வாழ்வின் எல்லை வரை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

இமாலயத்தின் பனி மூடிய சிகரங்களை பார்த்தபடியே நின்றாள், ரம்யா.
அம்மாவின் பொறுமையான பேச்சும், அப்பாவின் நிதானமான சிரிப்பும் நினைவுக்கு வந்தன.
இமாலயத்தை பார்க்கும் போதெல்லாம், பெற்றோர் நினைவு வருவதை, அவள் சிலிர்ப்புடன் உணர்ந்திருக்கிறாள். தனக்கு கிடைத்த பெற்றோர் போல, எத்தனை பேருக்கு கிடைத்திருப்பர்... ஆனால், வலி இல்லாத, வன்முறை இல்லாத, ஒரு மயிலிறகு சிற்பமாக அவளை செதுக்கினர்.
பிளஸ் 2 முடித்த பின், 'தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்; அதில் தான் முனைவர் பட்டம் வாங்குவேன்; பல்கலைக்கழகத்தில்தான் பணி புரிவேன்...' என்று, அவள், தீர்மானமாக இருந்தபோது, புன்னகையுடன் மனு வாங்கி வந்தார், அப்பா.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, ராணா மேல் நட்பு கொண்டு, பழகி, உயிராக நேசித்து, அவனுடன் தான் திருமணம் என்று முடிவெடுத்தபோது, மகிழ்ச்சியுடன் பால்கோவா கிளறி ஊட்டி விட்டாள், அம்மா.
காதலொருவன் கைப்பிடித்து, பல்லாயிரம் மைல் கடந்து, இமயமலை அடிவாரத்தில் வாழ்க்கையை துவங்கியபோது, மலர் துாவி மனமாற வாழ்த்தியவர்கள்.
'ஆசைப்பட்ட படிப்பை படித்தோம், விரும்பியவனை மணந்தோம், துறைத்தலைவர் என்ற கனவை அடைந்தோம்...' என்று, மனம் நிறைந்து தான் இருந்தது. ஆனால், ஏதேதோ சஞ்சலங்கள்.
'அபார்ட்மென்ட்' வாழ்க்கை. கான்கிரீட் சிறைக்கூடம். அப்பாவுக்கு, 65; அம்மாவுக்கு 62 வயது. நான்கு சுவர் கைதிகள் என்று, அவர்களின் நாட்கள் உலர்ந்திருக்கின்றன.
மகள் குடும்பம் பக்கத்தில் இருந்தால், பேரக் குழந்தைகளின் பேச்சும், ஓட்டமும், சிரிப்பும், உயிரோட்டமாக இருக்கும். அவள் தினம் வந்து பார்த்து போனால், மனங்கள் பூரித்து இதமடையும். ஆனால், வடக்கும் தெற்குமாக ஆகிவிட்டன ஜீவிதங்கள்.
''அம்மா,'' என அழைத்தாள், ஜ்வாலா.
''வா கண்ணு... இதோ, ஆலு பூரி தயார் பண்றேன்... குளிச்சுட்டு வா.''
''ஆலுவா... போம்மா, ரொம்ப போர் அடிக்குது. ஏதாச்சும், 'சவுத் இந்தியன் ரெசிப்பி' பண்ணு,'' என, சிணுங்கினாள், ஜ்வாலா.
''பொங்கல்.''
''தொட்டுக்க?''
''சாம்பார்.''
''ஓ மை காட்... தேங்காய் சட்னி பண்ணு.''
''அய்யோ தேங்காய் இல்லடா... கொத்சு பண்ணட்டுமா?''
''ஏதோ பண்ணு.''

சென்னை, நங்கநல்லுாரில் கூறு கட்டி விற்கப்படும் தேங்காய்கள், நினைவுக்கு வந்தன. அந்த பெரிய, 'அபார்ட்மென்ட்'டை சுற்றி, 10 தென்னை மரங்கள் இருக்கும். சரிசமமாக எல்லா வீடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பார், காவலாளி.
ருசியான இளநீர், தேங்காய். அதை வைத்து, பச்சை மிளகாய், தேங்காய்ப்பால், காய்கறிகளுடன் மணக்கும், திருநெல்வேலி சொதி.
