நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (10) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (10)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

அன்றைய சூழலில் மார்க்கெட் இழந்திருந்த, ஜெமினி கணேசன் - சரோஜா தேவி நடித்து வெளிவந்த, பணமா பாசமா படம், 1968ல், தமிழகத்தையே கலக்கியது.
பணமா பாசமா படம் வெளியான அன்று, தமிழ் சினிமாவின் மாமேதைகளான, ஏவி.எம்.,மும், எஸ்.எஸ்.வாசனும், அப்பட இயக்குனர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு போன் செய்தனர். 'மிக மிக உயர்ந்த குடும்ப காவியத்தை படைத்து விட்டீர்கள் என்று, எங்களுக்கு, 'ரிப்போர்ட்' வருகிறது. இப்படம் பெருத்த வசூல் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது...' என்றனர்.
'பணமா பாசமா படத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்...' என்று, தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டார், கே.எஸ்.கோபால கிருஷ்ணன். அந்தளவுக்கு பணத்தை குவித்தது, அந்த படம்.
தாமரை நெஞ்சம் படத்தின் மூலம், கே.பாலசந்தர் - ஜெமினி கணேசன் இணைந்த புதிய கூட்டணி உருவாகியது. அந்த படத்தை பார்த்த அன்றைய முதல்வர், அண்ணாதுரை, 'ஒரு காவியத்தை பார்த்த திருப்தி இருக்கிறது...' என்று கூறினார்.
தாமரை நெஞ்சம் படம், 1968ல், தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு பெற்றது.
ஜோசப் ஆனந்தன் எழுதிய மேடை நாடகம், கே.பாலசந்தரின் கைவண்ணத்தில், இரு கோடுகள் என்ற படமாக உருவானது.
காந்திஜி நுாற்றாண்டு தினமான, அக்., 2, 1969ல், இரு கோடுகள் படம் வெளியானது. இப்படம் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டார், ஜெமினி கணேசன். இழந்த கவுரவத்தை, மீண்டும் பெற்றார்.
தாமரை நெஞ்சம், பூவா தலையா மற்றும் இரு கோடுகள் என்று, ஜெமினி கணேசன் - கே.பாலசந்தர் கூட்டணி, 'ஹாட்ரிக்' வெற்றியை கண்டது. மீண்டும், ஜெமினியின் விஸ்வரூபத்தை கண்டு, திரையுலகமே திகைத்து நின்றது. கே.பி., மூலமாக அடுத்தடுத்து வெற்றியையும், புகழையும் குவித்தார், ஜெமினி.
வெற்றிகரமான செயல்பட்ட, ஜெமினி கணேசன் - கே.பாலசந்தர் கூட்டணிக்கு, பெரிய முற்றுப் புள்ளியை வைத்து விட்டு போனது, நான் அவனில்லை படம்.
ஜெமினிக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன. சமூக படங்களில், 'ஹீரோ'வாக வந்தவர், பக்தி படங்களில் கிடைத்த வேடங்களில் தலை காட்டினார். சொந்த படம் எடுத்து, நஷ்டமாகி, இழந்த பணத்தை மீட்பது எப்படி என்ற சிந்தனையில் காலம் கழித்தார்.
ஒரே காலகட்டத்தில், காதல், சமூக, சரித்திர, புராண, காமெடி படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து, மக்களின் அபிமானத்தை பெற்றார். மிகவும் இயல்பான, மென்மையான நடிப்பின் அணுகுமுறையால், பிற கலைஞர்களிடமிருந்தும் தனித்துவம் பெற்றார்.
அன்றைய தமிழக வாலிபர்களால், காதல் மன்னனாக கொண்டாடப்பட்டார். ஜெமினி கணேசன் படங்களை போட்டி போட்டு ரசித்தனர், தமிழக பெண் ரசிகைகள்.
குட்டி பத்மினியின் தயாரிப்பில், ஜெமினி கணேசன் நடித்த ஒரே, 'டிவி' தொடர், கிருஷ்ணதாசி. ஜெமினி கணேசனுக்கு, அதிக புகழை சம்பாதித்து தந்தது.
