பா-கே
அன்று, மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே, 'மணி... நாளை காலை, 'வாக்கிங்' போலாம்பா... இப்போதெல்லாம் சீக்கிரமே பொழுது விடிந்து விடுவதால், 5:00 மணிக்கே கிளம்பி, கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டி சென்று வரலாம்பா. நான் வந்து, உன்னை, 'பிக் - அப்' செய்துக்கிறேன்...' என்று, கூறி சென்றார், லென்ஸ் மாமா.
'வாக்கிங்' சென்று நீண்ட நாட்களாகி விட்டதே... சரியென நானும், ஒப்புக் கொண்டேன்.
சரியாக, 5:00 மணிக்கு காரில், 'மாஸ்க்' மற்றும் கையுறை அணிந்தவாறு வந்து விட்டார், மாமா. நானும், அதே, 'கெட் - அப்'புடன் கிளம்பினேன்.
கிழக்கு கடற்கரை சாலையை தொட்டிருப்போம். கார், 'டெம்போ, டூ - வீலர்' என்று, வாகனங்கள், சாரி சாரியாக சென்று கொண்டிருந்தன. அனைத்து வாகனங்களிலும், மக்கள், குடும்பம் குடும்பமாக, குழந்தை குட்டிகளுடன், எந்த சமூக இடைவெளியையும் பின்பற்றாமல், பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஒருவேளை, வெளி மாநில தொழிலாளர்களா என்று பார்த்தால், நம்மூர் முகங்களாக தான் தெரிந்தன.
'இவர்களெல்லாம் எங்கே போகின்றனர்...' என்று, மாமாவிடம் கேட்டேன்.
'மணி... ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லக் கூடாது என்று, தமிழக அரசு தடைவிதித்துள்ளது அல்லவா... பகல் நேரத்தில் சென்றால், போலீஸ் பிடித்துக் கொள்ளும். எனவே, இரவோடு இரவாக, சென்னையிலிருந்து பலரும், இப்படி திருட்டுத்தனமாக, தங்கள் சொந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர்...' என்றார்.
இதைக் கேட்டதும், அதிர்ச்சியாக இருந்தது. எதிரில், ஒரு குப்பை அள்ளும் லாரி... முகப்பில், 'ஸ்பீக்கர்' கட்டியபடி, 'வேணாம் வேணாம்... வெளியில் வர வேணாம். மீறி வெளியே வந்தா, 'லைப்' போயிடும், வேணாம்...' என்று, சினிமா பாடல் மெட்டில் அமைந்த, கானா பாடலை அலற விட்டபடி வந்தது.
'இந்த மக்கள், எப்போது தான் திருந்துவரோ...' என்று நினைத்தபடியே, கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தேன்.
ப
வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகள், பேரிடர்கள் வந்தாலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், ஒருவரை, வாழ்க்கையின் உச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு, பெங்களூரில் வசிக்கும், ராகவேந்தர் என்ற வாசகர் மிகச் சிறந்த சான்று. சமீபத்தில், அவர் எனக்கு எழுதிய கடிதம் இதோ:
அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு, அன்பான வணக்கங்கள்.
கடந்த, 20 ஆண்டுகளாக, உங்கள் வாசகன், நான்.
நான், 10ம் வகுப்பு படிக்கும்போது, வலது இடுப்பு உடைந்து, சென்னையில், மூன்று அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தது. மருத்துவர்களின் அஜாக்கிரதையால், மூன்றும் தோல்வியடைந்தன; அமரும் தன்மையை இழந்தேன்.
கர்நாடக சங்கீதம் கற்றேன். கடவுள் அருளால், கர்நாடகாவிலும், தமிழகத்திலும், இதுவரை, 21 கச்சேரிகள் செய்துள்ளேன். மூன்று ஆண்டுக்கு முன், கோவையில், கங்கா மருத்துவமனை, டாக்டர் ராஜசேகரனிடம் ஆலோசனை செய்தேன். உடல் குறைபாட்டை சரி செய்ய, மேலும் சில அறுவை சிகிச்சை செய்யலாம் எனக் கூறினார்.
அதன்படி செய்தேன். இப்போது, என்னால் இயல்பு நிலையில் வாழ முடிகிறது.
'என் தொழிலை மேலும் திறம்பட செய்யவும் முடியும்...' என, கூறியுள்ளார், டாக்டர்.
நான் இப்போது, பெங்களூரில் வசிக்கிறேன்.