வெள்ளை பிரியாணி, தேங்காய்ப்பால் சேர்த்து, கொதித்த மசாலா சாதம். பொரிச்ச கூட்டு, மோர்க் குழம்பு, தேங்காய்ப் பொடி, தேங்காய் புட்டு, ராகி இனிப்பு அடை, குழிப்பணியாரம், கஞ்சி என்று, அம்மா தொட்டதெல்லாம் துலங்கும். தோழியர் இதற்காகவே வீட்டுக்கு வருவர்.
ஒருத்தி, பாசிப்பருப்பு முறுக்கு; மற்றொருத்தி, தக்காளி இடியாப்பம்; அடுத்தவள், முருங்கை சூப் என்பாள். சிரித்த முகத்துடன் ராணித்தேனீ போல இயங்குவாள், அம்மா. அவ்வளவு உற்சாகம், ஆச்சரியமாக இருக்கும். தன் பங்குக்கு சாமான்களை பார்த்துப் பார்த்து வாங்கி வருவார், அப்பா.
அப்பப்பா... நினைத்தாலே உமிழ்நீரும், கண்ணீரும் சேர்ந்தே வருகின்றன.

போன் அடித்தது.
''ரம்யாம்மா... எப்படிடா இருக்கே... சாப்பிட்டியா?'' என்றார், அப்பா.
''இப்பத்தாம்பா உங்களையும், அம்மாவையும் நெனச்சேன். வகை வகையா எவ்வளவு சாப்பிட்டிருக்கேன், சின்ன வயசுல... ஜ்வாலாக்கும், ரன்பீர்க்கும் இந்த அளவு செய்ய முடியலேப்பா,'' என்றாள், கண்ணீரை அடக்கியபடி.
''எவ்வளவு பொறுப்பான வேலைம்மா... நாங்க அப்படியா... நான் வெறும் மேனேஜர், அம்மா வீட்டுக்கு ராணி. நிறைய நேரம் இருந்தது. சாப்பிடறதுலயும் ஆசை இருந்தது. கவலைப்படாதே, ரம்யா... குழந்தைகளுக்கு, 'லீவு' நாள்ல செஞ்சு குடு.''
''சரிப்பா... அம்மா எப்படி இருக்காங்க?''
''இருக்காம்மா... இதோ தரேன்.''
''கண்ணு, தங்கம், ரம்யா குட்டி... எப்படிடா இருக்கே, சரியா சாப்பிடறியா?'' என்றாள், அம்மா.
''என்னை விடும்மா, ஒரு குறைச்சலும் இல்ல... நீயும், அப்பாவும் ஏன் எப்பவும், 'டல்'லா பேசறீங்க... நான் பக்கத்துல இல்ல, அது ஒண்ணுதானே... பணம், இட வசதிக்கோ குறை இல்லதானே...
''அப்பா, 'வாக்கிங்' போலாம்... நீ, 'அமேசான்'ல படங்கள் பார்க்கலாம்... 'ரெஸ்ட்' எடுக்க வேண்டிய காலம்; உழைச்சதெல்லாம் போதாதா... ஏன் ரெண்டு பேரும் சுரத்தே இல்லாம இருக்கீங்க,'' என்றாள்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, ரம்யா... சரி சரி... நீ சொன்ன மாதிரியே செய்யறோம்... கோவிச்சுக்காதே கண்ணு,'' என்று, அம்மா சமாதானப்படுத்தியபோது, இன்னும் துக்கம் பொத்துக் கொண்டு வந்தது.
''என்னன்னு தெரியல... ஆனா, என்னால நிம்மதியா இருக்க முடியலேம்மா... சரி கிளம்பணும், இன்னிக்கு, 'யூனிவர்சிடி'ல, 'கவர்னர் விசிட்' நாளைக்கு பேசறேன்.''
''சரிடா கண்ணு... கவலைப்படாதே... சந்தோஷமா இரு,'' என்று சொன்ன, அம்மாவின் மேல் கோபம் தான் வந்தது.
பக்கத்தில் நின்று, துப்பட்டாவால் அவளை சுற்றி இழுத்து அணைத்தான், ராணா.
''லுக்கிங் கிரேட் டியர்... நேற்று மார்க்கெட்டுல, 'பலாசோ செட்' பாத்தேன். வானத்து நிறம். உனக்கு அட்டகாசமா இருக்கும்; தயாரா இரு. சாயங்காலம் போறோம்.''
