'அண்ணலின் அரிச்சுவட்டில்' நுாலிலிருந்து: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை, மார்ச் 23, 1931ல், வெள்ளைக்கார அரசு, துாக்கில் போட்டது. அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப, சுபாஷ் சந்திரபோஸ், அபுல்கலாம் ஆசாத், கே.சந்தானம் மற்றும் கே.எம்.முன்ஷி ஆகியோருடன் இன்னும் சிலர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், காந்திஜி இடம்பெற்றால் தான் சரியாக இருக்குமென்று அவரை அணுகினர்.
'யாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறோமோ, அவர்களின் செயல்களோடு ஒத்துப்போய், அதை பின்பற்ற வேண்டும். ஆனால், துாக்கிலிடப்பட்ட மூவர் விஷயத்தில், என்னால் அவ்வாறு போக முடியாது...' என்று சொல்லி, நினைவுச் சின்னம் எழுப்ப அமைக்கப்பட்ட குழுவில், அங்கம் வகிக்க மறுத்து விட்டார், காந்திஜி.
அகில இந்திய காங்கிரஸ் அமைத்த, பகத்சிங் நினைவுச் சின்னக் குழு, செயல்படாமல் போய் விட்டது.
'உலக வினோதங்கள்' நுாலிலிருந்து: சுவீடன் நாட்டில், நன்றி கூறுதல், வெறும் நாகரிக அடையாளம் மட்டுமல்ல, அது, சட்டரீதியாக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நன்றி சொல்லாதவர்களுக்கு, அவர்களுக்கு அளிக்கப்படும் அன்பளிப்புகள் ஏற்கத்தக்கதல்ல என்பதே சட்டம்.
ஒருவர், தனக்கு பிடித்தவருக்கு, 19 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளித்தார். சட்ட விதிமுறைகளின்படி, எல்லா வகையிலும் இது முறையாகவே செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஒரு வழக்கு வந்தபோது, 'இந்த அன்பளிப்பை, நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்...' என்று, கையெழுத்து இடாததால், 'அந்த சொத்து மாற்றத்தை பெற, அவர் தகுதி உள்ளவர் அல்ல...' என்று, தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், அன்பளிப்பை பெற்றவர், இதை பெற்ற பிறகு, 'நன்றியுடன், இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று, சில ஆண்டுகளுக்கு பின், அந்த சொத்து பத்திரத்தில் எழுதி, கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், இவர் கையெழுத்திட்ட சமயத்தில், சொத்தை அன்பளிப்பாக அளித்தவர் இறந்து விட்டிருந்தார்.
எனவே, 'அன்பளிப்பு அளித்தவர், நன்றியை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லாததால், இந்த சொத்து, செல்லாது...' என்று, தீர்ப்பில் கூறியுள்ளது.
சொத்து மாற்ற சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, சுவீடன் நாட்டில், சொத்தை ஒருவருக்கு அன்பளிப்பாக அளித்து எழுதி வைத்தாலும், அதே பத்திரத்திலேயே, அன்பளிப்பு அளித்தவர் முன்னிலையில், 'இதை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்...' என்று, நன்றி தெரிவித்தால் தான், அந்த அன்பளிப்பு சொத்து மாற்றம் செல்லுபடியாகும்.
'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' நுாலிலிருந்து: கவிமணி எழுதிய, 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நுாலில், நீதிமன்ற வளாக நிகழ்வுகளையும், கட்டணங்கள் பற்றியும் நகைச்சுவை பாடல் ஒன்றை படைத்துள்ளார். இதோ:
'கோர்ட்டு பீசு, குமாஸ்தா பீசு, கூடி காபி குடிக்க பீசு, வக்கீல் பீசு, மகமை பீசு, வக்காலத்து வகைக்கொரு பீசு, எழுத பீசு, சொல்ல பீசு, எழுதிய தாளை எடுக்க பீசு, நிற்க பீசு, இருக்க பீசு, நீட்டின கை மடக்க பீசு, பார பீசு, கீர பீசு, கண்டு பீசு, காணா பீசு...' இப்படியாக, என்றென்றைக்கும், பீசு பீசாக பிச்சு எடுக்கும்.
இது, 90 ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றைக்கும் பொருந்துகிறது அல்லவா!
நடுத்தெரு நாராயணன்