இரவு, 11:00 மணி -
டிரைவர் காரை செலுத்த, நிர்சிந்தையாக அமர்ந்திருந்த, கவுதமன், ஜன்னல் வழியே பார்த்தார். அடர்ந்த இருட்டுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, அமைதியாக காட்சியளித்தது, பூமி.
'அமைதியாக தெரியும் இந்த இருள் தான், எத்தனை ஆழமானது; மனித மனங்களைப் போல...' என, எண்ணிக் கொண்டார். நிமிர்ந்து வானத்தைப் பார்க்க, பிரபஞ்சத்தின் வட மூலையில், அழகாக மின்னிக் கொண்டிருந்தது, துருவ நட்சத்திரம்!
சிறிது நேரம், அதையே உற்றுப் பார்த்தவருக்கு, தன் தாயின் நினைவு வர, அவரையும் அறியாமல் வெளிப்பட்ட பெருமூச்சில் வெப்பம் தகித்தது...
கணவனை இழந்து, கைக்குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்த போது, கற்பகத்திற்கு, 20 வயது.
மதுரை நீதிமன்றத்தில், குமாஸ்தாவாக தற்காலிக வேலை பார்த்த அவள் கணவன், சாலை விபத்தில் மரணிக்க, கைக்குழந்தையுடன் நிலைகுலைந்து போனாள், கற்பகம். அவள் மனதில், தங்கள் இருவரின் பெற்றோரும் உலகில் இல்லாத நிலையில், 'இனி எப்படி வாழப் போகிறோம்...' என்ற பயமே, கணவனை இழந்த துக்கத்தையும் மீறி பயமுறுத்தியது.
அவள் அண்ணன் தான், தன்னோடு அழைத்து வந்தான்.
பிள்ளையுடன் பிறந்த வீட்டிற்கு வந்த கற்பகத்தை, வேலைக்காரியை விட மோசமாக நடத்தினாள், அண்ணி சுந்தரி.
குழந்தை பாலுக்கு அழுதால் கூட, 'தரித்திரம்... எப்ப பார்த்தாலும் அழுகை... இப்படி அழுது அழுது தான், பெத்தவன முழுங்கிடுச்சு... இப்ப யார முழுங்க இப்படி அழுவுதுன்னு தெரியல... எல்லாம் என் தலையெழுத்து, இதுகளுக்கெல்லாம் வடிச்சுக் கொட்டணும்ன்னு...' என்று, அலுத்துக் கொள்வாள்.
எல்லாவற்றையும் மவுனமாக கேட்டுக் கொள்வாள், கற்பகம். அவளால் வேறு என்ன செய்ய முடியும்?
படிப்போ, பணமோ இல்லை; நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து வாழலாம் என்றால், தன் இளமையும், அழகும், கயவர்களின் கண்களை உறுத்தும்; அற்பர்களின் நாக்குகளோ, வம்பு பேச துடிக்கும்; அபவாத பேய், தன் வாழ்வை அழித்து விடும்.
அப்புறம், தன் பிள்ளையை யார் கவனிப்பர்... அண்ணிக்காரி எத்தனை தான் திட்டினாலும், தன் பிள்ளையின் அரை வயிறாவது நிரம்புகிறது. அத்துடன், அண்ணனின் பாதுகாப்பும் இருக்கிறது என நினைத்து, அத்தனை கொடுமைகளையும் தாங்கினாள்.
அன்றும் இப்படித்தான், ஏழு வயது கவுதமன், கூடத்தில் இருந்த சைக்கிளை எடுத்து ஆசையாக ஓட்டவே, 'பரதேசிப் பயலே... என்ன தைரியம் இருந்தா, எம்புள்ள சைக்கிளை எடுத்து ஓட்டுவே...' என்று திட்டி, அடித்தாள், சுந்தரி.
