எங்கு செல்வது என்று தெரியாமல் தான், உட்கார்ந்திருந்தேன். வகை வகையான மனிதர்கள், விதவிதமான வண்டிகள், ஒலி, பேச்சு, கூச்சல்கள்... எதுவும் என் நினைவுகளை கலைக்கவில்லை.
மனம் சண்டிமாடாய் நடந்தவைகளையே அசை போட்டது.
'அப்பா...'
'என்னடா?'
'உங்களுக்கு எத்தனை தடவை சொல்றதுப்பா... காபி குடிச்சா, டம்ளரை கட்டில் கீழே வெச்சுடறே... சட்டை ஒரு இடம், பனியன் ஒரு இடமா போட்டுட்டு போற... 'வாஷிங்மிஷின்' பக்கத்துல எடுத்து போடேம்பா...'
'இப்ப என்ன அதுக்கு?'
மனைவியின் வார்த்தைகளுக்கு இவன், 'டப்பிங்' பேசுகிறான் என்று புரிந்தது.
'என்னன்னா... எத்தனை வேலைய தான் அவளால பாத்து பாத்து செய்ய முடியும். எனக்கும், பசங்களுக்கும் சமைச்சு அனுப்பி, வீட்டை ஒழுங்குபடுத்தி, அவளும் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேணாமா... 'பிரெட்' வேணாம், உப்புமா வேணாம், வேற ஏதாவது பண்ணி குடுக்க சொல்ற... அதுலயும் உப்பு இல்ல, ஒரப்பு இல்லேன்னு குத்தம்...'
'ஏண்டா... எனக்காக செய்தா என்ன, உங்க அம்மா செய்து தரலியா... ரொம்ப தான் பொண்டாட்டிக்கு உருகறே...'
'அம்மா விஷயம் வேற... அவங்க, உனக்கு பயந்து பயந்து செய்தா... இப்ப காலம் வேற...'
அதற்கு மேல் பேச பிடிக்காததால், அறைக்குள் சென்று தாழிட்டேன்.
இப்போதெல்லாம், 'பாத்ரூம்ல எண்ணெய் கிண்ணத்தை கவிழ்த்து வெச்சுட்டே, வழுக்கி, அவ கால் சுளுக்கிடுத்து... பேரன், 'நோட்ஸ்' எழுதி வெச்ச பேப்பர்ல, விபூதி மடிச்சு வெச்சுட்டே... அவ சமைச்சுகிட்டு இருக்கறப்ப, பாத்ரூம்ல இருந்துகிட்டு, வெந்நீர் போறலேன்னு கத்தறே...' என, அடிக்கடி, ஏதாவது வாக்குவாதம் நடக்கும்.
மனைவி இருந்த வரை, என் விருப்பமாய் நடந்த குடும்பம். இன்று, இவர்களிடம், இப்படிபட்ட பேச்சை கேட்பது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒருநாள் மனம் வெறுத்து, ஓய்வூதிய பணம் இருப்பதால் கவலையில்லையென, 'நீண்ட யாத்திரை செல்கிறேன். வரும் வரை தேட வேண்டாம்...' என்று எழுதி வைத்து, கிளம்பி விட்டேன்.
எந்த யோசனையும் இல்லாமல், ஒரு வேகத்தில் கிளம்பி விட்டதால், எங்கே செல்வது என்று புரியாமல், முதலில் ஏதோ ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், அங்கு ஏனோ சரிப்படவில்லை.
பாதி வேக வைத்த அரிசியும், ஒரே மாதிரியான சமையலும், ஒரே மாதத்தில் அலுத்து போயிற்று.
அடுத்து என்ன செய்வதென்று யோசித்தபோது, ஓட்டலில் நண்பரான ஒருவர் சொன்னதை கேட்டு, ஒரு வீட்டில், 'பேயிங் கெஸ்ட்' ஆக தங்கினேன்.
அங்கு, வீட்டு சமையல் என்பதால், குறை சொல்லும்படி எதுவுமில்லை. ஆனால், அவர்கள் பணம் வசூலித்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. துணி துவைக்க, அறை பெருக்க வரும் வேலையாட்களுக்கு மற்றும் அறை வாடகை தனியாக என, எதற்கெடுத்தாலும் ஒரு தொகை.
என்றாவது அதிகப்படியான புது அயிட்டம் சமையலில் இருந்தால் அதற்கும் பணம் தரவேண்டும். இதெல்லாம் என் வருமானத்திற்கு அதிகப்படியாய் இருந்தது.
மூன்று மாதம் சமாளித்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அவர்களே ஒரு வழி காட்டினர். சரியென்று பட்டது.
