பா-கே
எம்.ஜி.ஆர்., - சிவாஜி - எம்.ஆர்.ராதா போன்றோர்களை வைத்து படம் இயக்கிய, பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்தவரும், 'திண்ணை' நாராயணன் சாருக்கு நண்பருமானவர், அந்த நபர்.
அவர், சமீபத்தில், என்னை சந்திக்க விரும்பியதால், அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்திருந்தார், நாராயணன் சார்.
அவரிடம் பேசியதில், பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக, எம்.ஆர்.ராதா பற்றி கூறிய தகவலில் சில இதோ:
பாகப்பிரிவினை படத்தின் வெற்றி விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது, நடிகர்கள் தங்கியிருந்த இடத்துக்கு, வந்தார், ஹிந்தி நடிகர், சுனில் தத்.
'ராதா எங்கே...' என்று விசாரித்தார், சுனில் தத்.
பின்னால் இருப்பதாக சொன்னார், சிவாஜி.
அங்கு சென்றார், சுனில் தத்.
அங்கே, அண்டர்வேர், பனியனுடன் சமையல் செய்து கொண்டிருந்தார், ராதா. இவரா அவர் என்று வாயடைத்து போனார், சுனில் தத்.
ராதாவின் அருகில் சென்ற, சுனில் தத், கை குலுக்கி, வேக வேகமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த, ராதா, 'என்னடா சொல்லுறான் இவன்...' என்று, பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டார்.
அதன் பிறகு தான், ராதாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற உண்மை, சுனில் தத்துக்கு தெரிய வந்தது.
பாகப்பிரிவினை படத்தில், தெளிவான உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசி, அசத்தியிருப்பார், ராதா; அதை நம்பி, ஏமாந்து போனார், சுனில் தத்.
எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவால் குண்டடிபட்டு, மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க, மருத்துவமனைக்கு, பல நட்சத்திரங்கள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் வந்து போய் கொண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆரை காண வந்திருந்தார், இயக்குனர், ப.நீலகண்டன். பின், அங்கிருந்து வழி தெரியாமல், ராதாவின் அறைக்கு சென்று விட்டார். ராதாவும், அவரை பார்த்து விட்டார்.
உடனே, 'வாய்யா, நீலகண்டா... ராமச்சந்திரனை சுட்டேன்; அவனும் சாவலை. என்னை சுட்டுக்கிட்டேன்; நானும் சாவலை. என்னய்யா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க... இந்த துப்பாக்கியை வெச்சுகிட்டு தான், சைனாகாரனை ஓட்டப் போறாங்களா...' என்றார்.
பதறியடித்து, அங்கிருந்து வெளியேறினார், நீலகண்டன்.
மத்திய சிறைச்சாலை -
உள்ளே உழைந்தார், ராதா. அங்கே, ஓர் அறையில் ஆங்கிலேய அதிகாரிகளின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. அவற்றோடு, திருவள்ளுவர் படமும் மாட்டப்பட்டிருந்தது.
'அடடே... திருவள்ளுவரு, இவரு எப்ப ஜெயிலுக்கு வந்தாரு...' என, ராதா கேட்க, அதிகாரிகள் சிரித்து விட்டனர்.
ராதாவை கையெழுத்து போடச் கூறினர். பேனாவை வாங்கியவர், மிகவும் சிரமப்பட்டு கையெழுத்தை வரைந்தார்.
'என்னப்பா இது, இவ்வளவு சிக்கலா இருக்கே... இதை வேற தினமும் போடணுமா...' என்று கேட்டபடியே, அவருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்.
ஒருமுறை, இரவில் நாடகம் முடித்து, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த, ராதா, அசதியில் உறங்கி விட்டார். காரை, சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்த, டிரைவர், திடீரென, 'பிரேக்' போட்டார். குலுங்கி நின்றது கார். சட்டென விழித்தார், ராதா. யாரோ ஒருவன், காரின் குறுக்கே வந்ததால், அந்த திடீர், 'பிரேக்!'
'விருந்தாளிக்கு பொறந்த புள்ள. நடு ராத்திரியில குறுக்க ஓடுற...' திட்டினார், டிரைவர்.
'கழுத, நாயின்னு திட்டு. விருந்தாளிக்கு பொறந்த புள்ளைன்னு திட்டாத... ஏன் தெரியுமா, இதே ஊர்ல நாடகம் நடத்தறப்போ ரொம்ப வூட்லே விருந்து சாப்டிருக்கேன். ஓடினவன் என் புள்ளையாய் இருந்தாலும் இருப்பான்...' என, சட்டென்று பதில் சொன்னார், ராதா.
