உணர்வுகள் ஒன்றானால்... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உணர்வுகள் ஒன்றானால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மே
2020
00:00

வழக்கம் போல், 'வாக்கிங்' முடித்து, பேப்பரும், பால் பாக்கெட்டுமாய், வீட்டினுள் நுழைந்தார், பரசுராம்.
குடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எதிர் கொண்டு பாலை வாங்கிய, மருமகள் உமா, ''மாமா... தண்ணி வந்திடுச்சு, ஆண்டாளம்மா பிடிச்சதும், நாம பிடிக்கணும்... இந்த குடங்களில் புடிச்சு வைங்க,'' என்றாள்.
கைலியை துாக்கி கட்டியபடி, கைக்கு இரண்டு குடங்களுடன் விரைந்தார், பரசுராம். வயது, 70. சற்றே ஒல்லியான தேகம். பிரபல தனியார் கம்பெனி ஒன்றில், கணக்காளராக இருந்த சமயம், திடீரென பக்கவாதத்தில் மனைவி விழுந்ததும், குடும்பத்திற்கே சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

வீட்டையும், மனைவி, மக்களை கவனிக்கும் பொறுப்பு, பரசுராமுக்கு வந்தது. 40 ஆண்டு கால வேலைக்கு, முழுக்கு போட்டார். வயோதிகத்தால், பரசுராமனால் சரியாக கவனிக்க முடியாததால், கல்லுாரி படிப்பை முடித்த, மகள் விமலா, வீட்டிலும்; மகன் ரவி, பிரபல பனியன் கம்பெனியில், சூப்பர்வைசராகவும் வேலை பார்த்தனர்.
நாளுக்கு நாள், மனைவியின் உடல்நிலை மோசமாகி, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
'பரசு... சம்சாரம் இருக்கும்போதே, பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சுடுப்பா. அவளும் கண்ணார பார்த்துட்டு, சந்தோஷமா கண் மூடட்டும்.
'முதல்ல, ரவிக்கு கல்யாணம் முடிச்சு, வீட்டுக்கு ஒரு பொண்ணை அழைத்து வந்துடு. அப்புறம், உன் மனைவியின் அண்ணன் மகனுக்கு, விமலாவை கட்டிக் கொடுத்துட்டு, நீயும் நிம்மதியா இரு...' என்றனர், உறவினர்கள். அவர்களின் நச்சரிப்பால், ரவி, விமலா, திருமணம் இனிதே முடிந்தது.
உறவினர்கள் சொன்னது போல, அதுவரை உயிரை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த பரசுராமின் மனைவி, திடீரென்று ஒருநாள், உயிரைக் கொடுத்து, கணக்கை முடித்துக் கொண்டாள்.
ரவி மனைவி உமா, பட்டதாரி. ஓரளவு வசதியான குடும்பம். ஒரே பிரசவத்தில் வினய், விக்னேஷ் என, இரண்டு ஆண் குழந்தைகளுக்கு, தாய். தற்போது, தனியார் கம்பெனியில், உதவி கணக்காளராக வேலை பார்க்கிறாள்.

''அய்யா... இன்னிக்கு ஊர்லேர்ந்து, மகள் விமலா வர்றதா, உமா சொன்னாளே.''
''ஆமா... இன்னியிலிருந்து, பேத்திக்கு, நாலு நாள், பள்ளி விடுமுறை. 10:00 மணிக்கு வருவா.''
''சரி... வந்ததும், வீட்டுக்கு வரச் சொல்லுங்கய்யா,'' என்றபடியே, குடத்தை இடுப்பில் வைத்து நடந்தாள், ஆண்டாள். வயது, 40. அந்த வீதியின் அத்தனை வீட்டு விஷயங்களும் அவளுக்கு அத்துபடி.
திருச்சியில், ஒரு அப்பார்ட்மென்ட்டில், கணவர், ஐந்து வயது மகளுடன் வசிக்கிறாள், விமலா. கணவன், சொந்தமாக வைத்திருக்கும் அலுவலகத்தில், அவனுக்கு உதவியாக, 'டைப்பிங்' வேலை செய்கிறாள். மகளின், பள்ளி விடுமுறையில், தாய் வீடு வருவாள்.
குடங்களை நிரப்பி வைத்து நிமிர்ந்த போது, ''நான், தண்ணி பிடிக்கிறேன். காபி கலந்து வெச்சிருக்கேன்; குடிச்சுட்டு, பசங்களை சாப்பிட வெச்சு, ஸ்கூலுக்கு தயார் பண்ணிடுங்க... இன்னைக்கு, 'ஒயிட் அன்ட் ஒயிட்' மாமா,'' என்றாள், உமா.