முதியோர் இல்லத்தில் சேர்ந்து, அங்கே சவுகரியப்பட்டால், பிள்ளைக்கு தகவல் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து, அங்கு சேர்ந்தேன்.
இரண்டே மாதங்களில் எத்தனை அனுபவங்கள்.
நேரத்திற்கு எழுந்து விட வேண்டும். சரியான நேரத்திற்கு, சாப்பாட்டு அறைக்கு சென்று விடவேண்டும். அவர்கள் சமைத்த மெனு தான் சாப்பாடு.
உப்பு, காரம் சரியில்லை என்று, ஒரு முதியவர் கேட்டார்.
'பெரிசு... இந்த வயசுக்கு இதுக்கு மேல உப்பு, காரம் சேர்க்க கூடாது. மொத்தம், 70 பேர் சாப்பிடறீங்க... தனித்தனியா பாத்து சமைக்க முடியுமா... வூட்ல சரியில்லேன்னுதானே இங்க வந்த... இங்கயும் தொண தொணக்கறே...' என்றார், பரிமாறும் சிப்பந்தி.
இவர்கள் எல்லாம், தங்கள் வீட்டில் எவ்வளவு கெத்தாய் இருந்திருப்பர் என்று நினைத்தேன்; என்னையும் சேர்த்து தான்.
ஒவ்வொரு முதியவரின் அனுபவத்தையும் கேட்டபோது, மனம் வலித்தது.
இப்படியெல்லாம் கூட உறவுகள் இருக்க முடியுமா... யாரும் விரும்பி வரவில்லை; உறவுகளின் கசப்பின் வெளிப்பாடு, இவர்களை இங்கு அனுப்பி இருக்கிறது.
சிலர், கண்ணீருடன் தங்கள் கதையை சொல்லி குலுங்கியபோது, அதுவரை எனக்குள் இருந்த ஏதோ ஒரு இறுக்கம் தளர்ந்ததை போல் உணர்ந்தேன்.
இனியும் இங்கு இருக்க வேண்டாம் என முடிவெடுத்து, அங்கிருந்து விடைபெற்று கிளம்பி விட்டேன்.
எங்கு செல்வது என்று மனம் தீர்மானிக்காததால், நினைவுகள், மனதை கொத்திக் கொண்டிருந்தன. பின், உறுதியான முடிவுடன் வீட்டை நோக்கி சென்றேன்.
''வாங்கப்பா... யாத்திரையெல்லாம் நல்லபடி ஆச்சா,'' என, மகனின் அன்பு தெரிந்தது, அவன் குரலில்.
பேரக் குழந்தைகள் ஆசையுடன் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர்.
''வாங்க மாமா... முதல்ல காபி சாப்பிட்டு, அப்புறம் அறைக்கு போங்க,'' மருமகளின் அக்கறை புரிந்தது.
காபியை குடித்து, டம்ளரை கழுவி, டேபிளில் கவிழ்த்து வைத்தபோது, கொஞ்சம் வியப்பாய் பார்த்தாள், மருமகள்.
அறைக்குள் நுழைந்தேன். எதுவும் கலையாமல், அப்படியே இருந்தது. நான் வருவேன் என்ற, அவர்கள் நம்பிக்கையை காட்டியது.
குளித்து, சாப்பிட அமர்ந்தேன்.
எனக்கு பிடித்த சமையல்; நல்ல ருசி. பல மாதத்திற்கு பின், நன்றாக சாப்பிட்டேன். நான் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான், மகன்.
இது எதுவும் புதிதில்லை. எப்போதும் நடப்பது தான். இதை புரிந்துகொள்ளும் மனம், அன்று என்னிடம் இல்லை.
மாலையில், மாடி தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றேன்.
அப்பப்பா, எவ்வளவு அருமையான தோட்டம். அத்தனையும் மருமகளின் பராமரிப்பு.
செடியும், கொடியும், பூவும், பிஞ்சும். இப்படி ஒரு அருமையான, மாடி தோட்டத்தை மருமகள் பராமரிப்பதை, ஒருநாளும் நான் வந்து பார்த்ததில்லை.
''மாமா... நீங்க எதுக்கு மேலே ஏறி வர்றீங்க,'' என்றாள், மருமகள்.
''இருக்கட்டும்மா... இனிமே இதெல்லாம் என்னோட வேலை... நீ கீழே போய் பசங்களை பாரு,'' என்றேன்.
அவள், நன்றியுடன் என்னை பார்த்தபடியே இறங்கினாள்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன்.
வெளி வெப்ப காற்று, செடிகளின் இடையே புகுந்து குளிர்ச்சியாய் மாறி இதமாக வீசியது.
சாந்தா