''ராணா... டிக்கெட், 'புக்' செய்யணும்.''
''எங்கே?''
''சென்னை. ஆமாம்... மனசு சரியில்லே... அப்பா - அம்மா, எப்ப பேசினாலும் காய்ச்சல்ல இருக்கிற மாதிரியே இருக்கு. விரக்தி தான் தெரியுது. இதுவும் ஒரு பருவம்தானே, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கலாமே... எப்பவும் மனக்குறையோட இருக்காங்க, ராணா.''
அவன், அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
போனில் அப்பா...
''ஹாய், ரம்மூ... எப்படிடா இருக்கே ராஜாத்தி?'' என்றார்.
''குட்மார்னிங்... சூப்பர்ப்பா... நீங்க?''
''நல்லா இருக்கோம்டா... இன்னிக்கு ஒரு கச்சேரிக்கு போறோம்... உனக்கு பிடிக்குமே, மாடு மேய்க்கும் கண்ணே... அதே மாதிரி, தமிழ்ப் பாட்டு கச்சேரி... அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன், காபி பிரவுன் சாரி வாங்கினோம்.''
''சூப்பர்ப்பா... உங்களுக்கு?''
''அதே கலர்ல, 'மேட்சிங்'கா ஒரு குர்த்தா வாங்கி இருக்கா, அம்மா.''
அதே பழைய, ரங்காராவ் சிரிப்பு.
''அம்மாகிட்ட கொடுங்கப்பா... பக்கத்துலதானே இருக்கா?''
''அவ ரொம்ப, 'பிசி'டா... ஏன், நானும் தான். இப்பவும் கிச்சன்ல தான் இருக்கா. வேணின்னு ஒரு, உதவி பெண் வேற.''
''ஒண்ணும் புரியலேப்பா... என்ன பிசி?''
''உன்கிட்ட சொல்லலேல்ல, சாரிடா... இப்ப தான், கொஞ்ச நாளா இந்த, 'ஸ்மால் பிசினஸ்' ஆரம்பிச்சா... கஞ்சி பவுடர் பாக்கெட், நவதானிய மாவு, குதிரைவாலி குக்கீஸ், பூண்டு ரசப்பொடி, வத்தக்குழம்பு பொடி. 'அபார்ட்மென்ட்' முழுக்க வரிசையில நின்னு வாங்குது...
''அம்மாவால, 'ஆர்டரை' எடுத்து செய்ய முடியல... அதான் உதவிக்கு, 'செக்யூரிட்டி'யோட பொண்ணு வேணியை வெச்சிருக்கா... அம்மா, இப்போ, 'வெரி பேமஸ்' ரம்மூ... 'லோக்கல் பேப்பர்'ல, 'போட்டோ, இண்டர்வியூ' வந்துது... இரு, அம்மாவை கூப்பிடறேன்.''
என்ன சொல்கிறார், அப்பா... எப்படி இவ்வளவு உற்சாகம், தன்னம்பிக்கை தெறிக்கிறது.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகே, 'லைனில்' வந்தாள், அம்மா.
''சாரிடி கண்ணு... ராகி களி கிண்டிகிட்டிருந்தேனா, விட்டுட்டு வர முடியலே... சொல்லுடி ராஜாத்தி, எப்படி இருக்கே, மாப்பிள்ளை, குழந்தைகள்?'' இதயத்திலிருந்து வருகிற மாதிரி, பரிபூரண மகிழ்ச்சியுடன்.
''என்னம்மா மாயம்... ரெண்டு பேரும் இவ்வளவு சந்தோஷமா இருக்கிறது எப்படி இருக்கு தெரியுமா, வெள்ளத்துல இருந்து புரண்டு வந்து கரை சேர்ந்த மாதிரி இருக்கு... லவ் யூ, அம்மா.''
''வேணிக்கும் எல்லாம் சொல்லித் தரேன், கத்துக்கறா... 'பிளாட்' பூரா எங்களோட கருவேப்பிலை பொடி, தேன்குழல், ரவா லாடு. 'பேரீச்சை மில்க் ஷேக்' வேணும்ன்னு சொல்றான், ஒரு காலேஜ் பையன்,'' என, உற்சாகம் ததும்ப பேசிக் கொண்டே இருந்த, அம்மா, ''சரி, ரம்மூ... ராத்திரி கூப்பிடறேன், வேலை இருக்கு,'' என்றாள்.