அடுத்த அரைமணி நேரத்தில், குழந்தைகளை கிளப்பி, பள்ளி வேனில் ஏற்றி, வீட்டுக்குள் நுழைந்தார், பரசுராம். அப்போது, வேலைகளை முடித்து, அலுவலகம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள், உமா.
அவர் மனதில், தான் சொல்லப் போகும் ஒரு விஷயத்திற்கு, உமா சம்மதம் தர வேண்டுமே என்ற தவிப்பு.
''மாமா... சாயந்தரம், அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பு இருக்கு. வர தாமதமாகும். குழந்தைகளுக்கு, 'ஸ்நாக்ஸ்' வச்சிருக்கேன்... 'ஹோம் ஒர்க்' நிறைய இருக்கு, சொல்லிக் கொடுத்து, எழுத வைங்க... விமலா வந்தா, மதியம் சாப்பாடு செய்ய சொல்லி சாப்பிடுங்க... தோசை மாவும், சாம்பாரும் இருக்கு...
''எது வேணுமோ செய்துக்கங்க... அப்புறம், இன்னிக்கு ரேஷன்லே அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம் போடறதா, ஆண்டாளம்மா சொன்னாங்க. அலமாரியில, ரேஷன் கார்டு வெச்சிருக்கேன். பொருட்களை வாங்கி, பக்கத்தில் இருக்கிற பாயம்மா கடையிலே வெச்சுடுங்க. 'பங்ஷன்' முடிச்சு வர்றப்போ, நான் எடுத்து வந்துடறேன்,'' என்றாள், உமா.
''உமா... ஒரு நிமிஷம்... இன்னைக்கு, என் பால்ய நண்பனை சந்திச்சேன். அவனும், என்னை மாதிரியே, ரொம்ப வருஷமா உடம்பு வலியிலே கஷ்டப்பட்டானாம்...
''பல டாக்டர்களிடம் பார்த்தும், பிரயோஜனமில்லாம, கடைசியா கண்ணம்பாளையம் நாட்டு வைத்தியர்கிட்டே மருந்து சாப்பிட்டு, இப்போ எந்த பிரச்னையுமில்லாம இருக்கானாம். நானும் ஒரு தடவை அங்கே போயிட்டு வரலாம்ன்னு நெனைக்கிறேன்,'' என்றார்.
''மாமா... போன வாரம்தானே, உங்க மகன், 'லீவு' போட்டு, ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போய், முழு உடல் பரிசோதனை செஞ்சு, 'ப்ரஷர், சுகருக்கு' மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க... எதுக்கு, புதுசா நாட்டு வைத்தியம், நாளைக்கு, உங்க மகன் வந்துடுவார். அவர்கிட்டே கேட்டுக்கங்க... எனக்கு நேரமாச்சு... போயிட்டு வர்றேன்,'' என, கிளம்பினாள்.

