மகான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

மாலை, 6:00 மணிக்கு வேலை முடித்து, வீட்டுக்குள் நுழைந்தேன். செல்வி முகத்தில் வழக்கமான உற்சாகமோ, புன்னகையோ இல்லை.
''ஏன் ஒரு மாதிரி இருக்கே... என்ன நடந்தது,'' என்றேன்.
''அது என்னங்க, இந்த வயசுலயும் இப்படி ஒரு பிடிவாதம். ஒரு மூலையில் அடங்கிக்கிடக்க, என்ன கேடாம். 'லொக்கு லொக்கு'ன்னு இருமல்... ச்சே... ஒரே தலைவலியா இருக்கு.''
''அவங்களுக்கே உடம்பு முடியல, செல்வி. இன்னும் இருக்கப் போறதென்னவோ கொஞ்ச காலம் தான். அனுசரிச்சுப் போயேன்,'' என்றேன்.
''இப்படி எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக் கிட்டிருப்பீங்க. ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்துடுங்கன்னு பல தடவச் சொல்லிட்டேன். நீங்க காதுல வாங்குனபாடில்ல,'' என்றாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல், கூடத்தில் படுத்திருந்த அம்மாவை பார்த்தேன்.
மனைவி சொல்வதை செய்வதில், எனக்கு உடன்பாடில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, அண்ணன் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்றால், அதுவும் சரியெனத் தோன்றவில்லை.
கோபத்தில் சமையல் செய்யாமல், கட்டிலில் படுத்துக் கொண்டாள், செல்வி.
இப்பிரச்னை, நேற்று, இன்றல்ல... பல நாட்களாய் இருப்பதால், இரவில் நிம்மதியாக துாங்கி பல நாளாகிறது.

இரவு, 11:00 மணி -
மீண்டும் அம்மாவின் இருமல் சத்தம். ஆனால், அது வழக்கத்திற்கு மாறாய் செயற்கையாய் இருந்தது. போர்வையை விலக்கி பார்த்தேன். அம்மாவை காணவில்லை. பதற்றமாய் எழுந்தேன். சமையலறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
தட்டில் தோசையுடன் வந்த அம்மா, ''வெறும் வயித்துல படுத்தா, உடம்புக்கு ஆகாது, ராசா... உனக்கு பசின்னு தெரியும்... அவ எழுந்திரிச்சி பாக்கறதுக்குள்ள, சீக்கிரமா சாப்பிட்டு போய் படு,'' என்றார்.
''நீயும் சாப்பிடும்மா,'' என, நிதானமாய் ஒருவருக்கொருவர் ஊட்டி, சாப்பிட்டோம். பிறகு, மருந்து கொடுத்து, அம்மாவையே சற்று நேரம் பார்த்தேன்.
''என்னை வீட்டை விட்டு அனுப்பிடாதே, ராசா... இங்கயே இருந்துக்கறேனே, உங்க அப்பா கட்டின வீடுப்பா... உசுரு போனா, இங்கயே போகட்டும்,'' இருமியபடி சொன்ன அம்மாவின் மடியில், சற்றுநேரம் தலை சாய்த்தேன். தலையை கோதின அம்மாவின் கைகள். கண்கள் கலங்கினாலும், மனம் அமைதியானது. அதற்கு பின், நிம்மதியான உறக்கம்.
சனிக்கிழமை, காலை -
''தம்பி... வேலைக்கு கிளம்பிட்டியா... சாயங்காலம் வந்ததும், டாக்டர்கிட்ட கூப்பிட்டுப் போறியா, ராசா,'' இருமியபடியே கேட்டாள், அம்மா.
''ஆமா, உங்களுக்கு வேற வேலையே இல்ல... சும்மா வாய மூடிட்டுருங்க... வரும்போது, மருந்து கடையில ஏதாவது மருந்து மாத்திரை வாங்கி வரச்சொல்றேன்,'' கோபமாய் சத்தமிட்டாள், செல்வி.
''கோபப்படாதேம்மா... உடம்புக்கு முடியல, அதான் சொன்னேன்... நீ பத்திரமா போயிட்டு வா ராசா,'' என்றார், அம்மா.
காலையிலேயே பிரச்னை செய்ய வேண்டான்னு, வண்டியை எடுத்தேன். 20 நிமிடத்தில், கூரியர் கம்பெனி வாசலில் வந்து நின்றது.
ஏரியா வாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த பார்சல் மற்றும் தபால்களையும் எடுத்து, கடிகாரத்தைப் பார்த்தேன். 10:00 மணி. நல்ல வெயில். சில கம்பெனிகளுக்கு தபால்களும், பார்சல்களும் பட்டுவாடா செய்தேன்.
