அன்புள்ள அம்மா —
என் வயது, 38. நான் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்தபோது, உடன் படித்த நண்பருடன், காதல் கொண்டேன். நாங்கள் இருவரும் படிப்பு முடித்தோம். நண்பருக்கு, வங்கியில் வேலை கிடைத்தது.
நான், தாழ்த்தப்பட்ட நடுத்தர குடும்பம்; அவர், பிற்படுத்தப்பட்ட, வசதியான குடும்பம். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. இருப்பினும், பத்திரிகை அடித்து, வங்கி ஊழியர்கள், நண்பர்களை அழைத்து, திருமணத்தை, கோவிலில் மிக சிறப்பாக நடத்தினார். சில மாதங்களில், வேறு கிளைக்கு மாறுதலாகியது. அங்கு, தனிக்குடித்தனம் வந்து சந்தோஷமாக வாழ்ந்தோம்.
அவருக்கு, தாயாரும், திருமணம் ஆகாத, மாற்றுத்திறனாளி அக்காவும் உள்ளனர்.
இந்நிலையில், முதல் மகனை பெற்றெடுத்தேன். சில மாதங்களில், என் பெற்றோர் வீட்டிற்கு கணவருடன் சென்றேன். அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பிறகு, என் தாய் வீட்டிற்கு இருவரும், அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்தோம்.
இரண்டாவது மகன் பிறந்தான். நானும், கணவரும், குழந்தைகளும், சந்தோஷமாக, 10 ஆண்டுகள் வாழ்ந்து வந்தோம். மகன்கள் இருவரும் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில், அவரது தாயார், அடிக்கடி வங்கிக்கு வந்து, மகனுடன் சண்டை போட்டு, சொந்த ஊருக்கு வரும்படி தொந்தரவு செய்தார். தொல்லை தாங்காமல், சொந்த ஊர் வங்கி கிளைக்கு மாற்றலானார், கணவர். சில நாட்கள் கழித்து எங்களை அழைத்துச் சென்றார்.
அங்கு போனவுடன், கணவரது தாயாரும், அக்காவும் என்னுடன் சண்டையிட ஆரம்பித்தனர். இதுகுறித்து, கணவரிடம் கூறியபோது, அவர்களை கடுமையாக கண்டித்தார். ஆனால், அவர் இருக்கும்போது சந்தோஷமாகவும், போன பின், சண்டையிட்டும் வந்தனர். இது, தினம் வாடிக்கையானது. மகன்களின் படிப்பு கருதி, பொறுமை காத்தேன்.
நாளுக்கு நாள் அவர்களின் தொல்லை அதிகமானதால், ஒரு கட்டத்தில், கணவருடன், என் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். என்னை, தாய் வீட்டில் விட்டு, அவர் வேலைக்கு சென்றார்; மகன்களையும் தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டார். அவ்வப்போது குழந்தைகளுடன் வந்து பார்த்து செல்வார். என்னால் அங்கு போக இயலவில்லை.
இந்நிலையில், அவர் குடிபழக்கத்திற்கு அடிமையானார். இதையறிந்து, அவருடன் சண்டையிட்டேன். நான்கு மாதங்களில், வேறு ஒரு வங்கி கிளைக்கு மாற்றலாகி, அங்கு வீடு பார்த்து, என்னை அழைத்து சென்று விட்டார். மகன்கள் இருவரும், அவர் அம்மா வீட்டில் இருந்து படித்து வந்தனர்.
என் மகன்கள் இருவரையும், பழநியில் உள்ள தேவஸ்தான இலவச விடுதியில் சேர்த்து, காப்பாளராக அவர் பெயரை பதிவு செய்திருந்தார், அவரது அக்கா. விடுதியில், மகன்களை சேர்த்தது குறித்து கணவரிடம் கேட்ட போது, அவருடைய அம்மா தான் சேர்த்தார் என்று, ஆறுதல் கூறினார்.
விடுமுறையில், நானும், கணவரும், பழநி சென்று மகன்களை பார்த்து வந்தோம். இதன்பின், மாமியாரையும், அவரது அக்காவையும் தொடர்பு கொள்ளவில்லை.
கோவைக்கு அருகில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றபோது, அவர் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகி, அதே இடத்தில் இறந்தார். அதன் பின், என் வாழ்க்கை சூன்யமாகியது.
அக்காவும், தாயாரும் எனக்கு தெரியாமலேயே, அவரது பணப் பலன்களை பெற முயற்சி செய்தனர். வங்கியில் உள்ளவர்கள், அவரது பணப் பலன்களை பெறுவதற்காக, என்னை அழைத்து உரிய நடைமுறைகளை தயார் பண்ண கூறினர்.
என் பெயர், மாமியார் பெயர், மகன்கள் இருவருடன் சேர்த்து வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். சான்றிதழ் பெற்றவுடன், மாமியாரும், அக்காவும் பணப் பலன்கள் முழுவதையும் அவர்களுக்கு தருமாறு மிரட்டினர். இதுகுறித்து வங்கியில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தேன். நான்கில் ஒரு பங்கை மாமியாருக்கு கொடுத்து, மீதியை அதே வங்கியில், 'டெபாசிட்' செய்தேன்.
கணவரின் வேலைக்காக, வங்கியில் கடிதத்துடன், சான்றிதழ்களும், தாசில்தாரிடம் பெற்ற சான்றிதழையும் இணைத்திருந்தேன். ஆனால், இப்போது, மாமியாரிடமிருந்து, என்.ஓ.சி., வாங்கி வந்தால் தான், வங்கி வேலை கிடைக்கும் என்கின்றனர்.