ஆட்டோ, மூன்றாவது தெரு முனையில் திரும்பும்போது தான், ரேஷன் கடையில், பொருட்கள் வாங்கி, வெளியே வந்த அப்பாவை கவனித்தாள், விமலா.
ஆட்டோவை அவர் முன் நிறுத்தினாள்.
''வாம்மா... இப்ப தான் வர்றியா... எதுக்கு இங்கே நிறுத்தினே?''
''ப்ரஷர், சுகர் இருக்கிற நீங்க எதுக்கு, ரேஷன் கடைக்கு வந்து சிரமப்பட்டுக் கிட்டிருக்கீங்க... அண்ணி வரலையா?''
''வேலைக்கு போயிருக்கா... எப்பவும் நான் தான் வாங்கி, அந்த பாயம்மா கடையில் வெச்சுடுவேன்... உங்கண்ணி ஆபீஸ் விட்டு வரும்போது, எடுத்து வந்துடுவா.''
''வேண்டாம்பா... ஆட்டோவிலேயே எடுத்துக்கிட்டு போயிடலாம்... ஏறுங்கப்பா,'' என, பொருட்களை வாங்கி ஏற்றினாள்.
''விமலா... வீட்ல போனை வைச்சுட்டு வந்துட்டேன். உங்க அண்ணிக்கு போன் பண்ணி, பொருட்களை, வீட்டுக்கு எடுத்து வந்துட்டதா சொல்லிடும்மா.''
''சரிப்பா... வீட்ல போய் பேசிக்கலாம்.''
ஆட்டோவிலிருந்த பேத்தியை, தன் மடியில் வைத்து, கொஞ்சியபடி, வீடு வரை, குடும்ப நலன் விசாரிப்புகளை தொடர்ந்தார், பரசுராம்.
அண்ணி சொல்லிச் சென்ற, அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கும் அப்பாவை பார்த்தாள்.
''உடம்பு சரியில்லாம, எதுக்கு இப்படி வேலை செய்து, கஷ்டப்படறீங்க... நேரத்துக்கு சாப்பிட்டு, 'ரெஸ்ட்' எடுக்க வேண்டியது தானேப்பா?''
''நம் வீட்டுக்கு செய்யறதுக்கு எனக்கென்னம்மா கஷ்டம்... வேலையா நெனைச்சு செய்யறதில்லேம்மா, 'எக்ஸசைசா' தான் பண்றேன்... அப்பப்போ, உடம்பு வலி வருது, இங்கிலீஷ் மருந்து எடுத்துகிட்டிருக்கேன்.
''வலி போகலைன்னு, நாட்டு வைத்தியம் பார்க்க, உமாகிட்டே கேட்டேன்... ரவி வந்த பின், கேட்கணும்ன்னா... சரி, விமலா... வந்த களைப்பு தீர, ஏதாவது சாப்பிடும்மா... நிதானமாக பேசலாம்,'' என்றார்.
அப்பாவிற்கு, அண்ணியிடம் ஏதோ ஒருவித பயம் இருப்பதால் தான் விட்டு கொடுக்காமல் பேசுகிறார். ஆனால், ஏதோ மனக் கஷ்டத்தில் அப்பா இருந்து, மறைப்பதாக தெரிந்தது.
அப்பாவின் உண்மை நிலை அறிய, ஞாபகத்திற்கு வந்தாள், ஆண்டாளம்மா.
''அதையேன் கேட்கறே விமலா... நீ, சந்தேகப்படறது சரி தான்... உங்கப்பாவிற்கு, ஓய்வும், நிம்மதியும், மரியாதையும் கொஞ்சமும் இல்லே... உங்க அண்ணியை கண்டாலே, பயந்து, குச்சியெடுத்த குரங்காட்டம் ஆடறார்... பார்க்கவே பாவமா இருக்கு...
''காலையில், குழந்தைகளை எழுப்பி, குளிப்பாட்டி, சாப்பிட வெச்சு, பள்ளிக்கு அனுப்புறதிலிருந்து, இரவு கதை சொல்லி, துாங்க வைக்கிற வரை, உங்கப்பா தான்... இவரு துாங்க, பாதி ஜாமம் ஆயிடும்... உங்க அண்ணி, மகாராணி மாதிரி, 'டிவி' பார்த்துட்டு, ஜம்முன்னு துாங்குவா...
''இது தவிர வீட்டு வேலைகளையும் வாங்கிக்கறா... உங்கண்ணனும் கண்டுக்கறதில்ல... உங்கம்மா இருந்தா, இப்படி நடக்க விடுவாளா... ஆக்குடி சோத்தை, போடுடி தட்டுலேன்னு அடக்கியிருப்பா... அந்த மகராசி இல்லாத சந்தோஷத்துலே, இந்த மகாராணி ஆடறா...
''இன்னைக்கு கூட, வலி தாங்க முடியாம, வைத்தியர்கிட்டே கூட்டிகிட்டு போக சொன்னதுக்கு, மாட்டேன்னுட்டாளாம்... கேட்கவே கஷ்டமா இருக்கு,'' என்றாள், ஆண்டாளம்மா.
''வரட்டும் கேட்கிறேன்.''
''விமலா... நீ எதையும் கேட்டுக்காதே... உங்கப்பாவை உன் கூடவே கூட்டிகிட்டு போய், 10 - 20 நாளைக்கு நிம்மதியா வெச்சுக்க... அவரில்லாமல், உங்க அண்ணி கஷ்டப்பட்டா தான், அப்பாவோட அருமை அவளுக்கு தெரியும்.''