அடுத்த பார்சலில், 'கணேசன் காயலாங் கடை, மாரியம்மன் கோவில் தெரு' என, இருந்தது. அந்த இடத்தை அடைந்தேன்.
மணி 11:00. இன்னும் கடை திறந்தபாடில்லை.
அப்போது தான் பழைய இரு சக்கர வாகனம் ஒன்று, கடை வாசலில் வந்து நின்றது. உழைப்பால் உறுதியடைந்திருந்த தேகம், பளீரென நரைத்த தலைமுடி, முறுக்கு மீசை, அழுக்கு வேட்டி - சட்டை, பழைய வார் செருப்பு, 'இவர் தான் கணேசனாக இருக்க வேண்டும்...' என, ஒரு முடிவுக்கு வந்தேன்.
கடையை திறந்ததும், இரும்பு துரு நாற்றம் வீதி வரை வீசியது. கடையினுள் ஊதுபத்தியை ஏற்றி வைத்த பின், பையில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கல்லா பெட்டியில் வைத்தார், மீசைக்காரர். பிறகு, மின் விசிறியை இயக்கினார்.
எந்த வீட்டில் எத்தனை காலம் ஓடி களைத்ததோ தெரியவில்லை. அதன் சுழற்சியில் வேகமில்லை. பழைய பொருட்களோடு கிடந்த இரும்பு நாற்காலி ஒன்றை எடுத்து வாசலில் போட்டு அமர்ந்தார்.
''ஐயா... கணேசன் காயலாங் கடை தானே,'' என்றதும், குரல் கேட்டு, நிமிர்ந்தார்.
நான் எடுத்து வந்திருக்கும் பொருளுக்கும், கடைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால், அவரை மேலும் கீழும் பார்த்தேன். சிரித்தபடியே ரசீதை சரி பார்த்து, பணத்தை கொடுத்து, பொருட்களை எடுத்து உள்ளே வைத்தார்.
அப்போது, அவரது மொபைல் போனில் அழைப்பு. பதற்றமான மீசைக்காரர், கடையை மூடாமல், நான் எடுத்து வந்து கொடுத்த காடாத் துணி, டெட்டால், பேண்டேஜ் இவற்றையெல்லாம் எடுத்து, கடை அருகே நின்றிருந்த பழைய ஆம்புலன்சில் ஏறி, வேகமாக பறந்தார்.
என்ன நடக்கிறது என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அவரைப் பற்றி விபரமறிய அருகேயிருந்த டீ கடையில், ''ஒரு டீ, நல்லா ஸ்ட்ராங்கா போடுங்க,'' என்றேன்.
கணேசன் கடையை உற்றுப் பார்த்தபடி, அருகே அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம், ''ஐயா... இந்த இரும்புக் கடைக்காரர், வேறு ஏதாவது தொழில் செய்யறாரா,'' என்றேன்.
படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை வைத்து, நிமிர்ந்தவர், ''நீங்க, '115 கணேசனை'க் கேட்கறீங்களா... செய்யறது இரும்பு வியாபாரம் தான். ஆனா, எங்க கணேசன், வெள்ளை மனசு கொண்டவர், தம்பி.
''மத்தவங்கள வெறுத்தோ, பழித்தோ பேச மாட்டார். யாருக்காவது எதுன்னா, அடுத்த நிமிஷம் அந்த இடத்துல இருப்பார். இப்படியே, 60 ஆண்டுகளை கடத்திட்டார். ஆமா, நீங்க ஏன் அவரைப் பற்றி விசாரிக்கறீங்க,'' என்றார்.
''ஒரு மருந்து கம்பெனியிலிருந்து, காடாத் துணி, பேண்டேஜ், டெட்டால் இவையெல்லாம் பார்சல்ல வந்திருக்கே... அதான் கேட்டேன்.''
''தம்பி, கணேசனால எங்க பகுதிக்கே பெருமை... வாழ்நாள்ல, அவர் அதிகம் உச்சரித்த வரிகள், 'பயப்படாதீங்க... உங்களுக்கு நானிருக்கேன்... வலிய கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது...' என, சொல்ல கேட்டிருக்கிறேன்,'' என்றார்.
''புரியலைங்கய்யா... ஏதேதோ சொல்றீங்க...''
''இவர், அதிக நேரம் செலவிடறது யாரோட தெரியுமா, தம்பி. விபத்தில சிக்கி, உயிருக்குப் போராடறவங்க... உடம்பு சரியில்லாம, 'சீரியசா' இருக்கறவங்க... பிரசவ வலியால துடிக்கிறவங்க...
''சவக்கிடங்குல பிணத்தை வச்சுக்கிட்டு, வீட்டுக்கு செல்ல பணம் இல்லாதவங்க... போதாக்குறைக்கு, அனாதை பிணங்களை அடக்கம் செய்யிறது வேற,'' என்றார், பெரியவர்.
