பெருநகரத்தின் இதய பகுதியில் அமைந்த இடம். பரபரப்புக்கும், போக்குவரத்துக்கும் குறைச்சல் இல்லை. வேகமாக வரும் பஸ், அதன் அருகில் வரும் தண்ணீர் லாரிக்கும் இடையே இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் செல்ல முயன்று தோற்றார். அதே நுாலிழையில் உள்ளே போய் வெளியே வந்த பள்ளிச் சீருடை மாணவனை பார்த்ததும், அசந்து போனார், ராகவன்.
'அடக்கடவுளே... உயிர் இவ்வளவு துச்சமா?'
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்து, பொந்துகளில் புகுந்து, பள்ளி மாணவன் போய் விட்டான்.
முதன் முறையாக, 'பிசி'யான சாலையில், 'சைக்கிளில், தனியாக ஸ்கூலுக்கு போகிறேன்...' என்று, பேரன் சொன்னபோது, எல்லாரும் ஒரு கணம் யோசித்தாலும், 'ஒண்ணும் பயமில்ல... அவன் போயிட்டு வரட்டும்...' என்றார், தாத்தா ராகவன்.
சொன்னதோடு மட்டுமல்லாமல், வேலைக்குப் போகும் மகன் வேணுவிற்கும், மருமகள் ரஞ்சனாவுக்கும் நேரமிருக்காது என்பதால், தொடர்ந்து ஒரு வாரம், சாலை விதிகளை சரியாக பின்பற்ற சொல்லி கொடுத்தார். அவனுடன், 'ஸ்கூட்டி'யில் பின் தொடர்ந்து பழக்கி விட்டதால், இப்போது, சைக்கிளில் சிட்டாக பறக்கிறான். ஆனால், தாத்தாவை போல, மிகப்பொறுப்போடு நடந்து கொள்வான்.
ராகவனை, அவர் இருக்கும் ஏரியாவில் அனைவருக்கும் தெரியும். காலையும், மாலையும், 'வாக்கிங்' செல்லும்போது, எதிரே வருபவர்களிடம், 'ஹாய்... ஹலோ...' சொல்லத் தவறியதில்லை.
எப்போதுமே, 'பளிச்' என்ற புன்னகை, உற்சாகமான பேச்சு, சுறுசுறுப்பு. அவரிடம் சிறிது நேரம் பேசுபவர்களுக்கு, தீ போல், உற்சாகம் பற்றிக்கொள்ளும். இதனால், விளையாடும் பிள்ளைகள் முதல், தள்ளாத வயதினர் வரை எல்லாரும் அவருக்கு நண்பர்கள் தான்.
சில நேரங்களில், அவருடைய அதீத அன்பு, பிரச்னை ஆனதும் உண்டு.
''அப்பா... அப்பா...'' என்றான், வேணு.
''என்னங்க... என்ன ஆச்சு?''
''எங்கே?''
''எதுக்கு இவ்ளோ, 'டென்ஷனா' இருக்கீங்க. அவர், 'வாக்கிங்' போயிருக்காரு.''
''வர, வர... சில விஷயங்களை தெரிஞ்சு பண்றாரா, தெரியாம பண்றாரா, இல்ல வேணும்னே பண்றாரான்னு தெரியல, ரஞ்சனா.''
''என்ன ஆச்சு?''
''ஏற்கனவே, 'வீக் எண்ட்'ல, 'சர்வீஸ்' செய்யறேன் பேர் வழின்னு, எங்கோ ஊர் கோடியில, சிலர் குடிச்சிட்டு தகராறு செஞ்சு, ஒருத்தன ஒருத்தன் அடிச்சுக்கிட்டதுக்கு, போலீஸ், இவரை, சாட்சியா சேர்த்தது ஞாபகம் இருக்குல்ல?''
''ஆமா... கடைசில, யாருக்கும் இவர், 'சர்வீஸ்' செய்யவில்லை... வம்பை விலைக்கு வாங்கினது தான் மிச்சம்.''
''ஆபீசிலேர்ந்து உள்ளே நுழையும்போதே,'வேணு... தப்பா நினச்சுக்காதீங்க, உங்கப்பா மேல நிறைய மரியாதை வெச்சிருக்கோம்... ஆனாலும், சிலதெல்லாம் அனுமதிக்க முடியாது'ங்கிறார்... பிளாட் அசோசியேஷன் செகரட்டரி.''
''அப்படி என்ன தான் ஆச்சாம்?''
''இவர், 'வாக்கிங்' போகும்போது, ஏதோ சண்டையில அடிபட்ட நாய் ஒண்ணு, இல்ல... அத நாய்ன்னு சொல்ல முடியாது... உடம்பெல்லாம் சொறி, ரத்த காயம்.''
''ஐயோ... நீங்க சொல்லும்போதே வாந்தி வருது.''
''அதை ஆட்டோல ஏத்தி, பக்கத்துல இருக்கிற, 'பெட் கிளினிக்'ல காண்பித்து, கூட்டிட்டு வந்து, 'செக்யூரிட்டி ரூம்'கிட்ட கட்டி வெச்சிருக்காரு.''