அழுதபடி ஓடி வந்த மகனை வாரி அணைத்து, 'அந்த சைக்கிள் உனக்கு வேணாம் மகனே... நீ நல்லா படிச்சு, பெரியவன் ஆனதும் இதை விட பெரிய சைக்கிள் வாங்கலாம்...' என்று, ஆறுதல் படுத்தினாள், கற்பகம்.
ஆனாலும், அவன் மனம் சமாதானம் அடையவில்லை.
அன்றிரவு, மொட்டை மாடியில், தன் தாயின் அருகில் படுத்திருந்த கவுதமன், 'ஏம்மா... நாம இங்க இருக்கோம்; அப்பா எப்பம்மா நம்மள கூப்பிட்டுப் போவாரு...' என்றான் ஏக்கத்துடன்!
நான்கு வயதில், கவுதமன், தன் தந்தை குறித்து கேட்ட போது, வெளியூருக்கு போயிருப்பதாக கூறியிருந்தாள், கற்பகம்.
பொங்கி வந்த கண்ணீரை துடைத்து, 'அப்பா வரமாட்டாருடா கண்ணா... நாம தான் அவர் இருக்கிற இடத்துக்கு போகணும்...' என்றாள்.
'எங்கம்மா இருக்காரு; வா... நாம அங்கேயே போகலாம்...' என்றான்.
'அப்பா, சாமிகிட்ட போயிட்டாரு... கவுதமா... அதோ அங்கே வானத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் ரொம்ப பிரகாசமா ஜொலிக்குதே... அது யாருன்னு தெரியுமா...' என்று கேட்டாள்.
'யாரும்மா... அப்பாவா...'
'இல்லடா செல்லம்... அந்த நட்சத்திரத்திற்கு பேரு, துருவன்; உன்னை மாதிரியே ரொம்ப அழகான, புத்திசாலியான, கெட்டிக்கார பையன்...'
'அவன் எப்படி நட்சத்திரமா ஆனான்...' என்றான்.
'ஒரு காலத்துல, உத்தானபாதன்னு, ஒரு ராஜா இருந்தார்; அவருக்கு, சூருசி, சூநீதின்னு ரெண்டு மனைவிக. இதுல, ரெண்டாவது மனைவி சூநீதியோட பிள்ளை தான், துருவன்.
'ஒருநாள், மூத்தாளோட மகன், ராஜா மடியில உட்கார்ந்து விளையாடிட்டு இருக்கிறத பார்த்த துருவன், தானும், ராஜா மடியில உட்காரப் போனான்.
'அப்ப, முதல் மனைவி ஏளனமா சிரிச்சு, 'துருவா... நீ ராஜாவோட புள்ளையா இருந்தாலும், என் வயித்துல பிறக்கல. வேற ஒருத்தியோட புள்ளையான நீ, இந்த ராஜ்யத்த ஆள மட்டுமல்ல, என் மகனுக்கு சமமா உட்காரக் கூட தகுதி கிடையாது; போ...'ன்னு திட்டி, விரட்டி விட்டுட்டா. ராஜாவும் அதை தட்டிக் கேட்கல...
'துருவன் அழுதுக்கிட்டே, தன் அம்மாவிடம் வந்து சொல்ல, 'குழந்தே... உன் பெரியம்மா சொன்னதெல்லாம் உண்மை தான்; துரதிர்ஷ்டசாலியான என் வயித்துல பிறந்த நீ, உன் அண்ணன் அளவுக்கு பாக்கியசாலி கிடையாது. இதெல்லாம் நம் பூர்வ ஜென்ம கர்ம வினை. இந்த மாதிரி அவமானம், ஏமாற்றங்கள்ல இருந்து விடுபட, ஈஸ்வரனை கும்பிடு'ன்னு சொல்லியிருக்கா...