அக்கவுண்ட்டன்ட் படித்து, வீட்டில் இருக்க பிடிக்காமல், திருமணமான புதிதில், வேலைக்கு செல்ல கேட்ட உமாவை, தடுத்தான், கணவன் ரவி. மருமகள் வேலைக்காக, மகனை சம்மதிக்க வைத்ததோடு, 30 ஆண்டுகளாக, தான் வேலை செய்த கம்பெனியில், சிபாரிசில் வேலைக்கு சேர்த்து விட்டார், பரசுராம்.
அலுவலகத்தில், பரசுராமின் மருமகள் என்ற வகையில், 'சீனியர் சீப் அக்கவுண்ட்டன்ட்' உமாவிற்கு, நல்ல மதிப்பு. அவ்வப்போது, கணக்கு சம்பந்தப்பட்ட சந்தேகங்களை, பரசுராம் தெளிவுபடுத்தி, ஒத்தாசையாக இருப்பதால், உமாவால், கம்பெனி கணக்கர் பொறுப்பில் சிறப்பாக செயல் பட முடிந்தது. அதனாலேயே, பரசுராம் போலவே பொறுப்புடன் நடந்து, ஆபீசில், 'சின்சியர் மேடம்' என்றும், பெயரெடுத்திருக்கிறாள், உமா.

ஆண்டாளம்மா சொன்னது போல், அண்ணியின் கையில் ஆடும் பொம்மையாய் இருக்கும் அப்பாவின் மேல் பரிதாபம் ஏற்பட்டது. அண்ணன் வந்தவுடன், சொல்லி விட்டு, அப்பாவுடன் ஊருக்கு புறப்பட முடிவெடுத்தாள், விமலா.
''என்ன விமலா... இன்னைக்கு தான் வந்தே, கிளம்பணுங்கறே... மகளுக்கு, 'லீவு' தானே... இருந்துட்டு போயேன்.''
''அண்ணி... அவருக்கு, திடீர்ன்னு வெளியூர் போகணுமாம்... அதனால, அப்பாவையும் கூட்டிகிட்டு போனா, மகளை பார்த்துக்கிட்டு, அவர் வர்ற வரைக்கும் எனக்கும் துணையா இருப்பார்... வர்றேங்கறார், 10 நாள் இருந்துட்டு வரட்டும்... அப்பா வர்ற வரைக்கும் சமாளிச்சுக்குவீங்கல்ல?''
''தாராளமாய் கூட்டிகிட்டு போ, விமலா... எனக்கு எந்த சிரமமும் இல்லே.''
''என்ன உமா... 'ஆடிட்டிங்' நடக்கற சமயத்துல, அப்பாவை அனுப்பிட்டியே... நீ சொன்னதால, நானும் சரின்னுட்டேன்... வர்றதுக்கு நாளானால், குழந்தைகளையும் கவனிச்சுகிட்டு, எப்படி சமாளிக்கப் போறே?'' என்றான், ரவி.
''வேண்டாங்க... இருந்துட்டு வரட்டும்.''
''ஏன் உமா... அப்பாவோட ஏதும் சங்கடமா?''
''எனக்கெந்த சங்கடமும் இல்லீங்க... யாரோ அவரு நண்பர் சொன்னாருன்னு, நாட்டு வைத்தியர்கிட்டே போகணும்னாரு... வேண்டாம், நீங்க வந்ததும் கேட்டுட்டு போங்கன்னேன்... இதுலே சங்கடப்பட என்ன இருக்கு...
''உங்கப்பாவுக்கு, ஓய்வு கொடுக்காம, ரொம்ப கஷ்டப்படுத்தறதாகவும், தன் கூட இருந்தா அவரு நிம்மதியா இருப்பாருன்னும், அவரில்லாம, நா கஷ்டப்படணும்ன்னு, விமலா கூட்டிகிட்டு போயிருக்கலாம்... உங்க அப்பாவுக்கும், தங்கச்சிக்கும், ஒரு உண்மையை புரிய வைக்க போறேன். அதுக்கு, நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கிறதா, நான் நெனைக்கிறேன்.''
''என்ன செய்யப் போறே, உமா?''
''நான் எதுவும் செய்யப் போறதில்லேங்க... எல்லாம் தானா நடக்கும்.''