'எங்க அம்மா இறந்துட்டாங்க, போகணும். நான் தான், எங்கப்பாவோட மூத்த தாரத்து பையன். கண்டிப்பா போயே ஆகணும்...' என்று, ராதா வீட்டு பணியாள், விடுப்பு கேட்டார்.
'சரி தான், உங்கப்பா என், 'டைப்' போலருக்கு...' என்று, 'கமென்ட்' அடித்தார், ராதா.
நாடகத்தில், போலீஸ் வருவது போல காட்சி இருக்கும். அப்போது, உடன் நடிப்பவர், பயப்படுவது போல நடிப்பார்.
உடனே, 'ஏண்டா பயப்படுறே... போலீஸ்னா என்ன பெரிய கொம்பா... (ரசிகர்களை பார்த்து கை நீட்டி) 'ஓசி டிக்கெட்'லாம் முன்னாடி உட்கார்ந்திருக்கான்; காசு கொடுத்தவனெல்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு...' என்று, வசனம் பேசுவார், ராதா.
ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், 'ஓசி டிக்கெட்'டில் வந்தவர்கள், எழுந்து ஓடுவதும் உண்டு.
ப
ஜூன் 7ம் தேதி, 'கொரோனாவால் குடியை விட்டேன்' என்ற தலைப்பில், 'வாரமலர்' இதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. எழுதியவர், எம்.ராகவேந்தர். இதை பாராட்டும் விதமாக, கட்டுரையின் நாயகர், லோகநாதன், பாராட்டுக் கடிதம் ஒன்றை ராகவேந்தருக்கு, 'இ-மெயில்' மூலம் அனுப்பி இருக்கிறார்.
அந்தக் கடிதம் இதோ:
இந்த வார, 'வாரமலர்' இதழில், 'குடியை நிறுத்திய' லோகநாதன் பற்றிய, என் கட்டுரையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.
கட்டுரை வெளியான, அதிகாலை, 5:00 மணிக்கெல்லாம், போன் வரத் துவங்கியது. முதல் போனே, எப்போதோ பழகிய நண்பர் கட்டுரையை படித்து விட்டு பாராட்டியதுடன், தன் கடை லோடை, இனி நீ தான் எடுத்துச் செல்ல வேண்டும். வாடகையை நீயே நிர்ணயம் செய்து கொள் என்று, நல்ல வருமானத்திற்கு வழி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பிறகு, என்னால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, திருப்பூர், பெங்களூர், துாத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து, தொடர்ச்சியாக போன்கள் வந்தவண்ணம் இருந்தன.
பெரும்பாலான போன்கள், என் மன உறுதியை பாராட்டி வந்தன. குன்னுார் வெலிங்டன் ராணுவ அலுவலக உயரதிகாரி போன்றவர்கள், மனம் திறந்து பாராட்டினர். துாத்துக்குடி, தேவாலயத்தில் இருந்து, எனக்காக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டனர். வயதான பலர், தங்களது பிள்ளைகளுக்கு வழிகாட்ட கேட்டுக் கொண்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, என் மனைவியின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன்.
நான் ஒரு சாதாரண லாரி டிரைவர். ஆனால், என்னை மதித்து, எவ்வளவு பேர் பேசினர்.
நான் விரைவில் வாங்க இருக்கும் புது வண்டியை எடுத்துக் கொண்டு, நேராக ஆசிரியரிடம் தான் வருவேன். அவர் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். பிறகு, குடிக்கு எதிராக என் பிரசாரத்தை துவங்க இருக்கிறேன்.
இவர், இப்படி எழுதி இருக்க, புதுச்சேரியைச் சேர்ந்த வாசகர், பா.கமலக்கண்ணன் என்பவர், எனக்கு எழுதிய கடிதத்தை கீழே தருகிறேன்...
அந்துமணி அவர்களுக்கு வணக்கம்!
'கொரோனா'வால், மது கடைகள் மூடப்பட்டதால், 'ரெகுலர்' குடிமகன்கள் தவிப்பதை கண்டு, இரவும் பகலும் கண்ணீர் விட்டு கலங்கி நிற்கிறோம். ஆனால், உங்களுடைய, 'வாரமலர்' இதழில் (ஜூன் 7, பக்கம் 23) 'கொரோனாவால் குடியை விட்டேன்' என்ற கட்டுரையா...
அக்கிரமம், அநியாயம். கட்டுரை வெளியிட்டவர்களை உடனே, 'டிஸ்மிஸ்' செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இத்தகைய கட்டுரைகள் இனி வெளிவரக்கூடாது என்று, கடுமையாக எச்சரிப்பீர்களென நம்புகிறேன்.
இங்ஙனம்
பா.கமலக்கண்ணன்
என்ன செய்வது வாசகர்களே?