சுற்றுலா பயணியரை கவரும் வகையில், உலகிலேயே மிக உயரமான கட்டடம் ஒன்றை வடிவமைத்துள்ளது, துபாய் அரசு. துபாய் மால் உடன் அமைந்துள்ள, 'புர்ஜ் கலீபா' எனும் அக்கட்டடத்தை பார்க்க சென்றோம்.
மொத்தம், 2,717 அடி உயரமும், 160 மாடிகளும் கொண்ட, 'புர்ஜ் கலீபா' கட்டடத்தில், 124 மாடி வரை, பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். சிற்றுண்டி கடை ஒன்றும், பரிசுகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கான கடை ஒன்றும், அந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
'புர்ஜ் கலீபா'வில் மாடிக்கு சென்று பார்வையிட, தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று, எங்களிடம் கூறியிருந்தனர். எல்லாருக்குமே ஆர்வமிருந்ததால், வரிசையில் நின்று, அதற்கான கட்டணத்தை செலுத்தி, பார்வையிட சென்றோம்.
ஒரு வினாடிக்கு ஒரு மாடி என்ற அளவில், அசுர வேகத்தில் கடக்கும், 'லிப்ட்'டில், ஏறிய இரண்டாவது நிமிடத்தில், உலகின் மிக உயரமான, 'புர்ஜ் கலீபா' கோபுரத்தின், 124வது தளத்தில் இறக்கி விடப்பட்டோம்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி சுவர்கள் வழியாக, துபாய் நகரம் முழுவதும் தெரிந்தது. பகலில் விமான பயணம் செய்யும்போது, வானிலிருந்து பார்த்தால், எப்படி தெரியுமோ, அதே போன்ற தோற்றத்தில் இருந்தது.
கண்ணாடி சுவர்களின் அருகில் நின்று, துபாய் நகரின் கட்டடங்கள் தெரியும் வகையில், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
'புர்ஜ் கலீபா'வை பார்த்து முடித்த பின், அதனோடு இணைந்திருந்த துபாய் வணிக வளாகத்தில், 'ஷாப்பிங்' செய்தோம். வழக்கம்போல, நானும், வெங்கடாசலமும், 'விண்டோ ஷாப்பிங்' மட்டும் தான்.
துபாயை சுற்றி பார்க்கவும், அதன் வரலாறு, தற்போதைய வளர்ச்சி மற்றும் இன்றைய துபாயின் கலாசாரம் பற்றி அறிந்து கொள்ள வந்திருந்ததால், பெரும்பாலும், 'ஷாப்பிங்' செய்வதை தவிர்த்தேன்.
அதன்பின், 'ஸ்பைஸ் சவுக்' எனுமிடத்தில் அமைந்திருந்த, துபாயின் பிரபலமான பேரீச்சை சந்தை மற்றும் 'கோல்ட் சவுக்' எனுமிடத்தில் அமைந்திருந்த தங்க நகை கடைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பேரீச்சை சந்தையில் சிறியதும், பெரியதுமான பல அளவுகளில் பேரீச்சை பழங்கள் கிடைத்தன. மேலும், உலர் பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவை விற்பனைக்கு இருந்தன. சாக்லெட்டில் பதிக்கப்பட்ட பேரீச்சைகளும் அங்கே கிடைத்தன. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவற்றை வாங்கிக் கொண்டோம்.
'கோல்ட் சவுக்'கில், நிறைய தங்க ஆபரண கடைகள் அமைந்துள்ளன. துபாயில், தங்கத்தின் தரம், அரசால் கண்காணிக்கப்படுகிறது. எனவே, எல்லா கடைகளிலும் தரமான தங்கம், கிட்டத்தட்ட நம் ஊர் விலையிலேயே கிடைக்கிறது. நினைவு பொருட்களாக ஒரு சில கிராம் தங்கத்தை வாங்கி வருவதில் தவறில்லை.
எங்கள் குழுவில், சிலர், மோதிரம், பிரேஸ்லெட் போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டனர். நம் ஊரை போல, தங்க நகைகளுக்கு சேதாரம் கணக்கிடப் படுவதில்லை. என்றாலும், அதற்கு பதில், செய்கூலி என, ஒரு தொகையை வசூலித்து விடுகின்றனர்.
வாங்கிய தங்கத்திற்கான, ரசீதை, விமான நிலையத்தில், அதற்கான உதவி மையத்தில் காட்டினால், தங்க ஆபரணங்களுக்காக நாம் செலுத்திய வரியை, 10 நாட்களில், நம் வங்கி கணக்கிற்கு, துபாய் அரசு அனுப்பி விடுகிறது.
எங்கள் சுற்றுலாவை முடித்து, இந்தியா திரும்பும் நேரம் வந்தது. ஷார்ஜாவிலிருந்து, இரவு, 9:40 மணிக்கு விமானம் என்பதால், துபாயிலிருந்து வேன் மூலம் புறப்பட்டோம்.
வழக்கத்திலிருந்து மாறுபட்டு, புதிய இடம், சூழ்நிலை மற்றும் தட்பவெப்பத்தில் நான்கு நாட்களை கழித்தது மனதிற்கு இதமாக இருந்தது.
வாழ்வியல் ஒழுங்கையும், தனிமனித ஒழுக்கத்தையும் மையப்படுத்தி, அங்கே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதே சமயம், அவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, கடுமையான தண்டனைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அரபு நாடுகளில், வணிக வளாகம், விமான நிலையம், உணவகம் மற்றும் தங்கும் விடுதிகளில், விற்பனையாளர்களாக, வாகன ஓட்டுனர்களாக, மெக்கானிக்குகளாக, கூலி தொழிலாளர்களாக, செக்யூரிட்டிகளாக, கழிப்பறை சுத்தம் செய்பவர்களாக கூட பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர், நிறைய இந்தியர்கள். கட்டட தொழிலாளர்களாகவும் பலர் பணிபுரிகின்றனர்.
வாழ்வாதாரத்திற்காக, குடும்பத்தை பிரிந்து, வெளிநாட்டில் வந்து வேலை செய்யும் நம் சகோதரர்களை நினைத்து பார்க்கையில், ஒருபுறம் மனதுக்கு பாரமாக இருந்தது.
இப்படிப்பட்ட, இதமும், பாரமுமான ஒரு கலவையான உணர்வுடன், இந்தியாவுக்கு திரும்பி வந்தேன்.
நான்கு நாட்கள், நாடு சுற்றி விட்டு, வீட்டிற்கு வந்து, நான் வழக்கமாய் படுக்கும் கட்டிலில் தலை சாய்த்தபோது, ஒரு நிம்மதி வந்தது பாருங்கள், அதற்கு ஈடு இணை ஏதுமில்லை.
கண்ட இடத்திலும், சாலையை கடப்பது, அரபு நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும். துபாயில், சாலை விதிகளை மீறுவோருக்கு, அவர்கள், வெளிநாட்டினராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது
வாகன ஓட்டிகளை போலவே, சாலையோரங்களில் நடப்பவர்களும், சாலை விதிகளை மிக கவனமாக பின்பற்றுகின்றனர். சாலையோர நடைபாதையில் நடப்பவர்கள், 'ஜீப்ரா கிராசிங்' பகுதிகளில் மட்டுமே, சாலைகளை கடக்கின்றனர்
சட்டங்களும், சட்ட மீறல்களுக்கான தண்டனைகளும், மிக கடுமையாக இருப்பதே, மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என, நினைத்துக் கொண்டேன்.
— முற்றும்
ஜே.டி.ஆர்.,