'உடனே, துருவன், 'அம்மா... நீ ஒண்ணும் துரதிருஷ்டசாலி கிடையாது; உன் வயித்துல பிறந்ததால எனக்கு எந்த குறையும் இல்ல. இன்று, என்னை அவமானப்படுத்திய பெரியம்மா மட்டுமல்ல, இந்த உலகமே கொண்டாடுற அளவுக்கு உயர்ந்த நிலையை அடைவேன்; இது சத்தியம்'ன்னு சொல்லி, தவம் செய்ய காட்டிற்கு போனான்.
'அங்க இருந்த சப்த ரிஷிகளை வணங்கி, நடந்ததை எல்லாம் சொல்லி, 'முனிவர்களே... பெரியம்மா, என்னை ரொம்பவும் அவமானப் படுத்திட்டாங்க. அதனால, இந்த உலகத்திலேயே யாராலும் அடைய முடியாத உயர்ந்த இடத்தை அடையணும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க'ன்னு கேட்டிருக்கான்.
'அவனுடைய தன்மானத்தையும், வைராக்கியத்தையும் நினைச்சு ஆச்சரியப்பட்டு, 'குழந்தே... அதுக்கு நீ, மகா விஷ்ணுவை நினைச்சு தவம் செய்யணும்'ன்னு சொல்லி, அதற்கான மந்திரத்தையும் சொன்னாங்க. அவனும், விஷ்ணு மந்திரத்தை சொல்லி கடுமையாக தவம் இருக்க ஆரம்பிச்சான்.
'அவனோட தவத்தால, தேவலோகமே ஆடுது. அவன் தவத்தை நிறுத்த, துர்தேவதைகளையும், சிங்கம், புலி, கரடின்னு கொடும் விலங்குகளையும் ஏவி விடுறாங்க, தேவர்கள்.
'அதுக, துருவன என்னென்னமோ செய்து, பயம் காட்டுதுக; எதுக்கும் அசையல. அதனால, தேவர்கள் எல்லாம், விஷ்ணு பகவானிடம் போய், 'சுவாமி... பூலோகத்துல, துருவன்னு ஒரு சின்ன பையன், கடும் தவம் இருக்கான்; அந்தத் தவத்தோட வெப்பத்த எங்களால தாங்க முடியல; நீங்க தான் அவன் தவத்தை நிறுத்தணும்'ன்னு முறையிட்டிருக்காங்க.
'கடவுளும் சரின்னு பூலோகம் வந்து, 'துருவா... இந்த சின்ன வயசுல, ஏன் இப்படி கடுமையா தவமிருக்க... உனக்கு என்ன வேணும்'ன்னு கேட்டிருக்கார்...
'துருவனும் நடந்ததை எல்லாம் சொல்லி, 'சாமி... என்னால இந்த அவமானத்தை தாங்க முடியல; அதனால, இந்த உலகத்திலேயே யாராலும் அடைய முடியாத உயர் நிலையை அடையணும்'ன்னு கேட்டிருக்கான்.
'ஒரு சின்ன பையன் மனச, இப்படியா நோகடிப்பாங்கன்னு கடவுளுக்கே ரொம்ப கஷ்டமாப் போச்சாம்.
'அதனால, 'நீ கவலைப்படாத... எந்த ராஜ்யத்த ஆள உனக்கு தகுதியில்லைன்னு உன் பெரியம்மா சொன்னாளோ, அதே ராஜ்யத்தை, நீ விரும்பும் வரை ஆண்டுட்டு, அப்புறமா, சூரியன், சந்திரன், பூமின்னு ஒன்பது கோள்களுக்கு இணையா, உனக்கு வானத்துல நிரந்த இடமும் தர்றேன்; உன்னை மாதிரி உத்தமமான பிள்ளைய பெற்றதால, உங்கம்மாவும், உன் பக்கத்துல நட்சத்திரமா இருப்பா'ன்னு வரம் கொடுத்தாராம்...' என்று, கதையை முடிக்க, கவுதமன் கண்கள், வானத்தையே வெறித்தது.