அவர் நடித்து, வெளி வந்த கடைசி படம், அடிதடி. 50 வயதை கடந்த, சத்யராஜுக்கு, காதலிக்க யோசனைகள் கூறும் காதல் மன்னனாகவே, தன் நடிப்புலக வாழ்க்கையை வெகு பொருத்தமாக நிறைவு செய்திருந்தார், ஜெமினி கணேசன்.
ஒரு பேட்டியில், ஜெமினி கணேசன் கூறியது:
இன்னைக்கும், சினிமா என்னோட தொழில் என்ற எண்ணம் கிடையாது. சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேனே தவிர, வாய்ப்புக்காக நாயாய், பேயாய் அலைந்ததில்லை.
பக்கா, 'புரொபஷனல் ஆக்டர்' என்ற எண்ணமே மனசுல வரல. விட்டுக் கொடுக்கிற எண்ணம் எனக்கு அதிகம். நான் ஒப்புக்கொண்ட படங்களை விட, மறுத்த படங்கள் மிக அதிகம்.
என் படங்கள் ஓடலேன்னாலும், நான் கவலைப்பட்டதில்லை. எதுக்காக கவலைப்படணும்... கொடைக்கானல் போவேன், பாரின் போவேன், 'கோல்ப்' விளையாடுவேன். படம் ஓடலேன்னா போயிட்டு போறது. 'ஐ டோன்ட் கேர்!' மார்க்கெட் பிடிக்கணும்ன்னு, அனாவசிய ஆசை கிடையாது. சினிமா மார்க்கெட், என்ன எலி பொறி வெச்சு பிடிக்கிறதா...
எனக்கு, நடிப்புல நவரசம் பிடிக்கும்.
வெறும் சண்டை பிடிக்காது. நான் நடிச்ச, ராமு படம், 'லவ் ஸ்டோரி' தான். ஆனா, அதுல அஞ்சு பிரமாதமான, சண்டை இருந்தது.
அதுல நான், கதாநாயகி கே.ஆர்.விஜயாவை தொட்டதே கிடையாது. கடைசி காட்சியில தான், ராமுவாக நடிச்ச பையன், எங்க ரெண்டு பேர் கையையும் சேர்த்து வைப்பான்.
என்னோட ரசிகன், வேறு யாருக்கும் ரசிகன் கிடையாது. எனக்கு போட்டியாக யாரையும் நெனச்சது கிடையாது. எனக்கு போட்டியா என்னையே தான் நினைப்பேன். எனக்கு எப்பவும், மரியாதை வேணும். எனக்கு விரோதின்னு யாருமே கிடையாது.
- என்று கூறியிருந்தார்.

ஜெமினி கணேசனும், சிவாஜியும் சேர்ந்து நடித்த முதல் படம், பெண்ணின் பெருமை. அதன் படப்பிடிப்பு விஜயா ஸ்டுடியோவில் நடந்தது. அங்கு, தென்னை மரங்கள் அதிகம். 'ஷூட்டிங் பிரேக்'கில், சிவாஜி, கைதுப்பாக்கியால், இளநீர் கொத்தை சுடுவார். அது கீழே விழும்; ஆளுக்கொன்றாக சில வினாடிகளில் காலியாகி விடும்.
பராசக்தி படத்தில் நடிப்பதற்கு முன், நடிக்க வாய்ப்புக் கேட்டு ஜெமினி நிறுவனத்திக்கு வந்தார், சிவாஜி.
நடிகர் தேர்வு பிரிவில் இருந்த நான், அவரைப் பற்றி குறிப்பு புத்தகத்தில், அப்போதே, 'களையான முகம், தீர்க்கமான பேசும் கண்கள், எதிர்காலத்தில், இவர் சிறந்த நடிகராக வரமுடியும்...' என்று, எழுதி வைத்தேன்.
'என்ன கணேசு... ஜெமினியிலே, என்னை அளவெடுத்தியே... ஞாபகமிருக்கா... ஹூம்... யார் நினைச்சிருப்பாங்க, நாம ரெண்டு பேரும் நடிகராவோம்... இப்படி சேர்ந்து நடிப்போம்ன்னு...' என்று சொல்வார், சிவாஜி.
முற்றும் —
சபீதா ஜோசப்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X