காதலுக்கு அப்பால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

ஒரு வழியாக, 'ரிசப்ஷன்' முடிந்து, 'டைனிங் ஹால்' வேலைகளும் ஓய்ந்து, திருமண மண்டபம் நிசப்தமாய் இருந்தது.
தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த மணமகன் அறையில், ஓய்வு தேடி நுழைந்தான், கோபி கண்ணன். அங்கே, மாப்பிள்ளைத் தோழனும், சில நெருங்கிய நண்பர்களும் அரட்டையில் அமிழ்ந்திருந்தனர். அதிலிருந்து ஒதுங்கி, அப்பாடா என்றபடி கண்களை மூடினான்.
எப்படி துாக்கம் வரும்?
வழக்கமான மாப்பிள்ளை என்றால், கனவுகள் துரத்த, துாக்கம் தொலைத்திருப்பான், இவன்?
ஷிவானி கேட்ட கேள்வியில், அடியோடு ஆடிப்போய் இருக்கிறான்... கேள்வியா அது?
'நாம ரெண்டு பேரும், ஓடிப் போயி, எங்காவது, 'ரிஜிஸ்ட்டர் மேரேஜ்' பண்ணிக்கலாமா?'
இந்தக் கேள்வி, கோபி கண்ணனை புரட்டிப் போட்டது. நொந்து நுாலாகச் செய்தது.
'என்ன பேசறே, ஷிவானி... நாளைக்கு, எனக்கு திருமணம். இன்னும் அஞ்சாறு மணி நேரத்துல, 'ரிசப்ஷன்' நடக்கப் போறது. இந்த நேரத்துலேயா இப்படிக் கேட்பே?'
'ஆறு மாசமா, நீங்க கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன்; நீங்க கேக்கவேயில்ல. அதான் நானே...'
'அப்படின்னா, இவ்வளவு நாட்களா நீ எதையோ மனசுலே வெச்சுக்கிட்டிருந்திருக்கே...'
'ஆமா... வெளிப்படையா சொல்றேன், நா உங்கள காதலிச்சுக்கிட்டு இருக்கேன்...'
'உளறாதே, ஷிவானி... நம் ஆபீஸ்ல, ஆணும்- - பெண்ணுமா, 20 பேர் இருக்கோம். அதுவும் வாலிப வயசுல... எதுக்கு நட்ப கொச்சைப்படுத்தறே?'
'நீங்க தான் காதலுக்கான புனிதத்த உணரல...'
'காதலா, துாக்கிப்போடு உன் காதல... பழகுறவங்களைளெல்லாம் காதலிக்க ஆரம்பிச்சா அப்புறம் இந்த பூமி தாங்காது...'
'நான், உங்க மேலே வெச்சிருக்கறது தெய்வீகக் காதல்...'
'காதல்ல பல வகை இருக்கா?'
'சும்மா வெத்து, 'ஆர்க்யூமென்ட்' பண்ணாதீங்க... நீங்க, என் கூட பழகினது, பேசினது, சிரிச்சது... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?'
'மண்ணாங்கட்டி... அதுக்கு காதல்ன்னு பேரா... எந்த அகராதி அப்படிச் சொல்லுது?'
'உங்களுக்கு, நல்ல எடத்துல, 'அரேஞ்டு மேரேஜ் பிக்ஸ்' ஆயிருக்கு... அதான் இப்போ இப்படி பேசறீங்க...'
'ஷிவானி, ஒண்ணு தெரிஞ்சிக்கோ... நான் எப்பவுமே, உன்னை அந்தக் கண்ணோட்டத்தோட பார்க்கலே. உன்னை மட்டுமில்லே, எந்தப் பொண்ணையுமே அப்படிப் பார்க்கலே.
'படிப்பு, உத்தியோகத்தை மாதிரியே, திருமணமும் ஒரு அத்தியாவசிய தேவை. இதையெல்லாம் நெறிப்படுத்த, பெத்தவங்க இருக்காங்க. நாம ஏன் வீணா மனசப் போட்டு குழப்பிக்கணும்...'
'என்னோட காதலுக்கு, நீங்க தர்ற மதிப்பு அவ்வளவுதானா?'
'பைத்தியம்... நீயா ஏதோ தப்பா அர்த்தம் பண்ணக்கிட்டதுக்கு பேரு, காதல் இல்ல... பேசாம வேலையப் பாரு. உங்க அப்பாம்மா எடுக்கற முடிவுக்கு கட்டுப்படு. இப்போ உருப்படியா செய்யிற வேலையில் கவனம் செலுத்து. புதுசா ஏதாச்சும் கண்டுபிடி.