இவ்வளவு ஆண்டுகளாய் சிரமப் பட்டாலும், என் நேர்மறையான எண்ணம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் பழைய வாழ்க்கையை மீட்டெடுத்துள்ளேன். உங்களிடமிருந்து பதில் வந்தால், மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
- இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
இவரைப் போல் வாசகர் அனைவரும், நேர்மையான எண்ணம், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்!
குறைவான ஊழியர்கள் வருவதால், டீ கொடுக்கும் வேலையும் குறைந்து, நிறைய நேரம் இருந்ததால், அலுவலக நுாலகத்தில், 'ஷெல்பில்' இருந்த புத்தகங்களை அடுக்கி வைக்கும் வேலையை எடுத்துக் கொண்டேன்.
அப்போது, 1965ம் ஆண்டில் வெளியான, 'கல்கண்டு' இதழ் ஒன்று கண்ணில் பட, புரட்டினேன்.
அதில், இடம்பெற்ற இரு துணுக்குகளை படித்தேன். அது:
கொலைக்கார சீனர்கள், இந்தியாவில் அதிகமாக இருக்கின்றனர்!
இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவர்களை எல்லாம், திடீரென்று ஒருநாள், கைது செய்து, சிறையில் தள்ளியது அல்லவா. அப்போது, இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட போவது யாருக்குமே தெரியாது என்று, எல்லாரும் நினைத்தனர். ஆனால், கம்யூனிஸ்ட்களை கைது செய்யப் போவது, அவர்களுக்கு எப்படியோ முன்பே தெரிந்து விட்டது.
இதனால், இடதுசாரி கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் இருந்து பல ரகசிய கடிதங்களும், தஸ்தாவேஜ்களும், போலீசாரிடம் கிடைப்பதற்கு முன்பே, தீக்கு இரையாகி விட்டன.
கல்கத்தாவில் (இப்போது, கோல்கட்டா) கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சோதனை போட்டபோது, எல்லா ரகசிய கடிதங்களும் எரிந்து, சாம்பலாகி கிடந்தன.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் கூட இப்படியே எல்லா சான்றுகளும் முன்னதாகவே கொளுத்தப்பட்டிருந்தன. லக்னோவில் இருந்த, 'பைல்'களில் பல எப்படியோ மாயமாய் மறைந்து விட்டன.
இதிலிருந்து என்ன தெரிகிறது... சீன ஒற்றர்கள் பலர், இந்தியாவின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து வைத்து, வேலை செய்து வருகின்றனர் என்பது.
சீனாவை பற்றி எதுவுமே நம்மால் சிறிதும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தியாவை பற்றி சீனர்கள் வேண்டிய அளவுக்கு தெரிந்து கொள்கின்றனர்.
இப்போது கூட, நமது எல்லையோரம் சீனாவின் வாலாட்டம் தொடர்கிறதே... இதற்கு இங்குள்ளவர்கள் யார் காரணமோ!
தங்கத்தின் மதிப்பு குறைவது இல்லையே ஏன்?
தங்கத்தின் மதிப்பு, எந்த காலத்திலும் குறைவதில்லை. அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி, தங்கம் என்றால், அதற்கு எப்போதுமே ஒரு மதிப்பு இருந்து கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம், தங்கம் மிக குறைந்த அளவில் கிடைத்து வருவது தான். பணத்தின் மதிப்பு இன்று குறைந்து வந்தாலும் கூட, தங்கத்தின் மதிப்பு இன்னும் குறையவில்லை. தங்கம் சிறிய அளவில் இருந்தாலும், அது, பெரும் மதிப்பை பெற்றிருக்கிறது.
தங்கத்தின் அளவு சிறியதாக இருப்பதால், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, அதை எளிதில் எடுத்து போக முடியும்; நெருப்பால் இதை அழிக்க முடியாது; கரையான்களால் இதை தின்று விட முடியாது. இந்த காரணங்களால் தான், இன்று எல்லா நாடுகளும் தங்கத்தை சேமித்து வைத்து, அதற்கு ஏற்றபடி நோட்டுகளை அச்சடித்து தள்ளுகின்றன.
தங்கத்தை, எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். இதனால் தான், தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறைவதில்லை.
திடீரென்று, நோட்டு செல்லாது என்று, ஒரு நாட்டில் சட்டம் கொண்டு வர முடியும். ஆனால், எப்போதும், எந்த காலத்திலும், தங்கத்திற்கு மதிப்பில்லை என்ற நிலைமையை, எந்த நாட்டிலும் கொண்டு வர முடியாது.
கல்கண்டு ஆசிரியராக அப்போதிருந்த, தமிழ்வாணனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி, வியந்தேன்.