''இவருக்கு, குடும்பம் இல்லையா?''
''மனைவி இறந்து பல வருஷமாச்சு. பொறந்தது, நாலும் பொண்ணு. ஓரளவு, நல்ல இடத்துல நாலு பேரையும் கட்டிக் கொடுத்துட்டார். எப்போதாவது பார்க்க வருவாங்க. நல்லது கெட்டதுன்னா, கையில கிடைச்சத நாலு பேருக்கும், வித்தியாசம் பாக்காம செய்துடுவார்.''
''இந்த காலத்துல, இப்படியும் ஒரு மனுஷனா... கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆமா, இதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே?''
''ஆமாம்... ஆனா, யாருகிட்டயும், எதுக்கும் காசு வாங்க மாட்டார். யாராவது டீசலுக்கு மட்டும் பணம் கொடுப்பாங்க. பிரசவம், விபத்து, அனாதை பிணங்கள ஆம்புலன்சுல எடுத்து செல்வதை, பெரும் பாக்கியம்ன்னு அடிக்கடி சொல்லுவார்,'' என்றார், பெரியவர்.
''ஆமாங்கய்யா... அவரை, '115 கணேசன்'னு சொல்றீங்க.''
''அது ஒண்ணுமில்ல, தம்பி... அவர் பயன்படுத்தற, ஆம்புலன்சோட பதிவெண் 115. அதை சேர்த்துத்தான், எல்லாரும் சொல்லுவாங்க,'' என்றார், பெரியவர்.

மணி, 1:00. மீதமிருக்கும் தபால் மற்றும் பார்சல்களை கொடுத்தாக வேண்டும். வானம் இருட்டி, சற்று நேரத்தில், மின்னலுடன், துாரல் கனமாக விழத் துவங்கியது. காயலாங் கடை ஓரமாய் நின்றேன்.
மீண்டும், ஆம்புலன்ஸ் வந்து நின்றது. மழையில் நனைந்தபடி, நிதானமாய் வந்தார், கணேசன். அவர் சட்டையிலிருந்து வழிந்த நீரில், ரத்தமும் கலந்திருந்தது.
''தம்பி... நீங்க இன்னும் போகலையா... ஒரு அவசர வேலையா போயிட்டேன். டீ சாப்பிடறீங்களா,'' அனுசரணையான விசாரிப்பு.
''ஐயா... உங்களை பத்தி கேள்விப்பட்டேன். வித்தியாசமானவரா இருக்கீங்க.''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல, தம்பி... நான் ஒரு யதார்த்தவாதி. தேவை முடிந்ததும், விலகிப் போகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் மட்டும், நேசிக்கும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள், இவர்களுடன் தான் வாழறோம்...
''இன்னும் எவ்வளவு காலம், நான் இருக்கப் போறேன், ஒரு மூணு வருஷம்... அஞ்சு வருஷம்ன்னு வச்சிக்கோயேன். அதையும் அடுத்தவர்களுக்காக வாழ்ந்தா, குறைஞ்சா போயிடுவேன். இதோ, இந்த ஆம்புலன்ஸ் தான் எல்லாமே எனக்கு. அதை பராமரிக்க தான், பழைய இரும்பு வியாபாரம் செய்யறேன்,'' என்றார்.
அவர் சொல்லும்போதே மனசு கனத்தது.
''தனி ஆளா, யாரும் செய்ய முன் வராத இந்த வேலையை செய்யறீங்களே... உங்களுக்கு பயம் இல்லையா?''
''பயமா... எனக்கா... விபத்தை பார்த்தபடி போறவங்க தான் அதிகம். சிலர், பதைபதைபாய் ஓடி வந்து, மொபைல் போனில் படம் பிடிச்சிக்கிட்டிருப்பாங்க. என்ன செய்யறது, அப்படியே அள்ளிப் போட்டுட்டு ஓடுவேன். இந்த காலத்துல, ஆறறிவுள்ள மனுஷ ஜாதிக்கு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம போயிடுச்சி...
''ஒரு மனிதன் சாகும்போது தான், அதுவரை சவமாகக் கிடந்த அவன் மனசாட்சிக்கே உசிரு வருது. குற்றுயிரும் குலையுயிருமா மனிதர்களை பார்த்துப் பார்த்து, உயிர் மேலயே பயம் போயிடுச்சு, தம்பி. சொல்லப் போனா, உடம்பு மேல பற்றும் இல்ல.''
''அப்படி சொல்லாதீங்க ஐயா... நீங்க நல்லா இருக்கணும். பல காலம் வாழணும். அப்போதான் கொஞ்ச நஞ்ச மழையாவது பெய்யும்,'' என்றபடி, மழை நீரில் கையை நனைத்தேன். உடல் சிலிர்த்தது.