''அடக்கடவுளே.''
''குழந்தைங்க விளையாட, அந்தப் பக்கமே போக முடிலைன்னும், போறவங்க, வர்றவங்கல்லாம், முகம் சுளிச்சிட்டு போறாங்கன்னாரு, செகரட்டரி.''
''இவருக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ?''
''நீங்க தான் வைத்தியம் பாத்துட்டிங்களே, அப்புறம் ஏன் இங்க கட்டி வெச்சுகிட்டு, அவுத்து விடுங்கன்னு சொன்னாங்களாம். ப்ளூ கிராஸுக்கு போன் செஞ்சிருக்கேன்... வருவாங்கன்னு சொல்றாராம்.''
''நல்ல விஷயம்தானே.''
''அவர், போன் பண்ணினேன்னு சொல்லி, ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுதாம்... எப்ப வருவாங்கன்னு தெரியல... 'எல்லாரும், 'கம்ப்ளையின்ட்' பண்றாங்க, வேணு. நீங்க தான் உங்கப்பாகிட்ட சொல்லணும்'ங்கிறாரு. அதான், அவர் எங்கேன்னு கேட்டேன்.''
''வந்துடுவார்... 'வாக்கிங்' போறேன்னார்.''
''இதுல மோசம் என்னன்னா, முதல்ல, உள்ளே, 'பார்க்கிங்'ல நாய் இருக்கட்டும்ன்னு சொன்னாராம். அதுக்கு ஒத்துக்காததால, இப்போ, 'செக்யூரிட்டி' ஏரியால இருக்குது, ரஞ்சனா.''
''சரி... என்ன செய்யறது, 'ப்ளூ கிராஸ்' வண்டி வர வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது.''
''இல்ல, ரஞ்சனா... இன்னிக்கு அவர்கிட்ட, 'தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வராதீங்க'ன்னு, 'ஸ்ட்ரிக்டா' சொல்லிடப் போறேன்,'' என்றான், வேணு.
''அவர், அப்படியே பழகிட்டாரு.''
''இருக்கலாம்... அவருக்கு வயசாகற மாதிரிதானே எனக்கும் வயசாகுது... ஆபீஸ்லேர்ந்து வரும்போதே, சின்ன பிள்ளைங்க மேல புகார் சொல்ற
மாதிரி, இவரப் பத்தி சொன்னா, எவ்ளோ கொதிப்பா இருக்குது தெரியுமா?''
''சரிங்க... பொறுமையா எடுத்து சொன்னா, நிச்சயம் புரிஞ்சிப்பாரு.''
''ஒரு காபி போட்டு தா, குடிச்சிட்டு, கீழே போயி, 'ப்ளூ கிராஸ்' ஆளுங்க வந்தாங்களான்னு பாக்கறேன்.''
''சரிங்க,'' என, காபி போட நகர்ந்தாள், ரஞ்சனா.
அவன் காபி குடித்து வருவதற்குள், 'ப்ளூ கிராஸ்' வண்டி வந்து, அந்த நாயை ஏற்றிச் சென்றது. 'ப்ளூ கிராஸ்'காரர்கள், ராகவனின் கருணையையும், சமயோசித புத்தியையும் பாராட்டிச் சென்றனர்.
''அப்பா.''
''என்ன, வேணு?'' என்றார், ராகவன்.
இடை மறித்த, 'பிளாட்' செகரட்டரி, ''வேணு... 'ராகவன் சார் ஈஸ் ரியலி கிரேட்!' சென்னையில இருக்கிற, 'பிளாட்ஸ்'கள்ல விதிகள் கடுமையா இருக்கும்போது, நம், 'பிளாட்'ல மட்டும், நாய்க்கு இடம் குடுத்தத பாராட்டி, லோக்கல் ஏரியா பேப்பர்ல, 'வீக் எண்ட் நியூஸ்' குடுக்கிறதா சொன்னாங்க. நாயையும், நம், 'அபார்ட்மென்ட் காம்ப்ளக்சை'யும், செகரட்டரியான என்னையும் புகைப்படம் எடுத்துட்டு போனாங்க,'' என்றார்.
வேணுவுக்கு புரிந்தது, அவர் அடித்த அந்தர் பல்டியின் காரணம்.
சொறி நாயை டாக்டரிடம் காட்டி, பாதுக்காப்பாக கூட்டி வந்து, கட்டி வைத்தது அப்பா. புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுக்க மட்டும் ஓடி வந்து விட்டார் என்று, மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
''அப்பா... கஷ்டப்பட்டது நீங்க, பேர் வாங்கறது அவரா?'' என்றான்.
''வேணு... உதவி செய்யறது, நம் ஆத்ம திருப்திக்காக... அதுல பிரதி பலன் பாக்கறதோ, விருப்பு வெறுப்பு பாக்கறதோ தப்பு.''
''அது சரி... நான், 'அபார்ட்மென்ட்' உள்ளே நுழையும்போதே புகார் சொன்னாரு... அது உங்களுக்கு தெரியுமா?''
