'தெய்வத்திற்கும், துாய்மையான பக்தனுக்கும் போட்டி வந்தால், வெல்வது யார்... பக்தன் தான்! சந்தேகமே வேண்டாம். எளிமையாகச் சொல்கிறேன்.
'தெய்வமும், பக்தனும், தேர்தலில் நின்றால், பக்தனுக்காக, 'வால்போஸ்ட்டர்' அடிச்சு ஒட்டும், தெய்வம்; பக்தன் தான் ஜெயிப்பான்...' என்று, உணர்ச்சி பூர்வமாகச் சொல்வார், கிருபானந்த வாரியார்.
அதற்கு உதாரணமான கதை...
மகாபாரத யுத்தம் துவங்கும் நேரம். அவரவர்கள் ஆள் சேர்க்கத் துவங்கினர். துரியோதனனும், அர்ஜுனனும் கண்ணன் துணை வேண்டி, அவனை நாடிச் சென்றனர்.
'ஆயுதம் எடுக்க மாட்டேன்...' என்ற கண்ணனை துணையாக கொண்டான், அர்ஜுனன்.
அர்ஜுனனை எள்ளி நகையாடிய துரியோதனன், கண்ணனிடமிருந்து ஓர் அக்குரோணி சேனையை துணையாக பெற்றுச் சென்றான்.
போர் துவங்கியது. கவுரவர்களுக்காக, தலைமை தாங்கிப் போரிட்டார், பீஷ்மர். முதல் இரண்டு நாட்கள் போர் முடிந்தது. கவுரவர்கள் பக்கம், அழிவு அதிகமாகவே இருந்தது. மூன்றாம் நாள் காலை, போர் துவங்கும் வேளை...
பீஷ்மரிடம் சென்று, அவர் தலைமையை இழிவுபடுத்தும் விதமாக, 'பாண்டவர்களை அடிக்க, உங்களுக்கு மனமில்லை என்றால், ஒதுங்கியிருக்க வேண்டியதுதானே... ஏன் இப்படி செய்கிறீர்கள்...' என, இடித்து பேசினான், துரியோதனன்.
மனம் வருந்திய பீஷ்மர், 'துரியோதனா... இன்று, பாண்டவர் படைகளுக்கு பெரும் சேதம் உண்டாக்குவேன். அதுமட்டுமல்ல, ஆயுதமே எடுக்க மாட்டேன் என்று சொன்ன கண்ணனை, ஆயுதம் எடுக்க வைப்பேன்...' என்று சபதம் செய்தார்.
கடுமையான போர் நடந்தது. பீஷ்மர் சொன்னதைப் போலவே, பாண்டவ சேனைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கினார்; ஏராளமான அம்புகளை வீசி, அர்ஜுனனை நிலைகுலையச் செய்தார்.
கண்ணனுக்கு கோபம் தாங்கவில்லை.
'இந்த பீஷ்மரை கொன்று விட்டு தான், அடுத்த வேலை...' என்று, தேரை விட்டு இறங்கி விட்டார்; கையில் சக்கராயுதத்தோடு, பீஷ்மரை கொல்ல ஓடினார்.
பதறிய அர்ஜுனன், தேரில் இருந்து இறங்கி ஓடி, கண்ணனைத் தடுக்க முயன்றான். அவனையும் இழுத்துக் கொண்டு ஓடினார், கண்ணன்.
'நம் சபதம் உண்மையாகி விட்டது. கண்ணனை ஆயுதம் எடுக்க வைத்து விட்டோம்...' என்று நினைத்தார்; அதே சமயம், தன் துாய பக்தியால் இரு கைகளையும் கூப்பி, கண்ணனை வணங்கவும் செய்தார், பீஷ்மர்.
அதற்குள் அர்ஜுனன், 'கண்ணா... ஆயுதம் எடுக்க மாட்டேன் என்ற, உன் வாக்கை ஏன் மீறுகிறாய்... வா திரும்பி...' என, அழைத்தான்; கண்ணனும் திரும்பினார்.
'ஆயுதம் எடுக்க மாட்டேன்...'என்ற கண்ணன், தன் சபதத்தை மீற காரணம் என்ன?
'என் வாக்கு பொய்யானாலும் சரி, என் பக்தனான பீஷ்மனின் வாக்கு பொய்க்க கூடாது...' என்று தான், அவ்வாறு செய்தார், கண்ணன்.
ஆம்... தெய்வம் தன் நிலையிலிருந்து இறங்கும்; இரங்கும். பக்தனை மட்டுமல்ல, அவனின் வாக்கையும் காப்பாற்றும்!
பீஷ்மரைப் போல, உறுதியான பக்தி, தெய்வத்தை முன் நிறுத்தும்.
பி.என். பரசுராமன்