'தினமும், உலகம் மாறிக்கிட்டு வருது... நாம இந்த, 'சாப்ட்வேர் பீல்டு'லே, 'டெஸ்ட்டர்' இல்லே... 'டெவலப்பர்' ஞாபகம் வெச்சுக்கோ... நம்மோட துறையில, நாம சாதிக்க வேண்டியது நெறைய இருக்கு...'
'உங்க முடிவு அவ்வளவுதானா?'
'ஆமா...'
'நல்லா இருங்க... பை...'
அவள் மொபைல்போன் இணைப்பை துண்டித்தாள். பேயறைந்த மாதிரி ஆனான், கோபி.
மனதின் மூலையில் என்னவோ ஒரு அரிப்பு, இம்சை செய்தது. தவித்தான். தவிப்பு அடங்க மறுத்தது.
எதிர் அறையில், மணமகள் மல்லிகா, அன்றலர்ந்த மலராய் படுக்கைக்குப் போன காட்சி, அவனை திசை திருப்பிற்று.
'ஒரு வேளை, ஷிவானியின் சொல்லுக்கு மதிப்பளித்து, அவளோடு பதிவுத் திருமணம் செய்து கொள்வதானால்... மல்லிகாவின் கதி...'
நினைத்துப் பார்க்கவே என்னவோ மாதிரியிருந்தது கோபிக்கு.
கிராமத்துக்காரி, மல்லிகா; படித்தவள். கிராமமே கதியென்று கிடந்தவள். இத்தனைக்கும் சொந்தம் கூட கிடையாது. தரகர் மூலம் அமைந்தவள்.
அதென்னவோ அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே, கோபிக்கு பிடித்தது. கருப்புமில்லாத சிகப்புமில்லாத அவள் நிறம். படபடவென்று பேசத் தெரியாத பாங்கு. பள்ளிக்கூடத்தில் புதிதாய் சேர்ந்த மாணவியை போன்றதோர் மருட்சி. இந்த அடையாளங்கள் யாவுமே, கோபியை மிகவும் வசீகரித்தன.
மல்லிகாவை, திருமணத்திற்கு அப்பால் அழுத்தமாக காதலிக்க வேண்டுமென்கிற நினைப்பு, கோபியிடத்தில் துளிர்த்தது.
எல்லா நினைப்புகளையும் மூட்டை கட்டி வைத்து, படுக்கையில் சரிந்தான். நண்பர்கள் விடவில்லை, சீண்டினர். அவர்களுக்கும், 'கம்பெனி' கொடுத்தான். ஆனாலும், மனம் அமைதியில்லாமல் தவித்தது. ஷிவானி ஏன் அப்படிக் கேட்டாள்... இதே கேள்வி, பலமுறை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
கட்டுக்குள் அடங்காதவனாய் மறுபடி தவித்தான்.
தவிப்பு நீடிக்கவே, மொபைல்போனை எடுத்து, ''நான் கோபி கண்ணன் பேசறேன்,'' என்றான்.
''தெரியுது, சொல்லுங்க.''
''துாங்கலியா?''
''எப்படி வரும் துாக்கம்?''
''இப்ப, 12:00 மணி.''
''தெரியும். நீங்க, 'இன்விடேஷன்' கொடுத்த நாள்லேயிருந்து ராத் துாக்கம் போச்சு.''
''ஷிவானி... நான் சொல்றத கேப்பியா?''
''அது, நீங்க சொல்ற விஷயத்த பொறுத்தது.''
''இல்லே... நீ கேட்டாகணும்... அப்பத்தான் நான் நிம்மதி அடைவேன்.''
''உங்களுக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கா இந்த ஷிவானி.''
''காலைல, திருமணத்துக்கு நீ வரணும்... கண்டிப்பா வந்து, மனப்பூர்வமா எங்கள ஆசீர்வதிக்கணும்.''
''நீங்க, இப்ப போன் பண்றபோது கூட, ஒரு சபலம் மனசுல எழுந்துச்சு... நீங்க மனசு மாறி, என்னோட, 'பிளானு'க்கு, ஓ.கே., சொல்லப் போறீங்களோன்னு ஒரு நெனப்பு உருவாச்சு. ஆனா, நீங்க அப்படியேதான் இருக்கீங்க. ப்ச்.''
''ஷிவானி... என்னை விட, 'பெட்டரா' ஒரு மாப்பிள்ள உனக்குக் கிடைப்பான். உனக்கு, மாப்பிள்ளை தேடறதுல, அப்பா -- அம்மா மும்முரமா இருக்காங்க. அத நீயே சொல்லியிருக்கே... சீக்கிரம் நல்ல மாப்பிள்ள உன்னை கை பிடிப்பான்.