அவன் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தபடி, 'கவுதமா... நீயும் உன் கோபத்தோட வேகத்தை படிப்புல காட்டு; துருவன் மாதிரி பெரிய ஆளா வந்தியானா, உன் அத்தை மட்டுமில்ல; இந்த உலகமே உன்னை கொண்டாடுறதுடன், அறிவாளி பிள்ளைய பெற்ற அம்மான்னு என்னையும் மதிப்பாங்க.
'அப்புறம், உன் அத்தை நம்மை திட்ட மாட்டா... அன்பா நடந்துக்குவா... செய்வீயா கண்ணே...' என்ற போது, 'கண்டிப்பா நல்லா படிச்சு, நானும், அந்த துருவன மாதிரி பெரிய ஆளா வருவேம்மா...' என்றான்.
காந்தியடிகளுக்கு அரிச்சந்திரன் கதை மாதிரி, கவுதமனுக்கு துருவன் கதை, அவன் மனதில் விழுந்த வீரியமிக்க விதையாக இருந்தது. அதுவரை பள்ளியில், பத்து, 'ரேங்க்'களுக்குள் வாங்கியவன், அடுத்த சில மாதங்களில், முதல், 'ரேங்க்' வாங்க ஆரம்பித்தான்.
இந்நிலையில் தான் அந்த கொடும் சம்பவம் நிகழ்ந்தது.
அன்று மதியம் -
தெருக்கோடியில் இருந்த அடி பம்பில் தண்ணீர் பிடித்து, தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாக பானையை சுமந்து வந்த கற்பகம், கால் இடறி விழுந்தாள். சதை பிறண்டு, வலி உயிர் போனது.
அவ்வழியே வந்த எதிர் வீட்டு கோபாலன், சிறு வயதில் இருந்து அவளை அறிந்தவர் என்பதால், கைத்தாங்கலாக அழைத்து வந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம், 'அடி மூதேவி... என்னடி செய்தே... பானையை நெளிச்சு கொண்டு வந்திருக்கே... என் பானை போச்சே...' என்று கத்தினாள், சுந்தரி.
'ஏம்மா... உனக்கு மனிதாபிமானமே கிடையாதா... அந்த பிள்ளை, கால் பிசகி வலியில் துடிக்குது... உனக்கு பானை போச்சுங்கிறது தான், பெரிய விஷயமாப் போச்சா...' என்றார், கோபாலன்.
'நீ என்னய்யா, அவளுக்கு வக்காலத்தா...' என்றவள், 'ஓ... அப்படிப் போகுதா விஷயம்...' என்று ஏளனமாக நீட்டி முழக்கி, 'ஏண்டி... இந்த கள்ளப் புருஷன பாக்கறதுக்கு தான், அடிக்கடி, தண்ணி பிடிச்சுட்டு வரேன்னு தெருவுக்கு ஓடுறியா...' என்றாள்.
'சீ... வாயப் பொத்து; கற்பகம், என் கூடப் பிறக்காத தங்கச்சி...' என்று அதட்டினார், கோபாலன்.
'என்னையவா வாயைப் பொத்துன்னு சொல்றே... இருக்கட்டும்; வேலைக்குப் போயிருக்கிற உன் பொண்டாட்டியும், என் புருஷனும் வரட்டும். உங்கள நாறடிக்கலன்னா என் பேரு சுந்தரியில்ல...' என்று வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள்.
தன் மீது சுமத்தப்பட்ட பழியால் துடித்துப் போனாள், கற்பகம்.
மாலையில், கற்பகத்தின் அண்ணனிடம், இல்லாததையும், பொல்லாததையும் கூறினாள். அவன், தங்கையிடம் அது குறித்து ஏதும் விசாரிக்காமல், 'என் தங்கச்சியா நீ... இப்படி தரம் கெட்டு திரிவேன்னு நினைச்சுப் பாக்கல...' என்று சொல்லவே, நொறுங்கிப் போனாள், கற்பகம்.