''அவர், சொன்னது எனக்கு தெரியாது. ஆனா, புகார் பண்ணுவாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்.''
''அப்பா... நீங்க, நல்லது செய்யறத நாங்க தடுக்கல... ஆனா, பிரச்னைகளை கொண்டு வராதீங்க... அது பின்னாடி அலைய எங்களுக்கு நேரமில்லை,'' அவன் சொல்லி முடிக்கும் முன், வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
காக்கி சீருடையில் இரண்டு ஆட்டோ டிரைவர்கள் நின்றிருந்தனர்.
''வெங்கிட்... வாப்பா, என்ன விஷயம்?'' என்றார், ராகவன்.
அவர்கள் வந்ததோ, அப்பா, அவர்களிடம் பேசுவதோ கொஞ்சமும் பிடிக்கவில்லை, வேணுவுக்கு. வேண்டா வெறுப்பாக, அறைக்குள் சென்று, நடப்பதை கவனித்தான்.
வந்த இருவரும், ராகவனுடன் ஏதோ பேசிய பின், 'சரி சார்... நாங்க கிளம்பறோம்...' என்றனர்.
ராகவன், அவர்களுக்கு பணம் கொடுப்பதையும், அவர்கள் வாங்க மறுப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
''வேணு, இங்கே வா,'' என்றார், ராகவன்.
''இன்னிக்கு நீ எடுத்துட்டு போன எல்லாத்தையும் திருப்பி எடுத்துட்டு வந்தியா?''
''ஏன்... என்ன இப்போ இந்த வேண்டாத கேள்வி?''
''அவசியமான கேள்வி தான்... 'செக்' பண்ணு,'' என்றார்.
''பர்ஸ், கண்ணாடி, ஆபீஸ் ஐடி, மொபைல் போன் எல்லாம் இருக்கே... அப்புறம் என்ன?'' என்றான்.
'பாஸ்போர்ட்'டை காட்டி, ''அப்ப, இது யாருது?'' என்றார்.
பார்த்ததும், சப்த நாடியும் ஒடுங்கியது, வேணுவுக்கு.
''நீ, இன்னிக்கு, 'கால் டாக்சி'ல வந்தியா?''
''ஆமாம்பா... ஆமா.''
''நீ இறங்கும்போது, உன் பாக்கெட்லேர்ந்து, 'பாஸ்போர்ட்' விழுந்திருக்கு.''
''அடக்கடவுளே,'' என்றாள், ரஞ்சனா.
''நீயும் கவனிக்கல, டிரைவரும் கவனிக்கல... வண்டிக்கு பைசா குடுத்துட்டு உள்ளே வந்துட்ட... 'கால் டாக்சி' ஓட்டிட்டு வந்தவர், நம் ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர் வெங்கிட்டோட நண்பராம். அவர், வழில எங்கயோ நிறுத்தி, டீ குடிச்சபோது, கார் சீட்டுக்கு கீழே இருந்த 'பாஸ்போர்ட்'டை எடுத்து, அட்ரசை பார்த்திருக்கார்.
''போலீஸ் ஸ்டேஷன்ல குடுக்கிறதுக்கு பதிலா, இந்தப் பக்கம் சவாரி வந்த, வெங்கிட்டுகிட்ட குடுத்தனுப்பி இருக்காரு... வெங்கிட்டும், இன்னொரு தம்பியும் வந்து, அதை குடுத்துட்டுப் போறாங்க,'' என்ற போது, வேணுவுக்கு மயக்கமே வந்தது.
'கடவுளே... இது யார் கையிலாவது கிடைத்திருந்தால்?'
''வேணு... அந்த, 'கால் டாக்சி' டிரைவர், எதையும் எதிர்பார்த்து இதை வெங்கிட்டுகிட்ட குடுக்கல... வெங்கிட்டும் எதையும் எதிர்பார்த்து எங்கிட்ட குடுக்கல... ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யிறது தான், மனுஷனா பொறந்ததுக்கான அடையாளம்,'' என்றார்.
சற்றுமுன், நாய்க்கு இடம் கொடுத்ததாக ஓடி வந்து, புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்த, 'பிளாட்' செகரட்டரியும்... முகம் மறந்து போன வெங்கிட், 'கால் டாக்சி' டிரைவர் மற்றும் சொறி நாயும் கண் முன் தோன்றி மறைந்தனர்.
''சாரிப்பா.''
''எதுக்குப்பா சாரில்லாம்... நாம் மனசார ஒரு உதவி செஞ்சா, அது, பன்மடங்காக பெருகி, எதிர்பார்க்காத நேரத்துல, நமக்கு ஏதோ ஒரு வகையில, யார் மூலமாகவோ நல்லது நடக்கும். இது, எதிர்பார்ப்பு இல்ல, உண்மை.
''நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை, முடிஞ்ச வரைக்கும் சந்தோஷமா, அர்த்தமுள்ளதா வாழ்வோமே,'' என்ற அப்பாவை, பிரமிப்புடன் பார்த்தான், வேணு.
மாலா ரமேஷ்