கடைக்குள் சென்ற மீசைக்காரர், பழைய இரும்புகளை பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார்.
மொபைல் போனில் அழைத்த செல்வி, ''என்னங்க... எங்க இருக்கீங்க?'' என்றாள்.
வழக்கத்திற்கு மாறாக குரல் பதற்றமாய் தெரிந்தது.
''என்னாச்சு செல்வி...''
''அம்மா, 'டாய்லெட்'ல வழுக்கி விழுந்துட்டாங்க... தலையில் பலத்த அடி... இப்போ, அவங்களோட மருத்துவமனையில தான் இருக்கேன்.''
''அய்யோ, என்னாச்சு... இப்போ எப்படி இருக்காங்க.''
''இப்போ பரவயில்லைங்க... பயப்படற மாதிரி ஒண்ணுமில்ல. யாரோ, 115 கணேசனாம். முகம் தெரியாத அந்த மனுஷன் தான் ஆம்புலன்ஸ் எடுத்து வந்தாராம்,'' தேம்பி அழுதபடி சொன்னாள், செல்வி.
''யாருக்கு அடிபட்டிருக்கு, தெளிவா சொல்,'' என்றேன்.
''என் அம்மாவுக்குதாங்க, எல்லாம் நான் செஞ்ச வினை... அந்த, 'கணேசன் அண்ணா' மட்டும், சரியான நேரத்துக்கு வரலைன்னா, அம்மாவ உயிரோடவே பார்த்திருக்க முடியாதாம். நீங்க, உடனே வீட்டுக்கு போங்க. அத்தை, தனியா இருப்பாங்க.
''அம்மா கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு, சாயங்காலம் வந்துடறேன். வந்ததும், அத்தையை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகலாம்,'' என்றாள், செல்வி.
உடனே, அம்மாவை பார்க்க ஆசையாய் இருந்தது. ஆனால், மழை விடவில்லை.

மீண்டும் மொபைல் போன் அழைப்பு, வெளியே கிளம்பினார், மீசைக்காரர்.
''என்ன ஐயா... மறுபடியும் மழையில கிளம்பிட்டீங்க?''
''என்ன செய்யறது, தம்பி... மழை, புயலையெல்லாம் பார்த்தோம்னா, போற உயிரைக் காப்பாத்த முடியாது. ஒவ்வொரு முறை போன் வரும்போதும், 'அவங்களுக்கு எதுவும் நடந்துடக் கூடாது'ன்னு வேண்டிக்கிட்டு தான் கிளம்புவேன். சீக்கிரம் சென்றடைய முடியாததால, சில நேரம் உயிரிழப்பு ஏற்படும்,'' என்றபடியே ஆம்புலன்சில் ஏறினார்.
இரு பக்கங்களிலும், பின் கதவிலும், 'உள்ளே இருப்பது, உயிருக்குப் போராடும் உயிர். வழி விட்டு, உயிரைக் காப்பாற்றுங்கள்...' என்ற வரிகள், மனதை நெருடின.
ஒரு மகானை பார்த்து பழகிய உணர்வுடன், என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது.
செல்வியின் மனசாட்சிக்கு உயிர் தந்த, அந்த மகானுக்கு நன்றி சொல்லி, அம்மாவை பார்க்க, வேகமாய் வீடு விரைந்தேன்.

பூ. கலைபாரதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Santhi - kalpakkam,இந்தியா
05-ஜூன்-202016:25:01 IST Report Abuse
N. Santhi நீண்ட நாட்களுக்கு ஒரு நல்ல கதை படித்த நிறைவு .
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202022:45:16 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI கணேசன் ஒரு மகான் மட்டுமல்ல. மகாத்மா. இந்த உலகத்தில் பாரதிதாசன் "இருண்ட உலகம் " பாடலில் சொன்னால் கடுகு போன்ற குணமுடையவர்கள் தான் அதிகம். தான் தன் பிள்ளை மட்டும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கணேசன் போல சொற்ப மனிதர்களே பிறர் நலனை பேணி காப்பவர்களாய் உள்ளனர். செல்வி போல இருந்து தன் தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த பிறகாவது திருந்தினால் பரவாயில்லை. நல்லதிரு கதை. நன்றி
Rate this:
Cancel
ponmahalingam - கூடுவாஞ்சேரி 603202,இந்தியா
31-மே-202010:36:39 IST Report Abuse
ponmahalingam சைக்கிள் ஓட்டுவதில் இத்தனை நன்மைகளா? நான் சைக்கிள் வாங்க முடிவெடுத்து விட்டேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X