தன் அண்ணனே நம்பாதபோது, ஊரார் எப்படி நம்புவர்... நெருப்புக்கு தன்னை இரையாக்கி பஸ்பமாகி விட்டாள்.
அப்போது, பக்கத்து ஊர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், கவுதமன்.
அன்று கட்டுரைப் போட்டி ஒன்றில் பரிசாக பெற்ற பணமுடிப்புடன், அதற்கான கேடயத்தையும் தன் தாயிடம் காட்டி,
அவளை சந்தோஷப்பட வைப்பதற்காக ஓடோடி வந்தவன், அவளின் சாம்பலைத் தான் பார்த்தான்.
நடந்த விபரங்களை அறிந்தவனுக்கு, கோபத்தில் மனம் கொதித்தது. 'அத்தையை கொன்று விட்டு, ஜெயிலுக்கு போனால் என்ன' என்று ஒரு கணம் தோன்றியது.
அதேநேரம், புகைப்படத்தில் இருந்த கற்பகம், 'கவுதமா... என் கண்ணே... உன் அத்தையை கொலை செய்தால், நீ சிறைக்கு போவாய்; இதனால், எனக்கு ஏற்பட்ட அவமானம் போய் விடுமா... உன் வாழ்வு சீரழிந்து போவதுடன், உன்னால், எனக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக, கொலைகாரனை பெற்ற பாவியாவேன்.
'அதனால், உன் கோபத்தின் வேகத்தை படிப்பில் காட்டு; துருவனைப் போல் மன வைராக்கியத்துடன் வாழ்வில் முன்னேறு... உன் உயர்வின் மூலம் என்னை பெருமைப்படுத்துவாயா மகனே...' என்று, இறைஞ்சுவது போல் இருந்தது.
தன் மனதை மாற்றி, படிப்பில் கவனம் செலுத்தினான், கவுதமன். ஆனாலும், அந்த ஆண்டோடு படிப்பை நிறுத்தி, தோட்ட வேலைக்கு அனுப்பி வைத்தாள், சுந்தரி.
காடு, மேடுகளில், மண்வெட்டியுடன் வியர்வை சிந்தும்போதெல்லாம், அவன் காதுகளில் அம்மாவின் மென் குரல், துருவனின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் எடுத்துச் சொல்லி சென்றது.
ஒருநாள், தன் பள்ளிச் சான்றிதழுடன், வீட்டை விட்டு ஓடிப் போனான், கவுதமன்.
ஒரு மளிகைக் கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்தபடி, பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்தவன், மாநிலத்திலேயே முதலாவதாக வந்தான். சுயம்புவாய் ஜொலித்த அவனின் தன்னம்பிக்கையை பாராட்டி, பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டன. அவனை தத்தெடுத்து, உணவு, படிப்பு செலவுகளை ஏற்றது, தொண்டு நிறுவனம் ஒன்று.
கல்லுாரி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி படிப்பை முடித்தான்.
பின், அமெரிக்காவில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினான். விண்வெளி ஆய்வில் அவனின் அரிய கண்டுபிடிப்பிற்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளம் வயதில் நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையுடன், இதோ ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
தமிழக கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினான், கவுதமன்.
துருவன் கதையை கூறி, 'அவமானங்களை, கோபம் மற்றும் பழிவாங்குவதால் வெல்ல முடியாது; சாதிப்பதாலேயே வெல்ல முடியும். துருவனை போன்ற திடமான உறுதியும், முயற்சியும் இருந்தால், வானம் கூட நம் உள்ளங்கைகளுக்குள் தான்...' என்று பேசிய போது, கரகோஷம் விண்ணைத் தொட்டது.
அந்த சத்தம், கற்பகத்திற்கும் கூட கேட்டிருக்கலாம்.
இனி, விஞ்ஞான சரித்திரத்தில், கவுதமனின் பெயர் மட்டுமல்ல; கற்பகத்தின் பெயரும் நீங்கா புகழுடன் மணம் பரப்பும்!
ப. லட்சுமி