அருகில் வந்து புன்னகைத்தான், ராணா.
''என்ன இது... இருட்டெல்லாம் மறைஞ்சு வெளிச்சம் பரவின மாதிரி இருக்கு, ராணா... எப்படி இந்த மாற்றம்?''
''சொல்லட்டுமா... சின்னதா ஒரு, 'மேஜிக்' செஞ்சேன்; அவ்வளவு தான்.''
''என்ன... 'மேஜிக்'கா?''
''ஆம்... ஒரு மனிதனுடைய, 'அல்டிமேட்' தேவை என்ன, ரம்யா... பசியா, துாக்கமா, காதலா, இல்லவே இல்லை. அங்கீகாரம்தானே... அதிலும், உன் பெற்றோர் ரொம்ப, 'ஆக்டிவ்'வா இருந்தவங்க... இப்போ வேலை கம்மி, நடமாட்டம் கம்மி என்பதால் யோசிச்சேன்...
''அந்த ஏரியால இருக்கிற என், நண்பன் குடும்பம் மூலமா ஒரு திட்டம் செயல்படுத்தினேன். உன் அம்மாவை, பிரசவ லேகியம் கிளறி தரச் சொன்னாள், என் நண்பனின் மனைவி. உன் அம்மாவும், நிறை மாச பெண்ணை பாத்துட்டு, உடனே கிளறி கொடுத்துட்டாங்க...
''நண்பன் குடும்பத்தோட போய், நன்றி சொல்லிட்டு, 'பருப்புப் பொடி, தனியா பொடி, புதினா பொடி வேணும்'ன்னு கேட்டிருக்கான். சாமான் வாங்கி, செய்து கொடுத்துட்டாங்க... மறுபடி அவன் போய், நன்றி சொல்லி, 'இன்னும் நிறைய பொட்டலம் வேணும்'ன்னு கேட்டிருக்கான்... ரசப் பொடி, ஐங்காயப் பொடி, மாவு, கஞ்சிப்பவுடர்னு ரொம்ப சுறுசுறுப்பா, ஆர்வமா பண்ண தொடங்கிட்டாங்க.''
''ராணா.''
''நோயில் துவண்டு விழும்போது, அன்பு நம்மை தாங்கிப் பிடிக்கும். வாழ்வில் துவண்டு போகாமல் அங்கீகாரம் தான் நம்மைக் காக்கும், ரம்யா. சொல்லப் போனால் மற்றவருக்கு செய்கிற சிறு பணி தான், நம்மை வாழ வைக்கிறது. உன் அம்மாவும் - அப்பாவும், மகிழ்ச்சியாக, இனி, பல்லாண்டு வாழ்வர்.'' அவள் மனது உருகி கரைந்தது.

வானதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - chennai,இந்தியா
06-ஜூன்-202012:23:10 IST Report Abuse
raman இதே மாதிரி கதைகள் நிறைய ஏற்கனவே வந்து விட்டன. சொல்லப்போனால் வாரமலரின் பார்முலா கதையாக இருக்கிறது
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202019:48:15 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பெற்றோர் குழைந்தைகள் நலனில் அக்கறை காட்டும் போது குழந்தைகளும் பெற்றோர் தம் மேல் அக்கறை செலுத்துவர் என்பதை வெளிப்படுத்தியது. ராணா செய்த செயற்கரிய செயல் சோகமாக தம் காலத்தை கழித்தவர்களை நாள் முழுதும் பிறர் நலம் காக்கும் வகையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டது . ரம்யாவின் பெற்றோரை தேனீயாக மாற்றிய ராணா .... பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-மே-202002:22:09 IST Report Abuse
Girija எக்சிகியூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்லமுடியுமா ? பின்லாடன் ஆப்கனிஸ்தான் போனமாசம் பருப்பு பொடி பிரசவ லேகியம் வாங்கிட்டு போனாரு, பணம் வீட்டுக்கு வந்து வாங்கிக்க சொன்னாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X