சகல வசதிகளுடன் தனி அறை. காலையில், காபி, பேப்பருடன் நின்றிருந்தாள், விமலா.
குழந்தையை, பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தும்போது, சற்று அடம் பிடிக்க... கோபத்தில், திட்டியும், குட்டியும் பணிய வைத்தாள். அடிக்கு பயந்து, தாத்தாவிடம் வந்தாள்.
''விமலா... குழந்தையை, பள்ளிக்கு, நான் தயார் பண்ணி அனுப்பறேன்; அவளை, என்கிட்ட விடும்மா.''
''வேண்டாம்ப்பா... அவளை, உங்களால் தயார் பண்ண முடியாது. ரொம்ப அடம் பிடிப்பா... அவ பண்ற லுாட்டியை பாருங்க,'' என்றாள்.
ஒரு வழியாக, அனுவை தயார் செய்து, வேனில் ஏற்றி அனுப்பி, அரைமணி நேரத்திற்குள் அலுவலகம் செல்ல தயாரானாள்.
''அப்பா... வெயில் ஜாஸ்தியா இருக்கு... குளிச்சுட்டு, சாப்பிடுங்க. மறக்காம மாத்திரைகளை போட்டுகிட்டு, வீட்லேயே, 'ரெஸ்ட்' எடுங்க... சாயந்தரம், உங்க பேத்தியை, 'ஹிந்தி டியூஷன்'லேர்ந்து அழைத்து வர, 'லேட்'டாயிடும்... எனக்காக காத்திருக்காம, நேரத்துக்கு சாப்பிட்டு துாங்குங்க,'' என்றாள்.

