திருட்டைத் தடுக்கவும், களவு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடக்கும் அதிசயத்தை, திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் சிவா நந்தீஸ்வரர் கோவிலில் காணலாம்.
கைலாயத்தில், சிவ - பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த, அகத்தியரை, தென் திசைக்கு அனுப்பினார், சிவன். அகத்தியர், தண்டலம் வழியாக வரும்போது, சிவனும், அம்பாளும் திருமண காட்சி தந்தனர்.
இங்குள்ள சிவனை, 'சிவா நந்தீஸ்வரர்' என்றும், அம்பாள், ஆனந்தவல்லி எனப்படுகிறாள்.
இங்கு, மற்றொரு அதிசயம், தட்சிணாமூர்த்தி, சக்தியுடன் இணைந்து காட்சி தருவது.
பிருகு முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வணங்கும் பழக்கம் உடையவர். அருகில் இருக்கும், பார்வதியை வலம் வர மாட்டார். தன்னை வணங்காமல், தன் கணவரை மட்டும் வணங்கியது பற்றி, சிவனிடம் புகார் செய்தாள், பார்வதி.
மறுநாள், பிருகு வரும்போது, இருவரும் ஒட்டி அமர்ந்தனர். புத்திசாலியான பிருகு, வண்டு வடிவம் எடுத்து, இருவருக்கும் உள்ள சிறு இடைவெளியில் புகுந்து, சிவனை மட்டும் சுற்றினார்.
உடனே சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும், பிருகு முனிவர், சுவாமியின் பகுதியை மட்டும் வணங்கினார். உடனே, சிவன், சக்தியை தன் மடியில் வைத்து, தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து, 'சக்தியின்றி சிவமில்லை' என்று, உபதேசித்தார்.
இருவரையும் வழிபட்டார், பிருகு முனிவர். இந்தக் கோவிலில், சக்தி தட்சிணாமூர்த்திக்கு, தனி சன்னிதி உள்ளது.
சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் சன்னிதி உள்ளதால், இது சோமாஸ்கந்த வடிவ கோவிலாக உள்ளது, விசேஷம். தன் கைகளில் ஜெபமாலை, தீர்த்தக் கலசம் ஏந்தி, பிரம்மாவின் அம்சமாக காட்சி தருகிறார், பாலசுப்பிரமணியர். இவரை வணங்கினால், நம் தீவினை மாறி, நன்மை நடக்கும்.
இங்குள்ள நந்தி விசேஷமானது. இதனால், சுவாமியை, சிவா நந்தீஸ்வரர் என்றும், தீர்த்தத்தை, நந்தி தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர்.
ஊரில் திருட்டை தடுக்கவும், களவு போன பொருள் மீண்டும் கிடைக்க வேண்டி, பைரவருக்கு, மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர், பக்தர்கள். இவ்வாறு செய்வதால், திருடியவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்றும், அவர்கள் சட்டத்திடம் சிக்கிக்கொள்வர் என்றும் நம்புகின்றனர். பொருட்கள் கிடைத்ததும், பைரவருக்கு, பாலாபிஷேகம் செய்கின்றனர்.
சென்னை - பெரியபாளையம் சாலையில், 36 கி.மீ., துாரத்தில் உள்ளது, கன்னிகைப்பேர் கிராமம். இங்கிருந்து, 4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம். திருவள்ளூரில் இருந்து, பெரியபாளையம் வழியாகவும் செல்லலாம்.
தி. செல்லப்பா