''நம் நட்பு தொடரட்டும்... நாம ரெண்டு பேரும் ஆபீஸ்லே நம் துறையிலே புதுசா நெறைய சாதிப்போம். காதல் சாதாரணமானது; சாதனை வலியது. நாம சாதனை செய்வோம்.''
''முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க?''
''நீங்க திருமணத்துக்கு வரணும். எங்கள மனப்பூர்வமா வாழ்த்தணும்.''
''இதுதான் உங்க பதிலா?''
''ப்ளீஸ்... சுதாரிச்சுக்கோ, ஷிவானி. நான் போனை, 'கட்' பண்றேன்.''
மொபைல்போன் இணைப்பை துண்டித்து, கண்களை மூடினான், கோபி கண்ணன். பல காரணங்களுக்காக உறக்கம் வர மறுத்து, சண்டித்தனம் செய்தது.
கண் விழித்தாள், ஷிவானி. பொழுது விடியும் போதே அவளுள் புதிய ஞானமும் விடிந்திருந்தது. இதுகாறும் தன் மனதை ஆக்கிரமித்திருந்த காதலை துாக்கிப் போட்டு விட்டு, புதிய ஷிவானியாய் உருவெடுத்தாள்.
குளித்து, உடை மாற்றி, 'ஸ்கூட்டி'யில் கிளம்பினாள்.
சத்திரத்தை வந்தடைந்தபோது, மணி, 7:30. மண்டபம், ஏனோ களையிழந்து இருந்தது. 'முகூர்த்த நேரம் மாறி வந்து விட்டோமோ...' என்று, ஒரு கணம் குழம்பினாள்.
'இல்லையே... அதை, 'இன்ச் இன்ச்'சாக மனப்பாடம் செய்து வைத்திருந்தோமே...' என, நினைத்தவள், அங்கு நடந்த பிரச்னையை கேள்விப்பட்டதில், அவளுக்கே திக்கென்றது.
இரவோடு இரவாக ஓடி விட்டாள், மணப்பெண். ஒரு துண்டு சீட்டு, தகவலை கசிய விட்டுக் கொண்டிருந்தது.
உடைந்து போய், ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்த, கோபி கண்ணன், ஷிவானியைப் பார்த்ததும், எழுந்து நின்றான். அவன் மனம் ஆயிரம் கணக்குகளை போட்டது.
''ஷிவானி... என் நெலமையை பார்த்தியா?''
அவனை படர்ந்திருந்த கழிவிரக்கம் இவளையும் பற்றிக் கொண்டது.
ஆறுதலாக, ''பீல் பண்ணாதீங்க கோபி.''
''ஷிவானி, நீ என்னை காதலிக்கறே இல்ல... இந்த நிமிஷத்துலேர்ந்து, நானும் உன்னை காதலிக்க போறேன்... வா, இந்த மேடையிலேயே தாலி கட்டறேன். இழந்தவற்றை எல்லாம் மீட்கப் போகிறோம். என்ன ஷிவானி... உனக்கு, ஓ.கே., தானே?''
''சாரி, கோபி... உங்களை துரத்தி துரத்தி காதலிச்ச ஷிவானி, நேத்தைக்கே செத்துட்டா; இவ, புது ஷிவானி. தெளிவா, தீர்க்கமா, காதல் மயக்கத்திலிருந்து விடுபட்ட, ஷிவானி. இவ உங்களை மட்டுமில்லே, யாரையும் காதலிக்க விரும்பாதவ. வேலையிலே சாதிக்கப் பிறந்தவ... காதல விட சாதனை பெருசில்லியா... ஷிவானி சாதிக்கப் பொறந்தவ.''
கோபி கண்ணனின் வசனங்களை இப்போது, ஷிவானி பேசினாள்.
சிலையாய் நின்றான், கோபி கண்ணன்.

எம். கே. சுப்பிரமணியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - chennai,இந்தியா
22-மே-202018:31:01 IST Report Abuse
raman இந்த கதையில் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லையே.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
19-மே-202021:31:44 IST Report Abuse
Rajesh கிராமத்து பெண் என்றால் மல்லிகா, சிட்டி பெண் என்றால் ஷிவானி தாங்கலை எம். கே. சுப்பிரமணியன், வெளிநாட்டில் பிறந்தால் எஸ்தர், நான்சி என்று வைக்கணுமா, மாறுங்கப்பா.....
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
19-மே-202021:29:13 IST Report Abuse
Rajesh கேவலமான பதிவு.... இதெல்லாம், சந்தேகத்தையும், சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்கிறது கதை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X