இரவு, 8:00 மணி -
மகளுடன் வந்தாள், விமலா.
''விமலா... குழந்தையை கதை சொல்லி துாங்க வைக்கிறேன்.''
''வேண்டாம்ப்பா... அவ்வளவு சீக்கிரம் இவ துாங்க மாட்டா, துாங்கவும் விட மாட்டா... நீங்க நிம்மதியா துாங்குங்கப்பா.''
அடம் பிடித்த பேத்தியை கண்டித்து, வலுக்கட்டாயமாக தன் அறைக்குள் புகுத்திக் கொண்டாள்.
விடியலில் விழித்து, குளித்து, நேரத்திற்கு சாப்பிட்டு, ஒரு மூன்றாம் மனிதராக, விருந்தாளியாக இருக்க, அவர் மனம் ஒப்பவில்லை. அவ்வப்போது, உமா குழந்தைகளின் நினைவலைகள், உறங்க விடாமல் ஏக்கமாய் நெஞ்சை அழுத்தியது.
வீட்டிலும், அலுவலகத்திலும், ஓய்வும், நிம்மதியுமின்றி அல்லாடிக் கொண்டிருப்பாள், உமா. விமலா அழைத்ததும், ஏதோ ஒரு வேகத்தில் வந்தது, பெரும் தவறு தான். தவறை சரி செய்ய, நாளையே ஊருக்கு கிளம்பி விட வேண்டும்.
''விமலா... சங்கடப்படாதே... நீ நல்லா கவனிச்சுக்கிட்டாலும், உங்க அண்ணன் குழந்தைகளின் நெனைப்பாவே இருக்கு. அவங்களோட குறும்புத்தனமும், விளையாட்டும், ஒண்ணா துாங்கறதும், பழகிப் போச்சு... அவங்க இல்லாமல் என்னால நிம்மதியா துாங்க முடியலை... ராத்திரி போன் செய்து, இன்னிக்கு ஊருக்கு வர்றதா, அண்ணனிடம் சொல்லிட்டேன். நான் இப்பவே கிளம்பறேம்மா,'' என்றார்.
அப்பா திடீரென ஊர் கிளம்பும் காரணத்தை கேட்ட விமலா, திடுக்கிட்டாள்.
பெற்ற மகளாக இருந்தும், தான் புரிந்து கொள்ளாத அப்பாவின் உணர்வுகளை, மனோ ரீதியாக அருமையாய் புரிந்து கொண்ட அண்ணியின் அணுகுமுறையை அறிந்து வியந்தாள், விமலா.

''என்ன, உமா... நீ சொன்னபடியே, ஊருக்கு வர்றதா, அப்பா போன் பண்றார்... என்ன மாயம், மந்திரம் செய்தே?''
''இதுல, மாயம், மந்திரம் எதுவும் இல்லீங்க... பொதுவா, வாழ்க்கையிலே கடைசி வரை, நாம் எல்லாருமே எதிர்பார்க்கிறதும், போராடுறதும், குடும்பத்திலே எப்பவும் நமக்குள்ள உரிமையும், மதிப்பும் எந்த சூழ்நிலையிலும் விட்டு போயிடக் கூடாது என்பதற்காக தான்.
''அது, ஒரு வகை பாசப் போராட்ட உணர்வு. வயசாயிட்டா, எந்த உணர்வும் மாறிடாது. ஆனா, போராட்டத்திலேயே அந்த உணர்வுகள் இருந்தால், நிம்மதி இருக்காது. என்னைப் பொறுத்தவரை, உங்கப்பாவை, என் அப்பா ஸ்தானத்திலேயும், கம்பெனி அக்கவுன்ட் நெளிவு, சுழிவுகளை, கத்துக் கொடுக்கிற குருவாவும் தான் நெனைக்கிறேன்.
''அப்படிபட்டவருக்கு, நன்றி கடனாக, குடும்பத்துக்கு தேவையானதை, அவரின் நியாயமான உணர்வுகளை காப்பாத்தற பொறுப்பையும் நாம எடுத்துகிட்டோம். இந்த வயசுலே, அவர் எதிர்பார்க்கிற, ஆசைப்படற, நியாயமான எல்லா சுதந்திரத்தையும், உரிமையையும், முக்கியத்துவத்தையும், குழந்தைகளை பார்த்துக்கற பொறுப்பையும் கொடுத்து, நாமும் குடும்பத்திலே முக்கியமான அங்கம் என்கிற அந்தஸ்தோடும், உணர்வோடும் வெச்சிருக்கேன்.
''அந்த உணர்வு வட்டத்தைத் தாண்டி அவரால எங்கேயும் போய் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, 'உணர்வுகள் ஒன்றானால் தான் உறவுகள் நன்றாயிருக்கும்'ன்னு சொல்வாங்க. அவரோட உள் உணர்வுகளும், நம் உணர்வும் ஒன்றாயிருக்கிறதாலே வந்துடுவார்ன்னு நம்பிக்கை வெச்சு சொன்னேன்,'' என்றாள், உமா.
தீர்க்கமாய், வாழ்வியல் சூட்சம சூத்திரத்தை புரிய வைத்த, உமாவை, திகைப்பாய், பார்த்தான், ரவி.

து. ஆறுமுகம்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X