், அபிராமி.
நிகழ்ச்சிகள் முடிந்தன.
அபிராமியை கை பிடித்து அழைத்து வந்து, கார் கதவை திறந்து அமர வைத்தார், மகுடேஸ்வரன். அருண்மொழியும், மேகலாவும், கூட்டத்தோடு கூட்டமாக பார்த்தபடி நிற்க, 'சைரன்' வைத்த கார், அபிராமியுடன் புறப்பட்டது.

ஜே. செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-ஏப்-202002:57:17 IST Report Abuse
Manian கிருஷ்ண மூர்த்தி, ஆங்கில பேராசிரியர், நேஷனல் காலேஜு, திருச்சி ஒரு மாதம் உணவளித்து காத்த உத்தமர்.
Rate this:
Cancel
A.Sethupathi - chennai,இந்தியா
06-ஏப்-202009:46:29 IST Report Abuse
A.Sethupathi அருமையான கதை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
05-ஏப்-202020:44:29 IST Report Abuse
Govindaswamy Nagarajan Excellent. My late teacher, Sri R. Duraiswamy Iyengar of Kalyanapuram, Thiruvaiyaru Taluk, Thanjavur District, Tamil Nadu was my first teacher fully responsible for my education in India and professional life in USA. I salute Sellam Jerina and Dinamalar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X