அன்புள்ள அம்மாவுக்கு —
பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்; மேலும் படிக்க ஆசை. வயது: 17. என் பெற்றோர் மேலே படிக்க விடாமல், திருமணத்திற்கு வரன் பார்த்து வருகின்றனர். எவ்வளவோ மறுத்தும் கேட்பதாக இல்லை; என்ன செய்வது என்று தெரியவில்லை.
அப்போது, கரூரில் இருந்தோம். எனக்கு, கணக்கு சரியாக வராததால், தனியார், 'டுடோரியல்' பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அங்கு, கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர், மிகவும் அன்பானவர்; சூத்திரங்களை மிக எளிமையாக விளக்குவார். சில பாடங்கள் புரியவில்லை என்றால், வகுப்பு முடிந்த பின் கற்றுத் தருவார்; சிரமங்களை பார்க்க மாட்டார்.
அவரிடம், 'டியூஷன்' படிக்க சென்ற பின், கணிதத்தில், அதிக மதிப்பெண் எடுக்க ஆரம்பித்தேன். அதனால், அந்த ஆசிரியர் மீது கூடுதல் அபிமானம் ஏற்பட்டது. அவரும் என் மீது, தனி அக்கறை செலுத்துவார். சந்தேகம் இருந்தால், எந்த நேரத்திலும் வீட்டிற்கு வந்து கேட்கலாம் என, கூறுவார்.
அந்த உரிமையில், அவர் வீட்டிற்கு சென்று, பாடங்களை கற்று வருவேன். அவருக்கு, குழந்தைகள் இல்லை. அதனால், என்னை மகள் போல பாவிப்பதாக அடிக்கடி கூறுவார்.
ஒருநாள் நான் சென்றபோது, சமையல் அறையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார். மனைவி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறினார். உடனே, நான் சமையலில் உதவுவதாக கூறி, வேலைகளை செய்தேன். அந்த சமயத்தில், திடீரென என்னை கட்டிப்பிடித்து, பாலியல் சீண்டல் செய்தார்.
'நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியரா, இப்படி...' என, அதிர்ச்சி அடைந்தேன். அதிலிருந்து மீள்வதற்குள், பக்கத்து வீட்டு பெண் அங்கு வர, எங்களை பார்த்து அலறி, ஓடினார்.
அப்புறம் என்ன... கூப்பாடு போட்டு, கூட்டத்தை கூட்டி, தலைகுனிய செய்து விட்டார்.
இச்சம்பவத்துக்கு பின், என்னால் பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பை முடிக்க முடியவில்லை. இரவோடு இரவாக வீட்டை காலி செய்து, திருச்சிக்கு வந்தோம்.
அந்த நிகழ்வு குறித்து, பெற்றோரே கதை கட்டி பேசும்போது, மனம் வலிக்கும். என்னை மீண்டும் பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டனர்.
'வீட்டிலேயே படித்து தனி தேர்வு எழுதுகிறேன்...' என்றேன்.
அதற்கும் அனுமதிக்கவில்லை. தற்போது, வீட்டில் அடைத்து, அவசர அவசரமாக வரன் பார்த்து வருகின்றனர்.
எனக்கு பயமாக இருக்கிறது; வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று கூட யோசிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், யாரையும் நம்ப மறுக்கிறது மனம்; கண்ணீருடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க அம்மா!
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளே —
படிக்கும் வயதில், பாலியல் கொடுமைக்கு உள்ளான சோக கதை, என் கண்களை ஈரமாக்கி விட்டது. உன் மீது எந்த தவறும் இல்லாதபோதும், பெண் என்பதால், இந்த சமூகம் உன்னை சந்தேக கண்கொண்டு பார்ப்பது வேதனை அளிக்கிறது. அதை, உன் பெற்றோரும் புரிந்து கொள்ளாமல் இருப்பது கொடுமை.
'அனைவருக்கும் கட்டாய கல்வி' என, அரசு, சட்டம் போட்டாலும், அது, பெற்றோரின் துணையின்றி சாத்தியமில்லை என்பது, உன் விஷயத்தில் வெளிப்பட்டுள்ளது.
கவலைப்படாதே மகளே...
18 வயதிற்கு உட்பட்ட பெண்ணுக்கு, திருமணம் செய்ய, பெற்றோரே முயற்சித்தாலும், சட்டப்படி குற்றம் தான்.
உன்னால் முடிந்த வரை, நியாயத்தை எடுத்துக் கூறி, வாதாடு. படிக்க வேண்டும் என்ற உன் விருப்பத்தை, சளைக்காமல் பெற்றோர் காதில் போட்டபடியே இரு; அத்துடன், உறவினர்களிடம் கூறி, ஆதரவு தேடு.
ஒரு கட்டத்தில், பெற்றோர் மனம் மாறுவர்; நம்பிக்கையுடன் இரு... அவசரப்பட்டு, தவறான முடிவு எதையும் எடுக்காதே. பொறுமையை கடைபிடி.
நிலைமை கைமீறி சென்று, திருமண ஏற்பாடு செய்தால், துணிந்து, மாப்பிள்ளை வீட்டாரிடம், 'விருப்பம் இல்லை' என்று கூறி விடு; அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணில் உள்ள, சிறுவர் உதவி மையத்தின் உதவியை நாடு; கண்டிப்பாக உதவுவர்.
எந்த நிலையிலும், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தை கைவிடாதே; நன்கு படித்து, சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பின், திருமணம் செய்து கொள்.
வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.