'எதிரொலி' விசுவநாதன் எழுதிய, 'பாரதியின் தம்பி' நுாலிலிருந்து: 'புதுவையில், நெல்லையப்பருடன் நெருங்கிப் பழகிய காலத்தில், தன் பாடல்களை, அவருக்கு அற்புதமாக பாடிக் காட்டுவார், பாரதியார்.
முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பல காரணங்களால், தமிழகத்தில், சுதேச கிளர்ச்சி அடங்கிப் போயிருந்தது. 'வந்தே மாதரம்' என்று சொல்வோரே இல்லாமல் போயினர். அதிகாரிகளின் அடக்கு முறையால், நாட்டில் அச்சமே உச்சமாயிருந்தது.
அப்போது, ஆதிக்கத்திலிருந்த ஜஸ்டிஸ் கட்சியினர், அந்நியர்களை ஆதரிக்கலாயினர். ஐரோப்பிய யுத்தமும், அன்னியரின் அடக்குமுறையும் சேர்ந்து, நாட்டு மக்களிடம் சுயராஜ்ய சிந்தனையை அற்றுப் போகும்படி செய்திருந்தன.
பாரதியாரின் பாடல்களை பாடுவோரும் இல்லை. அவரது புத்தகமும் கிடைக்கவில்லை. பாரதியார், புதுவையில் இருந்ததால், அது பற்றி சிந்திப்போரும் இல்லை.
பாரதியின், கண்ணன் பாட்டுக்கு, வெள்ளைக்கார அரசு தடை கூற காரணம் இல்லை என்றுணர்ந்த, நெல்லையப்பர், அப்பாட்டை முதலில் வெளியிடுவது என்று தீர்மானித்தார். பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பாரதியாரின் புத்தகத்தை அச்சிட்டுக் கொடுக்க, எந்த அச்சகமும் முன்வரவில்லை.
கடைசியாக, சென்னை, அரண்மனைக்காரன் தெருவிலிருந்த, இந்தியா அச்சுக் கூடத்தில், நெல்லையப்பரின் நண்பர், சீனிவாசாச்சாரியார் என்பவர், பாரதியின் நுால்களை அச்சிட்டு கொடுக்க முன் வந்தார்.
கடந்த, 1917ல், கண்ணன் பாட்டின், ௨,௦௦௦ பிரதிகள் அச்சாயின. நுால்களின் ஒரு பகுதியை, புதுவையில் இருந்த பாரதியாருக்கு அனுப்பி வைத்தார், நெல்லையப்பர்.
தன்னுடைய முழு நுால் ஒன்று, புத்தக வடிவம் பெற்று, முதன் முதலில் வெளிவந்தது குறித்து, பரமானந்தம் அடைந்தார், பாரதியார். ஏதோ, செயற்கரிய செயலைச் செய்ததாக நெல்லையப்பரை போற்றினார்.
'விலங்குகளின் வினோத பழக்கங்கள்' நுாலிலிருந்து: விரோதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, நெருப்புக் கோழிகள், தலையை மணலில் புதைத்து கொள்கின்றன, என்று, கூறப்படுவது தவறு.
தென்னாப்பிரிக்காவில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெருப்புக் கோழிகளை வளர்க்கும் பண்ணை அதிபர் கூறுகிறார்:
நெருப்புக் கோழி, மணலில் தலையை புதைத்து, நான் பார்த்ததில்லை. ஏதாவது சத்தம் வருகிறதா என்பதை கேட்பதற்காகவே, நெருப்புக் கோழிகள், நிலத்தின் மிக அருகில் தங்கள் தலையை வைத்துக் கொள்வதுண்டு. சில சமயம், கழுத்து தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும் அப்படி செய்யும்.
ஆனால், வெளியுலகத்தினர் சொல்வது போல், நெருப்புக் கோழி, மணலில் தலையை புதைத்துக் கொண்டால், மூச்சு முட்டி இறந்து விடும், என்கிறார்.
'தலைவர்கள் தமாஷ்' நுாலிலிருந்து: ஒருமுறை, இங்கிலாந்து பார்லிமென்டில், வில்லியம் ஜான்சன் என்ற உறுப்பினர், எதைப் பற்றியோ ஆணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதை மறுக்கும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார், சர்ச்சில்.
அதைக் கண்ட வில்லியம், 'நீங்கள், ஏன் தலையை ஆட்டுகிறீர்கள்... நான், என் சொந்தக் கருத்தைதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.
அதற்கு, 'நான், என் சொந்தத் தலையைத் தானே ஆட்டிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், சர்ச்சில்.
நடுத்தெரு நாராயணன்