மாமியாரிடமிருந்து, என்.ஓ.சி., வாங்க இயலாது. மகன்களை பார்க்க சென்றால், காப்பாளர் சொன்னால் தான் அனுப்ப முடியும் என்கின்றனர்.
இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது, அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
திருமண வாழ்வில், 10 ஆண்டு பிரச்னைகளை சந்தித்துள்ளாய். ஜாதி வெறியும், பணத்தாசையும் உன் மாமியாரையும், நாத்தனாரையும் தலைவிரித்து ஆட செய்துள்ளன.
உன் மீதும் சில பல தவறுகள் உள்ளன. முதலில் இருந்தே உன் மாமியாரும், நாத்தனாரும் உன்னை அதிகாரம் செய்ய விட்டு விட்டாய். தவிர, உன் அரவணைப்பில் இருக்க வேண்டிய இரு மகன்களையும், இரு அரக்கிகள் பாதுகாப்பில் விட்டு விட்டாய்.
உன் மீது எவ்வித பயமும் இல்லாததால் தான், அனுமதி இல்லாமல், நாத்தனார், இரண்டு மகன்களை பழநி தேவஸ்தான இலவச விடுதியில் சேர்த்திருக்கிறார். உனக்கு, மகன்கள் மீதான பாசமும், அரவணைப்பும் மிகக்குறைவு.
இரு பிரச்னைகளை பற்றி ஆலோசனை கேட்டிருக்கிறாய்.
கணவன் இறந்ததால், உனக்கு, கருணை அடிப்படையிலான பணி வழங்க, மாமியாரிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வாங்கி வர, வங்கி நிர்வாகம் கூறுகிறது என்கிறாய்.
இது தவறு. இப்படி வங்கி நிர்வாகம் கூற முடியாது. நீ, உன் கணவனுக்கு ஒரே மனைவி. உங்களது திருமண சான்றிதழை காட்டியிருப்பாய்.
கலப்பு திருமணத்தின் போது, ஆணும், பெண்ணும் வேலை இல்லாமல் இருந்தால், யாராவது ஒருவருக்கு, வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்கிற அரசு உத்தரவும் இருக்கிறது. உனக்கு வேலை வழங்கக் கூடாது என, வங்கி நிர்வாகத்திடம், உன் மாமியார் தகராறு செய்கிறார் என்றால், அவர் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு.
காவல் நிலைய ஆய்வாளர், மாமியாரை கூப்பிட்டு விசாரிப்பார். 'இனி, மருமகள் விஷயத்தில் பிரச்னை பண்ண மாட்டேன்...' என, மாமியாரிடம் எழுதி வாங்கு.
வங்கி நிர்வாகத்திடம் பேச போகும்போது, ஒரு பெண் வழக்கறிஞரை அழைத்து போ. மாமியாரிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதை, வழக்கறிஞர் சட்ட அபிப்ராயம் தெரிவிக்கட்டும்.
அத்துடன், உன் மாமியாரிடம், மகளிர் காவல் நிலையத்தில் எழுதி வாங்கிய மன்னிப்பு கடித நகலை, வங்கி நிர்வாகத்திடம் கொடு. அப்படியும் வங்கி நிர்வாகம் ஒப்பு கொள்ளாவிட்டால், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு போடு. நியாயம் கிடைக்கும்.
உன் இரண்டாவது பிரச்னை... மகன்களை பழநி தேவஸ்தான இலவச விடுதியிலிருந்து மீட்பது...
இப்போது உன் மகன்களுக்கு,
10 வயதும், எட்டு வயதும் ஆகும் இல்லையா... உனக்கும், உன் மகன்களுக்கும் உறவுமுறை நன்றாகதானே இருக்கிறது. இல்லை, உன் மகன்கள், உன்னை விட்டுவிட்டு, நாத்தனாரை, அம்மா என்று அழைக்கின்றனரா?
இங்கும், துணைக்கு ஒரு சிவில் வழக்கறிஞரை அழைத்துப்போ... பழநி காவல் நிலையத்தில் இலவச விடுதியின் மீதும், நாத்தனார் மீதும் புகார் கொடு.
புகாருடன், மகன்களின் பிறந்தநாள் சான்றிதழ், நீயும், மகன்களும் இருக்கும் புகைப்படங்கள், கணவனின் மரண சான்றிதழ் நகல், நீயும், கணவனும், மகன்களை தாய் என்ற உரிமையில் ஏற்கனவே விடுதியில் பார்த்து வந்த தேதி ஆதாரத்தை சமர்ப்பி.
மகன்கள் உன்னை பார்த்ததும், 'அம்மா...' என, ஓடி வருவர் தானே...
அப்படி அவர்கள் வராவிட்டால், 'நாத்தனார், மகன்களை மூளைச்சலவை செய்து விட்டார்...' என, புகார் செய்.
குழந்தைகளுக்கு, தந்தையும், தாயும் தான் உரிமை கொண்டாட முடியும். தந்தை உயிருடன் இல்லாத போது, தாய்க்கு தான் முழு உரிமை.
கருணை அடிப்படையிலான வேலையும், இரண்டு மகன்கள் மீதான தாய் பாசமும், உனக்கான பிறப்புரிமை. கெஞ்சி கேட்காதே; தட்டிக்கேள்.
விரைவில் பணியில் சேர்ந்து, இரண்டு மகன்களுடன் அர்த்தப்பூர்வமாய் வாழ். தகவல் தொடர்பை அதிகப்படுத்து.
நாளை நமதே மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.